ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
மதுரகவியாழ்வார் வைபவம்
பாண்டியநாட்டிலே திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக்கு அருகிலுள்ள திருக்கோளூரிலே, துவாபரயுகத்தில், எட்டுலக்ஷத்து அறுபத்துமூவாயிரத்து எண்ணூற்றெழுபத்தொன்பதாவதான ஈஸ்வரவருஷத்தில் சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரத்திலே கணேசரான குமுதருடைய அம்சமும் கருடாழ்வானுடைய அம்சமுமாய் ஒருவர் அவதரித்தார். ஸூர்யோதயத்திற்கு முன் கிழக்கிற் காணப்படுகின்ற அருணோதயம்போலப் பராங்குசர் உதிப்பதற்கு முன் தென்தேசத்தில் தோன்றிய இவர், வேதசாஸ்திரங்களை இளமையிலேயே பயின்று செவிக்கினிய செஞ்சொற்கவிகளைப் பாடவல்லவராய் அதனால் மதுரகவி என்று திருநாமம் பெற்று மெய்யுணர்வினால் அவாவற்று மஹாவிரக்தராய் விஷ்ணுபக்தி விஞ்சி யோகநிஷ்டையிலும் தேர்ந்து தீர்த்தயாத்திரை திவ்யதேசயாத்திரைகளிலே திருவுள்ளமுடையராய்ப் புறப்பட்டுச் சஞ்சரிக்கலுற்று வடநாட்டுத் திருப்பதிகளைச் சேவித்துக்கொண்டு திருவயோத்தியை அடைந்து, அங்கு அர்ச்சாவதாரரூபமாய் எழுந்தருளி யிருக்கின்ற இராமபிரானையும் பிராட்டியையும் ஸேவித்துத் திருவடிதொழுது அந்தப் பரிசுத்தபூமியில் நித்ய வாஸஞ் செய்யக்கருதிச் சிலகாலம் வஸித்திருந்தார்.
அக்காலத்தில் ஒருநாளிரவில் இவர் திருக்கோளு ரெம்பெருமானைத் திசை நோக்கித் தொழக்கருதித் தெற்குத்திக்கில் கண்செலுத்தியபொழுது, அப்பக்கத்திலே வானுறவளர்ந்து விளங்குகின்றதொரு திவ்யமான பேரொளியைக் கண்ணுற்று அது இன்னதென்றறியாமல் ‘கிராமநகரங்கள் வேகின்றனவோ? காட்டுத்தீயோ? என்று சங்கித்துத் திகைத்துநின்றார். நின்றவர், இங்ஙனே அடுத்த இரண்டு மூன்று நாள்களிலுங்கண்டு, அச்சுடர்த்திரள் முச்சுடரொளியினும் மிக்கு விளங்கியதனால் வெகுவியப்புற்று, அதனை அருகிற்சென்று பார்த்துத் தெளியத் துணிந்து புறப்பட்டு, அச்சோதியையே குறியாகக்கொண்டு அதிவிரைவாகநெடுவழிகடந்து, நடந்துவந்து, ஆழ்வார்திருநகரியை அடைந்து அதில் அவதரித்தருளியுள்ள சடகோபமுனிவரது திருமேனி விளக்கத்தைச் சேவித்து இதுவே அத்தனை நெடுந்தூரம் பிரகாசித்த்தென்று அறிந்து வியந்து, அவ்வாழ்வாரது நிலைமை முன்பு தாம் கேள்வியுற்றிருந்தபடியே அப்ராக்ருதமாயிருக்கக்கண்டு, அவர்க்குக்கட்புலனும் வாய்ப்புலனும் உள்ளனவா வென்பதைச் சில உபாயங்களால் பரிசோதிப்பவரானார். அப்பொழுது காரிமாறப்பிரான் கண்திறந்து கடாக்ஷித்து, இவர் கேட்ட கேள்விக்கு ஏற்ற விடைசொல்லியருள, அதுகேட்டு மதுரகவியாழ்வார் அவரது ஞானவைபவத்துக்கு அதிசயித்து ஈடுபட்டு அவரையே ஆசாரியராக்க்கொண்டு ஸரணம் புகுந்தனர்.
அப்பொழுது நம்மாழ்வார் பஞ்சஸம்ஸ்காரம் ப்ரஸாதித்து இவரை ஆட்கொண்டு பரத்வம் வ்யூகம் விபவம் அந்தர்யாமித்வம் என்னும் நான்குநிலைகளுக்கு முறையே வேதம் பாஞ்சராத்ரம் இதிஹாஸம் ஸ்ம்ருதி என்பனபோல அர்ச்சாவதாரத்திற்கு ஏற்ற துதிவடிவமான தமிழ்நூல்களை அருளிச்செய்யத் தொடங்கி, சதுவேதத்தின் ஸாரமாக நான்கு திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்து, அவற்றை அம்மதுரகவிக்கு உபதேசித்தருளினர்.
‘முந்தின மூன்றுயுகங்களில் த்யாந யாக அர்ச்சநங்களால் போலக் கடையுகத்தில் தோத்திரமாத்திரத்தால் உயர்கதி உளதாம்’ என்று நூற்கொள்கைக்கு ஏற்ப மதுரகவிகள் தாம் உபதேசம்பெற்ற திவ்யப்ரபந்தங்களைக் கைத்தாளமெடுத்துப் பண்ணிசையோடு எப்பொழுதும் பாராயணஞ் செய்துகொண்டு திருக்குருகூர்நகர் நம்பிக்கு ப்ரதாந ஸிஷ்யராய், பரதாழ்வானுக்கே பணிவிடை புரிந்தொழுகின ஸத்ருக்நாழ்வானைப்போலப் பகவத்பக்தியினும் பாகவதப்ரதிபக்தியை பரமாநுஷ்டாமாகத் தலைக்கொண்டு அவ்வாழ்வார் விஷயமாக ‘கண்ணிநுண்சிறுத்தாம்பு‘ என்ற திவ்யப்ரபந்த்த்தைப்பாடி முமுக்ஷுக்களுக்கு உபகரித்திருத்து வாழ்ந்திருக்கையில், தேவிற்சிறந்த, திருமாற்குத்தக்க தெய்வக் கவிஞரும் பாவிற்சிறந்த திருவாய்மொழி பகர் பண்டிதருமான காரிமாறர் திருநாட்டை அலங்கரித்தார்.
