திருப்பாவை அவதாரிகை

ஸ்ரீ:

பேரருளாளன் பெருந்தேவித் தாயார் திருவடிகளே சரணம்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

ஆண்டாள் திருவடிகளே சரணம்

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த திருப்பாவையின்

 

தனியன்கள்

பட்டர் அருளிச் செய்தது

நீளாதுங்க3 ஸ்தநகி3ரி தடீ ஸுப்த முத்3போத்4ய க்ருஷ்ணம் பாரார்த்2யம் ஸ்வம் ஶ்ருதி ஶதஶிரஸ் ஸித்43மத்4யா பயந்தீ ஸ்வோச்சி2ஷ்டாயாம் ஸ்ரஜி நிக3ளிதம் யா ப3லாத்க்ருத்ய பு4ங்க்தே கோ3தா3 தஸ்யை நம இத3மித3ம் பூ4ய ஏவாஸ்து பூ4ய:

நீளாதுங்க ஸ்தநகிரி தடீஸுப்தம் நப்பின்னைப் பிராட்டியினது உயர்ந்த திருமுலைத் தடங்களாகிற மலைச்சாரலில் கண்வளர்ந்தருளுமவனும்
ஸ்வோச் சிஷ்டாயாம் தன்னால் சூடிக் களையப்பட்ட
ஸ்ரஜி மாலையிலே
நிகளிதம் விலங்கிடப்பட்டவனுமான
க்ருஷ்ணம் கண்ணபிரானை
உத்போத்ய திருப்பள்ளி யுணர்த்தி
ச்ருதி சத சிரஸ் ஸித்தம் பற்பல வேதங்களின் தலையான பாகங்களாலே தேறின (வேதாந்தஸித்தமான)
ஸ்வம் தன்னுடையதான
பாரார்த்த்யம் பாரதந்திரியத்தை
அத்யாபயந்தீ அறிவியா நின்றவளாய்
பலாத்க்ருத்ய பலாத்காரம் செய்து
யா கோதா யாவளொரு ஆண்டாள்
புங்க்தே (அக்கண்ணபிரானை) அநுபவிக்கிறாளோ
தஸ்யை அப்படிப்பட்ட பெருமையை யுடையவளான ஆண்டாளின் பொருட்டு
பூயோ பூய ஏவ காலதத்துவ முள்ளதனையும்
இதமிதம் நம இந்த இந்த நமஸ்காரமானது
அஸ்து ஆயிடுக.

***- நப்பின்னைப் பிராட்டியின் திருமுலைத்தடங்களில் தலைசாய்த்துக் கண்வளர்ந்தருளாநின்ற கண்ணபிரானைத் திருப்பள்ளியுணர்த்தி, அடிமைசெய்யும் விஷயத்தில் தனக்குள்ள ஆவலை அறிவித்துத் தன் குழலிற் சூட்டிய பூமாலையாலே அப்பிரானை விலங்கிட்டு அநுபவித்த ஆண்டாளைத் திருவடி தொழுகின்றேன் என்றவாறு.

(உய்யக்கொண்டார் அருளிச்செய்தது)

 

அன்ன வயற்புதுவை யாண்டாளரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையாற் பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.

அன்னம் வயல் ஹம்ஸங்கள் (உலாவுகின்ற) வயல்களை யுடைய
புதுவை ஸ்ரீவில்லிபுத்தூரில் (திருவவதரித்த)
ஆண்டாள் ‘ஆண்டாள்‘ என்னுந் திருநாமத்தையுடையவளும்
பன்னு ஆராய்ந்து அருளிச்செய்யப்பட்ட
திருப்பாவை பல்பதியம் திருப்பாவை யென்னும் பல பாசுரங்களை
இன் இசையால் இனிய இசையுடன்
பாடி பாடி (அவற்றை)
அரங்கற்கு ஸ்ரீரங்கநாதனுக்கு
நல் பா மாலை விலக்ஷணமான பாமலையாக
கொடுத்தாள் ஸமர்ப்பித்தவளும்,
பூ மாலை (செண்பகம் முதலிய) பூக்களினாலாகிய மாலையை
சூடி (தான் முந்துறக் குழலிற்) சூடி
கொடுத்தாளை (பிறகு ரங்கநாதனுக்கு) ஸமர்ப்பித்தவளுமான கோதையை
சொல்லு அநுஸந்திக்கக் கடவை

***- ஆண்டாள் அருளிச்செய்த திவ்யப்பிரபந்தங்களை ஓதுவதிற் காட்டிலும் அவ்வாண்டாள் தன்னுடைய திருநாம ஸங்கீர்த்தனமே முக்கியமென்பது இப்பாட்டின் கருத்தாம்.

(இதுவும் அங்ஙனமே)

சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை பாடி யருளவல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற் கென்னை விதியென்ற விம்மாற்றம் நாங்கடவா வண்ணமே நல்கு.

சூடிக் கொடுத்த பூமாலையை (திருக்குழலிற்) சூடி. (அதனை எம்பெருமானுக்கு) ஸமர்ப்பித்த
சுடர் கொடியே தேஜோம்யமான கொடி போன்றவளே!
தொல் பாவை அநாதி ஆசாரஸித்தமான நோன்பை
பாடி (திருப்பாவை முகமாகக்) கூறி
அருள வல்ல (அடியார் திறத்துக்) கருணை புரிய வல்லவளும்
பல் வளையாய் பலவளைகளை அணிந்துள்ள வளுமான கோதாய்!
நீ நீ
நாடி (மன்மதனை) நாடி
என்னை வேங்கடவற்கு விதி என்ற இம்மாற்றம் (“காமதேவா! நீ என்னைத் திருவேங்கடமுடையானுக்கு வாழக்கைப்படுத்த வேணும்“) என்று காமனைக்குறித்துக் கூறிய கூற்றை.
நாம் கடவா வண்ணம் யாம் மீறாதொழியுமாறு
நல்கு அருள் புரிவாயாக.

***- இப்பாட்டால், நாச்சியார் திருமொழியில மிக்க அன்பு எமக்குப் பிறக்க வேணுமெனப் பிரார்த்தித்தவாறு. அதில் முதற்றிருப்பதிகத்தில் “அனங்கதேவா!, உய்யவுமாங்கொலோ வென்று சொல்லியுன்னையு மும்பியையுந் தொழுதேன், வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே“ இத்தியாதி பாசுரங்களினால், ஆண்டாள் காமனை வணங்கி, “வேங்கடவாணனுக்கு நான் வாழ்க்கைப்படுமாறு நீ விதிக்கவேணும்“ என வேண்டினமை அறிக.

தனியன் உரை முற்றுப்பெற்றது.

 

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

 

————-

ஆண்டாள் வைபவம்.

