(1571)

(1571)

உரங்க ளாலியன் றமன்னர் மாளப் பார தத்தொரு தேரைவர்க் காய்ச்சென்று,

இரங்கி யூர்ந்தவர்க் கின்னருள் செய்யும்  எம்பி ரானைவம் பார்புனல் காவிரி,

அரங்க மாளியென் னாளிவிண் ணாளி ஆழி சூழிலங் கைமலங் கச்சென்று,

சரங்க ளாண்டதண் டாமரைக் கண்ணனுக் கன்றி யென்மனம் தாழ்ந்துநில் லாதே!

 

பதவுரை

உரங்களால் இயன்ற மன்னர் மாள

மிடுக்கினால் மிகக் துரியோதனாதியரசாகள் தொலையும்படி

பாரதத்து

பாரதயுத்தத்திலே

ஐவர்க்கு ஆய் சென்று

பஞ்சபாண்டவர்க்குத் துணையாயெழுந்தருளி

இரங்கி

(அவர்கள் விஷயத்தில்) மனமிரங்கி

ஒரு தேர் ஊர்ந்து

(அவர்களுடையதான) ஒரு தேரை ஸாரதியாயிருந்து நடத்தி

அவர்க்கு

அப்பாண்டவர்க்கு

இன் அருள் செய்யும் எம்பிரானை

பரம கிருபையைச் செய்தருளின ஸ்வாமியும்

வம்பு ஆர் புனல் காவிரி

புதுமைமிக்க தீர்த்தத்தை யுடைய திருக்காவேரியால் சூழப்பட்ட

அரங்கம்

திருவரங்கம் பெரியகோயிலை

ஆளி

ஆள்பவனும்

என் ஆளி

என்னையாள்பவனும்

விண் ஆளி

பரமபதத்துக்குத்தலைவனும்,

ஆழி சூழ்

கடல் சூழ்ந்த

இலங்கை

லங்காபுரியானது

மலங்க

வியாகுலமாகும்படி

சென்று

அங்கெழுந்தருளி

சரங்கள் ஆண்ட

அம்புகளை நடத்தின

தண் தாமரை கண்ணனுக்கு அன்றி

குளிர்ந்த தாமரைப் பூப்போன்ற திருக்கண்களையுடையனுமான திருநறையூர் நம்பிக்கல்லது (மற்றொருவர்க்கு)

என் மனம்

என் மனமானது

தாழ்ந்து நில்லாது

நைச்சியம் வஹித்திருக்க மாட்டாது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- க்ருஷ்ணாவதார முகத்தாலும் ராமாவதார முகத்தாலும் மண்ணில் பாரங்களை நீக்கியருளின மஹாநுபாவனுக்கன்றி மற்றொருவன் விஷயத்திலே என்னெஞ்சு தாழாது என்கிறார். * மலைபுரைதோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர் குலைய நூற்றுவரும் பட்டழியப் பார்த்தவன் சிலைவளையத் திண் தேர்மேல் முன்னின்று அருள் செய்தமையை முன்னடிகளிற் கூறுகின்றார்.

‘சரங்களாண்ட’ என்றது “வில்லாண்டான்றன்னை” என்றாற்போலே; சத்துருக்களைக் காட்டு, காட்டு’  என்று விம்மிக் கிளம்புகின்ற அம்புகளை அடக்கி யாள்பவ னென்க “சரங்களாண்ட தண்டாமரைக் கண்ணன்” என்ற சேர்க்கையினால் – தாமரைக் கண்களின் கடாக்ஷத்திற்கு இலக்காகி உய்நததுபோகப் பெறாதே அம்புகட்கு இலக்காகி மாண்டுபோயினரே பாவிகள்! என்ற பரிதாபந்தோன்றும்.  இப்படிப்பட்ட எம்பெருமான் விஷயததிலே “ந நமேயம் – தாழமாட்டேன்” என்று மார்பு நெறித்து மாண்டொழிந்தனர் ஆஸுர ப்ரக்ருதிகள்; என் மனம் அங்ஙனன்றியே தாழ்ந்து நின்று உய்வுபெறும் என்றாராயிற்று.

 

English Translation

In the Bharata war between mighty kings, See, the Pandavas won by me Krishna who steered the chariot killing mighty warriors, -He resides amid bee-humming nectared groves.  He’s the Lord of sweet Arangam and my heart,  He’s the Lord of gods, Lotus-like eyes and lips.  He’s the Lord who rained arrows on Lanka king.  He alone commands me and my worship.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top