அப்பால், ஆசிரியரைப் பிரிந்ததற்கு மிகஇரங்கி அரிதில் தேறிய மதுரகவிகள் அர்ச்சாரூபமான ஆழ்வார்விக்ரஹத்தை அத்திருநகரில் ஏறியருளப்பண்ணிப் பிரதிஷ்டிப்பித்து அவர்க்கு நித்யநைமித்திக உத்ஸவங்களையெல்லாம் சிறப்புற நடத்திக்கொண்டு வந்தார். அத்திருவிழாக்களில், ‘வேதந்தமிழ் செய்தமாறர் வந்தார்!, திருமாலுக்குரிய தெய்வப்புலவர் வந்தார்!, அளவிலாஞானத்து ஆரியர் வந்தார்!‘ என்று இவை முதலாக அனேக விருதுகளைக்கூறித் திருச்சின்னம் முழங்குதலைக் கேள்வியுற்றவளவிலே, மதுரைச்சங்கத்தாரது தூண்டுதலால் அவர்கள் மாணாக்கர்கள் வந்து எதிரிட்டு உங்களாழ்வார் பக்தரேயன்றிப் பகவானல்லரே, இவர் சங்கமேறிய புலவரோ? இவர்பாடிய திருவாய்மொழி சங்கமேறிய செய்யுளன்றே, இவரை வேதந்தமிழ் செய்தவரென்று சிலாகிப்பது தகுதியோ?‘ என்று பல குதர்க்கம் பேசி விருதுகளைத் தடுத்திட்டனர். அதற்கு மதுரகவிகள் மனம் பொறாமல் வருந்தி ‘இவர்கட்குக் கர்வபங்கமாம்படி தேவரீர் செய்தருளவேண்டு‘ மென்று ஆழ்வாரையெ பிரார்த்திக்க, சடகோபர் ஒரு கிழப் பிரமாண வடிவத்தோடு வந்து, ‘திருவாய்மொழியில், “கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர்! எண்ணுந் திருநாமம் திண்ணம் நாரணமே“ என்ற பாசுரத்தின் முதலடியை ஒரு சிற்றேட்டில் எழுதிக்கொண்டுபோய்ச் சங்கப் பலகையில் வைத்திட்டால் அவர்கள் செருக்கு அடங்கும்‘ என்று கூறியருளினார். அந்த நியமனத்தின்படியே சடகோபபக்தர் கண்ணன் கழலிணையை எழுதிய ஏட்டை எடுத்துப்போய் வைத்திட்ட மாத்திரத்தில், சங்கப் புலவர்கள் ஏறியிருந்த பலகை பொற்றாமரைப் பொய்கையில் மூழ்கித் தன்மேலிருந்த புலவர்களையெல்லாம் நீரில் வீழ்த்தி உடனே மேலெழுந்து தன்மீது வைத்த சிறுமுறியை மாத்திரம் ஏந்திக்கொண்ட மிதந்தது. அப்பொழுது நீரில் விழுந்து அமிழ்ந்து தடுமாறியெழுந்து மெல்ல நீந்திக் கரைசேர்ந்த சங்கப்புலவர்கள், ஸகல வேத சாஸ்திரங்களையும் பிறராற் கற்பிக்கப்படாமல் தாமே யுணர்ந்த பகவதம்சமாகிய ஆழ்வாருடைய தைவிகமான பாண்டித்யத்தைத் தெரிந்துகொண்டு இறுமாப்பொழிந்து தாம் முன்பு அபசாரப்பட்டதற்கு அநுதாபமுற்று, அதனை க்ஷமித்தற்பொருட்டு அவரது மஹிமையைக் குறித்துத் தோத்திரமாகத் தனித்தனி ஒவ்வொரு பாடல்படி வெளியிடுபவரானார்கள். அங்ஙனம் வெளியிடுகையில் அப்பாடல்கள் யாவும்,
“சேமங் குருகையோ செய்யதிருப் பாற்கடலோ
நாம்ம் பராங்குசமோ நாரணமோ – தாமந்
துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு
முளவோ பெருமானுனக்கு.“
என்ற இப்பாடல் வடிவாகச் சிறிதும் வேற்றுமையின்றி ஒற்றுமைப்பட்டிருக்க, இதுபற்றி அவர்களனைவரும் ‘இது என்ன அற்புதம்! என்ன அற்புதம்!! இதுவும் ஆழ்வாரது தெய்வத்திருவருளே!!!‘ என்று அதிசயப்பட்டு.,
“ஈயாடுவதோ கருடற்கெதிரே இரவிக்கெதிர் மின்மினியாடுவதோ?
நாயாடுவதோ உறுமிப்புலிமுன் நரிகேசரிமுன் நடையாடுவதோ?
பேயாடுவதோ அழகூர்வசிமுன் பெருமான் வகுளாபரணன் னருள்கூர்ந்
தோவாதுரையா யிரமாமறையின்னொரு சொற்பொருமோவுலகிற்கவியே.“
என்பது முதலாகச் சிற்சில கவிகள்பாடிப் புகழ்ந்து அன்றுமுதல் ஆழ்வார்க்கு விருதுகூறல் முதலிய ஸகலவிபவங்களையும் முன்னிலும் பலமடங்கு மிகுதியாக நடப்பித்து வந்தனர்.
இப்படி மதுரகவியாழ்வார் தமது ஆசாரியருடைய பெருமைகளை வெளியிட்டுக்கொண்டு அத்தலத்திலே சிலகாலம் எழுந்தருளியிருந்து, பின்பு, சிந்தையும் மொழியுஞ் செல்லாநிலைமைத்தான பேரின்பப் பெருவீட்டை அடைந்தனர்.
இங்ஙனம் இவ்வாழ்வார் நம்மாழ்வாருக்குத் திருவடித் தொண்டராயொழுகியதுபற்றி, அவரது திருவடிநிலை மதுரகவிகள் என இவரது திருநாமத்தையிட்டு வழங்கலாகும்.
[“மாறனடிபணிந்துய்ந்தவிராமானுசன்“ என்பதற்கிணங்க, நம்மாழ்வார் திருவடி நிலைகளுக்கு இராமாநுசன் என்று பல திவ்யதேசங்களில் வழங்கும் திருநாமமும் பொருத்தமுடையதே.]
“ஏரார் மதுரகவி யிவ்வுலகில் வந்துதித்த
சீராருஞ் சித்திரையில் சித்திரைநாள் – பாருலகில்
மற்றுள்ள வாழ்வார்கள் வந்துதிந்த நாட்களிலும்
உற்றதெமக் கென்று நெஞ்சே! ஓர்.“
மதுரகவியாழ்வார் வைபவம் முற்றிற்று
ஸ்ரீரஸ்து
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணிநுண் சிறுத்தாம்பு
தனியன் உரை
(நாதமுனிகள் அருளிச்செய்த தனியன்)
अविदित विषयान्तर: शठारेरुपनिषदा मुपगानमात्र भोग: ।
अपिचगुणवशात्तदेक शेषी मधुरकविर्हृदये ममाविरस्तु ॥
அவிதி3தவிஷயாந்தரஸ்ஶடா2ரே ருபநிஷதா3முபகாநமாத்ரபோ4க3|
அபிச கு3ணவஶாத் த்தே3க3ஶேஷீ மது3ரகவிர்ஹ்ருத3யே மமாவிரஸ்து ||
பதவுரை
| அவிதிதவிஷயாந்தர: | (நம்மாழ்வாரைத் தவிர) வேறொரு விஷயத்தையுமறியாதவரும் |
| ஶடாரே: | நம்மாழ்வாருடைய (திவ்ய ஸூக்திகளாகிய) |
| உபநிஷதாம் | த்ரமிடோபநிஷத்தான திவ்யப்ரபந்தங்களை |
| உபகாநமாத்ரபோக: | இசைபாடுவது ஒன்றையே பேரின்பமாகக் கொண்டவரும் |
| குணவஶாத் | குணமடியாகவும் |
| ததேகஶேஷி | அந்த நம்மாழ்வாரொருவரையே தமக்கு சேஷியாக்க் கொண்டவருமான |
| மதுரகவி: | மதுரகவியாழ்வார் |
| மம ஹ்ருதயே | என் நெஞ்சில் |
| ஆவிரஸ்து | ஆவிர்ப்பவிக்கக் கடவர் |
***- நம்மாழ்வார் “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும் வெற்றிலையு மெல்லாங்கண்ணன்“ என்று எம்பெருமானொருவனைத் தவிர வேறொரு விஷயத்தையும் அறியாதிருந்தாற்போல, அந்த நம்மாழ்வா ரொருவரைத்தவிர வேறொன்றையுமறியாதவராய், அவருடைய அநுபவம் வழிந்த அருளிச்செயலாகிய திருவாய்மொழிப்பாவின் இன்னிசை பாடித் திரிவதையே காலக்ஷேபமாகக் கொண்டவராய், அவ்வாழ்வார் திறத்திலே ஸ்வரூபப்ரயுக்தமான தாஸ்யத்தோடு குணக்ருதமான தாஸ்யத்தையும் வஹிக்குமவரான ஸ்ரீமதுரகவிகள் எனது நெஞ்சில் எழுந்தருளியிருக்க வேணுமென்கிறது. மதுரகவிகளுக்கு இருந்த ஆசார்ய நிஷ்டை தமக்கும் உண்டாகவேணுமென்ற அவாவுடன் அவரை அநுஸந்திக்கிறபடி.
