(1052)
பொங்கு போதியும் பிண்டி யுமுடைப் புத்தர் நோன்பியர் பள்ளி யுள்ளுறை,
தங்கள் தேவரும் தாங்களு மேயாக என்நெஞ்சமென்பாய்!
எங்கும் வானவர் தான வர்நிறைந் தேத்தும் வேங்கடம் மேவி நின்றருள்,
அங்க ணாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.
பதவுரை
|
என் நெஞ்சம் என்பாய் |
– |
ஓ மனமே!, |
|
பொங்கு |
– |
கொம்புங்கிளையுமாகப் பணைத்து வளர்ந்திருக்கிற |
|
போதியும் |
– |
அரசமரத்தையும் |
|
பிண்டியும் |
– |
அசோகமரத்தையும் |
|
உடை |
– |
(தங்களுக்குத் தஞ்சமாக) உடையவர்களான |
|
புத்தர் |
– |
பௌத்தரும் |
|
நோன்பியர் |
– |
அமணரும் |
|
பள்ளியுள் உறை தங்கள் தேவரும் தாங்களுமே ஆக |
– |
தமது தேவாலயங்களிலேயுள்ள தங்களுடைய சாமிகளும் தாங்களுமேயாய் உலகமெங்கும் நிறைந்து கிடக்கச் செய்தேயும் (அந்த மதங்களில் நீ புகாமல்), |
|
எங்கும் வானவர் தானவர் நிறைந்து ஏத்தும் |
– |
தேவப்ரக்ருதிகளும் அஸூரப்ரக்ருதிகளும் எங்கும் சூழ்ந்துகொண்டு போற்றுமிடமான |
|
வேங்கடம் |
– |
திருமலையிலே |
|
மேவி நின்று |
– |
எழுந்தருளியிருந்து |
|
அருள் |
– |
அருள்செய்கின்ற |
|
அம் கண் நாயகற்கு |
– |
அழகிய திருக்கண்களையுடைய பெருமானுக்கு |
|
இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- உலகத்திலே ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம் ஓங்கினவிடம் மிகச் சுருங்கியும், ஜைநர் பௌத்தர் முதலிய புறமதத்தவர்களின் சமயம் வியாபித்தவிடம் மிகப் பரம்பியும் இராநின்றது. இப்படிப்பட்ட வுலகத்திலே விதிவசத்தாலே நாம் புறமதங்களிலே புகுந்தோ பிறந்தோ பாழாய்ப் போகாமல் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தாலே ஜனித்து எம்பெருமானுக்கு அடிமைப்பட்டு வாழப்பெற்றோமே என்கிற தமது மகிழ்ச்சியை ஆழ்வார் இது முதல் மூன்று பாசுரங்களில் வெளியிடுகிறார்.
பௌத்தர்களின் தேவதை அரச மரத்தடியை இருப்பிடமாகவுடைய தென்றும், ஜைநர்களின் தேவதை அசோகமரத்தடியை இருப்பிடமாக வுடைய தென்றும் ப்ரஸித்தி உண்டாதலால் பொங்குபோதியும் பிண்டியுமுடைப் புத்தர் நோன்பியர்என்றார். பொங்கு போதியுடையவர் புத்தர்; பிண்டியுடையவர் நோன்பியர் என்று முறை முறையே உணர்க. போதி என்று அரசமரத்திற்குப் பெயர்; அது கிளையும் கப்புமாக மிக வளர்ந்த மரமாதலால் பொங்குபோதி எனப்பட்டது. பிண்டி என்று அசோகமரத்திற்குப் பெயர். புத்தர்-புத்ததேவதையைப்பற்றினவர்கள். ஜைநர்கள் அதிகமாக விரதங்கள் கொண்டாடுகிறவர்களாதலால் நோன்பியர் எனப்பட்டனர். ஆக, பொங்கு போதியைப் பிரதானமாகக் கொண்ட புத்தர்களும், பிண்டிமரத்தைப் பிரதானமாகக் கொண்ட ஜைநர்களும் ஆகிய இப்புறமதத்தவர்களும் இவர்களால் தொழப்படும் தெய்வங்களும் நிறைந்துகிடக்குமிம்மண்ணுலகிலே, நெஞ்சமே! நீ அந்தத் தீயவழியில் புகாதே திருவேங்கட முடையானுக்கு அடிமைத்தொழில் பூண்டாயே!, நீயன்றோ பாக்யசாலி என்று உகந்தாராயிற்று.
(“வானவர் தானவர் நிறைந்தேத்தும்”) தானவரென்று அஸூரர்களைச் சொல்லுகையன்றியே இந்நிலத்திலுள்ளாரைச் சொல்லுவதாக உரைப்பது முண்டு; ஸ்தாநம் என்ற வடசொல் தானமெனத்திரியும் ஸ்தானத்திலுள்ளவர்-தானவர் ஆகவே, அவ்வுலகத்தவர்களும் இவ்வுலகத்தவர்களும் நிறைந்து ஏத்துமிடமான வேங்கடம் என்றதாயிற்று.
English Translation
O Heart! In the temples of the Bauddhas and Sramanas who worship the Nyagrodha and Asoka trees, our Lord of beautiful eyes became their gods and became them. He resides in Venkatam where gods and Asuras crowd to offer worship. Today you too have entered into his service.
