(1555)
அத்தா அரியே என்றுன் னையழைக்க,
பித்தா வென்று பேசுகின்றார் பிறரென்னை,
முத்தே மணிமா ணிக்கமே முளைக்கின்ற
வித்தே உன்னைஎங் ஙனம்னான் விடுகேனே.
பதவுரை
| அத்தா |
– |
ஸ்வாமியே! |
| அரியே |
– |
(விரோதிவர்க்கங்களை ஹரிக்குமவனே! |
| என்று |
– |
என்று இப்படிப்பட்ட திருநாமங்களைச் சொல்லி |
| உன்னை அழைக்க |
– |
நான் உன்னை அழைக்குமளவில் |
| பிறர் |
– |
அயலார் |
| என்னை |
– |
இப்படி அழைக்கிற என்னைநோக்கி |
| பித்தா என்று பேசுகின்றார் |
– |
‘அடா பித்தனே!’ என்று சொல்லுகிறார்கள்; |
| முத்தே |
– |
முத்துப்போன்றவனே! |
| மணி மாணிக்கமே |
– |
சிறந்த மாணிக்கம் போன்றவனே! |
| முளைக்கின்ற வித்தே |
– |
முளைக்கின்ற விதைபோலே பயனளிப்பவனே! |
| உன்னை |
– |
இப்படிப்பட்டவுன்னை |
| நான் |
– |
அடியேன் |
| எங்ஙனம் விடுகேன் |
– |
எவ்விதமாக விட்டொழிவேன்? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேன் பிராகிருத ஜனங்களைப்போலே ‘உண்டியே உடையே’ என்று கூப்பிடுமவனல்லேன்; எப்போதும் பகவத் விஷயத்தி லீடுபட்டு ‘அத்தா! அரியே’ என்றிப்படி பகவந் நாமங்களைச் சொல்லிக் கூப்பிடுவதே எனக்குப் போது போக்காயிருக்கின்றது. திகம்பரஜநே க்ராமே ஹாஸ்ய : கெளபீந வாந் நர:” (கோமணங்கட்டாத வூரில் கோமணங்கட்டுமவன் பைத்தியக்காரன்) என்னும் பழமொழிப்படியே *உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்தவர்கட்கு நான் பைத்தியக்காரனாகத் தோற்றுகின்றேன்; உன்னைநான் அத்தா! என்றழைத்தவாறே என்னை அவர்கள் பித்தா! என்றழைக்கின்றனர்; இப்படிப்பட்ட பிராகிருத ஜனங்களின் பரிஹாஸத்திற்கு அஞ்சி உன்னை விட்டு விடலாமென்று பார்த்தாலோ, மாட்டுகின்றிலேனே என் செய்வேனென்கிறார். “பேயரே யெனக்கியாவரும் யானமோர் பேயனே………….அரங்கா வென்றழைக்கின்றேன், பேயனா யொழிந்தே னெம்பிரானுக்கே” என்ற பெருமாள் திருமொழி இங்கே நினைக்கத்தகும்.
அத்தா – அத்தன் என்பதன் விளி; ஸ்வாமிந்! என்றபடி. அரி – ஹரி. முளைக்கின்ற வித்தே! ஜகத்காரண பூதனே! என்றவாறு.
English Translation
When I call you, “Lord and Master!”, othes call me “Mad, Mad!” O Pearls! O Emerald gem! O Growing seed! How can I every let you go?