சடாரே: என்பதை நடுநிலைத் தீபகமாகக்கொண்டு கீழ்ப்பதத்தோடும் மேற்பதத்தோடும் அந்வயித்து, (முதலில் பஞ்சமீவிபக்தியாகக்கொண்டு) நம்மாழ்வாரிற் காட்டிலும் வேறொன்றை யறியாதவராய், என்றும் (பிறகு ஷஷ்டீவிபக்தியாகக்கொண்டு) நம்மாழ்வாருடைய அருளிச்செயலிசை பாடுவதையே காலக்ஷேபமாகக்கொண்டவராய் என்றும் உரைத்தலும் ஒக்குமென்க. இங்கு விஷயாந்தர: என்றது ஶப்திரதி விஷயங்களை அன்று, பகவத்விஷயத்தையாம். “உண்டபோதொரு வார்த்தையும் உண்ணாத போதொருவார்த்தையும் சொல்லுவார் பத்துப்பேருண்டிறே, அவர்கள் பாசுரங்கொண்டன்று இவ்வர்த்தமறுதியிடுவது, அவர்களைச் சிரித்திருப்பார் ஒருவருண்டிறே, அவர் பாசுரங்கொண்டு இவ்வர்த்த மறுதியிடக் கடவோம்“ என்ற ஸ்ரீவசநபூஷண ஸ்ரீஸூக்தியின் வியாக்கியானம் ஸேவிக்க.
உபநிஷதாம் என்கிற பஹுவசநம் – நான்கு வேதங்களினுடைய ஸாரமாக ஆழ்வார் அருளிச்செய்த திருவிருத்தம், திருவாசிரியம், பெரியதிருவந்தாதி திருவாய்மொழி என்னும் நான்கு திவ்யப்ரபந்தங்களையுங் குறிக்கும். இப்பதம் உபகாநமா என்பதில் அந்வயிக்க வேண்டுகையால் ஏகதேஸாந்வய மெனப்படும். இந்த ஏகதேசாந்வயம் சாஸ்த்ர ஸம்மதமேயாம். பல்லாயிரம் ப்ரயோகங்களும் உள்ளன.
ததேகஶேஷி ==”***” என்று பஹுவ்ரீஹிஸமாஸம் இங்குக் கொள்ளத்தக்கது. குணக்ருத்தாஸ்யத்திற்காட்டில் ஸ்வரூப ப்ரயுக்தமான தாஸ்யமே ப்ரதானமென்று ஸத்ஸம்ப்ரதாய ஸித்தாந்தமாயினும், ஆழ்வார் திறத்தில் மதுரகவிகள் குணங்களுக்குத் தோற்றும் அடிமைப்பட்டார் என்பதைத் தெரிவிக்கிறது – மூன்றாமடி. அபிச என்றதனால் முதலடியில் ஸ்வரூப்ப்ரயுக்தமான தாஸ்யம் கூறப்பட்டதாக விளங்கும்.
(இதுவும் நாதமுனிக ளருளிச்செய்தது)
வேறொன்றும் நானறியேன் வேதந் தமிழ்செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் – ஏறெங்கள்
வாழ்வாமென் றேத்தும் மதுரகவி யாரெம்மை
ஆள்வா ரவரே யரண்.
| வேறு ஒன்றும் நான் அறியேன் | (நம்மாழ்வார் தவிர) வேறொரு பொருளும் நான் அறியமாட்டேன் |
| வேதம் தமிழ்செய்த | வேதார்த்தங்களைத் தமிழாக அருளிச்செய்த |
| மாறன் | மாறனென்னும் திருநாமத்தை யுடையவரும் |
| வண் குருகூர் ஏறு | அழகிய திருக்குருகூர் நகர்க்குத்தலைவருமான |
| சடகோபன் | நம்மாழ்வார் |
| எங்கள் வாழ்வு ஆம் என்று | எமக்கு உஜ்ஜீவனராவர்“ என்று |
| ஏத்தும் | தோத்திரஞ் செய்தருளின |
| மதுரகவியார் | மதுரகவியாழ்வார் |
| எம்மை ஆள்வார் | நம்மை ஆள்பவர் |
| அவரே | அந்த மதுரகவிகளே |
| அரண் | (ப்ரபந்நகுலத்துக்கு) ரக்ஷகர் |
***- “வேறொன்றும் நானறியேன் வேதந் தமிழ்செய்த மாறன் சடகோபன் வண்குருகூரே றெங்கள் வாழ்வாம்“ என்னுமளவும் மதுரகவியாழ்வாருடைய அநுஸந்தாநத்தின் அநுவாதம். அன்றி, “வேறொன்றும் நானறியேன்“ என்பதைத் தனியாகப்பிரித்து அதனை இத்தனியனுக்கு வக்தாவான நாதமுனிகளுடைய சொல்லாக உரைக்கக்கூடுமாயினும் கீழ்த்தனியனில் “அவிதித விஷயாந்தர:“ என்னுமதுக்கு மொழிபெயர்ப்பாக அருளிச்செய்தவிதற்கு முந்தினபொருளே பொருந்துமென்க.
[வேதம் தமிழ்செய்த] ஆழ்வாரருளிச்செயல்கள், அளவிறந்த வேதங்களிலே எளிதிற் காணவொண்ணாதபடி மறைந்துகிடந்த தத்துவப்பொருள்களையெல்லாம் எடுத்துத் தெளிவுபடச் சொல்வதற்காகத் திருவவதரித்தவை. சுருங்கச்சொல்லல் விளங்கவைத்தல் முதலிய அழகுகளோடு தத்துவப் பொருள்களின் ஸாரங்களை எடுத்துச் சொல்லி விளக்குந்தன்மையில் வடமொழி வேதங்களினும் இத்தென்மொழிவேதம் மிகச்சிறந்த்தென்று கருதிய கம்பர், அளவிறந்த அரிய பெரிய வேதங்களிலுமுள்ள பொருள்களெல்லாங்கூடி, திருவாய்மொழி ஆயிரம் பாட்டிற்கூறிய ஸரார்த்தத்தின் ஒரு பகுதியளவுஞ் சொல்லவில்லை என்னுங் கருத்தமையச் சடகோபரந்தாதியிற் பாடிய
“ஆற்றிற்பொதித்த மணலின் தொகையரு மாமறைகள்
வேற்றிற்பொதிந்த பொருள்களெல்லாம் விழுமாக்கமலஞ்
சேற்றிற்பொதி யவிழ்க்குங் குருகூரர் செஞ்சொற்பதிக
நூற்றிற்பொதிந்த பொருளொரு கூறுநுவல்கிலவே“
என்னும் பாட்டை அநுஸந்திக்க.
ஸம்ஸ்க்ருத வேதம்போலவே தமிழ்மறையாகிய திவ்யப்ரபந்தங்களும் நித்யமென்பது ஆன்றோர் கொள்கை. திவ்யப்ரபந்தங்களை ஆழ்வார் இயற்றியதாகச் சொல்லுதல் என்னெனின், வடமொழி வேதங்களை ஹம்ஸரூபியான திருமாலினிடம் உபதேசம்பெற்ற பிரமன் தனது வாக்கினால் வெளியிட்ட மாத்திரத்தைக்கொண்டு “முன்னந் திசைமுகனைத் தான்படைக்க, மற்றவனும் முன்னம் படைத்தனன் நான் மறைகள்“ (பெரியதிருமடல்) என்று பிரமன்தானே அவற்றைப் படைத்ததாகச் சொல்லுதலும், பின்பு அவ்வடைமொழி வேதங்களின் ஒவ்வொரு பகுதியை ஒவ்வொரு முனிவர் ஒவ்வொரு சமயத்தில் வெளியிட்டதுகொண்டு அந்தப்பகுதியை அந்த்தந்த முனிவரியற்றியதுபோல (தைத்திரீயம், காண்வம் இத்யாதியாக) அவரவர் பெயரையிட்டு வழங்குதலும் போலவே, எம்பெருமான் திருவருளால் உணர்ந்த ஆழ்வார்கள் திவ்யப்ரபந்தங்களை உணர்ந்துவெளியிட்ட மாத்திரத்தைக்கொண்டு அவர்கள் செய்ததாகச் சொல்லுதல் உபசாரவழக்காம் என்பது ஸம்ப்ரதாயம். இனி இங்கு விரித்துரைக்க வேண்டும் அம்ஶங்களை மற்றோரிடத்திற் பன்னியுரைப்போமாக.
