நாச்சியார் திருமொழி

ஸ்ரீ:

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சிநிற்குத் தன்மையளாய்ப்
பிஞ்சாய்ப்பழுத்த, சுரும்பார்குழற் கோதை யென்னும்
ஆண்டாள் அருளிச்செய்த


நாச்சியார் திருமொழி


பெருமாள்கோயில் உபயவேதாந்த வித்வான்
பிரதிவாதிபயங்கரம்
அண்ணங்கராசாரியரால்
எல்லார் தமக்கும் இன்பம் பயக்குமாறு எளியநடையில் தெளிய
எழுதப்பட்ட திவ்யார்த்த தீபிகை என்னும் உரையுடன் கூடியது.


ஆண்டாள் திருவடிகளே சரணம்
சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த
நாச்சியார் திருமொழியின் தனியன் உரை


திருக்கண்ணமங்கையாண்டான்
அருளிச்செய்த தனியன்
(இருவிகற்ப நேரிசை வெண்பா)


அல்லிநாட் டாமரைமே லாரணங்கி னின்றுணைவி
மல்லிநாடாண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர் குலவேந்த னாகத்தாள் தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.


பதவுரை

அல்லி நாள் தாமரை மேல் இதழ்களையுடைய அப்போதலர்ந்த தாமரைப்பூவில்
ஆர் பொருந்தியிராநின்ற
அணங்கின் தெய்வப் பெண்ணான பெரியபிராட்டியார்க்கு
இன் துணைவி இஷ்டஸகியாயும்,
மல்லிநாடு திருமல்லிநாட்டை
ஆண்ட (குணத்தாலே ஈடுபடுத்தி) ஆளாநின்ற
மடமயில் அழகிய மயில்போன்றவளாயும்
மெல் இயலாள் மென்மைத்தன்மை யுடையளாயுமிருக்கின்ற ஆண்டாள்
ஆயர் குலம் வேந்தன் இடைக்குலத்திற்குத் தலைவனான கண்ணபிரானுடைய
ஆகத்தாள் திருமேனியிற் பொருத்த முடையளாயும்
தென் புதுவை வேயர் அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு (த்தலைவராய்) [வேயர்குலத்துதித்தவரான பெரியாழ்வாராலே]
பயந்த பெறப்பட்ட
விளக்கு விளக்காயுமிராநின்றாள்

இத்தனியனில், ஆண்டாளுடைய ஐச்வரியம், ஆபிஜாத்யம் முதலிய வைபவங்கள் கூறப்படுகின்றன. ஆண்டாள் பெரியபிராட்டியார்க்கு உயிர்த்தோழி என்கிறது – முதலடி. “மண்மகளுந் திருவும் நிழற்போல்வனர்“ என்ற திருவிருத்தமும், “சா²யாமிவாப்⁴யுத³யிநீமவநீம் ச தஸ்யா:” என்ற ஸ்ரீரங்கராஜ ஸ்தவமும் அறியத்தக்கன. பூமிப்பிராட்டியின் அம்சமாகவன்றோ ஆண்டாள் கூறப்படுவது.

மல்லிநாடு – ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு அடுத்த நாடு, அதனை ஆண்டாள் ஆளுகையாவது – அங்குள்ளாரைத் தனது குணங்களால் தன்னிடத்து ஈடுபடுத்துகை.

 

மடமயில் – மயில் ஒருவருடைய அபிமாநத்தில் ஒதுங்கி வளருவது போல ஆண்டாள் “விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே“ என்னும்படி பெரியாழ்வாருடைய அபிமாநத்தில் வளர்ந்தமையால் மயிலாகக் கூறப்பட்டனளென்க. முற்றுவமை.

 

மெல்லியலாள் – “கொங்கைமேற் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஒருநாள், தங்குமேல் என் ஆவி தங்கும்“ என்னும்படி க்ஷணகாலமும் பிரிவைப் பொறுக்கமாட்டாத ஸெளகுமார்யமுடைய ளென்கை.

 

ஆயர்குலவேந்தனாகத்தாள் – கீழ்ச்சொன்ன ஸௌகுமார்யத்தாற் பிரிவாற்றமாட்டாமல், “என்னாகத்திளங்கொங்கை விரும்பித்தான் நாடோறும், பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடமை செப்புமினே“ என்னும்படி கண்ணபிரானுடைய திருமேனியிற் பொருத்தமுற்றிருக்குமவளென்கை.