முன்பு திரேதாயுகத்திலே விதேஹ தேசத்தில் மிதிலைமாநகரில் ஜநக மஹாராஜன் யாகசாலை அமைத்தற்பொருட்டுக் கலப்பை கொண்டு பூமியை உழுகையில், அவ்வுழுபடைச்சாலிலே ஸ்ரீதேவியின் அம்சமான ஒரு மகள் தோன்ற, அவளை அவ்வரசன் தன் புத்திரியாகப் பாவித்துச் சீதையென்று திருநாமஞ் சாத்தி வளர்த்துவந்தான்; அதுபோலவே பின்பு கலியுகத்திலே பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரிலே பெரியாழ்வார் திருத்துழாய்ப்பாத்தி யமைத்தற்பொருட்டுக் களைக்கொட்டுக்கொண்டு திருநந்தவநத்தைக் கொத்துகையில் அக்கொத்தின நிலத்தில் ஸ்ரீதேவி பூதேவிகளின் அம்சமான ஒரு மகள் * ஆடிமாசத்துப் பூர்வ பல்குநி நாளிலே தோன்ற, அவளை அவ்வாழ்வார் தமது மகளாகப் பாவித்து, ‘கோதை’ என்று நாமகரணஞ்செய்து வளர்க்கலானார். நுகரப்படும் பொருள் ஒரு சிறிதுமில்லாத வறியவனொருவன் பெருநிதியைக் கண்டாற்போல, அப்பெண் ணருங்கலத்தைக் கண்டவளவிலே பெருங்களிப்புக்கொண்டு மிக அருமையாகச் சீராட்டிப் பாராட்டித் தாலாட்டிப் பாலூட்டிப் பாலித்துவந்த பட்டர் பிரான், அவளுக்குப் பஞ்ச ஸம்ஸ்காரங்களைச் செய்து பரமஞானத்தைப் போதித்தனர்.

தந்தை முதலியோர்கண்டு வியக்கும்படி இளமை தொடங்கி எம்பெருமான் பக்கலிலே பக்திப் பெருவேட்கை கொண்டு அவனையேதான் மணஞ்செய்துகொள்ளக்கருதி, அப்பிரானது மஹிமைகளையே எப்பொழுதும் சிந்தித்தல் துதித்தல் முதலியன செய்து நிற்கிற அச்சுரிகுழற்கோதை, நாடோறும் விஷ்ணுசித்தர் வடபெருங் கோயிலுடையானுக்குச் சாத்துதற்காகக் கட்டிவைத்த திருமாலையை அவரில்லாத ஸமயம் பார்த்து எடுத்துத் தன் குழலிலே தரித்துக்கொண்டு, ‘அப்பெருமானுக்கு நான் நேரொத்திருக்கின்றேனோ இல்லையோ’ என்று சிறந்த ஆபரணங்களை அணிந்து உயர்ந்த பட்டாடையை உடுத்துத் தன்னை அலங்கரித்து அவ்வொப்பனையழகைக் கண்ணாடியிலேகண்டு தந்தையார் வருதற்குமுன் மலர் மாலையைக்களைந்து முன்போலவே செண்டாகச்சுற்றிப் பூங்கூடையினுள்ளே நலங்காமல் வைத்துவந்தாள். ரஹஸ்யமாக நடக்கிற அச்செய்தியை உணராமல் ஆழ்வார் அம்மாலையைக் கொண்டுபோய் ஸ்வாமிக்குச் சாத்திவர, பெருமானும் ப்ரீதியுடன் ஏற்றருளினன். இங்ஙனம் பலநாள் கழிந்தபின் ஒருநாள், வெளியிற்சென்ற ஆழ்வார் விரைவில் மீண்டு வந்தபொழுது, பூமாலையைக் கோதை சூடியிருத்தலைப் பார்த்துக் கோபங்கொண்டு , ‘பெண்ணே! நீ செய்த இது மிக்க அபசாரமான காரியம் ; இனி இவ்வாறு செய்தற்கு நினைப்புங்கொள்ளாதே’ என்று நங்கைக்கு நற்புத்தி சொல்லிவிட்டு அன்று வடபத்திர சாயிக்கு மாலைசாத்தாமல், திருப்பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்ததற்கு மனம் வருந்தி யிருந்தார். அற்றைநாளிரவில் ஆலிலைத்துயில்வோன் ஆழ்வாரது கனவில் தோன்றி, ‘இன்று நீ நமக்கு மாலை கொண்டு வாராதிருந்தது ஏன்? ‘ என்று வினாவியதற்கு, அவர் தம் திருமகளாரது பொருந்தாச்செய்கையை விண்ணப்பஞ்செய்ய, அதுகேட்டு அப்பெருமான் ‘ அவள் சூடிக்கொடுத்த மாலையேகாண் நறுமணமிக்கு நமது உள்ளத்துக்கு நனி உகப்பாவது ; ஆதலின் இனி அத்தன்மைத்தான தொடையலையே நமக்குக் கொண்டுவருவாய்’ என்று அருளிச்செய்தனன். உடனே ‘கண் விழித்த விஷ்ணுசித்தர் அமமங்கையை மலர்மங்கையென்றே எண்ணி அயல்திறத்து அளவற்ற அன்புகொண்டு, அனைத்துலகத்துக்கும் அன்னையாய் அவற்றை ஆண்டு வருகிற இலக்குமியின் அவதார விசேஷமென்றகாரணத்தால், அவளுக்கு ‘ஆண்டாள்’ என்றும், மாதவனுக்கு உரிய மலர்மாலையைத்தான் சூடிக்கொண்டு பார்த்துப் பின்பு கொடுத்தது காரணமாகச் ‘ சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் திருப்பெயரிட்டு அழைத்துவந்தார்.

அந்நாச்சியார் தனது பருவம் வளருந்தோறும் ஞான பக்திகளும் உடன் வளர்ந்துவரப் பெற்று, தனக்கு ஏற்றகாதலனாகக் கருதிய கடல்வண்ணன் விஷயமான வேட்கை விஞ்சியவளாகி, இனி அவனை ஒரு நொடிப்பொழுதும் கூடா திருக்கப் பொறாமல், கண்ணனது பிரிவை ஆற்றாத ஆயர்மங்கைகள் போலத் தானும் நோன்பு நோற்று உயிர்தரிப்பவளாய், அவ்வபிப்பிராயத்தைத் திருப்பாவை, நாச்சியார்திருமொழி என்ற திவ்வியப் பிரபந்தங்களின் மூலமாகப் பகவத் ஸந்நிதியிலே விண்ணப்பஞ் செய்து வாழ்ந்திருந்தாள்.