மாறன் – ஆழ்வார் பிறந்தபொழுதே தொடங்கி அழுதல் பால்குடித்தல் முதலிய லோகவ்யாபாரம் ஒன்றுமின்றி உலகநடைக்கு மாறாக இருந்ததனால் இவர்க்கு மாறன் என்று திருநாமமாயிற்று, வலிய வினைகட்கு மாறாக இருந்தலாலும், அந்யமதஸ்தர்களை அடக்கி அவர்கட்கு ஸத்ருவாயிருந்தலாலும், பாண்டியநாட்டுக்குத் தலைமையாகத் தோன்றியதனாலும் வந்தபெய ரென்றலுமுண்டு.
சடகோபன் – கர்ப்பத்திலிருக்கிற பொழுது ஞானிகளாயிருக்கின்ற குழந்தைகளைப் பிறந்தவுடனே தனது ஸபர்ஸத்தால் அஜ்ஞாநத்துக்கு உள்ளாக்கி அழுதல் அரற்றுதல் முதலியன செய்யும்படி பண்ணவிடுந் தன்மையதான ஶடமென்னும் வாயு, இவ்வாழ்வார் அவதரித்தபொழுது இவரையும் தொடுதற்குவர, அப்பொழுது இவர் அதனை ஹுங்காரத்தால் ஒறுத்து ஓட்டி ஒழித்ததனால் சடகோபர் என்று இவர்க்குத் திருநாமமாயிற்று. எம்பெருமானுடைய திவ்யமங்கள குணங்களாகிய அமுதவெள்ளத்திலே முழுகி மிகவும் ஈடுபட்டு நன்றாக ஆழ்ந்திடுபவராதல்பற்றி ஆழ்வார்கள் என்பது இவர்க்குச் சிறப்புப் பெயராகவழங்கும். மாறன், பாரங்குசன், வகுளாபரணன், திருநாவீறுடையபிரான், திருக்குருகூர்நம்பி, குருகைப்பிரான், வழுதிநாடன் முதலிய திருநாமங்களும் இவர்க்கு உண்டு.
குருகூர் – நூற்றெட்டுத் திருப்பதிகளுள் பாண்டியநாட்டுத் திருப்பதி பதினெட்டில் ஒன்று, ஆழ்வார்திருநகரி என்று ப்ரஸித்தி. குருகாபுரீ என்று வடமொழித்திருநாமம். ஏறு – வடமொழியில், புங்கவ: ருஷப: இத்யாதி ஸப்தங்கள் போல் தமிழில் ஏறு என்பது ஆண்பாற் சிறப்புப்பெயர், ஶ்ரேஷ்டன் என்றபடி, “வண்குருகூறேறு“ என்றவிடத்து வண்மையைக் குருகூரில் அந்வயிப்பதிலும் குருகூரேற்றில் அந்வயிப்பது அழகிதாம். அடியார்கட்கு அமுதவெள்ளமாக அருளிச்செயல்களை உபகரித்தருளிய உதாரசிகாமணியாகிய குருகூரதிபதி என்கை.
முதலடியில் “நான் அறியேன்“ என்று ஒருமையாகக் கூறியதற்கு ஏற்ப “என் வாழ்வாமென்றேத்தும்“ என்று மேலும் ஒருமையாகவே கூறவேண்டியிருக்க, எங்கள் என்று பன்மையாகக் கூறியது – தம்மோடு ஸம்பந்தம்பெற்ற ப்ரபந்ந ஸந்தாநத்தவரனைவரையும் உளப்படுத்திக் கூறியவாறாமெனக் கொள்க. திருவிருத்தத்தில் ஆழ்வார் “இனி யாம் உறாமை“ என்று முதலிற் பன்மையாகக் கூறி, மேல் “அடியேன் செய்யும் விண்ணப்பமே“ என்று ஒருமையாகக் கூறியதை – தம்முடைய ஸம்பந்தம்பெற்ற பரபந்நர்கள் எல்லார்க்குமாகத் தாம் ஒருவர் விஜ்ஞாபநம் பண்ணுகிறாரெனக்கொண்டு பொருத்துதல் இங்கு ஸ்மரிக்கத்தக்கது.
“அவரே சரண்” என்றும் பாடமுண்டாம்.
தனியன் உரை முற்றிற்று
ஸ்ரீ ரஸ்து
நம்மாழ்வாருடைய மஹிமையையும் அவரது திவ்யப்ரபந்தத்தின்
பெருமையையும் பற்றி விநோதரஸமஞ்ஜரியில் எழுதியுள்ள ஒரு விஷயம்
திருவள்ளுவர் குறள் செய்தகாலத்தில் அவரும் ஔவையும் இடைக்காடரும் சந்தித்த சமயத்தில், வள்ளுவரைநோக்கி மற்றையிருவரும் ‘நீர் செய்த நூல் எத்தன்மைத்தாகியது?‘ என்று வினாவ, அவர் ‘அகஸ்தியரால் ப்ரஸித்தம் பண்ணப்பட்ட இயல் இசை நாடகம் என முத்திறத்ததாகிய தமிழும் என்னாற் செய்யப்பட்ட குறளும், உடையநங்கையின் திருக்குமாரராகிய சடகோபர் அருளிச்செய்த திருவாய்மொழியின் புத்திரஸ்தாநமாகிய வழிநூலாம்“ என்னுங் கருத்தை உள்ளமைத்து.
“குறுமுனிவன் முத்தமிழ் மென்குற்ளு நங்கை
சிறுமுனிவன் வாய்மொழியின் சேய்“
என்று சொன்னதையும்,
அதுகேட்டு ஔவை, ‘அர்த்தபஞ்சகத்தையும் சதுர்வித புருஷார்த்தத்தையும் அறப்பால் முதலிய முப்பாலுள் அடக்கி அமைக்கப்பட்ட உண்மைப் பொருளாகிய எவ்வகைப்பட்ட வேதங்களுக்கும் சம்மதமான மேலான பொருளை, குளிர்ச்சிதங்கிய தாமிரபணி தீரந்திலிருக்கும் திருக்குருகூரிற் காரி முதலியார் புதலவராய் அவதரித்த நம்மாழ்வாரது திருவாய்மொழியாகிய திராவிடவேதமென்று சிலர் சொல்லுவார்கள், நான் அவர்கள் சொல்லைமறந்து, அக்குறளை இந்த உலகத்திற்குத் தாயாகிய ஸ்ரீமந்நாராயணனாற் பிரமனுக்கு உபதேசிக்கப்பட்டு வந்த கீர்வாணவேதமென்றே சொல்லுவேன்‘ என்னுங் கருத்தை உள்ளிட்டு.
