(2757)-(2758)

தென்னன் பொதியில் செழுஞ்சந்தின் தாதளைந்து,

மன்னிவ் வுலகை மனங்களிப்ப வந்தியங்கும்,

இன்னிளம்பூந் தென்றலும் வீசும் எரியெனக்கே,

முன்னிய பெண்ணைமேல் முள்முளரிக் கூட்டகத்து,

பின்னுமவ் வன்றில் பெடைவாய்ச் சிறுகுரலும்,

என்னுடைய நெஞ்சுக்கோ ரீர்வாளாம் எஞ்செய்கேன்(2757)

 

பதவுரை

தென்னன் பொதியில்

தென் திசைக்கு தலைவனான பாண்டிய ராஜனது மலையமலையிலுள்ள

செமு சந்திரன் தா துஅளைந்து

அழகிய சந்தந மரத்தின் பூந்தாதுகளை அளைந்து கொண்டு

மன் இ உலகை மனம் களிப்ப வந்து இயங்கும்

நித்யமான இந்த லோகத்திலுள்ளவர்கள் மனம் மகிழும்படி வந்து உலவுகின்ற

இன் இள பூ தென்றலும்

போக்யமாய் அழகான இளந்தென்றற் காற்றும்

எனக்கே எரி வீசும்

எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது

முன்னிய பெண்ணை மேல்

முன்னே காணப்படுகிற பனை மரத்தில்

முள் முளரி கூடு அகத்து

முள்ளையுடைய தாமரைத் தண்டினால் செய்யப்பட்ட கூட்டிலே

பின்னும்அவ் அன்றில் பெடை வாய் சிறு குரலும்

வாயலகு கோத்துக் கொண்டிருக்கிற அன்றிற் பேடையின் வாயிலுண்டான சிறிய குரலும்

என்னுடைய நெஞ்சுக்கு ஓர் ஈர் வாள் ஆம்

எனது நெஞ்சை அறுக்கின்ற வொரு வாளாக இராநின்றது.

என் செய்கேன்

(தப்பிப் பிழைக்க) என்ன உபாயஞ் செய்வேன்?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எனக்கு ஹிம்ஸையை உண்டு பண்ணுவன கடலோசையும் நிலாவுமேயல்ல, தென்றல் முதலிய மற்றும் பல பொருள்களும் ஹிம்ஸிக்கின்றன என்கிறாள். தெற்குத்திசைக்குத் தலைவனாய் மலயத் வஜனென்று பெயருடையவனான பாண்டியராஜனது பொதிய மலையிலுள்ள திவ்யமான சந்தனமரத்தற் பூத்தாதுகளிற் படிந்து அவற்றின் பரிமளத்தைக் கொய்து கொண்டு நாடெங்கும் வந்து வீசி அனைவரையும் மகிழ்விக்கின்ற தென்றற் காற்று எனக்கு மாத்திரம் அழலை வீசுகின்றது, இந்நிலைமையிலே அன்றிற் பேடையின் இன்குரலும் செவிப்பட்டுப் பரமஹிம்ஸையாகின்றது என்கிறாள்.

(என் செய்கேன்) –கீழே “தென்ன்ன் பொதியில் செழுஞ் சந்தனக்குழம்பின் அன்னதோர் தன்மை யறியாதார்“ என்று தொடங்கி“ இன்னிளவாடை தடவத் தாங் கண்துயிலும் பொன்ன்னையார் பின்னும் திருவுறுக.“ என்று சொல்லியுள்ளபடி – விரஹ காலத்தில் ஹிம்ஸகங்களான இந்த வஸ்துக்களை லக்ஷியம் பண்ணாமல் இவற்றைப் பரமபோக்யமாகக் கொள்ளுகிற சில பெண்களாகப் பிறவா தொழிந்தேனே! இவற்றுக்கு நலிவுபடும் பெண்ணாக பிறந்தேனே! என்செய்வேன் என்கிறாள்.