இப்படி யிருக்கையில், இவட்கு விவாஹத்துக்கு ஏற்ற பருவம் வந்ததைக் கண்டு தந்தையார் இவளுக்கு ஏற்ற கொழுநனைக் காணப் பெறாது கவலைப் பட்டு இவளை யழைத்து ‘நீ யார்க்கு வாழ்க்கைப்பட விரும்புகின்றாய்’ என்று வினாவ, ஆண்டாள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று சொல்ல, பட்டர்பிரான் பின்னை எங்ஙனம் நிகழ்வது?’ என்று கேட்க, சூடிக் கொடுத்தாள் பெருமாளுக்கே உரியவளாக விருக்கின்றேன்’ என்று கட்டுரைத்தாள். அதுகேட்டு விஷ்ணுசித்தர் நூற்றெட்டுத் திருப்பதிகளிலுள்ள எம்பெருமான்களுள் யார்க்கு வாழ்க்கைத் துணைவியாகத் துணிகின்றாய்? என்று விசாரித்தலும், கோதை அவ்வப் பெருமான்களுடைய வைபவத்தை விளங்க எடுத்துக் கூறியருள வேண்டும்’ என வேண்ட, வேயர் குலத் தலைவரும் அவ்வாறே எடுத்து அருளிச் செய்து வருகையில், ஆண்டாள் வடமதுரையில் எழுந்தருளி யுள்ள கண்ணபிரானது வரலாற்றைக் கேட்ட வளவிலே மயிர் சிலிர்ப்பும், திரு வேங்கடமுடையானது வரன் முறையைச் செவியுற்ற பொழுது முகமலர்ச்சியும், திருமாலிருஞ்சோலைமலையழகரது வடிவழகை அறிந்த மாத்திரத்தில் மன மகிழ்ச்சியும் பெற்று ஸ்ரீ ரங்கநாதனது மஹிமை செவிப் பட்டவுடனே அளவற்ற ஆநந்த மடைந்து நிற்க, அப்பொழுது அந்தந்தத் திருப்பதி யெம்பெருமான்க ளெல்லாரும் இவளது சுயம்வரத்தை யுத்தேசித்து ஸ்ரீவில்லிபுத்தூர்க்கு எழுந்தருளி இவளது ஞானக்கண்ணுக்கு விஷபமாக, இவள் அவர்களுள் ரங்கநாதனிடத்தே மனத்தைச் செலுத்தி அவனுக்கே தன்னை மணமகளாக நிச்சயித்து அவ்வமலனையே ஸர்வகாலமும் சிந்தித்திருந்தாள்.

அதனை யறிந்து ஆழ்வார் நம்பெருமாள் இவளைக் கடிமணம்புரிதல் கைகூடுமோ?’ என்று சிந்தித் திருக்கையில், திருவரங்கச் செல்வன் இவருடைய ஸ்வப்நத்திலே யெழுந்தருளி உமது திருமகளைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு வாரும் ; அவளை யாம் அங்கீகரிப்போம்’ என்று அருளிச் செய்ய, அதனால் விஷ்ணுசித்தர் வியாகுலம் நீங்கி மனமகிழ்ந் திருந்தனர். பின்பு ஸ்ரீ ரங்கநாதன் ஸ்தாநிகர் முதலிய கோயிற் பரிஜநங்களுடைய கனவிலே தோன்றி ‘நீங்கள் ஸகல மங்கள வாத்தியங்களோடும் சத்திர சாமராதிகளோடும் நமது நவரத்தினப் பல்லக்கையும் உடன் கொண்டு வில்லிபுத்தூர்க்குச் சென்று ஆண்டாளைப் பல்லக்கி லேற்றி அழைத்து வாருங்கள்’ என்று கட்டளையிட்டான். அவ்வாறே எல்லாப் பரிகரத்தாரும் சென்று பெரியாழ்வாரை யடுத்து நம்பெருமாளது அருளப்பாட்டை விண்ணப்பஞ் செய்ய, கர்ணாம்ருதமான அவ்வார்த்தையைச் செவியாரக் கேட்டுச் சந்தோஷித்து, கோதைதாதை , வடபெருங்கோயிலுடையானுடைய ஸந்நிதியிலே ஸ்ரீ ரங்கநாதனது நியமநத்தை விண்ணப்பஞ் செய்து அநுமதி பெற்றுப் பிரயாண மாயினர்.

அச் செய்தியைக் கேள்வியுற்று ஸ்ரீ வல்லப தேவன் அக்கல்யாண மஹோத்ஸவத்தைத் தானும் உடனிருந்து விசேஷமாக நடத்திக் கண்டு களிகூர்ந்து க்ருதார்த்த னாகக் கருதி, தன் ஏவலாளரைக் கொண்டு ஸ்ரீவில்லிபுத்தாரையும் ஸ்ரீரங்க நகரத்தையும் இவ்விரண்டுக்கும் நடுவிலுள்ள நெடுவழியையும் தண்ணீர் தெளித்தும் பூம் பந்தரிட்டும் தோரணங் கட்டியும் வாழைகமுகு நாட்டியும் நன்றாக அலங்கரிப்பித்துக் கஜதுரங்காதி சதுரங்க பலத்துடனே ஆழ்வார் பக்கல் வந்து சேர்ந்தான்.

அப்பால் பட்டர்பிரான் ஆண்டாளை மணிச்சிவிகையில் எழுந்தருளப் பண்ணி மங்கலவாத்திய கோஷத்துடனே ஆண்டாள் வந்தாள்!’ ‘சூடிக் கொடுத்த சுடர்க் கொடி வந்தாள்!’ சுரும்பார் குழற்கோதை வந்தாள்!’ – திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்!’ பட்டர்பிரான் புதல்வி வந்தாள்!’ ‘வேயர் குலவிளக்கு வந்தாள்’ என்று பலசின்னங்கள் பணிமாற , மெய்காப்பாளர் உடன் சூழ்ந்து நிற்க, தாமும் அரசனுமாக இருபுறத்தும் இடை விடாதிருந்து அழைத்துவந்து திருவரங்கம் பெரிய கோயிலை யடைந்து பெரிய பெருமாளுடைய முன் மண்டபத்திலே அப்பிராட்டியை நிறுத்திப் பெருமாளைச் சேவிக்கப் பண்ணுவிக்கையில், அத்திருமாலின் திவ்ய ஸௌந்தர்யம் இரும்பைக் காந்தம் இழுக்கின்றவாறு போல ஆண்டாளைக் கவரத் தொடங்கியதனால், சூடிக் கொடுத்த நாச்சியார் சிலம்பார்க்கச் சீரார்வளை யொலிப்பக் கொடியேரிடையாடக் காதளவு மோடிக் கயல் போல் மிளிருங் கடைக்கண் பிறழ அன்னமென்னடை கொண்டு அருகிற்சென்று ஆநந்தக் கடலில் ஆழ்ந்து திருவரங்கன் திருவடி வருடக் கருதி நாகபரியங்கத்தை மிதித்தேறி நம்பெருமாளது திருமேனியிலே அந்தர்ப் பவித்து அவனை என்றும் பிரியாதிருப்பவளாயினாள்.