“ஐம்பொருளு நாற்பொருளு முப்பொருளிற் பெய்தமைத்த
செம்பொருளை யெம்மறைக்குஞ் சேட்பொருளைத்-தண்குருகூர்ச்
சேய்மொழிய தென்பர் சிலரியா னிவ்வுலகின்
தாய்மொழிய தென்பேன் தகைந்து”
என்று சொன்னதையும்,
இடைக்காடர் ‘திராவிடவேதமாகிய சேய்மொழியையும் கீர்வாண வேதமாகிய தாய் மொழியையும் ஆராய்ந்து சொல்லுமிடத்தில், இரண்டும் ஒன்றேயாம்; திருவாய்மொழியை யாவரும் சங்கையின்றி வேதமென்றே சொல்லுவார்கள்; திருவாய்மொழியைப் போலச் சிறந்த நூல்கள் அனேகம் உண்டு என்று சிலர் குதர்க்கஞ்செய்தாலும், நான் அவர்களை மறுத்து, அவைகளும் இந்தக்குறளும் அத்திருவாய்மொழியினது சாயையாயிருப்பவைகள் என்றே சொல்லுவேன்’ என்னுங் கருத்தையடக்கி,
“சேய்மொழியோ தாய்மொழியோ செப்பி லிரண்டுமொன்றவ்
வாய்மொழியை யாரு மறையென்ப – வாய்மொழிபோ
வாய்மொழிகள் சால வுளவெனினு மம்மொழியின்
சாய்மொழியென் பேன்யான் தகைந்து”
என்று சொன்னதையும்,
ஒருகாலத்தில் தாமிரபரணி நதியின் வடகரையில் வசித்திருந்த யோகியொருவர் வளர்த்த நாயொன்று தென்கரையிலுள்ள ஆழ்வார்திருநகரிக்குப் பிரதிதினமும் மத்தியானவேளையிற்போய் வீதியிலிருக்கும் வைஷ்ணவர்களுடைய உச்சிஷ்டத்தைதின்று வயிற்றை நிரப்பிக்கொண்டு வருகிற வழக்கப்படி ஒருநாள்போய்த் திரும்பிவர விளம்பித்ததனால், யோகியானவர், நாய் இன்னும் வரவில்லையேயென்று ஆற்றோரத்தில் வந்து பார்க்கும்பொழுது, அந்நாய் நட்டாற்றில் வருகையில் அகஸ்மாத்தாகப் பெருவெள்ளம் வந்தமையால் நீந்திக் காலோய்ந்து போய் நீரில் அமிழ்ந்து கிளம்பிற்று, அத்தருணத்தில் அதன் கபாலம் வெடித்து அந்த ரந்திரத்தின்வழியாய் நாயின் ஆத்மாவாகிய சோதியானது எழுந்து அமாவாசையிருளில் அனேகம் தீவட்டி கொளுத்தினதுபோலப் பிரகாசத்தைப் பிரத்யட்சமாகப்பார்த்து, ‘அநேதநமாகிய நாயும், பெறுதற்கரிய பேறுபெற்றதே, இதென்ன சாதநத்தை யுடைத்தாயிருந்தது? ஒன்றுமில்லாதிருந்தும் ஆழ்வார்திருநகரியின் திருவீதி யெச்சில் ஞானிகள் முதலானவர்களுக்கும் சித்திக்க மாட்டாதே‘ என்று நினைத்து மனமுருகிக் கண்ணீர்விட்ட அழுது அவர்,
“வாய்க்குங் குருகைத் திருவீதி யெச்சிலை வாரியுண்ட
நாய்க்கும் பரமபத மளித்ததாயந்த நாயொடிந்தப்
பேய்க்கு மிடமிளித்தாற் பழுதோ பெருமாள் மகுடஞ்
சாய்க்கும்படிக்குக் கவிசொல்லு ஞானத்தமிழ்க்கடலே!”
என்பது முதலாகச் சில பாடல்களால் ஆழ்வாரை ஸ்தோத்திரித்தையும் நினைக்க.
ஸ்ரீ
மதுரகவியாழ்வார் அருளிச்செய்த
கண்ணி நுண்சிறுத்தாம்பு
இத்திவ்யப்ரபந்தம் முதலாயிரத்தில் சரமப்ரபந்தமாக ஸ்ரீமந்நாதமுனிகளால் வகுக்கப்பட்டது. திருவாய்மொழியை ஸேவிக்கத் தொடங்கும்போதும் சாத்தும்போதும் இப்பிரபந்த்த்தை நியமேந அநுஸந்திப்பது ஸம்ப்ரதாயம். இது திருவாய்மொழிக்கு சேஷமான ப்ரபந்தமாதல்பற்றி, திருவாய்மொழி போல் இதுவும் வீதிகளில் ஸேவிக்கப்படக் கூடாதென்று பூர்வாசார்ய நியமநம்.
“பொய்கையார் பூதத்தார் பேயார் புகழ்மழிசை ஐயன் அருள்மாறன் சேரலர்கோன் துய்யப்பட்ட நான் அன்பர்தாள் தூளி நற்பாணன் நன்கலியன்“ என்னும் ஆழ்வார்கள் பதின்மரால் அருளிச் செய்யப்பட்ட நாலாயிர திவ்ய ப்ரபந்தத்தில் பெரும்பாலான வழக்குதலின்றி மழுங்கிக்கிடந்தகாலத்தில், ஸ்ரீமந்நாதமுனிகள் என்று கூறப்படுகின்ற ஸ்ரீவைஷ்யண ஸம்ப்ரதாய ப்ரதமாசாரியரானவர், திருக்குருகூரி லெழுந்தருளி, கண்ணிநுண் சிறுத்தாம்பு என்னும் இப்பிரபந்தத்தைத் தேவகானத்தாற் பன்னீராயிரம் முறை பாட. அப்பேது நம்மாழ்வார ப்ரஸந்நராகி அந்த நாதமுனிகட்கு நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தையும் உபதேசித்தருளினரென்று ஸத்ஸம்ப்ரதாயம் வல்ல பெரியோர் அருளிச் செய்திருப்பதைக் கொண்டு இத்திவ்யப் பிரபந்தத்தின் ஒப்புயர்வற்ற பெருமையை உய்த்துணர்க.
“கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று இந்நூல் தொடங்குவதனால் ‘முதற்குறிப்பு‘ என்னும் இலக்கணத்தால் இந்நூற்கு அதுவே திருநாமமாயிற்று; திருப்பல்லாண்டு, அமலனாதிபிரான் முதலியனபோல.
ஆழ்வாருடைய தோத்திரமாகத் திருவவதரித்த இப்பிரபந்தம் – எம்பெருமானுடைய தோத்திரமாகிய திவ்யப்ரபந்தங்களிடையே சேர்த்து அநுஸந்திக்கப்பட்டுவருதலும், இதனையுஞ் சேர்த்து நாலாயிர மென்று கணக்கிடுதலும் பொருந்துமோ? என்று சங்கிப்பவர்கள்.
“வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம்போல்
சீர்த்த மதுரகவி செய்கலையை – ஆர்த்தபுகழ்
ஆரியர்கள் தாங்க ளருளிச் செயல்நடுவே
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து“
என்று மணவாளமாமுனிகள் அருளிச்செய்த உபதேச ரத்தினமாலைப்பாசுரத்தையும்,
“இதுதான் * பயிலுஞ் சுடரொளி * நெடுமாற்கடிமை தொடக்கமானவற்றின் அர்த்தத்தை ப்ரதிபாதிக்கையாலே இதின் அர்த்தகௌரவத்தை விசாரித்து, நன்றாயிருப்பதொரு ஹாரத்தைச் சமைத்து அது ஒளிபெறும்படி சிலாக்யமாயிருப்பதொரு நாயகக்கல்லை அதன் நடுவே பதித்தாற்போலே அருளிச்செயல்கள் தான் நிறம்பெறும்படி அவற்றின் நடுவே இத்தைச் சேர்த்தார்கள், சேர்த்த சேர்க்கையின் சாதுர்யத்தாலேயிறே முத்துமாலை தொடக்கமான ஆபரணாதிகள் நிறம்பெறுவது, அதுபோலேயாய்த்து இது,” என்று அப்பாட்டின் வியாக்கியானத்தில் பிள்ளை லோகார்ய ஜீயர் உரைத்ததையும் உற்று நோக்குக.
