ஸ்ரீ:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் தீருவடிகளே சரணம்
திருப்பாணாழ்வார் வைபவம்
* கங்கையிற் புனிதமாய காவிரிநதி பாயப்பெறுதலால் ஒப்புயர்வற்ற தூய்மைபெற்ற சோழவளநாட்டிலே ராஜநகரங்களைந்தனுள் ஒன்றாய், தருமவர்மா வென்னும் செம்பியனுக்குக்குமரியாய் நீளாதேவி அவதரித்த இடமான உறையூறிலே, துர்மதி வருஷத்தில் கார்த்திகைமாதத்து ரோஹிணி நக்ஷத்ரத்திலே திருமாலினது ஸ்ரீவத்ஸத்தின் அம்சமாய் ஒருவர் ஓர் அந்தணாளனது கழனியிலே நெற்பயிர்க்கதிரில் அவதரித்தார்.
பிறவாதுபிறந்த அத்தெய்வக் குழந்தையை அவ்வூரிற் பஞ்சமசாதியிற் பாணர்குலத்துப் பிறந்தானொருவன் பார்த்து நல்வினைப்பயனென்று மகிழ்ந்து எடுத்துக்கொண்டுபோய், மலடுதீர்ந்து, மருவியகாதல் மனையாளுந்தானுமாக, பசுவின்பால் முதலிய பரிசுத்த ஆஹாரங்களையே கொடுத்துப் போஷித்துவந்தான்.
அங்ஙனம் வளர்ந்த இவர் திருமாலருளால் தோன்றியவராதலால், இயற்கையிலே உலகப் பற்றற்று எம்பெருமானது திருவடித்தாமரைகட்குத் தம்மனத்தை மதுகரமாக்கியதுமன்றி, தாம் புகுந்த குலத்துக்கு ஏற்ற யாழ்ப்பாடலிலும் தேர்ச்சிபெற்று அதனால் பாணர் என்றே பேர் கூறப்பட்டு, நாரதபகவான்போல ஞானவைராக்கியங்களோடு ஸங்கீத ஸாமர்த்தியமும் முதிர்ந்து நின்றார்.
இவ்வாறிருக்கையில் விஷ்வக்ஸேநர் ரஹஸ்யமாக எழுந்தருளி இவர்க்குத் திருவிலச்சினை ஸாதித்துச் சென்றார்.
அதனால் மஹாபாகவதோத்தமராகிய இவர் ரங்கநாதனுக்குப் பாடல் திருத்தொண்டு செய்ய உத்தேசித்துப் புறப்பட்டு, தாம் தாழ்ந்த குலத்தில் வளர்ந்தவராதலால் உபயகாவேரிமத்தியிலுள்ள ஸ்ரீரங்கதிவ்யக்ஷேத்ரத்தில் அடியிடுதற்குத் துணியாமல் தென்திருக்காவேரியின் தென்கரையில் திருமுகத்துறைக்கெதிரிலே யாழுங்கையுமாக நின்றுகொண்டு நம்பெருமாளைத் திசைநோக்கித் தொழுது அப்பெருமான் விஷயமாக அநேக திவ்யகீதங்களை, கண்டமும் கருவியுமொக்க, கேட்பவர் செவியும் மனமும் குளிர, எம்பெருமான் திருவுள்ளமுகக்க, கிந்நர கந்தர்வாதியர் வியப்புறப் பாடினார்.
முன்பு திருக்குறுங்குடியில் நாடோறும் பகவத்விஷயமான யாழிசைபாடி கைஶிகமென்னும் பண்ணின்பயனால் தன்னைச் சரணமடைந்த ஒரு ப்ரஹ்ம ரக்ஷஸ்ஸையும் தீவினைதீர்த்து நற்கதி அடைவித்துத் தானும் பிறவிப்பெருகடல் கடந்த ‘நம்பாடுவான்‘ என்னும் ஜாதிசண்டாளன்போலவே இவ்விழிகுலத்தவரும் பக்தியாற் பரவசப்பட்டு நெஞ்சம் நெக்குருகக் கண்கள் ஆநந்த வருவி சொரிய உடல் மயிர்க்கூச்செறிய நாடோறும் வைகறையிலேவந்து இசை பாடாநிற்கையில், ஒருநாள், திருவரங்கச் செல்வனுக்குத் தீர்த்தகைங்கரியஞ் செய்கிற லோகஸாரங்கரென்னும் அந்தணர் தலைவர் தீர்த்தங் கொண்டுவருவதற்குப் பொற்குடத்தை யெடுத்துக்கொண்டு பொன்னித் துறையை அடைகையில் அருகிலுள்ள இந்தப் பாணரைப் பார்த்து அருவருத்து ‘எட்டச்செல்‘ என்று பலமுறை பணிக்கவும், இவர் இவ்வுலகத் தொடர்பை மறந்திருந்ததனால் அம்மொழியைச் செவியுறாமல் வாளா நின்றிட்டார்.