 

இனி, ஆபிஜாத்யத்தாலும் இவள் கண்ணபிரானுக்கு ஏற்றவளென்கிறது கடையடியால். * ஆயர்குலத்தினிற்றோன்று மணிவிளக்குக்கு, * வேயர்பயந்த விளக்கு அநுரூபமாயிருக்குமென்க. வேயர்-* வேயர்தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன்‘ என்றபடி. திருவரங்கத்தமுதனாருடைய குடி. ‘மூங்கிற்குடி எனப்படுவதுபோல், பெரியாழ்வார் குடி ‘வேயர்குடி‘ எனப்படுமென்ப………………(*)

 

(மற்றொரு தனியன்)

(கட்டளைக் கலித்துறை)

கோலச்சுரிசங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும் சீலத்தினள் தென்றிருமல்லிநாடி செழுங்குழல்மேல் மாலைத்தொடை தென்னரங்கருக் கீயு மதிப்புடைய சோலைக்கிளியவள் தூயநற்பாதந் துணைநமக்கே.

 
கோலம் சுரி சங்கை அழகையும் சுரியையுமுடைய ஸ்ரீபாஞ்சஜந்யத்தை நோக்கி
மாயன் கண்ணபிரானுடைய
செம் வாயின் குணம் சிவந்த திருவதரத்தின் அதிசயத்தை
வினவும் சீலத்தினள் கேட்குந்தன்மை யுடையவளும்
தென் தென்திசையிலுள்ள
திருமல்லி நாடி திருமல்லிநாட்டிற்குத் தலைவியும்
செழும் செழுமைதங்கிய
குழல் மேல் (தனது) திருக்குழற்கற்றையில் சூட்டப்பெற்ற
மாலைத்தொடை கலம்பகன் மாலையை
தென் அரங்கருக்கு அழகிய மணவாளனுக்கு
ஈயும் மதிப்பு உடைய ஸமர்ப்பிக்கும்படியான மேன்மையுடையவளும்
சோலை கிளி அவள் சோலையில் வளருங்கிளி போல் இனியமொழியையுடையளுமான அவ்வாண்டாளுடைய
தூய நல் பாதம் பாவநமும் போக்யமுமான திருவடிகள்
நமக்கு நமக்கு
துணை தஞ்சம்
(ஏ-ஈற்றசை)
 

இத்தனியன் பல திருப்பதிகளில் வழங்கப்பெறுவதில்லை. நாச்சியார் திருமொழியில் ஏழாந் திருமொழியாகிய “கருப்பூரம் நாறுமோ“ என்னுந் திருமொழியிலுள்ள அர்த்தம் இதில் முதலடியிற் கூறப்பெற்றது. கண்ணபிரான், தனது திருப்பவளத்தில் வைத்து ஊதும் ஸ்ரீ பாஞ்சஜந்யத்தை நோக்கி, சங்கே! எம்பெருமானுடைய திருப்பவளச் செய்வாய் கருப்பூரம்போல் நாறுமோ? அல்லது கமலப்பூப்போல் நாறுமோ? சொல்லாய்‘ என்று அதன் குணத்தை வினவுகின்றமை உணரத்தக்கது.

பெரியாழ்வார், ஆண்டாளுக்குச் “சூடிக்கொடுத்த நாச்சியார்“ என்று பெயரிட்டதற்கு அடியரான ஐதிஹ்யங் கூறப்படுகின்றது, “செழுங்குழன்மேல்“ என்று தொடங்கி.