இப்பிரபந்தம் அந்தாதித் தொடையாற் பாடப்பட்ட நூலாதலின் சொற்றொடர்நிலை பொருட்டொடர்நிலை என்னும் இருவகையுள் சொற்றொடர் நிலையாம். அந்தாதித் தொடையாவது – முன்நின்ற பாட்டின் இறுதியெழுத்தாயினும் அசையாயினும் சீராயினும் அடியாயினும் பின்வரும் பாட்டின் முதலாகப் பாடுவது. இந்நூல் இறுதிச் செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக பாடுவது. இந்நூல் இறுதிச்செய்யுளின் அந்தமே முதற்செய்யுளின் ஆதியாக அமையும்படி மண்டலித்துப் பாடப்பட்டுள்ளமையுங் காண்க. இது தொண்ணூற்றுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றாம் பதிற்றந்தாதி நூற்றந்தாதி என்ற வகைகளில் கலித்துறையினாலேனுமே பாடப்படவேணுமென்பது நியதியன்றென்ப. இப்பிரபந்தம் கலிவிருத்தத்தில் அமைந்தது.
கம்பர் தாம் ஆழ்வார் விஷயமாகச் சடகோபரந்தாதி பாடுதற்கு இக்கண்ணி நுண் சிறுத்தாம்பை வழிகாட்டியாக்க் கொண்டமையை அவர்தாமே வெளியிட்டுரைத்த
“மன்றேபுகழுந் திருவழுந் தூர்வள்ளல் மாறனைமுன்
சென்றே மதுரகவிப் பெருமாள் தென்தமிழ்த்தொடையில்
ஒன்றேபதிக முரைத்தவன் பொன்னடி யுற்றுநின்றா
னென்றே பதிகம் பதிகமதாக இசைத்தனனே“
என்னும் பாயிரம் இங்கு நினைக்கத்தக்கது.
இத்திவ்யப்ரபந்த்த்திற்கு, நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் இவர்கள் மணிப்ரவாள நடையில் அருளிச்செய்த சிறந்த வியாக்கியானங்கள் உள்ளன. வடகலை ஸம்ப்ரதாயத்தில் பரகாலஜீயர் இயற்றிய வியாக்கியானமுமுளது.
முன்னோருரைகளை முற்றுந்தழுவியும் புதிதாகப் பல விஷயங்கள் சேர்த்தும் அடியேனால் எழுதப்படுகிற இவ்வுரையிலுள்ள குற்றங்குறைகளைப் பெரியோர் பொறுத்தருள்வாராக.
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்.
பிரபந்தசாரம்
“தேறியமா ஞானமுடன் திருக்கோளூரில்
சித்திரையில் சித்திரைநாள் வந்து தோன்றி
ஆறிய நல்லன்புடனே குருகூர்நம்பிக்
கனவரத மந்தரங்க வடிமை செய்து
மாறனையல் லாலென்று மறந்துந் தேவு
மற்றறியே னெனுமதுர கவியே நீமுன்
கூறிய கண்ணிநுண் சிறுத்தாம்பதனிற் பாட்டுக்
குலவு பதினொன்றுமெனக் குதவு நீயே“
கண்ணிநுண் சிறுத்தாம்பின் அர்த்தஸங்க்ரஹமாக அதிகாரஸங்க்ரஹத்தில்
வேதாந்ததேசிகன் அருளிச்செய்த பாட்டு
இன்பத்தி லிறைஞ்சுதலில் இசையும்பேற்றில்
இகழாக பல்லுறவில் இராகமாற்றில்
தன்பற்றில் வினைவிலக்கில் தகவோக்கத்தில்
தத்துவத்தை யுணர்த்துதலில் தன்மையாக்கில்
அன்பர்க்கேயவதரிக்கு மாயன்நிற்க
அருமறைகள் தமிழ்செய்தான் தாளேகொண்டு
துன்பற்ற மதுரகவி தோன்றக்காட்டும்
தொல்வழியே நல்வழிகள் துணிவார்கட்கே.
இன்பத்தில் –“அண்ணிக்கு மமுதூறும்“ என்று முதற்பாட்டிற் சொல்லப்பட்டு “இன்பமெய்தினேன்“ என்று இரண்டாம்பாட்டில் அநுவதிக்கப்பட்ட ஆந்ந்தரூபமான அநுபவத்தில்.
இறைஞ்சுதலில் –“வினேனவன்பொன்னடி“ என்று கூறப்பட்ட சரண ஸமாச்ரயணத்தில்.
இசையும்பேற்றில்– அப்யுபகமம் பண்ணும் புருஷார்த்த்த்தில், “திரிதந்தாகிலும்“ என்கிற மூன்றாம்பாட்டில் – பகவத்விஷயத்தை ஆழ்வாருகந்த விஷயமென்று அவ்வழியாலே இசைகின்றேனேயொழிய, ஆழ்வாரைத் தவிர்த்து பகவத் விஷயமானது எனக்கு ஸ்வத: இசையக் கூடியதன் றென்னுமளவும் தாத்பர்யமாகையாலே ஆழ்வாரே தமக்கு நிருபாதிகமாக இசையக்கூடிய புருஷார்த்தமென்று வ்யஞ்ஜிதமாகிற அர்த்தத்தை ஸங்க்ரஹித்தபடி.
இகழாத பல்லுறவில்– ஒருகாலும் சிதையாத பந்துத்வத்தில், ‘அன்னையாய் அத்தனாய்‘ என்றதை ஸங்க்ரஹித்தபடி.
இராகம் மாற்றில் – அநுசிதமான விஷயத்திலுள்ள ஆசையைத் தவிர்த்ததில், “முன்னெலாம்.. நம்பினேன், இன்று சதிர்த்தேன்” என்றதில் நோக்கு.
தன்பற்றில்- தானே தன்பற்றை யுண்டாக்குகையில், “இன்றுதொட்டும்… தன் புகழேத்தவருளினான்”
வினைவிலக்கில் – பாப நிவாரணத்தில், “பண்டை வல்வினை பாற்றியருளினான்” தகவு ஓக்கத்தில் – கிருபையின் உத்கர்ஷத்தில், “அருள்கண்டீரிவ்வுலகினில் மிக்கதே”
தத்துவத்தை உணர்த்துதலில் – தத்வோத்போதநத்தில், “வேதத்தினுட்பொருள் நிற்கப்பாடி.”
தன்மை ஆக்கில் – ஸ்வரூப விகாஸத்தையுண்டாக்குவதில், “செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்”
இவை பத்தும் விஷயஸப்தமிகள், இவை விஷயமாக என்றபடி. இவற்றுக்குக் “தோன்றக்காட்டும்“ என்பதோடு அந்வயம் இவ்வர்த்தங்களை உட்கொண்டு ஸ்ரீமதுரகவிகள் அருளிச்செய்த என்றபடி.
[அன்பர்க்கே இத்யாதி] ஆச்ரிதர்க்காகவே அவதரித்தருளுமவனான எம்பெருமான் நிற்கச்செய்தேயும் அவனை அநாதரித்து, வேதந் தமிழ்செய்தமாறன் சடகோபன் திருவடிகளையே ஆச்ரயித்துத் துயர்தீர்ந்த மதுரகவிகள் விளங்கக் காட்டியருளின வழியே முமுக்ஷுக்களுக்கு உபாதேயமான மார்க்கம். ஸர்வபலப்ரதனான ஸர்வேச்வரனிருந்தாலும் ஸதாசார்ய ஸமாச்ரயணமில்லாதார்க்கு மோக்ஷங்கிடையாதென்று முறையிடுகின்ற மதுரகவிகளுடைய உக்தியும் அநுஷ்டாநமுமே ஆதரணீணமென்றபடி.
