(1581)

(1581)

தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழ,

போராளும் சிலையதனால் பொருகணைகள் போக்குவித்தாய் என்று, நாளும்

தாராளும் வரைமார்பன் தண்சேறை எம்பெருமா னும்ப ராளும்,

பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகி லேனே.

 

பதவுரை

தேர் ஆளும்

தேர்களை நடத்தவல்லவனாய்

வாள்

வாட்படையையுடையனான

அரக்கன்

இராவணனுடைய

தென் இலங்கை

அழகிய லங்காபுரியை

வெம் சமத்து

கொடிய போர்க்களத்தில்

பொன்றி வீழ

சிதறியழிந்துபோம்படி

போர் ஆளும் சிலை அதனால்

போரை நடத்தவல்ல வில்லினால்

பொரு கணைகள்

கொடிய அம்புகளை

போக்குவித்தாய்

பிரயோகித்தவனே!

என்று

என்று சொல்லி,

நாளும்

நாள்தோறும்

தார் ஆளும் வரை மார்பன்

மாலையை அணிந்தள்ள மலை போன்ற திருமார்பையுடையவனும்

உம்பர் ஆளும்

மேலுலகங்களை ஆள்பவனும்

பேராளன்

பெருமை பொருந்தினவனுமான

தண் சேறை எம்பெருமான்

திருச்சேறைப் பெருமானுடைய

பேர்

திருநாமங்களை

ஓதும்

ஓதுகின்ற

பெரியோரை

மஹாத்மாக்களை

ஒருகாலும்

ஒருபோதும்

பிரிகிலேன்

பிரியமாட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானைப் பிரிந்து நெடுநாள் தரித்திருப்பினு மிருப்பேன்; பாகவதர்களைப்பிரிந்து ஒரு நொடிப்பொழுதும் தரித்திருக்ககில்லே னென்கிறார்.  தேர்வீரனான இராவணனுடைய படைவீடான இலங்காபுரியைப் பொடிபடுத்தின பெருவீரனே! என்று சொல்லித் திருச்சேறை யெம்பெருமானுடைய பல பல திருநாமங்களை வாயாரப்பாடும் பெருமையுடையார் எவரோ, அவரை ஒருகாலும் பிரியமாட்டே னென்றாராயிற்று.

கீதையில் “ஸ மஹாத்மா” என்றும் “மஹாத்மாந” என்றும் அவன்றானே சொல்லிப் போந்தவர்களையாயிற்று இவர் ‘பெரியோர்’ என்கிறது.

 

English Translation

The Lord rained hot arrows on the mighty chariot-riding Rakshasa king Ravana and destroyed his grand island city of Lanka with him. He is the Lord of eternals, wearer of the ground Tulasi garland over a mountain-like-chest, residing in Tiruccherai.  I shall never part from those great ones who chant his names.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top