அவ்வரலாறு வருமாறு – ஆண்டாள் இளமைதொடங்கி எம்பெருமானிடத்திலே பக்திப்பெருங்காதல் கொண்டு அப்பெருமானையே தான் மணஞ்செய்து கொள்ளக்கருதி, தனது தந்தையரான பெரியாழ்வார் வடபெருங்கோயிலுடையானுக்குச் சாத்தும் பொருட்டுக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாத ஸமயம்பார்த்து எடுத்துத் தன் கூந்தலில் தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ இல்லையோ‘ என்று தன் செயற்கையழகைக் கண்ணாடியிலே கண்டு தந்தையார் வருவதற்குமுன் அம்மலர் மாலையைக் களைந்து முன்போலவே நலங்காமல் வைத்துவந்தாள், இச்செய்தியை உணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய் ஸ்வாமிக்குச் சாத்திவர, பெருமானும் ப்ரீதியோடு ஏற்றருளினான், இங்ஙனம் பலநாள் கழிந்தபின் ஒரு நாள், வெளியிற்சென்ற ஆழ்வார் விரைவில்மீண்டு வந்தபொழுது, பூமாலையைத் தமது மகள் சூடி இருப்பதைப் பார்த்து, கோபித்து அவளைக் கண்டித்துப் புத்தி சொல்லிவிட்டு, அன்று எம்பெருமானுக்கு மாலைசாத்தாமல் நின்றார், அன்றையிரவில் திருமால் ஆழ்வாரது கனவில் தோன்றி ‘உமது மகள் சூடிக் கொடுத்த மாலையே நமது உள்ளத்திற்கு மிகவும் உகப்பாவது‘ என்று அருளிச்செய்ய, அதனால் ஆழ்வார் தம் மகளைத் திருமகளென்றே கருதி, யாவர்க்குந் தலைவியென்ற காரணத்தால் ‘ஆண்டாள்‘ என்றும், மலர்மாலையைத் தான் சூடிக்கொண்டபின்பு பெருமானுக்குக் கொடுத்ததனால் ‘சூடிக் கொடுத்தாள்‘ என்றும் பெயரிட்டு வளர்த்து வந்தனரென்பதாம். “பாட்டுக்கு முத்தமிழ் வில்லிபுத்தூர் வரும் பாவைகுழற், சூட்டுக்கு நல்லவர் தென்னரங்கேசர்“ என்பது திருவரங்கத்து மாலை.

தனியன் உரை முற்றிற்று

ஆண்டாள் திருவடிகளே சரணம்

⇐⇒⇐⇒⇐⇒⇐⇒

ஸ்ரீ:

நாச்சியார் திருமொழி

இஃது ஆண்டாள் அருளிச்செய்த பிரபந்தங்களிரண்டினுள், பிந்திய பிரபந்தம்.

 

வைஷ்ணவ ஸம்பரதாயத்தில் நாதமுனிகளென்னும் பூர்வாசாரியரால் வகுக்கப்பட்டதான தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்வியப்பிரபந்தத்துள் முதலாயிரத்தில் நான்காவது பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டது இந்த நாச்சியார் திருமொழி. திருப்பல்லாண்டு, பெரியாழ்வார் திருமொழி, திருப்பாவை, நாச்சியார் திருமொழி என அடைவுகாண்க.

 

‘நாய்ச்சியார்‘ எனினும் ‘நாச்சியார்‘ எனினும் ஒக்கும். ‘தலைவன் என்னும் பொருளதான ‘நாயக:‘ என்ற வடசொல், தமிழில் ‘நாயன்‘ எனச்சிதையும். பெண்பாலைக் குறிக்குமிடத்து, ‘நாய்ச்சி’ என்றாகும். (இடையன் -இடைச்சி, ஆயன் – ஆய்ச்சி, பேயன் -பேய்ச்சி.) ‘நாய்ச்சி‘ என்ற சொல்லின் மேலுள்ள ஆர் விகுதி – உயர்வு குறித்தற்பொருட்டு வந்தது. ஆகவே, நாச்சியார் என்ற பெயர், மூவுலகங்கட்கும் தலைவியாய், ஸர்வேச்வரனுக்குத் தேவியானவளை உணர்த்தும், ப்ரகரணபலத்தினால் இங்கு, * பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையாகிய ஆண்டாளை உணர்த்துகின்றது.

 

இனி, நாய்ச்சியார் திருமொழி என்ற தொடர் ஆண்டாளுடைய சிறந்த வார்த்தையெனப் பொருள்படும். ஆண்டாள் திருவாய் மலர்ந்தருளிய திவ்யப்ரபந்தமென்பது கருத்து, திருமொழி என்பது மேன்மையான சொற்களினாலாகிய நூலைக் குறித்தலால், அடையடுத்த கருவியாகு பெயராம். ‘நாய்ச்சியார் திருமொழி‘ என்ற தொடர் ஆறாம் வேற்றுமைத்தொகையும், திருமொழி என்பது பண்புத்தொகையுமாம். ‘பெரியாழ்வார் திருமொழி‘ ‘பெருமாள் திருமொழி‘ என்ற இடங்களிற்போல, ‘நாய்ச்சியார் திருமொழி‘ என்ற பெயரிலும் தொக்குநின்ற ஆறாம் வேற்றுமை யுருபு – செய்யுட்கிழமைப் பொருளதென அறிக. திருமொழி என்பதை, மேன்மையையுடையசொல் என இரண்டாம் வேற்றுமையுருபும் பயனுந் தொக்க தொகையாகவுங் கொள்ளலாம். ‘நாய்ச்சியார் திருமொழி‘ என்றவிடத்து, நிலைமொழி உயர்திணைப்பெயராதலால், அதன்முன்வருமொழி முதல்வலி இயல்பாயிற்று. ‘பொதுப் பெயருயர்திணைப் பெயர்களீற்று மெய்வலிவரின் இயல்பாம் ஆவியரமுன் வன்மைமிகா‘ என்ற நன்னூல் விதி உணரத்தக்கது நிற்க,