ஆழ்வார் திருவடிகளே சரணம் – தூப்புல்பிள்ளை தூமொழி வாழி.
ஸ்ரீரஸ்து
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
கண்ணிநுண் சிறுத்தாம்பு உரை
அவதாரிகை
ஸத்வகுணமொன்றின் வழியிலேயே நில்லாது முக்குணங்கட்கும் வசபட்டொழுகின ரிஷகளிற் காட்டில் ஆழ்வார்கள் பரமவிலக்ஷணர்கள்.
எங்ஙனே? என்னில்,
ரிஷிகளானவர்கள் தாம் தாம் அநுஷ்டித்த தபோரூபமான தர்மத்தினுடைய சக்தியாலே பிறந்த ஞானத்தினால், அறிய வேண்டுமவற்றைத் தெளிய அறிந்து மகிழ்ந்து அந்தத் தெளிவும் மகிழ்ச்சியும் அடியாக மேன்மேலும் சப்தங்களைத் தொடுத்தனர், ஆழ்வார்கள், அதுக்கு எதிர்த்தட்டாக * மயர்வறமதி நலமருளப் பெற்று ஞானபரிபாகரூபமான பக்தியாலே விரஹவ்யஸநத்தில் ஞானமெல்லாம் அடிமண்டியோடே கலங்கி, நினைத்தபடி எம்பெருமானை அநுபவிக்கப்பெறாமையாலே சோகமுற்று “எத்திறம்! உரலினோடு இணைந்திருந்தேங்கிய எளிவே!“ என்றும் “பிறந்தவாறும்“ என்றும் “கண்கள் சிவந்து“ என்றும் ஒரொரு திருவாய்மொழியில் அவ்வாறு மாஸமாக மூவாறு மாஸம் மோஹித்து, ஒருசொல் எடுக்கும்போது ஒருமலை யெடுக்குமாபோலே வருத்தப்பட்டு, பகவதநுபவம் பெறாத துயரத்தில் அவன்படிகளைப் பலகாலும் சொல்லிப் பொருமிப் பொருமி அழுது உள்ளெலாமுருகிக் குரல்தழுத்து திவ்யப்ரபந்தங்களை அருளிச்செய்தனர்.
இன்னமும், வேதத்தையும் அஷ்டாங்கயோகத்தையும் பயின்று அவ்வழியாலே பரமாத்மாவை இன்னான் இனையான் என்று தெளிந்து, இப்படி தம் முயற்சியாலே கண்ட காட்சியில் வைசத்யமில்லையாலே இன்றளவும் ஸம்ஸார போக விஷயங்களான ஆசாபாசங்களாலே கட்டுப்பட்டிருப்பர் – ஓதியுணர்ந்தரிஷிகள், தன்னை ஸேவிப்பதற்கு ஸாதநமாக எம்பெருமான் அருளிய திவ்யசக்ஷுஸ்ஸாலே, பிரமருத்ராதிகட்கும் அரியனான அவனை விஶததமமாக ஸாக்ஷாத்கரிக்கப்பெற்ற ஆழ்வார்களுக்கு அவனது திருவருளால் வன்பாசங்களனைத்தும் ஸவாஸநமாக விட்டகன்றன.
இன்னமும் ரிஷிகளுக்கு பலமூலபத்ர வாயுதோயங் (பழம், வேர், இலை, காற்று, நீர்) கள் தாரகமும் போஷகமும் போக்யமுமாம், “உண்ணுஞ்சோறு பருகுநீர்த் தின்னும்வெற்றிலையு மெல்லாங் கண்ணன்“ என்றிருப்பர் ஆழ்வாரகள்.
இன்னமும், எம்பெருமானைப் பிரிந்த துயரத்தினால் கண்ணுங் கண்ணீருமாய், கடலோடு மலையோடு ஆகாசத்தோடு வாசியற எங்குந்தேடி நெஞ்சு கலங்கித் “திருமாலே!” என்று கூப்பிட்டு “எங்கே காண்கேன்!“ என்று எம்பெருமான் விஷயத்திலே ஆழ்வார்கள் படுகிறபாட்டை ரிஷிகள் அந்தோ! மக்களைப்பிரிந்து படுவர்கள். [வஶிஷ்டன் புத்ரவிரஹ க்லேஸத்தாலே மரணத்தை விரும்பி மலையிலேறி விழுவது, நெருப்பில் குதிப்பது, கழுத்தில் கல்லைக்கட்டிக் கடலிலே விழுவதாகையும், வேதவ்யாஸபகவான், புத்ரவிரஹம் பொறுக்கமாட்டாமல் “புத்ரனே“ என்று வாய்விட்டுக் கதறி அழுதுகொண்டு, காணப்பெறாமையால் அலமந்து திரிகையுமாகிற ரிஷிசரித்திரங்கள் உணரத்தக்கன.]
இன்னமும் எம்பெருமானை அடைவதே பேறாகவும், கருமம் ஞானம் முதிலியனவை அப்பேற்றுக்கு ஸாதகமாகவும், இந்திரன் முதலிய தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஈச்வரனே உத்தேச்யனாகையாலே இந்திராதி தேவர்கள் அநுவர்த்தநீயராகவும் ரிஷிகள் பேசுவர்கள், அங்ஙன்ன்றி, கைங்கரியமே புருஷார்த்தமாகவும், * நாகணைமிசை நம்பிரான் சரணே சரணாகவும், தேவதாந்தரங்கள் அநுவர்த்தநீயரல்லராகவும் ஆழ்வார்கள் அறுதியிட்டிருப்பர்.
இப்படிகளாலே ரிஷிகளிற்காட்டில் நெடுவாசிபெற்றிருக்கும் ஆழ்வார்களனைவர்களிலும் பரமவிலக்ஷணர் ஸ்ரீமதுரகவியாழ்வார். எங்ஙனேயெனில் எம்பெருமானுக்கு அடிமைப்படுவதிற்காட்டிலும் பாகவதர்கட்கு அடிமைப்படுதலே பரமபுருஷார்த்தம் என்னும் ஸாரமான ரஹஸ்யார்த்த்த்தை நன்குணர்ந்து அந்நிலையிலே ஊன்றி நின்றனராதலின்.
“அவனடியாரடியே கூடுமிதுவல்லால், விடுமாறென்பதென்” என்றும் “எம்பெருமான் தாள்தொழுவார் காண்மின் என்தலை மேலாரே” என்றும், “அளியனென்றருளி உன்னடியார்க் காட்படுத்தாய்” என்றும், “அடியார்க்கென்னை யாட்படுத்த விமலன்“ என்றும் பல பாசுரங்களாலே மற்றையாழ்வார்கள் பகவச்சேஷத்வத்தோடே கலந்தகட்டியாக அநுஸந்தித்த பாகவதஶேஷத்வத்தை இவ்வாழ்வார் நிஷ்க்ருஷ்டவேஷமாகக் கடைப்பிடித்து, ஆசார்ய சரணாரவிந்தமல்லது வேறொன்றறியாமல் ததேகநிஷ்டராயிருந்தது இவர்க்கு அநந்யஸாதாரணமான அதிசயமேயாம்.