அச்செய்தியைக் கேள்வியுற்று மூர்க்ககுணமெனக்கருதி அக்கொண்டது விடாமையைக் குலைக்கத்துணிந்த சாதியபிமானம்மிக்க பல ப்ராஹ்மணர்கள் ஓடிவந்து ‘போ போ‘ எனறு பலமுறை கூறவும் அது செவியிற்படாமையாற் பாணகுலதிலகர் சிறிதும் பெயராது நிஸ்சலமாய் இராகம் பாடிக்கொண்டிருக்க, அதுகண்டு அவர்களிற் சிலர் வியந்து ‘இவன் ஞானயோகி அல்லன், கானயோகிபோலும்‘ என்று நினைத்துப்போக முரட்டுக்குணமுடைய சிலர் ‘எப்படியும் இப்பொழுது இவனை இடம்விட்டுத் துரத்தாது விடுவதில்லை‘ என்று வீரவாதஞ்செய்து இவர்மேல் பல கற்களை எடுத்து இடைவிடாது ஒருங்கே எறிய அவ்வன்சிலைகள் இவருடைய மெல்லுடல்மேல் நன்குபட்டிடவும், இவர் பக்திவயப்பட்டதனால் சிறிதும் ஸ்பர்ஸவுணர்ச்சியின்றி, சோலைமாரியாக ஏழு மேகங்களையுங் கொண்டு இந்திரன் ஏககாலத்திலே பொழிவித்த சிலாவர்ஷத்துக்குச் சற்றும் பின்னிடாத கோவர்த்தனமலைபோலச் சிறிதும் சலியாதிருந்தார். அது கண்டு அமரர்கோன்போல அனைவரும் அஞ்சி அகன்றனர்.
அப்பொழுது இவரது உடம்பிலும் உள்ளத்திலும் ஈஷத்தும் வருத்தங் காணப்படவில்லையாயினும் பக்தர்களது அந்தரங்கத்தில் அமர்ந்திருக்கின்ற அரங்கநாதனது திருவுள்ளம் மிகக்கலங்க, திருநெற்றியும் இரத்தப் பெருக்குற்றது.
அதனைநோக்கி அர்ச்சகர் மிகவும் பயப்பட்டுக் கோயிலதிகாரிகளுக்கு அறிவிக்க, அவர்களும் இவ்வுற்பாதச் செய்தியை அரசனுக்குப் போகவிட, மந்திரிகளோடு பலவிதமாக ஆராய்ந்தும் அரசன் காரணங்காணாது கவன்று ஸ்வாமி திருவடியிலே பாரத்தை வைத்திட்டான்.
அதற்குமுன்னே ஒருநாள், பிராட்டி பெருமாளை நோக்கி ‘வெகுகாலமாக நம்மை அநவரத பாவநை பண்ணிவருகிற நம் பாணன் புறம்பேநிற்கப் பார்த்திருக்கலாமோ?‘ என விண்ணப்பஞ் செய்ததற்கு, எம்பெருமான், விரைவிலே அவரை அருகில் அழைத்துக் கொள்வதாக வாக்களித்திருந்தன்ன்.
