(1593)
ஏடி லங்கு தாமரைபோல் செவ்வாய் முறுவல் செய்தருளி,
மாடு வந்தென் மனம்புகுந்து நின்றார் நின்றா வூர்போலும்,
நீடு மாடத் தனிச்சூலம் போழக் கொண்டல் துளிதூவ,
ஆட லரவத் தார்ப்போவா அணியார் வீதி அழுந்தூரே.
பதவுரை
|
நீடு மாடம் |
– |
உயர்ந்த மாடங்களில் (நாட்டப்பட்ட) |
|
தனி சூலம் |
– |
ஒப்பற்ற சூலமானது |
|
போழ்க |
– |
(மேகத்தின் வயிற்றைக்) கீண்ட வளவிலே |
|
கொண்டல் |
– |
மேகமானது |
|
துளி தூவ |
– |
மழை பொழியப் பெற்றதும் |
|
ஆடல் அரவத்து ஆர்ப்பு ஓவா |
– |
கூத்தாட்டவொலிகளினாலுண்டான கோலாஹலம் ஓயாமலிருக்கப்பெற்றதுமான |
|
அணி ஆர் வீதி அழுந்தூர் |
||
|
ஏடு இலங்கு தாமரை போல் |
– |
இதழ்விளங்குகின்ற தாமரைப்பூ மலர்ந்தாலொப்ப |
|
செம் வாய் முறுவல் செய்தருளி |
– |
சிவந்த திருப்பவளத்தினால் புன்முறுவல் செய்துகொண்டு |
|
மாடு வந்து |
– |
என் பக்கலிலே வந்து |
|
என்மனம் புகுந்து நின்றார் |
– |
என்மனத்திலே புகுந்து நின்றபெருமாள் |
|
நின்ற |
– |
நித்யவாஸம் பண்ணப்பெற்ற |
|
ஊர் போலும் |
– |
திவ்ய தேசமாகும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- என்னைப் பெறுதற்கு நெடுநாள் ஸமயம் பார்த்திருந்து பெறுகையால் அலப்ய லாபம் பெற்றவர்போல ஸந்தோஷித்து அந்த ஸந்தோஷம் விளங்குமாறு, தாமரைப்பூ மலர்ந்தாற்போல திருப்பவளத்தைத் திறந்து புன்முறுவல் செய்து அதிலே என்னை யீடுபடுத்தி ஹ்ருதயத்திலே வந்து புகுந்து ‘இனி இவர்க்கொரு போக்கில்லை’ என்று தோற்ற நின்றவர் கண்ணுக்கு இலக்காக வந்து நிற்கிற திவ்யதேசம் திருவழுந்தூர்.
அத்திருப்பதி எப்படிப்பட்டது? ; அங்குள்ள மாடமாளிகைகள் மேக மண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்றன. மாளிகைகளின் முனையிலே பாதுகாப்புக் குறுப்பாகச் சூலங்கள் நாட்டப்படும். (“சிலையிலங்கு மணிமாடத் துச்சிமிசைச் சூலம் செழுங்கொண்டலகடிரிய” (3-9-4) என்றார் வைகுந்த விண்ணகர திருப்பதிகத்திலும்.) அந்த சூலங்கள் மேகங்களினுடைய கீழ்வயிற்றை யிடித்துப் பிளக்க, மழை சொரிகின்றதாம். (இவ்வதிசயோக்தியினால் மாடமாளிகைகளின் ஓக்கம் உணர்த்தப்பட்டதாம்.) இன்னமும், மாதர்கள் ஆடுகிறபோதுண்டான ஆரவாரம் இடையறாதே செல்கின்றதாம்.
English Translation
The tridents on tall mansions rip the clouds, spilling pearls over dancing girls whose ankle bells never cease ringing, in the beautiful streets of Alundur, It is the residence of the Lord who came close to me with a winsome smile on his lotus-petal-like lips, then entered my heart.
