(2747)-(2749)

……..    ………….   ……………     சூழ்கடலுள்,

 

பொன்னகரம் செற்ற புரந்தரனோ டேரொக்கும்,

மன்னவன் வாணன் அவுணர்க்கு வாள்வேந்தன்,

தன்னுடைய பாவை உலகத்துத் தன்னொக்கும்,

கன்னியரை யில்லாத காட்சியாள், – தன்னுடைய          (2747)

 

இன்னுயிர்த் தோழியால் எம்பெருமான் ஈன்துழாய்,

மன்னும் மணிவரைத்தோள் மாயவன், – பாவியேன்        (2748)

 

என்னை இதுவி ளைத்த ஈரிரண்டு மால்வரைத்தோள்,

மன்னவன்றன் காதலனை மாயத்தால் கொண்டுபோய்,

கன்னிதன்பால் வைக்க மற்றவனோ டெத்தனையோ,

மன்னிய பேரின்பம் எய்தினாள்……..    …………  (2749)

 

பதவுரை

சூழ் கடலுள்

பரந்த கடலினுள்ளே

பொன் நகரம் செற்ற

ஹிரண்யாஸுரனுடைய நகரங்களை அழித்தவனான

புரந்தரனோடு ஏர் ஒக்கும்

தேவேந்திரனோடு ஒத்த செல்வ முடையனான

மன்னவன்

ராஜாதி ராஜனாயும்

அவுணர்க்கு வாள் வேந்தன்

அசுரர்களுக்குள் பிரஸித்தனான தலைவனாயு மிருந்த

வாணன் தன்னுடைய பாவை பாணாஸுரனுடையமகளாய்

உலகத்து தன் ஒக்கும் கன்னியரை இல்லாத காட்சியாள்

எவ்வுலகத்திலும் தன்னோடு டொத்தமாதர்கள் இல்லையென்னும்படி அழகிற சிறந்தவளான உஷை யென்பவள்

தன்னுடைய இன் உயிர் தோழியால்

தனது ப்ராண ஸகியான சித்திரலேகை யென்பவளைக் கொண்டு

ஈன் துழாய் மன்னுமணிவரை தோள் மாயவன்

போத்தியமான திருத்துழாய் மாலையணிந்த ரத்ன பர்வதம் போன்ற திருத்தோள்களையுடைய ஆச்சரிய பூதனும்

பாவியேன் என்னை இது விளைத்த ஈர் இரண்டுமால் வரைதோள் மன்னவன்

பாவியான என்னை இப்பாடு படுத்துகின்ற பெரியமலைபோன்ற நான்கு புஜங்களையுடைய ராஜாதி ராஜனுமான

எம்பெருமான் தன்

கண்ணபிரானுடைய

காதலனை

அன்புக்கு உரியவனான (பௌத்திரனான) அநிருத் தாழ்வானை

மாயத்தால் கொண்டுபோய் கன்னிதன்பால் வைக்க

(யோக வித்தைக்கு உரிய மாயத்தினால் எடுத்துக் கொண்டுவந்து தன்னிடத்தில் சேர்க்கப்பெற்று

மற்றவனோடு

அந்த அநிருத்தனோடே

எத்தனை ஓர் மன்னிய பேர் இன்பம் எய்தினாள்

பலவிதமாய் ஒப்பற்ற அமர்ந்த பெரிய ஸுகத்தை அநுபவித்தாள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பலிச்சக்கரவர்த்தியின் ஸந்தியிற்பிறந்தவனான பாணாஸுரனுடைய பெண்ணாகிய உஷை யென்பவள், ஒருநாள் ஒரு புருஷனோடு தான் கூடியதாக கனாக்கண்டு, அவனிடத்தில் மிக்க ஆசை பற்றியவளாய்த் தன் உயிர்த்தோழியான சித்ரலேகைக்கு அச்செய்தியைத் தெரிவித்து, அவள் மூலமாய் அந்தப் புருஷன் க்ருஷ்ணனுடைய பௌத்திரனும் ப்ரத்யும்நனது புத்திரனுமாகிய அநிருநத்தனென்று அறிந்துகொண்டு ‘அவனைப் பெறுதற்று உபாயஞ் செய்யவேண்டும் என்று அத்தோழியை வேண்ட, அவள் தன் யோகவித்தை மஹிமையினால் த்வாரகைக்குச் சென்று அநிருத்தனைத் தூக்கிக்கொண்டுவந்து அந்த புரத்திலேவிட உஷை அவனோடு போகங்களை அநுபவித்து வந்தாள் என்கிற கதை அறியத்தக்கது (இதற்குமேல் நடந்த வரலாறு வாணனை தோள் துணிந்த வரலாற்றில் காணத்தக்கது).

பொன்னகரம் செற்ற –ஹிரண்யாஸுரனுக்குத் தமிழில் பொன் என்று பெயர் வழங்குதலால் பொன்னகரம் என்று அவ்வஸுரனுடைய பட்டணங்களைச் சொல்லுகிறது. புரந்தர என்ற வடசொல் (பகைவருடைய) பட்டணங்களை அழிப்படவன என்று பொருள்பட்டு இந்திரனுக்குப் பெயராயிற்று.

உஷையின் வரலாறு சொல்லப்புகுந்து அவ்வரலாற்றில் அநிருத்தனைப்பற்றி கண்ணபிரானுடைய ப்ரஸ்தாவம் வருதலால் தனது வயிற்றெரிச்சல் தோன்ற விசேஷணமிடுகிறாள் பரகாலநாயகி. அழகிய திருத்துழாய் மாலையை அணிந்துக் கொண்டிருந்தும் என்னை அநுபவிக்க வொட்டாமல் இப்படி மடலெடுக்கும்படி பண்ணின மஹாநுபாவன் என்கிறாளாயிற்று.

கன்னிதன்பால் – தெய்வப் பெண்ணாகிய தன்னிடத்திலே என்கை.

மன்னிய பேரின்ப மெய்தினாள் – உஷை அநுபவித்து சிற்றின்பமேயாயினும் அதனில் மேற்பட்ட ஆநந்தமில்லை யென்று அவள் நினைத்திருந்தது கொண்டு மன்னியபேரின்ப மென்றார்.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top