அநந்தரம் அவ்வாறே பிராட்டியின் இஷ்டத்தை நிறைவேற்றவும் பாணரைப் பெருமைப்படுத்தவும், “பகவத் ப்ராப்திக்கு ஜாதி முக்கியமன்று, பக்தியே அமையும்“ என்ற ஸகல ஸாஸ்த்ர ஸாரப்பொருளை நடத்திக்காட்டவும் திருவுள்ளங்கொண்டு திருவரங்கேசன் லோகஸாரங்க மாமுனிவரது கனவில் தோன்றி ‘நமக்கு நல்லன்பரான பாண்பெருமாளை இழிவாக நினையாமல் நீர் சென்று தோள்களில் எழுந்தருளப்பண்ணி வாரும்‘ என்று நியமிக்க, அவர் ப்ராஹ்ம முஹூர்த்தத்திற் கண்விழித்தவளவிலே ஸ்வப்நத்தில் ஸ்வாமி நியமித்ததை நினைந்து அதிஶயித்து, அப்படியே செய்து தாம் பேறுபெறக் கருதி அச்செய்தியை அத்திருப்பதியிலுள்ளார் யாவர்க்குந் தெரிவித்து அவர்களும் உடன்வரச் சென்று திருமுகத்துறையிலே தீர்த்தமாடித் தௌதவஸ்திர முடுத்துப் பன்னிரண்டு திருமண்காப்புகளணிந்து காலைக்கடன் கழித்துக் கரையேறிப்பாணர் வழக்கமாக நிற்கின்ற விடத்துச் சென்று அவர் திருவடிகளிலே ஸாஷ்டாங்கமாகத் தண்டனிட்டு, ‘தேவரீரைத் தம்மிடத்துக்கு எழுந்தருளப் பண்ணுவித்துக்கொண்டு வரவேண்டுமென்று நம்பெருமாள் அடியேனுக்குக் கட்டளை யிட்டருளினார்“ என்று சொல்ல, பாணர்தலைவர் ‘நீசனான அடியேன் திருவரங்கப் பெருநகரை மிதித்திடுவனோ?‘ என்று தம் சாதியிழிவைச் சொல்லி மறுத்திட்டனர்.
அப்பால் முனிவர் ‘தேவரீர் மிதித்திடவேண்டா, பெருமாள் பெரியதிருவடியின் திருத்தோளில் எழுந்தருளுதல்போலத் தேவரீர் அடியேனது தோளில் ஏறியருளும்‘ என்று பிரார்த்திக்க, அது கேட்டவளவிலே பாணர் அளவிறந்த அச்சங்கொண்டு அதனால் உடல் நடுநடுங்கிச் சொற்குழறி ‘மஹாபரிசுத்த மூர்த்தியான தேவரீர் அடியேன் திறத்து இங்ஙனங் கூறவொண்ணாது, பாகவதர் பாதத்திலே தலையை வணக்குதற்கு உரிய யானோ இக்கொடுந்தொழில் புரிவேன்? இது செய்து பாகவதாபசாரப் படுதலினும் எரிவாய் நரகத்து அழுந்துவது நலமன்றோ?‘ என்று நைச்சிய வார்த்தைகள் கூறினார்.
அதன்பின் முனிவரர் பகவந்நியமநத்தை விண்ணப்பஞ்செய்து ‘அது அதிக்ரமிப்பதற்கு உரியதன்று‘ என்று பகர்ந்து நிர்ப்பந்திக்க, பின்னை வீணைப்பாடகர் கடவுள் கட்டளைக்கு யாதும் மாறு கூறமாட்டாமற் கூப்பியகையராய் அநந்தசயனுக்கே தம்மை அர்ப்பணச்செய்து பரதந்த்ரராய் நின்றிட்டார்.
பின்னர் முனிவரர் பாணநாதரைத் தோளிலேற்றிக்கொண்டு, முக்தனாய்ப் போமவனை ஆதிவாஹிகர் எழுந்தருள்வித்துக் கொண்டு திருமாமணி மண்டபத்துக்கு செல்லுமாறுபோலச் சென்று ரங்கநாதனது திருமுன்பே இறக்கிவிட்டனர்.
உடனே முநிவாஹநர் (பாணர்), *இருளகற்று மெறிகதிரோன் மண்டலத்தூடேற்றி வைத்தேணிவாங்கி அருள் கொடுத்திட்டடியவரை ஆட்கொள்வானான அணியரங்கனது திவ்யமங்கள விக்ரஹத்தைப் பாதாதிகேசம் நேத்திரா நந்தமாகச் சேவித்து அதில் ஆழ்ந்து அதன் அழகை அநுபவித்து அவ்வநுபவாதிசயத்தைப் பின்புள்ளார்க்கும் விசதமாக்குதற் பொருட்டு “அமலனாதிபிரான்“ என்ற திவ்யப்ரபந்தத்தைத் திருவாய்மலர்ந்தருளி அதன் இறுதியில்,
“கொண்டல்வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாய னென்னுள்ளங் கவர்ந்தானை
அண்டர்கோ னணியரங்க னென்னமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே“
என்று தமது துணிபை வெளியிட்டு உலகத்தாரை வாழ்வித்து மிகவும் உகப்போடு நிற்கையில், பெரியபெருமாள் அத்திருமேனியோடு அவரை அங்கீகரித்தருளத் திருப்பாணாழ்வார் அனைவருங்காண அப்பிரானது திருவடிகளிலே அந்தர்ப்பவித்துக் காய்ந்த இரும்பு உண்ட நீராயினார்.