ஒரு முமுக்ஷுவுக்கு நான்கு வ்யக்திகள் ஆதரிக்கத் தக்கவர்கள், எம்பெருமானும் பிராட்டியும் ஆசார்யனும் ஸ்ரீவைஷ்ணவர்களும். இவர்களுள் எம்பெருமான், அடியிலே இழந்துகிடந்த கரணகளேபரங்களைத் தன் அருளாலே கொடுத்து இவனைக் கரைமரஞ்சேர்க்கும் தேவனாகையாலே ஆதரிக்கத் தக்கவன். பிராட்டி, தாய்முறையடியாக இவனிடத்தில் நிருபாதிக வாத்ஸல்யமுடையளாகையாலும், இவன் தன் குற்றங்களைக் கண்டு அஞ்சி எம்பெருமானை அணுகக் கூசும்போது புருஷகாரம்பண்ணிச் சேர்ப்பிக்குமவளாகையாலும் ஆதரிக்கத் தக்கவள். ஆசார்யன், இவனுக்கு பகவத் விஷயத்தையும் பிராட்டி வைபவத்தையும் உபதேசிக்கு மவனாகையாலும், தான் அநுஷடித்துக் காட்டி இவனை அநுஷ்டிப்பிக்குமவனாகையாலும், இவனது குற்றங்களைப் பார்த்தவளவிலும் கைவிடாதவனாகையாலும், தன் காரியத்தை மறந்தாகிலும் இவனுடைய ஹிதமே பார்த்துப் போருமவனாகையாலும் ஆதரிக்கத்தக்கவன். ஸ்ரீவைஷ்ணவர்கள், இவனுக்கு முதலிலே ருசியைப் பிறப்பித்தவர்களாகையாலும், ஆசாரியருபதேசித்த ஞானத்துக்கு அபிவிருத்தியைப் பண்ணுமவர்களாய் உசாத்துணையாகையாலும், ஆசாரியனிடத்தில் பயபக்திகளை வளரச் செய்யுமவர்களாகையாலும், ப்ரக்ருதிபாரவஸ்யத்தாலே இவனுக்கு நேரும் தவறுதல்களைத் திருத்தவல்லவர்களாகையாலும் ஆதரிக்கத்தக்கவர்கள். ஆக இந்நால்வரும் ஆதரணீயர் என்னுமிடத்தை.
மாத்ருதேவோபவ பித்ருதேவோபவ
ஆசார்யதேவோபவ அதிதிதேவோபவ
என்று உபநிஷத்தும் ஓதிவைத்த்து. இங்கு, அதிதி ஸப்தம் ஸ்ரீவைஷ்ணவ வாசகமோவெனில், ஆம். அதிதிகளாகிறார் – தாங்கள் முன்பு நின்றநிலைகுலைந்து பிறரகத்திலே புகுமவர்கள் ஸ்ரீவைஷ்ணவர்களும் ப்ரக்ருதி ப்ராக்ருதங்களை விட்டுப் பரனுடைய ஸரணத்தில் புகுந்தவர்களாகையாலே அதிதிஸப்தம் ஸ்ரீவைஷ்ணவபரமாக்க குறையில்லை.
இனி, இந்நால்வரில் மிகவும் ஆதரிக்கத் தக்கவர் ஆர்? என்னில், ஸ்ரீவைஷ்ணவர்களுடைய வைபவஜ்ஞாநமும், பெருமாள் பிராட்டிகளுடைய வைபவஜ்ஞாநமும் இவனுக்கு உண்டானது ஆசார்ய அங்கீகாரத்திற்கு பின்பாகையாலே, விஸேஷித்து ஆதரணீயன் ஆசாரியனேயாய்த்து.
ஆகையாலே, இந்த மதுரகவியாழ்வார் – ஆசார்ய வைபவத்தை நன்கு அறியுமவராகையாலும், ஆழ்வார் திருவடிகளிலே நெடுநாள் கைங்கரியம்பண்ணி அவருடைய அநுக்ரஹத்துக்கு இலக்காய்ப் போந்தவராகையாலும், அவர் செய்தருளின உபகாரத்துக்குக் கைம்மாறு உண்டாக நினைத்திராவராகையாலும், அவரை வாயாரப்புகழ்ந்து தம்முடைய உள்ளடங்காத பக்திக்குப் போக்குவிட வேண்டுகையாலும் இக்கண்ணிநுண் சிறுத்தாம்பு முகத்தாலே ஆழ்வார் வைபவத்தைப் பேசுகிறார். ஈச்வரன் ஆராதிக்க அரியனாயும், ஆசாரியன் ஆராதிக்க எளியனாயுமிருப்பன், ஈச்வரனை ஆராதிக்க இழந்த ஆழ்வார்க்குத் திருவிருத்தம் முதலிய நான்கு திவ்யப்ரபந்தங்கள் வேண்டிற்று, ஆசாரியரை ஆராதிக்க இழிந்த இம்மதுரகவிகளுக்கு இப்பத்துப்பாட்டுமே அமைந்தது.
இம்மதுரகவிகளுடைய அத்யவஸாயத்துக்குப் புராண புருஷர்களில் யாரை ஒப்புச்சொல்லலாமென்னில், ஸ்ரீராமாயண புருஷர்கள் நால்வரில் ஒருவரான ஸ்ரீசத்ருக்நாழ்வானை ஒப்புச்சொல்வது பொருந்தும். வேதத்தின் உபப்ரும்ஹணமாக அவதரித்த ஸ்ரீராமாயணத்தில் ராம லக்ஷ்மண பரத ஸத்ருக்கர் என்கிற ராமாயண புருஷர்கள் நால்வரும் நான்கு அர்த்தங்களை அநுஷ்டித்துக் காட்டினர். ‘பெரியோர் சொல்வதைச் சிறியோர் செய்யக் கடவர்‘ என்கிற சாமாந்ய தர்மமுறைமையைப் பித்ருவசந பரிபாலனாதி முகத்தாலே பெருமாள் அனுஷ்ட்டித்துக் காட்டினார். ‘சேஷ பூதன் சேஷி விஷயத்தில் கைங்கர்யம் பண்ணி ஸ்வரூபலாபம் பெறக்கடவன்’ என்கிற விசேஷ தர்மத்தை இளையபெருமாள் அநுஷ்டித்தார். பரதாழ்வானும் இந்த சேஷ சேஷி முறைமையையே பரிபாலித்தவராயினும் இவர்க்கு விசேஷமுண்டு, நிர்ப்பந்தப்படுத்தி அடிமைசெய்தார் இளையபெருமாள், இவர் அங்ஙனன்றியே ‘சேஷி உகந்த அடிமையே சேஷபூதனுக்கு ஆதரணீயம்‘ என்னுமிடத்தை அநுஷ்டித்தார். பெருமாளைப் பிரிந்து தரித்திருக்கமாட்டாமையாகிற தன் செல்லாமையைப் பாராது பெருமாளுடைய திருவுள்ளத்தையே பார்த்துச் சித்திரகூடத்தினின்றும் மகிழ்ச்சியோடே மீண்டாரிறே இவர். ஆகையால் இவர்க்கு விசேஷமுண்டு.
அப்படிப்பட்ட பரதாழ்வானையல்லது வேறொன்று மறியாதேயிருக்கையாலே – பகவச்சேஷத்வ காஷ்டையான பாகவதசேஷத்வத்தை அநுஷ்டித்தார் சத்ருக்நாழ்வான். இந்த சத்ருக்நர்க்கு வால்மீகிமுனிவர் விசேஷணமிடும் போது நித்யசத்ருக்ந என்றார்- பாஹ்யசத்ருக்களை மாத்திரமேயன்றி ஆந்தரசத்ருக்களான இந்திரியங்களையும் வென்றிருப்பர் என்று அதற்குப் பொருளுரைத்த பெரியவாச்சான்பிள்ளை, “அவ்விந்திரியஜயத்தின் எல்லை எவ்வளவென்னில்; “***“ – பும்ஸாம்த்ருஷ்டிசித்தாபஹாரிணம்“ என்கிற ராமஸௌந்தர்யத்தலும் துவக்குண்ணாதொழிகை. அதாகிறது – பெருமாளைப் பற்றும்போதும் தன் உகப்பாலேயாதல் அவருடைய வைலக்ஷணயத்தாலே யாதலன்றிக்கே தனக்கு உத்தேச்யனான இவன் (பரதன்) உகந்தவிஷயம் என்று பற்றுகை.“ என்றருளிச் செய்தது இங்கு அநுஸந்தேயம்.
அவதாரிகை முற்றிற்று