 

கன்னவில்தோள் காமன் கருப்புச் சிலைவளைய,

கொன்னவிலும் பூங்கணைகள் கோத்தெளப் பொதவணைந்து, தன்னுடைய தோள்கழிய வாங்கி, – தமியேன்மேல்      (2757)

 

என்னுடைய நெசே இலக்காக எய்கின்றான்,

பின்னிதனைக் காப்பீர்தாம் இல்லையே,               (2758)

 

பதவுரை

கல் நவில் தோள் காமன்

மலைபோல் (திண்ணிய) தோள்களை யுடையனான மன்மதன்

கரும்பு சிலை வளைய

(தனது) கருப்பு வில்லை வளைத்து

கொல் நவிலும் பூ கணைகள் கோத்து

(அந்த வில்லில்) கொலை செய்ய வல்ல புஷ்ப பாணங்களைத் தொடுத்து

பொத அணைந்து

(அந்த வில்லை மார்பிலே) அழுந்த அணைத்துக்கொண்டு)

தன்னுடைய தோள் கழிய வாங்கி

தனது தோள் வரையில் நீள இழுத்து

என்னுடைய நெஞ்சே இலக்கு ஆக தமியேன் மேல் எயகின்றான்

எனது நெஞ்சையே குறியாகக் கொண்டு துணையற்ற என்மீது (அந்த அம்புகளைப் பிரயோகிக்கின்றான்.

பின் இதனை காப்பீர்தான் இல்லையே

இப்போது இந்த ஆபத்தில் நின்றும் என்னைத் தப்புவிக்க வல்லீரில்லையே!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ச் சொன்ன கடலோசை முதலியவற்றுக்கு ஒருவாறு தப்பிப் பிழைத்தாலும் பிழைக்கலாம், இனி ஜீவிக்க வழியில்லை யென்னும்படியாக மன்மதன் தனது பாணங்களைச் செலுத்தி வருத்துந்திறம் வாசாமகோசரம் என்கிறாள். மஹாபலசாலியான மன்மதனும் தனது கருப்புவில்லை வளைத்து என்னை இலக்காகக் கொண்டு புஷ்ப பாணங்களைப் பிரயோகிக்கின்றானே, நான் இதற்குத் தப்பிப் பிழைக்கும்படி செய்வாராருமில்லையே. என்கிறாள்.

கன்னவில் தோள் காமன் – ஒருகால் பரமசிவனுடைய கோபாக்கிநிக்கு இலக்காகி நெற்றிக் கண்ணால் தஹிக்கப்பட்டு உடலிழந்து அநங்கன் என்று பேர்பெற்றவனான மன்மதனுக்கு உடம்பு இல்லை யாயிருக்க, “கன்னவில் தோள் காமன்“ என்றும் “தன்னுடைய தோள் கழியவாங்கி“ என்றும் அருளிச் செய்வது சேருமோ எனின், அநங்கள் செய்கிற காரியத்தைப் பார்த்தால், திண்ணிய உடம்புடையானும் இவ்வளவு காரியம் செய்ய வல்லவனல்லன்“ என்னும்படியாகப் பெரிய கொலைத் தொழிலாயிருப்பதனால் அவனுக்கு வலிதான வுடம்பு இருந்தே தீரவேணுமென்று காமிகள் கருதுவதுண்டாதலால் இப்பரகால நாயகியும் அந்த ஸமாதியாலே சொல்லுகின்றாளென்க. மன்மதனுக்குக் கரும்பை வில்லாகவும் ஐவகைப் புஷ்பங்களை அம்பாகவும் அந்த அம்புகளை வில்லிலே தொடுத்துப் பிரயோகிக்கின்றானாகவும் நூல்கள் கூறுகின்றமை காண்க.

கரும்பு –சிலை, கரும்புச்சிலை, பூங்கணைகள் – முல்லை, அசோகம், நீலம், மா, முளரி என்ற ஐந்து மலர்கள் மன்மத பஞ்ச பாணங்களெனப்படும். மத்தம், தீரம், சந்தாபம் வசீகரணம், மோகனம் என்கிற ஐவகைச் செயல்களைப் பஞ்ச பாணமாகச் சொல்லுவர் ஒரு சாரார்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top