(1049)
உறவு சுற்றமென் றொன்றிலா வொருவன் உகந்தவர் தம்மை, மண்மிசைப்
பிறவி யேகெடுப் பானது கண்டென் நெஞ்சமென்பாய்,
குறவர் மாதர்க ளோடு வண்டு குறிஞ்சி மருளிசை பாடும் வேங்கடத்து,
அறவ நாயகற் கின்று அடிமைத் தொழில் பூண்டாயே.
பதவுரை
|
என் நெஞ்சம் என்பாய் |
– |
எனது நெஞ்சே!, |
|
உறவு சுற்றம் என்று ஒன்று இலா ஒருவன் |
– |
பந்துக்கள் தாயாதிகள் என்று சொல்லக்கூடிய எவ்வகை ஆபாஸ ஸம்பந்தமுமில்லாத அத்விதீயனான பெருமான் |
|
உகந்தவர் தம்மை |
– |
தானுகந்த அந்தரங்கபக்தர்களுக்கு |
|
மண் மிசை பிறவியே கெடுப்பான் அது கண்டு |
– |
இப்பூமியில் பிறவியைப் போக்குவானென்கிற தன்மையைக் கண்டு |
|
குறவர் மாதர்களோடு |
– |
குறத்திகளோடு கூட |
|
வண்டு |
– |
வண்டுகள் |
|
குறிஞ்சி மருள் இசை பாடும் வேங்கடத்து |
– |
குறிஞ்சி, மருள் முதலிய இசைகளைப் பாடுமிடமான திருமலையிலுள்ள |
|
அறவன் நாயகற்கு |
– |
பரமதர்மிஷ்டனான அப்பெருமானுக்கு |
|
இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நெஞ்சமே! திருமலையப்பனுடைய திருக்குணங்களின் வாசியறிந்து நீ அவன் திறத்திலே அடிமைத்தொழில்பூண்டாயே! நாம் பந்துக்களென்றும் தாயாதிகளென்றும் சில ஆபாஸபந்துக்களைக் கற்பித்துக் கொண்டு அவர்களுக்கு நன்மைசெய்வதும், சிலரை சத்துருக்களென்று கொண்டு அவர்கட்குத் தீமைசெய்வதுமாக இருக்கிறோமே; இப்படியல்ல எம்பெருமானுடைய ஸ்வபாவம். அவன் எப்படிப்பட்டவனென்றால், உறவுசுற்றமென்றொன்றிலாவொருவன்; “ஸூஹ்ருதம் ஸர்வபூதாநாம்” என்றும் “தேவாநாம் தாநவாநாஞ்ச ஸாமாந்யமதிதைவதம்” என்றும் எல்லார் திறத்திலும் வாசியற்ற அன்புடையவனாகச் சொல்லப்படுபவன். இன்னமும் எப்படிப்பட்டவனென்னில்; உகந்தவர் தம்மை மண்மிசைப் பிறவியே கெடுப்பான் = தன்னை யார் உகக்கின்றார்களோ அவர்களை ஸம்ஸாரத்தில் நின்றும் களைந்தெடுத்து நித்ய ஸூரிகளுடைய திரளிலே நிறுத்துமவன். “அது கண்டு அடிமைத் தொழில் பூண்டாயே” என்று அந்வயம்.
‘உகந்தவர்தம்மை’ என்பதற்கு, ‘தன்னிடத்தில் எவர் ப்ரீதி பண்ணுகி றார்களோ அவர்களை’ என்றும், ‘எம்பெருமான்தான் எவர்களிடத்தில் ப்ரீதி வைக்கிறானோ அவர்களை’ என்றும் உரைக்கலாம்.
அறவன் = “ தண்ணீர்ப்பந்தலை வைத்து நம்மடிமை பெறுகைக்குத் தம்மை நமக்குத் தந்து கொடு நிற்கிற பரமதார்மிகன்” என்பது பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல். நம்மிடத்தில் கைங்கரியங் கொள்ளுதற்காகத் திருமலையிலே வந்து நித்யஸந்நிதாநம் செய்தருளியிருக்கையாகிற பெரிய தருமத்தைச் செய்த பகவான் என்கை.
English Translation
O Heart! The Lord has no relatives or friends on Earth, and gladly rids his devotees of their birth. That perfect Lord resides in Venkatam where gypsy women join the chorus of bees in singing love-songs on kurinji Pann. Today you too have entered into his service.