கோபாலன் குழலிசையாற் கோக்களை மகிழ்வித்ததுபோல அக்கோவிந்தனை யாழிசையால் மகிழ்வித்த இவ்வாழ்வார் இவ்வுலகில் வாழ்ந்திருந்தது ஐம்பது வருஷகால மென்பர்.
லோகசாரங்கர் முதலிய பலர் இவ்வாழ்வாரை ஆச்ரயித்து நற்கதி பெற்றனர்.
“காண்பனவு முரைப்பனவு மற்றொன்றின்றிக்
கண்ணனையே கண்டுரைத்த கடியகாதற்
பாண்பெருமா ளருள்செய்த பாடல்பத்தும்
பழமறையின் பொருளென்று பரவுமின்கள்“
திருப்பாணாழ்வார் வைபவம் முற்றிற்று.
“கார்த்திகையில் ரோகிணிநாள் காண்மினின்று காசினியீர்!
வாய்ந்த புகழ்பாணர் வந்துதிப்பால் – ஆத்தியர்கள்
அன்புடனே தானமல னாதிபிரான் கற்றதற்பின்
நன்குடனே கொண்டாடும் நாள்.“
ஆழ்வார் திருவடிகளே சரணம்
திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான்
தனியன் உரை
(பெரியநம்பிகள் அருளிச்செய்த தனியன்)
आपादचूडमनुभूय हरि शयानं मध्ये कवेरदुहितुर् मुदितान्तरात्मा।
अद्रष्टुतां नयनयोर् विषयान्तराणां यो निश्चिकाय मनवै मुनिवाहनं तं॥
ஆபாதசூட மநுபூ4ய ஹரிம் ஶயாநம்
மத்4யே கவேரது3ஹிதுர் முதி3தாந்தராத்மா |
அத்3ரஷ்ட்ருதாம் நயநயோர் விஷயாந்தராணாம்
யோ நிஶ்சிகாய மநவை முநிவாஹநம் தம் ||
பதவுரை
ய: | – | யாவரொரு திருப்பாணாழ்வார் |
கவேரதுஹிது: | – | திருக்காவேரியின் |
மத்யே | – | நடுவில் |
ஶயாநம் | – | திருக்கண்வளர்ந்தருளுகிற |
ஹரிம் | – | அழகிய மணவாளப் பெருமாளை |
ஆபாத சூடம் | – | திருவடி தொடங்கித் திருமுடியளவாக |
முதிந்தராத்மா | – | மகிழ்ந்த சிந்தையராய் |
விஷயாந்தரானாம் அத்ரஷ்ட்ருதாம் | – | (தமது) திருக்கண்கள் (அப்பெருமானன்றி) மற்றொன்றையும் காணமாட்டாமையை |
நிச்சிகாய | – | அறுதியிட்டருளினாரோ, |
தம் | – | அப்படிப்பட்ட |
முநிவாஹனம் | – | லோகஸாரங்க மஹாமுநியை வாஹமாக்க்கொண்ட திருப்பாணாழ்வாரை |
மநவை | – | சிந்திக்கக்கடவேன் |
***- திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப்பொன்னி திரைக்கையா லடிவருடப் பள்ளிகொள்ளுங் கருமணியாகிய ரங்கநாதனைக் கண்ணாரக்கண்டுகளித்து, “அமலனாதிபிரானடியார்க் கென்னை யாட்படுத்த விமலன்“ என்று தொடங்கி ஒவ்வொரு பாட்டிலும் ஒவ்வொரு அவயவமாகப் பாதாதிகேசாந்தம் அநுபவித்து, இறுதியில் “என்னமுதினைக் கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே“ என்று ‘இவ்வரிய பெரிய விஷயத்தைக் காணப்பெற்ற எனது கண்களானவை இனி வேறொரு பொருளையும் காணமாட்டா‘ என்று தமது உறுதியை வெளியிட்டருளின திருப்பாணாழ்வாரைச் சிந்திக்கடவேன் என்கிறது.