 

இப் பிரபந்தத்திற்குப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்த மணிப்பரவாள வியாக்யானத்தைத் தழுவி எளியதெளிய நடையில் இவ்வுரை எழுதப்படுகின்றது.

 

இப்பிரபந்தத்தில் ஆழ்ந்த கருத்துகள் பல அமைந்துள்ளதனால், இதற்கு உண்மையான உரை ஒருவாக்கும் எழுதவெளிதன்று, ஸாதாரணமாக ஒருவாறு பாட்டின் பொருளுரைக்குமத்தனை……..(*)

 

ஆண்டாள் திருவடிகளே சரணம்

நாச்சியார் திருமொழி உரை அவதாரிகை

கீழ்ப் பிரபந்தமாகிய திருப்பாவையில், “உன்றன்னைப் பிறவிபெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்“ என்று ஸித்தஸாதநஸ்வீகாரமும், “எற்றைக்கு மேழேழ் பிறவிக்கு முன்றன்னோடுற்றோமேயாவோ முனக்கே நாமாட்செய்வோம்“ என்று ப்ராப்ய நிஷ்கர்ஷமும் செய்யப்பட்டன. பேற்றுக்கு உறுப்பாக இவ்வளவு ப்ரதிபத்தி இவ்வாண்டாளுக்குப் பிறந்தவளவிலும், கண்ணபிரான் இவளுடைய அபிநிவேசாதிசயத்திற்குத் தக்கவாறு வந்து கலவிசெய்து நிற்கக்காணாமையாலே, ஆண்டாள் யுக்தாயுக்த நிரூபணம் பண்ணமாட்டாதபடி கலங்கி, அபிமதவிஷயத்தைப் பிரிந்தவர்கள் மீண்டுங் கூடுதற்கு மடலெடுப்பது போல, பிரிந்தவர்களைக் கூட்டுகையையே இயல்பாகவுடைய காமன்காலிலே விழத்தொடங்குகிறாள் – இப்பிரபந்தத்தின் முதற்றிருமொழியில்.

 

ஸாத்விகர் தலைவரான பெரியாழ்வாருடைய திருமகளாய்ப் பிறந்த இவள் * மறந்தும் புறந்தொழாதிருக்கவேண்டியிருக்க, ஸ்வரூபவிருத்தமாக தேவதாந்தரத்தின் காலில் விழுகையென்பது பொருந்துமோ? எனின், பொருந்தும், எங்ஙனேயென்னில், “காமதேவா!…உன்னையு மும்பியையுந் தொழுதேன்“ “பேசுவதொன்றுண்டிங் கெம்பெருமான்“ என்று காமன் பக்கலில் தேவதாபுத்திபண்ணி அவனை ஆராதித்தல் – ப்ராப்யவஸ்துவில் ப்ராவண்யாதிசயத்தினால் உண்டாகின்றதேயன்றி, தேவதாந்தரத்தினிடத்து ஸ்வதந்திரமாகப் பரத்வபுத்தி பண்ணுவதனாலன்று, ப்ரேமபரவசர்க்கு இது அவத்யத்தை விளைக்கக்கூடியதன்று. ஆனால், இது கலக்கத்தினால் செய்யுஞ்செயலன்றோ? அஜ்ஞானத்தினால் வருமவையே ஹேயம் என்று கொள்ளக்கடவது. ஆனாலும், சேதநனிடத்து ஒருவகையான ப்ரவ்ருத்தியையும் ஸஹியாத ஸித்தோபாயத்தின் கார்யகரத்வத்திற்கு இந்த அதிப்ரவருத்தி ப்ரதிபந்தகமாகமாட்டாதோ? என்னில், இந்த அதிப்ரவ்ருத்தியும் ஸித்தோபாயமான எம்பெருமான் பண்ணின க்ருஷியின் பயனெனக் கருத்ததக்கதாம். “மயர்வறமதிநல மருளினன்“ “பேரமர்காதல் கடல்புரைய விளைவித்த காரமர்மேனிநங்கண்ணன்“ என்று – இப்படிப்பட்ட ப்ரவ்ருத்திக்கு ஹேதுவான பக்தியைப் பிறப்பிக்குமவனும் வளரச்செய்பவனும் அவ்வெம்பெருமான் றானாகவேயிறே சொல்லப்பட்டது. ஆகையாலே பக்திபாரவச்ய நிபந்தநமான இந்த ப்ரவருத்தியை உபாயபலமென்று பூர்வாசாரியர்கள் ஸித்தாந்தீகரித்தனர். அன்றியும், ப்ராப்யத்தைக் கடுகப்பெறவேணுமென்ற விரைவின் மிகுதியினால் கண்ணாஞ்சுழலையிட்டு இத்தலைபடுகிற அலமாப்பெல்லாம் “நம்மை ஆசைப்பட்டு இப்படி படப்பெறுவதே“ என்று அவன் முகம் மலருகைக்கு உறுப்பாகையாலே, மடலெடுக்கை, நோன்புநோற்கை முதலான இந்த ப்ரவ்ருத்திகள்யாவும் அவனுடைய முகமலர்திக்காகப்பண்ணும் கைங்கர்யத்தோடொத்து உபேயத்தில் அந்தர்ப்பூதமாய்விடும். ஆகையால், நாய்ச்சியாருடைய காம ஸமாச்ரயணம் ஸ்வரூபவிருத்தமென்ன வழியில்லை.

