(297)
நல்லதோர் தாமரைப் பொய்கை நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு அழகழிந் தாலொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்பு றம்புக்காள் கொலோ.
(298)
ஒன்று மறிவொன்றில் லாத உருவறைக் கோபாலர் தங்கள்
கன்றுகால் மாறுமா போலே கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறிசெய்து போனான் நாராய ணன்செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்குஓ ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
(299)
குமரி மணம்செய்து கொண்டு கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத் தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித் தோரணம் நாட்டிடுங் கொலோ.
(300)
ஒருமகள் தன்னை யுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.
(301)
தம்மாமன் நந்தகோ பாலன் தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச் செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும் கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர் இனித்தரி யாரென்னுங் கொலோ.
(302)
வேடர் மறக்குலம் போலே வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா கைப்பற்றுங் கொலோ.
(303)
அண்டத் தமரர் பெருமான் ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே பாதுகா வல்வைக்குங் கொலோ.
(304)
குடியில் பிறந்தவர் செய்யும் குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய் நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக் கைதழும் பேறிடுங் கொலோ.
(305)
வெண்ணிறத் தோய்தயிர் தன்னை வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு பரிசற ஆண்டிடுங் கொலோ.
(306)
மாயவன் பின்வழி சென்று வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத் தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார் தூமணி வண்ணற்கா ளாரே.
