(2772)-(2773)

……….   ………….   ……………..  தாமரைமேல்

 

மின்னிடையாள் நாயகனை விண்ணகருள் பொன்மலையை,

பொன்னி மணிகொழிக்கும் பூங்குடந்தைப் போர்விடையை,

தென்னன் குறுங்குடியுள் செம்பவளக் குன்றினை,

மன்னிய தண்சேறை வள்ளலை, – மாமலர்மேல்           (2772)

 

அன்னம் துயிலும் அணிநீர் வயலாலி,

என்னுடைய இன்னமுடகி எவ்வுள் பெருமலையை,

கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,

மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்

பொன்னை, மரகத்தைப் புட்குழியெம் போரேற்றை,

மன்னும் அரங்கத்தெம் மாமணியை, –                     (2773)

 

பதவுரை

தாமரை மேல் மின் இடையாள் நாயகனை

தாமரைப்பூவில் பிறந்தவளும் மின் போன்ற இடையை யுடையளுமான பிராட்டிக்கு நாயகனாய்

விண்ணகருள் பொன் மலையை

திருவிண்ணகரிலே பொன்மலை போல் விளங்குமவனாய்

பொன்னி மணி கொழிக்கும் பூ குடந்தை போர் விடையை

காவேரி நதியானது ரத்னங்களைக் கொண்டு தள்ளுமிடமான அழகிய திருக்குடந்தையிலே யெழுந்தருளியிருக்கிற

யுத்த ஸந்நத்தமான காளை போலச் செருக்குடையனாய்

தென் நன் குறுங்குடியுள் செம்பவளம் குன்றினை

தென் திசையிலுள்ள விலக்ஷணமான திருக்குறுங்குடியிலே சிவந்த பவழமலைபோல விளங்குமவனாய்,

தண் சேறை மன்னிய வள்ளலை

குளிர்ந்த திருச்சேறையிலே பொருந்தி யெழுந்தருளி யிருக்கிற பரம உதாரனாய்,

மா மலர் மேல் அன்னம் துயிலும் அணி நீர் வல் ஆலி என்னுடைய இன் அமுதை

சிறந்த தாமரைப் பூக்களின் மேலே அன்னப்பறவைகள் உறங்கப் பெற்ற அழகிய நீர் நிறைந்த வயல்களை யுடைத்தான திருவாலியிலே எனக்குப் பரம போக்யனாக ஸேவை ஸாதிப்பவனாய்.

எவ்வுள் பெருமலையை

திருவெவ்வுளுரில் பெரிய தொரு மலை சாய்ந்தாற் போலே சாய்ந்தருள்பவனாய்

கன்னி மதில் சூழ் கணமங்கை கற்பகத்தை

சாச்வதமான மதில்களாலே சூழப்பட்ட திருக்கண்ண மங்கையில் கல்பவ்ருக்ஷம்போல் எழுந்தருளியிருப்பவனாய்

மின்னை

மின்போல் விளங்குகின்ற பெரிய பிராட்டியாரை யுடையனாய்

இரு சுடரை

ஸூர்ய சந்திர்ர்களோ என்னும்படியான திருவாழி திருச்சங்குகளை யுடையனாய்

வெள்ளறையுள்

திருவெள்ளறையிலே

கல் அறை மேல்

கருங்கல் மயமான ஸந்நிதி யினுள்ளே

பொன்னை

பொன் போல் விளங்குமவனாய்

மரதகத்தை

மரதகப்பச்சை போன்ற வடிவை யுடையனாய்

புட்குழி எம் போர் எற்றை

திருப்புட் குழியிலே எழுந்தருளி யிருக்கிற அஸ்மத்ஸ்வாமியான ஸமரபுங்கவனாய்,

அரங்கத்துமன்னும்

திருவரங்கத்தில் நித்யவாஸம் பண்ணுகிறவனாய்

எம் மா மணியை

நாம் கையாளக்கூடிய நீல மணி போன்றவனாய்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆகக் கீழே சில விசேஷணங்களால் விபவாவதார சரித்திரங்களிற் சிலவற்றைப் பேசி இனி அர்ச்சாவதாரங்களிலுஞ் சிலவற்றை அநுசந்திக்க விரும்பித்  திருவிண்ணகரிலே வாய்வைக்கிறார். பல திருப்பதிகளையும் பற்றி அருளிச் செய்துகொண்டு போகிற இக்கண்ணிகளில் “கோயில் திருமலைபெருமாள் கோயில்“ என்னும் அநாதி வ்யவஹாரத்திற்கு ஏற்ப, “மன்னுமரங்கத்தெம் மாமணியை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும் “மின்னி மழை தவழும் வேங்கடத்தெம் வித்தகனை“ என்ற வளவில் ஒரு பகுதியாகவும், “வெஃகாவிலுன்னிய யோகத்துறக்கத்தை“ என்றவளவில் ஒரு பகுதியாகவும், அதற்குமேல் வினைமுற்று வருமளவில் ஒரு பகுதியாகவும் பிரித்துக்கொண்டு உரையிடுகின்றோம்.

விண்ணகர் – ஒப்பிலியப்பன் ஸந்நிதி. “தன்னொப்பாரில்லப்பன்“ என்று நம்மாழ்வார்ருளிச் செயல் “ஒருவரையும் நின்னொப்பா ரொப்பிலா வென்னப்பா!“ (திருக்கண்ணப்புரத்துப் பாசுரத்தில்) என்றார் இத்திருமங்கையாழ்வாரும். உப்பிலியப்பன் என்கிற வ்யவஹாரம் ஸ்தர புராணத்தையடி யொற்றிய தென்பர். குடந்தை – குடமூக்கு என்றும் கும்பகோணமென்றும் வழங்கப்படும் தலம் குறுங்குடி – குறிகியவனான வரமநனது க்ஷேத்ரமாதலால் குறுங்குடியெனத் திருநாம்மாயிற்றென்பர். இத்தலத்தெம்பெருமான் ஸ்ரீ பாஷ்யகார்ர் பக்கலிலே சிஷ்யனாய் “நாமும் நம்மிராமாநுசனை யுடையோம்“ என்கையாலே வைஷ்ணவ நம்பியென்று திரநாமம் பெற்றனன். நம்மாழ்வார் திருவ்வதாரத்திற்குக் காரணமாயிருந்தவரும் இத்தத்து நம்பியே. சேறை – பஞ்சஸார க்ஷேத்ரமென வழங்கப்படும்.

ஆலி –எம்பெருமானைத் திருமகள் ஆலிங்கனஞ் செய்துகொண்ட திவ்யதேசமானது பற்றித் திருவாலியென வழங்கப்படுமென்பர், ஆலிங்கனம் என்பதன் ஏகதேசம் நாம்மாயிற்று. எவ்வுள் –எம்பெருமான் சாலிஹோத்ர மஹாமுனிக்கு ப்ரத்யக்ஷமாகி “வாஸம் பண்ணுவதற்குத் தருதியான உள் எவ்வுள்? என வினாவியதனால் இத்தலத்திற்குத் திருவெவ்வுளுரென்று திருநாம்மாயிற்றென்ப கிம்க்ருஹம் எனபர் வடமொழியில்

கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல் மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம் “அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க.

வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும்.

புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாம்மாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர்.

அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர். இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top