 

இனி, பரமதபங்கமென்னும் ரஹஸ்யத்தில் இருப்பத்தோராவது அதிகாரத்தில் – “நாராயணனே நமக்கே பறைதருவான்“ எற்றைக்குமேழேழ் பிறவிக்கு முன்றன்னோடுற்றோ மேயாவோ முனக்கே நாமாட்செய்வோம் மற்றை நம்காமங்கள் மாற்று‘ என்ற நாய்ச்சியார் க்ருஷ்ணனைப் பெறுகைக்காகப் பண்ணின காமதேவார்ச்சநம் “*** விஷயம்“ என்று நம் தூப்புல்பிள்ளை அருளிச்செய்ததென்? எனில், தேசிகன் திருவுள்ளம் அங்ஙனேயென்று கொள்ளக்கடவதத்தனை.

 

இங்ஙனே ஆண்டாளைப் போலே ஜ்ஞாநவிபாக கார்யமான பக்திக்குப் பரவசப்பட்டு தேவதாந்தரத்தைத் தொழுதார் ஆரேனுமுண்டோ? எனின், உண்டு, சக்ரவர்த்தித்திருமகனை யல்லது அறியாத அயோத்தியிலுள்ளார் அவற்கு நன்மையை விரும்பி ஸகல தேவதைகளின் காலிலும் விழுந்தார்களாக ஸ்ரீ ராமாயணத்தில் சொல்லப்பட்டது. “***” ஸர்வாந் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே“ என்றது காண்க. அன்றியும், ராமபக்தரில் தலைவரான திருவடி, கடலைக்கடக்கும்போது “நமோஸ்து வாசஸ்பதயே“ என்றார். இங்ஙனமெடுத்துக்காட்டப் பல உதாரணங்களுண்டு.

 

ஆக இவ்வளவாலும், ‘வழியில்லாவழியே முயற்சி செய்தாகிலும் கண்ணபிரானோடு கலக்கப்பெறவேணும்‘ என்ற அளவற்ற அபிநிவேசம் ஆண்டாளுக்குப் பிறந்தமை இப்பிரபந்தத்தால் வெளியாகிற தென்றதாயிற்று. இவ்வளவு அபிநிவேசமுடையளான ஆண்டாளுடைய மநோரதத்தைக் கண்ணபிரான் சடக்கெனத் தலைக்கட்டு வியாதொழிவானென்? எனில், குழந்தைகட்கு ஆமமற்றுப் பசிக்குந்தனையுஞ் சோறிடாத தாயைப்போலே இவனும் ஆண்டாளுக்கு ஆசை கடல்போலப் பெருகிவரவேணுமென்று தாழ்க்கின்றானென்க.

 

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அவதாரிகை முற்றிற்று.

Dravidaveda

back to top