(7)
தீயிற் பொலிகின்ற செஞ்சுட ராழி திகழ்திருச் சக்கரத்தின்
கோயிற் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்
மாயப் பொருபடை வாணனை ஆயிரந் தோளும் பொழிகுருதி
பாயச் சுழற்றிய ஆழிவல் லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே.
பதவுரை
| தீயின் |
– |
(சந்திரன்: ஸூர்யன் அக்நி முதலிய) சுடர்ப்பொருள்கள் எல்லாவற்றையும்விட |
| பொலிகின்ற |
– |
பிரபலமாகப் பிரகாசிப்பதும் |
| செம் சுடர் திகழ் |
– |
சிவந்த ஒளியோடுகூடி விளங்குவதுமான |
| திருசக்கரத்தின் |
– |
திருவாழியாழ்வான் எழுந்தருளியிருக்கிற |
| கோயில் |
– |
ஸ்தானமாகிய |
| ஆழி |
– |
வட்டவடிவமான |
| பொறியாலே |
– |
அடையாளத்தினால் |
| ஒற்றுண்டு நின்று |
– |
அடையாளம் செய்யப்பட்டவர்களாயிருந்து |
| குடிகுடி |
– |
அநாதிஸந்தாநமாக |
| ஆள் செய்கின்றோம் |
– |
(எம்பெருமானுக்குக்) கைங்கரியம் செய்து வருகின்றோம்: (அதுவும் தவிர) |
| மாயம் பொருபடை வாணனை |
– |
க்ருத்ரிம யுத்தம் செய்பவனும் சேனைகளை உடையவனுமான பாணாசுரனுடைய |
| ஆயிரம் தோளும் |
– |
ஆயிரந் தோள்களினின்றும் |
| பொழி |
– |
வெளிக்கிளம்புகிற |
| குருதி |
– |
ரக்தமானது |
| பாய |
– |
வெள்ளமாகப் பாய்ந்தோடும்படி |
| சுழற்றிய ஆழி |
– |
திருக்கையிலே சுழலச் செய்த சக்கராயுதத்தை |
| வல்லானுக்கு |
– |
ஆளவல்ல எம்பெருமானுக்கு |
| பல்லாண்டு கூறுதும் |
– |
மங்களாசாஸநம் செய்வோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – ‘‘ஏடுநிலத்தில்’’ என்னும் பாசுரத்தில் கைவல்யார்த்திகளை அழைத்தாரன்றோ; அழைக்கும்போது ‘‘நாடுநகரமும் நன்கறிய’’ என்று உங்களுடைய நன்மையை எல்லாரும் தெரிந்துகொள்ளும்படி நீங்கள் வரவேணுமென்று ஒரு வார்த்தை சொன்னார். அவர்களும் அப்படியே வரவேணுமென்று நிச்சயித்து சங்கு சக்கரங்களாலே திருவிலச்சினை செய்துகொள்வது நல்ல உபாயம்’ என்று அதைச் செய்துகொண்டு அடிமை செய்பவர்களாய் பாணஸுரயுத்தத்தில் ஸ்ரீக்ருஷ்ணனுக்கு அடிமை செய்த திருவாழியாழ்வானுக்கும் அவனை அடிமைகொண்ட ஸ்ரீக்ருஷ்ணனுக்கும் அக்காலத்தில் மங்களாசாஸநம் செய்யப் பெறாத குறைதீர மங்களாசாஸநம் செய்பவர்களாக ஆய்விட்டோம் என்று தாங்கள் குடும்பமாகத் திருந்தினபடியைச் சொல்லிக்கொண்டு வந்தார்களாக அருளிச்செய்யும் பாசுரம் இது.
‘‘ஸுதர்சநம் பாஸ்கரகோடிதுல்யம்’’ என்கிறபடியே திருவாழியாழ்வான் கோடிஸுர்ய ப்ரகாசனாகையால் ‘‘தீயிற்பொலிகின்ற’’ எனப்பட்டது. தேஜ: பதார்த்தங்கள் எல்லாவற்றையும்விட அதிகமாக ஜ்வலிக்கிற என்றபடி. பொலிகின்ற என்பதும், திகழ் என்பதும் திருச்சக்கரத்திற்கு அடைமொழிகள். இனி, ‘‘தீயிற்பொலிகின்ற’’ என்பதை சக்கரத்தின் பொறிக்கு அடைமொழியாக்கி, அக்நியால் விளங்குகிற சக்கரத்தின் பொறி என்றும் உரைக்கலாம். மந்த்ர பூர்வமாக ஹோமஞ்செய்த அக்நியில் காய்ச்சப்பட்ட சங்கு சக்கரங்களின் பொறிகளை (அடையாளங்களை) புஜங்களில் அணிந்து கொள்வது ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயம்.
பாண : என்ற வடசொல் வாணனெனத் திரிந்தது.
English Translation
Branded with a shape of the radiant discus blazine with the brilliance of fire we stands and serve, generation after generation. For him who swirled the discus over Bana – who was waging a war of illusion,-and made his thousand shoulders bleed, we sing Pallandu.
