பின்னும் கருநெடுங்கண் செவ்வாய்ப் பிணைநோக்கின்,
மின்னனைய நுண்மருங்குல் வேகவதி என்றுரைக்கும்
கன்னி,தன் இன்னுயிராம் காதலனைக் காணது,
தன்னுடைய முந்தோன்றல் கொண்டேகத் தாஞ்சென்று,அங்
கன்னவனை நோக்கா தழித்துரப்பி, – வாளமருள் (2742)
கல்னவில் தோள் காளையைக் கைப்பிடித்து மீண்டும்போய்,
பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே?, (2743)
பதவுரை
|
பின்னும் |
– |
அது தவிரவும் |
|
கரு நெடு கண்செம் வாய் பிணை நோக்கின் மின் அனைய நுண் மருங்குல் |
– |
கறுத்து நீண்ட கண்களையும் சிவந்த வாயையும் மான் போன்ற நோக்கையும் மின்போல் ஸூக்ஷம்மான இடையையும் உடையவளாய் |
|
வேகவதி என்று உரைக்கும் கன்னி |
– |
வேகவதியென்று சொல்லப்படுபவளான ஒரு பெண்பிள்ளை |
|
தன் இன் உயிர் ஆம் காதலனை காணாது |
– |
தனது இனிய உயிர்போன்ற கணவனைத்தான் காண வொட்டாமல் |
|
தன்னுடைய முன் தோன்றல் கொண்டு ஏக |
– |
தனது தமையன்(தடுத்துத்) தன்னைக் கொண்டுபோக |
|
அங்கு |
– |
அவ்வவஸ்தையிலே |
|
அன்னவனை |
– |
அந்தத் தமையனை |
|
நோக்காது |
– |
லக்ஷியம் பண்ணாமல் |
|
தான் சென்று |
– |
தான் பலாத்காரமாகப் புறப்பட்டுப்போய் |
|
வாள் அமருள் |
– |
பெரிய போர்க்களத்திலே |
|
கல் நவில் தோள் காளையை |
– |
மலைபோல் திண்ணிய தேர்களையுடையவனும் காளை போல் செருக்குற்றிருப்பவனுமான தனது காதலனை |
|
அழித்து உரப்பி |
– |
இழிவான சொற்களைச் சொல்லி அதட்டி |
|
கை பிடித்து |
– |
பாணிக்ரஹணம் செய்து கொண்டு |
|
மீண்டும் போய் |
– |
அங்கிருந்து ஸ்வஸதாநந்திலே போய்ச் சேர்ந்து |
|
பொன் நவிலும் ஆகம் |
– |
(அக்காதலனுடைய) பொன் போன்ற மார்பிலே |
|
புணர்ந்திலளே |
– |
அணையப்பெற்றாளில்லையோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- வேகவதி என்பாளொரு தெய்வமாதின் சரிதையை எடுத்துக்கொட்டுகிறார். இதில சிறிய திருடலிற் சொல்லப்பட்ட வாஸவதத்தையின் சரித்திரத்துக்கு மூலமாகிய புராணம் இன்னதென்றுதெரியாதுபோலவே இவ்வேகதியின் சரிதைக்கு மூலமான புராணமும் இன்னதென்று தெரியவில்லை. தமிழ்நாடுகளில் ப்ரஸித்தமான பெருங்கதை என்ற தொகுதியில் உதயணன் சரித்திரப் பகுதியில் இத்தெய்வமாதுகளின் வரலாறு ஒருவிதமாக எழுதப்பட்டுள்ளது. வடமொழியிலும் கதாஸரித்ஸாகரம் என்ற கதைப்புத்தகத்தில் இவர்களின் சரித்திரம் சொல்லப்பட்டுள்ளது. பிற்காலத்தவர்கள் எழுதிய அப்புத்தகங்களை ஆழ்வார் –ஸ்ரீஸூக்திகட்கு மூலமாகச் சொல்லவொண்ணாது. கதைப்போக்கிலும் வேறுபாடு உள்ளதுபோலும். ஆகையாலே இக்கதையை இங்கு விரித்துறைக்க விரும்புகின்றிலோம்.
அழகிற் சிறந்த வேகவதி என்னுமோர் தேவகன்னிகை தனது கணவன் முகத்திலே விழிக்க வொண்ணாதபடி தன்னைத் தனது தமையன் தடைசெய்து இழுத்துக்கொண்டுபோக அவள் அவனை லக்ஷியம் பண்ணாமல் திரஸ்கரித்து உதறித் தள்ளிவிட்டுத் தனது காதலன் ஒரு போர்க்களத்திலே யுத்தம் செய்து கொண்டிருப்பதாகத் தெரிந்து அங்கே போய் இப்படிதானா என்னை நீ கைவிட்டுத் திரிவது என்று தார்க்காணித்து அந்தப் போர்க்களத்திலே பலருமறிய அவன் கையைப் பிடித்திழுத்துத் தன்னூர்க்குக் கொண்டு சென்று இஷ்டமான போகங்களை அநுபவித்து வாழ்ந்தாள் – என்பதாக இவ்விடத்தில் கதை ஏற்படுகிறது. இதன் விரிவை வல்லார் வாய்க்கேட்டுணர்க. முன் தோன்றல் முன்னே பிறந்தவன்.