அவ்வண்ணம் அரும் பேறு பெற்றதைத் தரிசித்து ஆழ்வாரும் அவர் சிஷ்யனான வல்லப தேவனுள்ளிட்டாரும் அதிசயித்து நிற்கையில், திருவரங்கமுடையான் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகிலழைத்து, ‘க்ஷீரஸமுத்ர ராஜன் போல நீரும் நமக்கு மாமனாராய் விட்டீர்’ என்று முகமன் கூறித் தமது தீர்த்தம் திருப் பரியட்டம் மாலை ஸ்ரீ சடகோபன் முதலியவற்றை ப்ரஸாதித்து வில்லிபுத்தூ ருறைவானுக்கே தொண்டு பூண்டிரும் ‘ என்று திருவாய் மலர்ந்து விடை கொடுத் தருளினான். அநந்தரம் ஆழ்வார், ” ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் செங்கண் மால்தான் கொண்டு போனான், பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும் பிள்ளை பெற்றவசோதை, மருமகளைக் கண்டுகந்து மணாட்டுப் புறஞ் செய்யுங் கொலோ ” (பெரியாழ்வார் திரு மொழி, 3-8-4) என்று போர உகந்து அரிதிற்பிரிந்து ஸ்ரீவில்லிபுத்தூர்க்குச் சென்று முன் போலவே கைங்கரிய நிரதராய்ச் சண்பகம் மல்லிகை பாதிரி செங்கழுநீர் புன்னை குருக்கத்தி இருவாட்சி முதலிய பல மலர்களுடன் * ஆர்வமென் பதோர் பூவையும் இட்டுக் கொண்டு எண்பத்தைந்து வருஷகாலம் வாழ்ந்திருந்து பேராநந்தப் பெரும்பதமடைந்தனர்.

”பாதகங்கள் தீர்க்கும் பரம னடி காட்டும் வேத மனைத்துக்கும் வித்தாகும் – கோதைதமிழ் ஐயைந்து மைந்து மறியாத மானிடரை வையஞ் சுமப்பதும் வம்பு. ”

 

ஆண்டாள் வைபவம் முற்றிற்று.

 

—–

1. திருப்பாவையிலும் நாய்ச்சியார் திருமொழியிலும் ஆண்டாள் மங்களாசாஸனம் செய்தருளின திருப்பதிகட்குப்

பாசுரக் குறிப்பு.

திவ்யதேசம் பிரபந்தம்/பாசுரம்
1 திருவரங்கம் ” தாமுகக்குந் தங்கையில் ” (நா-தி, 11 – ஆம்திருமொழி முழுதும்.)
2 திருக்கண்ணபுரம் “காட்டில் வேங்கடம் ” (நா-தி-4-2.]
3 திருமாலிருஞ்சோலை “சிந்துரச் செம்பொடிப்போல்’ (நா – தி – 9. முழுதும் ; “மழையே மழையே’ (நா – தி 10-8.]
4 ஸ்ரீ வில்லிபுத்தூர் மென்னடையன்னம் ” (நா – தி 5-5.)
5 திருவேங்கடம் “தையொருதிங்களும் ” (நா – தி 5-5.) “மத்த நன்னறுமலர்” ( நா – தி 1-4] “காட்டில் வேங்கடம் ” (நா – தி 4-2.] “வெள்ளை விளிசங்கு’ (நா – தி 5-2 .) “விண்ணீல மேலாப்பு” (நா – தி 8 . முழுதும்.) “பாடுங்குயில்காள்” (நா – தி10 -5.) “மழையே மழையே ” (நா – தி 10-8.)
6 துவரை “ஆவலன்புடையார்” (நா – தி 4-8.)
7 வட மதுரை (“மாயனை மன்னு ” (திருப்பாவை-5.) “மற்றிருந்தீர்கட்கு” (நா- தி -12-1.) ” * பட்டி மேய்ந்தோர் ” [நா- தி 14 – முழுதும்.)
 

குறிப்பு.

 

* திவ்வியகவி பிள்ளைப்பெருமாளையங்கார் அருளிச்செய்த “நூற்றெட்டுத் திருப்பதியந்தாதி” யிலும், மற்றுஞ்சில பிரபந்தங்களிலும் நூற்றெட்டுத் திருப்பதிகளுள் விருந்தாவனம் கூட்டிக் கணக்கிடப்படவில்லையாகையால் அத்திவ்வியதேசம் பாடல் பெற்றதன்றென்று கூறுதல் சம்பிரதாய முறைமைக்குச் சேராதாகையால், வடமதுரை என்னுந் திருப்பதியில் அதற்கு அந்தர்ப்பாவம் கூறுவதே பொருத்தமுடைத்தாமென்பது எனது கொள்கை; ஆரியர்களு மிதனை யிசையா தொழியகில்லார் என்க.

 

இத்திருப்பதிகள் இவ்வாண்டா ளொருத்தியால் மாத்திரம் மங்களாசாஸநம் செய்யப் பெற்றவை யல்ல ; மற்றுஞ் சில ஆழ்வார்களாலும் பாடப் பட்டவை.

 

ஆண்டாள் பரவு மணியார் பதியேழும் ஆண்டா னவனடிசே ரன்பர்தாள் – பூண்டேனான் முடிமேல் மனமகிழ்ந்தேன் மொய்வினையாம் மூடறுத்தேன் அடியேனுக் காரினிநே ராவார்?

 

திருப்பாவை.

இது – ஆண்டாள் அருளிச்செய்த இரண்டு திவ்வியப் பிரபந்தங்களுள் முதலாவது; மற்றொன்று நாய்ச்சியார் திருமொழி.

  வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தில் நாதமுனிகளென்னும் பூர்வாசாரியரால் வகுக்கப்பட்டதான தமிழ் வேதமாகிய நாலாயிர திவ்வியப் பிரபந்தத்துள் முதலாயிரத்தில் இரண்டாவது திவ்வியப் பிரபந்தமாகச் சேர்க்கப்பட்டது. இத்திருப்பாவை. திரு என்னும் பலபொருளொருசொல் – வடமொழியிலே ‘ஸ்ரீ’ என்பது போல, தமிழில் தேவர்கள், அடியார்கள் , ஞான நூல்கள், மந்திரங்கள், புண்ணிய ஷேத்ரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் முதலிய மேன்மையையுடைய எப்பொருள் கட்கும் விசேஷணபதமாகி, அவற்றிற்குமுன்னே மஹிமைப் பொருளைக் காட்டி வரும் : ஸ்ரீ மஹாவிஷ்ணு . ஸ்ரீ பக்திஸாரர், ஸ்ரீ ராமாயணம், ஸ்ரீ அஷ்டாக்ஷரம், ஸ்ரீ ரங்கம், ஸ்ரீ கைரவிணி, ஸ்ரீ பாதம் எனவும், திருமால், திருமழிசைப்பிரான், திருவாய்மொழி, திருவெட்டெழுத்து, திருவரங்கம், திருவல்லிக்கேணி, திருவடி எனவும் வழங்குமாற்றால் அறிக. இனி, இதனை “ஸ்ரீ” என்பதன் சிதைவு என்பாருமுளர். இங்கே, இது – நூலுக்கு அடைமொழி. மேன்மையாகிய பாவை எனப்பண்புத் தொகையாகவாவது, மேன்மையையுடைய பாவை என் இரண்டனுருபும் பயனுந்தொக்க தொகையாகவாவது விரிக்க.  

பாவை என்பதற்குப் பல பொருள்கள் உள்ளனவாயினும், இங்கே நோன்பு என்று பொருள். இந்நூலில் ஆண்டாள், முன் கண்ணபிரானை நோக்கி நோன்பு நோற்ற ஆயர்மங்கைகளின் தன்மையை அடைந்து ‘நம் பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ” என்று தான் நோன்பு நோற்பதாகக்கொண்டு அதற்கு இயைந்த அம்சங்களை அருளிச்செய்தனளாதலால் இதற்குத் திருப்பாவை என்று திருநாமமாயிற்று என்பது பூருவாசாரியர்களின் கொள்கை. நோன்பு என்னுங் காரியத்தைக் கூறும் பெயர் அக்காரியத்தைக்கூறும் நூலை உணர்த்துதல், காரிய வாகு பெயரின்பாற்படும். எனவே, ‘திருப்பாவை’ என்ற தொடர் – அடையடுத்த ஆகுபெயராம்; அன்மொழித்தொகையாகக் கொள்ளவும் இடமுண்டு.

 

இந்நூலிற் பாட்டுக்கள், முப்பது. இறுதிப்பாட்டொன்று நீங்கலாக மற்ற இருபத்தொன்பது பாட்டுக்களும் “ஏலோரெம்பாவாய்” எனவும், இறுதிப்பாட்டு “எம்பாவாய்” எனவும் முற்றுப்பெறும்; இதுகாரணமாகத் திருப்பாவை யென்று இதற்குத் திருநாமமாயிற்று என்றலும் தகும். சைவசமய குரவர் நால்வருள் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தில், “ஏலோரெம்பாவாய்” என்ற முடிபைக்கொண்ட பாட்டுக்கள் இருபது காணப்படுகின்றன; அவற்றிற்குத் ” திருவெம்பாவை” என்று பெயர் வழங்கி வருதலும் இங்கு உணரற்பாற்று. (இத்திருப்பாவையில் முதற்பாட்டில் பிரஸ்தாவிக்கப்பட்ட மார்கழி நீராட்டம், அத்திருவெம்பாவையில் இறுதிப்பாட்டில் பிரஸ்தாவிக்கப்பட்டது ; “போற்றியா முய்யாவாட் கொண்டருளும் பொன்மலர்கள், போற்றியா மார்கழி நீராடேலோ ரெம்பாவாய்” என்றாயிற்று அதன் முடிவு. அன்றியும், இத்திருப்பாவையில் “எல்லேயிளங்கிளியே” என்ற பதினைந்தாம் பாட்டின் பொருள் நடையை ஒத்திருக்கும், அத்திருவெம்பாவையில் நான்காம் பாட்டு ;

 

“ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ ? வண்ணக் கிளிமொழியா ரெல்லாரும் வந்தாரோ? எண்ணிக்கொடுள்ளவா சொல்லுகோ மவ்வளவுங் கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்ணெக்கு நின்றுருக யாமாட்டோ நீயேவந் தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்.”

  என்பது, அப்பாட்டு. இது நிற்க.

திருமகள் கொழுநனான ஸர்வேச்வரன், அசித்தோடே கலசி மங்கிக்கிடக்கிற லோகத்தைத் தனது இயற்கையின்னருளால் கரணகளேபராதியுக்தமாகப் படைத்துக் குருடர்க்குக் கண்கொடுப்பதுபோல் அகவிருள் நீங்க அநேக சாஸ்திரங்களையுங் காட்டிக்கொடுத்து உய்யும் வழியை உணர்த்தினவளவிலும், ஸம்ஸாரிகள் அவற்றைக் காற்கடைக்கொண்டு விஷயாந்தரங்களில் ஊன்றி உருமாய்ந்தொழியப் புக , இனி நாமே மனிசரோடொக்கப்பிறந்து இவ்வுலகைத் திருத்தி ஆட்படுத்திக்கொள்ள வேணும்’ என்று திருவுள்ளத்திற்கொண்டு, அதற்காகத் திருவாய்ப்பாடியிற் கண்ணபிரானாய்த் திருவவதரித்துத் தனது மாசிற்குணங்களினாலும் ஒப்புயர்வற்ற ரூபஸௌந்தரியத்தினாலும் அத்திருவாய்ப்பாடியில் ஐந்துலக்ஷங்குடியிற் பெண்களையும் தோற்பித்துத் தன்பால் ஈடுபடுத்தித் தன்னோடொத்த பருவத்தினரான அப்பெண்களுந் தானுமாய் வளர்ந்தருளுகிற காலத்தில், அவ்வாய்ப்பாடியிலுள்ள இடைத்தலைவர்கள் ‘ஓ ! கண்ணன் யௌவனபருவ மடையலாயினன், பெண்களுக்கும் யௌவனம் வந்து தலைகாட்டா நின்றது ; கண்ணனோ கோயின்மை குறும்புகள் செய்து அல்லல் விளைக்கைக்கு உரிய உள்ளத்தினனாகக் காணப்படுதலால் இனி இப்பெண்களைக் கண்ணன் காணவொண்ணாதபடி ஒளித்துச் சேமித்துவைப்பதே உரியதாகும்’ என்று அறுதியிட்டு, அப்பெண்களை யடங்கலும் நிலவறைகளிற் கொணர்ந்து அடைத்திட , பிறகு கண்ணனும் பெண்களும் பண்ணின பாக்கியவசமாக நாட்டில் மழையின்றியேயொழிய, அப்போது நிலவறையிற் பெண்கள், “கோவலர்க்குக் கோநிரையே சீரிய செல்வமாதலால் அச்செல்வம் குறைவின்றி வாழ்வதற்கு $ மழையே ஏதுவாதலால், மழையின்றி