“முநிவாஹநம்“ என்றதன் விவரம் இவ்வாழ்வாரது வைபவத்திலே விரித்துரைக்கப்பட்டது, அங்கே காண்க.
(திருமலைநம்பி அருளிச்செய்த தனியன்)
(அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்)
காட்டவே கண்ட- பாத கமலநல் லாடையுந்தி
தேட்டரு முதரபந்தந் திருமார்வு கண்டஞ்செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனிபுகுந்து
பாட்டினால் கண்டுவாழும் பாணர்தாள் பரவினோமே
முனி ஏறி | – | லோகஸாரங்க முனியின் (தோளின்மேல்) ஏறி |
தனி புகுந்து | – | தனியே உள்ளே புகுந்து |
காட்டவே கண்ட | – | (அம்முனிவரர்) காண்பித்தபடியே கண்டு ஸேவிக்கப்பட்ட |
பாத கமலம் | – | திருவடித்தாமரைகளும் |
நல் ஆடை | – | விலக்ஷணமான திருப்பீதாம்பரமும் |
உந்தி | – | திருநாபியும் |
தேட்டரும் | – | கிடைத்தற்கு அரிதான |
உதர பந்தம் | – | பொன் அரைநாணும் |
திரு மார்வு | – | பிராட்டி வாழ்கிற மார்பும் |
கண்டம் | – | திருக்கழுத்தும் |
செம் வாய் | – | சிவந்த வாயும் |
வாட்டம் இல் | – | சோர்வு இல்லாத |
கண்கள் | – | திருக்கண்களும் |
(ஆகிய இவற்றோடு கூடிய) | ||
மேனி | – | திருமேனியை |
பாட்டினால் கண்டு வாழும் | – | பாசுரங்களின் அநுஸந்தானத்தோடுகூடு ஸேவித்து ஆனந்தித்த |
பாணர் | – | திருப்பாணாழ்வாருடைய |
தாள் | – | திருவடிகளை |
பரவினோம் | – | துதிக்கப் பெற்றோம் |
***- கீழ்த்தனியனிற் பொருளை விவரிக்கிறது. இத்தனியன் லோகஸாரங்கமா முனிகள் தமது தோளிலே ஏற்றிக்கொண்டு கோயிலுக்குள்ளே சென்று அழகிய மணவாளனுடைய ஸகலாவயவ ஸௌந்தர்யத்தையும் நன்கு காட்டியருள, “அமலனாதிபிரான்“ என்று தொடங்கித் திருவடி முதல் ஒவ்வொரு அவயவங்களையும் ஸேவித்து அநுபவிக்கப்பெற்ற திருப்பாணாழ்வாரைத் துதித்தோமென்கிறது.
பாதகமலம் – வடசொல் தொடர். தேட்டரும் – தேடுதற்கு முடியாத துர்லபமான – மிகச்சிறந்த என்றபடி. உதரபந்தம் –வடசொல்தொடர், திருவயிற்றில் கட்டுகிற பொன்னரைநாண். கண்டம் – कण्ठ.
தனியன் உரை முற்றுப்பெற்றது.
ஆழ்வார் திருவடிகளே சரணம்
அமலனாதிபிரான்
இத்திவ்வியப்பிரபந்தம் “அமலனாதிபிரான்“ என்று தொடங்கப்பெற்றமையால், முதற்குறிப்பு என்னும் இலக்கணத்தால் இந்நூலுக்கு “அமலனாதிபிரான்” என்று திருநாமம் வழங்கலாயிற்று, திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு என்பனபோல.
இத்திவ்யப்ரபந்த்த்திற்கு பெரியவாச்சான்பிள்ளையும் அழகியமனவாளப்பெருமாள் நாயனாரும் மணிப்பரவாள நடையில் அருளிச்செய்த சிறந்த வியாக்கியானங்கள் உள்ளன.
இத்திவ்யப்ரபந்தத்தில் முதல் மூன்று பாட்டுக்கு முதலான அக்ஷரம் அ-உ-ம ஆகையால் மூலமாகிய ஒற்றையெழுத்தின் முதல் நடு இறுதியானவை என்னும் ரஹஸ்யம் உய்த்துணரத்தக்கது.