கோயின்மை குறும்புகள் செய்து அல்லல் விளைக்கைக்கு உரிய உள்ளத்தினனாகக் காணப்படுதலால் இனி இப்பெண்களைக் கண்ணன் காணவொண்ணாதபடி ஒளித்துச் சேமித்துவைப்பதே உரியதாகும்’ என்று அறுதியிட்டு, அப்பெண்களை யடங்கலும் நிலவறைகளிற் கொணர்ந்து அடைத்திட , பிறகு கண்ணனும் பெண்களும் பண்ணின பாக்கியவசமாக நாட்டில் மழையின்றியேயொழிய, அப்போது நிலவறையிற் பெண்கள், “கோவலர்க்குக் கோநிரையே சீரிய செல்வமாதலால் அச்செல்வம் குறைவின்றி வாழ்வதற்கு $ மழையே ஏதுவாதலால், மழையின்றி   $”துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை” என்ற திருக்குறளை இங்கு நினைக்க.   யொழிந்த இக்காலத்தில் அக்கோவலர் வெறுமனிருக்க வல்லரல்லர் ; மழை பெய்யுமாறு நோன்பு நோற்கக் கடவதென்று நமக்குக் கட்டளையிட்டுக் கண்ண பிரானை அந்நோன்புக்கு ஸஹகாரி நிர்வாஹகனாக நியமிக்கப் போகிறார்கள்; நமக்குப் பழம் நழுவிப் பாலில் விழுந்தவாறாயிற்று, அச்சோ ! அச்சோ !!” என்று நெஞ்சில் நினைத்து மிக மகிழ்வுற்றிருக்குமளவில் ; ஆயர்களனைவரும் திரண்டு “ஆ! இஃது என்கொல்? இனிப் பசுக்களும் மனிசரும் பிழைக்கும் விரகு யாது கொல்?” எனச் சிந்தித்து, நோன்பு நோற்றக்கால் மழை பெய்யும்” என்றறிந்து, ” இவ்வூரிற் பெண்கள் யாவரும் கூடி நோன்பு நோற்கக்கடவர்கள் ; அந்நோன்புக்கு இச்சேரித்தலைவனான கண்ணபிரான் துணைநின்று நிர்வஹிக்கக்கடவன்” என்று அறுதியிட்டு, பெண்களையழைத்து நோற்கக் கட்டளையிட்டு, கண்ணபிரானையழைத்து ‘இந் நோன்புக்கு நீ துணைநிற்க வேணும்’ என்று கூற, அதற்குக் கண்ணபிரான் ”அங்ஙனமே ஆயிடுக என்று முதலடியிற்றானே இசைந்தால் இவர்கள் நெஞ்சில் ஏதேனும் தோற்றக்கூடுமாதலால் சற்று மறுத்துப் பார்ப்போம்’ என நினைத்து அவ்விடையர்களைநோக்கி, ” ஓ! அது நம்மா லாவதொன்றன்று” என்று இசையாதான் போல் மறுத்துக்கூற, அவர்களும் ” அப்பனே! அருள்முகிலே! நீ இங்ஙன் மறுக்கலாகாது, வருத்தம் பொறுத்தாயினும் இந்நோன்புக்குத் துணைநிற்பதே உனக்குக் கடமை ; இவ்வளவு அருள் செய்யவேணும் நாயனே!” என்று-இனி மறுக்கவொண்ணாதபடி நிர்ப்பந்தித்து வேண்ட ; கண்ணபிரானும் அங்ஙனமே இசைந்துநிற்க, பின்பு எல்லாரும் திரளவிருந்து, பெண்கள் நோற்பார், அதற்கு வேண்டியவற்றைக் கண்ணன் ஈட்டுவன்” என்று வெளிப்பட விளம்பிப் பெண்களைக் கண்ணன்கையினிற் காட்டித் தந்து கோவலக் கிழவரனைவரும் சென்றபின்பு, பெண்களும் கிருஷ்ணனுங் கூட இருந்து ஆ! இப்படியும் ஓர் நிலவெரி இரவு நமக்கு நேர்படுவதே! நமது பாக் கியத்தின் பரிசு என்னே!’ என்றாற்போல மனங்கனிந்து கொண்டாடி இரவிற் சிறிதுபோழ்து விளையாடி, ‘இனி ஆயர்கட்கு அதிசங்கை பிறக்குமாறு இங்கு நாம் வைகி இருக்கக்கடவோ மல்லோம் ; இப்போது எல்லாரும் மீண்டு சென்று, நோன்புக்குக் குளிக்கலாம்படி பின்னிரவில் வந்து உணர்த்துங்கள்” எனக்கூறிக் கண்ணபிரான் பெண்களைப் பிரிந்து சென்று அப்பிரிவாற்றமாட்டாமல் நப்பின்னைப் பிராட்டியின் திருமாளிகையினுட்புக ; பெண்களும் ஒருவர்க்கொருவர் கலவி யாலே கால்நடைதந்து போய்த் தத்தம் மாளிகைகளிற் சென்று சேர்ந்து உறங்கப் புக, ” கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே’ என்றபடி – கண் துஞ்சப்பெறாமையாலே முந்துற உணர்ந்தவர்கள், கண்ணபிரானது குணசேஷ்டி தாதிகளை நினைந்து நைந்துள் கரைந்துருகி எழுந்திருக்க மாட்டாதே கிடக்கிறவர்களைத் தனித்தனியே சென்றுணர்த்திப் பின்பு எல்லாருமாய்த் திரண்டு சென்று கண்ணபிரானை எழுப்பி அவன் பக்கல் தங்களபேக்ஷிதத்தை அறிவித்து, அவனதருளால் அவ்வபேக்ஷிதத்தைக் குறையறப் பெற்ற படியை வெளியிடுவது, இத்திவ்வியப் பிரபந்தம். எனவே, அவ்வாயர்மங்கை களின் அநுகாரங்கொண்டு கூறிய பாசுரமென்றதாயிற்று. (இதன் விரிவை மேல் அவதாரிகையிற் காணலாம்.)  

இனி, ஆண்டாளுக்கு எம்பெருமானோடு ஸம்ச்லேஷம் விவக்ஷிதமாகில் நம்மாழ்வாரும் திருமங்கை யாழ்வாரும் போல் மடலெடுக்கப்புகாது ஆய்ச்சிகளின் நோன்பை அநுகரிப்பானென்? எனில்; சொல்லுகிறோம்; மடலெடுக்கையாவது பர்த்தாவின் போகத்தை ஸ்வார்த்தமாக இரப்பது போலும்; நோன்பாவது- காத்யாயநீவரதமென்று கூறப்படுதலால் வ்யபிசாரம் போலும். ஆகவே, மடலிற் காட்டிலும் நோன்பு எதிர்த்தலைக்கு அளவற்ற அவத்யத்தை விளைக்கைக்கு உறுப்பாதலால் ‘அத்யந்தம் அவத்யாவஹமான காரியத்தில் முயன்றால் தான் அதுபொறாமல் நாயகன் கடுகவந்து காத்தருள்வன்’ என்று நோன்பு நோற்கப் புக்காள் எனக்கொள்க. அன்றியும், கண்ணபிரான் இராமபிரானைப்போல் சுணையுடைய னல்லனாதலால் ஆண்டாளோடொக்கத் தானும் மடலெடுக்கத் துணிவனாதலால் அவன் திறத்து மடல் பயன்படா தென்பது பற்றியும் அதனைவிட்டு நோன்பிற் கைவைத்தாளெனவுங் கொள்க. நிற்க.

 

இத் திவ்வியப் பிரபந்தத்திற்குப் பூருவர்களால் மணிப்ரவாள நடையில் அருளிச்செய்யப்பட்ட வியாக்கியானங்கள் ஆறு அச்சிடப்பட் டிருக்கின்றன. ஈராயிரப்படி, மூவாயிரப்படி, நாலாயிரப்படி, ஆறாயிரப்படி என்று வழங்கிவருகின்ற நான்கு வியாக்கியானங்களும் தென்கலை ஸம்ப்ரதாய நெறிக்குச் சேர்ந்தவை. இவற்றுள், ஈராயிரப்படியும் $ நாலாயிரப்படியும் – திருநாராயணபுரத்து ஆய் என்கிற ஜநந்யாசார்யராலும், மூவாயிரப்படி பெரியவாச்சான் பிள்ளையாலும், ஆறாயிரப்படி – பிள்ளை யுலகாசிரியர் திருத்தம்பியாரான அழகிய மணவாளப்பெருமாள் நாயனாராலும் அருளிச்செய்யப்பட்டவை. இன்னும் அச்சிடப்படாத ஆயிரப்படி, ஐயாயிரப்படி என்ற இரண்டு வியாக்கியானங்கள் உள்ளனவென்றும் பெரியோர் பகரக் கேட்டுளோம். இனி, வடகலை ஸம்ப்ரதாயத்தில், உபநிஷத் பாஷ்யகாரராகிய ரங்கராமாநுஜ ஜீயரால் இயற்றப்பட்ட ஸம்ஸ்கிருத வியாக்கி யானமொன்றும், பெரிய பரகாலஜீயர், அந்தகஸ்வாமியென்கிற ரங்கநாதஸ்வாமி, என்னுமிவர்கள் இயற்றிய மணிப்ரவாள வியாக்கியானங்க ளிரண்டும் உள்ளன. இவை மேற்குறித்த தென்னாசாரிய வியாக்கியானங்களையே ஆதாரமாகக்கொண்டு (பங்க்தி சௌர்யத்துடன்) எழுதப்பட்டவையாயினும், பரகாலஜீயர் வியாக்கியானம் பெரும்பாலும் தென்னாசார்ய தூஷணத்தில் மிக்க விருப்புடைத்தாகக் காணப்படும். தூஷணமென்பது அவர்க்கு “***” நமாகையால் அதனைத் தன் கருத்தின்படி விநியோகிக்க அவர் கடமைப்பட்டவரேயாவர். ” ***” என்ற துங்காண்க.

 

இவ்வாறாக இத்திருப்பாவைக்குப் பூருவர்களால் இயற்றப்பட்ட உரைகள் பல உள்ளனவாயினும், அவற்றில் ஸம்ஸ்கிருத வாக்கியப் பிரயோகங்கள் பெரும்பான்மையா யிருப்பதுடன் பொருளுரைக்கும் வகையும் அதி கம்பீரமாயிருத்தலால் அவற்றின் கருத்துகள் நெடுநாள் ஆசிரியர்களை அடிபணிந்து அரிதில் அறியத்தக்கவையா யுள்ளமையற்றி, அவ்வுரைகளைத்தழுவி அடியேனது சிற்றறிவிற்கு எட்டிய இன்னுஞ்சில விசேஷார்த்தங்களையும் ஸ்வாபதேசார்த்தங்களையும் ரஸோக்திகளையும் இலக்கணக் குறிப்புகளையுஞ் சேர்த்து ஒழுங்குபடுத்தி ஒருவாறாக இவ்வுரை எழுதப்படுகின்றது.

 

கூரத்தாழ்வான் திருக்குமாரராகிய ஸ்ரீ பராசர பட்டர்க்குத் திருநெடுந்தாண்டகத்திற்போல, எம்பெருமானார்க்கு இத்திருப்பாவையில் அளவற்ற அன்புடைமை பிரசித்தம். ஆனதுபற்றியே “கோதை தமிழ் ஐயைந்துமைந்து மறியாத மானிடரை வையஞ் சுமப்பதும் வம்பு” என்றார் ஆன்றோரும்.

 

எம்பெருமானுக்கு ஆட்செய்கையே பரமபுருஷார்த்தம்’ என அறுதியிடுதல், இப்பிரபந்தத்தின் உள்ளுறை. ….. ……

 

$ நாலாயிரப்படி ஜந்யாசாரிய ரருளிச்செய்ததல்ல என்பாருமுளர் ; நஞ்சீயர் அருளிச்செய்ததென்று சிலர் சொல்லுவர்; ஒருவகையாக நிஷ்கர்ஷமில்லை.

 

2. உபதேச ரத்தினமாலை.

 

” இன்றோ திருவாடிப் பூர மெமக்காக அன்றோவிங் காண்டா ளவதரித்தாள் – குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னையிகழ்ந் தாழ்வார் திருமகளா ராய். பெரியாழ்வார் பெண்பிளையா யாண்டாள் பிறந்த திருவாடிப் பூரத்தின் சீர்மை – ஒருநாளைக் குண்டோ மனமே யுணர்ந்து பா ராண்டாளுக் குண்டாகி லொப்பிதற்கு முண்டு.

 

அஞ்சு குடிக்கொரு சந்ததியா யாழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்குந் தன்மையளாய்ப் – பிஞ்சாய்ப் பழுத்தாளை யாண்டாளைப் பத்தியுட னாளும் வழுத்தாய் மனமே மகிழ்ந்து.”

 

3. பிரபந்தசாரம்.

 

“வேயர்புகழ் வில்லிபுத்தூ ராடிப்பூர மேன்மேலு மிகவிளங்க விட்டுசித்தன் தூயதிரு மகளாய்வந் தரங்கனார்க்குத் துழாய்மாலை முடிசூடிக் கொடுத்தமாதே! நேயமுடன் திருப்பாவை பாட்டாறைந்து நீயுரைத்த தையொருதிங்கட் பாமாலை ஆயபுகழ் நூற்று நாற்பத்து மூன்று மன்புடனே யடியேனுக் கருள்செய்நீயே.”

 

ஸ்ரீ:

சூடிக்கொடுத்த நாச்சியார் அருளிச்செய்த

திருப்பாவையின் உரை அவதாரிகை

 

ஆழ்வார்கள் தாங்கள் ஸம்ஸாரத்திற் கிடந்துறங்காநிற்க, எம்பெருமான் தானாக வந்து அவர்களை உணர்த்த, பிறகு உணர்ந்தனர் அவர்கள். ஆண்டாள் அங்ஙனன்றி மணத்துடன் முளைக்கும் திருத்துழாய் போன்று எம்பெருமான் திறத்து ஆராத காதலுடன் அவதரித்து இவள்தானே அவ்வெம்பெருமான் ஸந்நிதியிற் சென்று “உம்பர்கோமானே! உறங்காதெழுந்திராய்“ என்று அவனை உணர்த்தினளாதலால் ஆழ்வார்களினும் ஆண்டாளுக்குள்ள வைலக்ஷண்யம் சொல்லாற்கூறும்பரமன்று. அன்றியும், ஆடவரை ஆடவர்கண்டு காமுறுவதிற்காட்டிலும் பெண்டிர்கண்டு காமுறுதல் பள்ளமடையா யிருக்குமென்பது உலகத்து எளிதிலுணர்ந்த விஷயமாதலால் புருஷோத்தமன் விஷயத்தில் ஆழ்வார்களின் காமம்போல் மேட்டுமடை இருக்கையன்றியே இவ்வாண்டாளுடைய காமம் பள்ளமடையா யிருக்கையாகிற மற்றொரு வைலக்ஷணயமும் உற்று நோக்கத்தக்கது. ஆழ்வார்கள் காமத்தின் மெய்ப்பாட்டுக்காகப் பெண்ணுடை உடுத்துப்பேசினார்கள், இவட்கு அங்ஙன் ஆரோபித்துக் கொள்ளவேண்டியக ஆகாரமொன்று மில்லையே.

 

இங்ஙனம் அமைந்த அதிசய விசேஷங்களுடன் வளர்ந்தருளாநின்ற சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஒரு கொள்கொம்புடன் கூடவேண்டும் பருவமாய். அதற்குரிய ஞானபக்திகள் மீதூர்ந்து செல்லப்பெற்று “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்“ என்று மாநுஷ நாற்றத்தைப் பொறுக்கமாட்டாதே * அங்கைத்தலத்திடையாழிகொண்டானவன் முகத்தன்றி விழியாதாளாய், ஸ்ரீவில்லிப்புத்தூரில் எழுந்தருளியிராநின்ற வடபெருங்கோயிலுடையானுடனே தழுவி முழுசிப் பரிமாறப்பெறவேணுமென்று விரும்பிச்செல்ல, அவ்விருப்பத்திற்கீடாக வடதளசாயி முகங்காட்டாமையாலே மிகவும் மனம் நொந்து “இவ்வெம்பெருமானோடு கலவிபெற்றுக் களித்தார் ஆரேனுமுண்டோ?” என்று ஆராய்ந்தவிடத்து திருவாய்ப்பாடியிலுள்ள அஞ்சு லக்ஷங்குடி ஆயர் மங்கைகள் இவனுடன் கலந்து களிக்கப்பெற்றார்கள்“ என்றுணர்ந்து, “அக்கலவி காலாந்தரத்தில் நடந்ததொன்றாகையாலே அதில் நமக்கு அந்வயமின்றி யொழிந்தது. இனி, அவன் உலாவிப்போன அடிச்சுவடும் அவனும் பெண்களுமாககத் திளைத்த யமுநா நதியும், அவன் கோநிரைகாக்க எடுத்த கோவர்த்தநகிரியும் கிடந்தனவாகில், அவற்றைக்கொண்டாகிலும் தரிப்போம்” என்று அங்குச் செல்ல நினைக்க, பகவத் விரஹத்தாலே உடல் மெலிவுற்ற இவ்வாண்டாள் அவ்வளவு சொல்லமாட்டாதாளாய் ஜனகராஜன் தன் மகளான சீதைக்கு வில்முறி என்று ஒரு அவதி வைத்தாப்போலவும், கும்பர் தம் மகளான நப்பின்னைப்பிராட்டிக்கு ஏறுதழுவுதல் என்று ஒரு அவதி வைத்தாபோலவும் நம் தந்தை நமக்கு ஓர் அவதியும் கற்பிக்கவில்லையே! இனி நாம் வாழ்வது எங்ஙனேயோ? என்று சிந்தித்துத் தளர்ந்திருக்க, அவ்வளவில் சில தார்மிகர்கள் – “திருவாய்ப்பாடியிற் கண்ணபிரான் ஆயர்மங்கைகளுடன் * குரவை கோத்து விளையாடும்போது ஆனந்தரஸம் தலைப்பற்றி வாய்க்கொண்டு செல்ல, ‘இனி நற்கேடு கெடலாகாது‘ என்று அந்த ரஸம் மாறுகைக்காக கண்ணபிரான் பெண்களைப் பிரிந்து மறைந்திருக்க, அப்போது அப்பெண்பிள்ளைகள் தங்கள் ஆற்றாமையாலே ‘இனி எவ்வகையாலாயினும் நாம் தரிக்கவேணும்‘ என்று ஓர் ஆய்ச்சி ‘நான் காளியநாகத்தின் வலியை அடக்குகிறேன் காண்‘ என்பது, வெறொருத்தி ‘நான் பூதனை முலையைச் சுவைத்துண்ணுகிறேன் காண்‘ என்பதாய் இப்படி அனைவரும் தாங்கள் கண்ணபிரான்போல அநுகாரஞ்செய்து ஒருவாறு துயர்தீர்ந்து தரித்தார்கள்“ ** என்று சொல்லக்கேட்ட ஆண்டாள்தானும் அவ்வாய்ச்சிகளைப்போல் அநுபவித்துத் தரித்கும்படியைக் கூறுவது, திருப்பாவை என்கிற இத்திவ்யப் பிரபந்தம்.

  * இக்குரவைக்கூத்து வடமொழியில் ராஸக்ரீடை என வழங்கும். அஃதாவது கண்ணபிரான் பல திருவுருக்கொண்டு ஒவ்வொரு ஆய்ச்சியின் பக்கத்திலும் ஒவ்வொரு கண்ணனாக நின்று ஆடுவதொரு கூத்து.   ** ஸ்ரீ விஷ்ணுபுராணம் ஐந்தாவது அம்சத்தில் பதின்மூராமத்தியாயத்தில் இது கூறப்பட்டுள்ளமை காண்க.  

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

ஜீயர் திருவடிகளே சரணம்.

அவதாரிகை முற்றுப்பெற்றது.

Dravidaveda

back to top