(2732)

………..       …………….      …………..    மானோக்கின்

அன்ன நடையார் அலரேச ஆடவர்மேல்,

 

மன்னும் மடலூரார் என்பதோர் வாசகமும்,

தென்னுறையில் கேட்டறிவதுண்டு-அதனை யாம்தெளியோம்,(2732)

 

மன்னும் வடநெறியே வேண்டினோம்…

 

பதவுரை

மான் நோக்கின் அன்னம் நடையார்

‘மான் போன்ற நோக்கையும் அன்னம் போன்ற நடையையுமுடைய மாதர்கள்

அவர் ஏச

(உலகத்தார்) பழிதூற்றும் படி

ஆடவர் மேல்

புருஷர்களின் மேலே (ஆண்களை நோக்கி)

மன்னும் மடல் ஊரார் என்பது ஒர் வாசகமும்

மடலூரக் கூடாது“ என்று சொல்லுகிற ஒரு வாக்கியத்தை

தென் உரையில் கேட்டு அறிவது உண்டு

தமிழ்ப் பாஷையில் கேட்டு அறிந்திருக்கிறோம்.

யாம் அதனை தெளியோம்

அந்த வாக்கியத்தைத் தெளிவுடையதாக நாம் நினைக்க மாட்டோம் (அது அஸங்கதம்)

மன்னும் வடநெறியே வேண்டினோம்

(இவ்விஷயத்தில்) சிறந்த ஸம்ஸ்க்குத நூல்ளிற் கூறிய வழியையே கைப்பற்றுவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- சிறந்த காம புருஷார்த்தத்தையே நாம் கடைப்பிடிப்போம் என்றார் கீழ். தாம்பற்றின பகவத் காமம் தமக்குக் கைகூடாமையாலே அதற்காக மடலூர்வதே கதி என்பதைத் திருவுள்ளத்தில் அறுதியிட்டு, “புருஷனை நோக்கி ஸ்த்ரீகள் மடலூர்வது கூடாது“ என்று தமிழர் ஒரு வரம்பு கட்டிவைத்திருக்க, ஸ்த்ரீயாகிய நீர் எங்ஙனே மடலூரப்புகுவீர்? என்று சிலர் ஆக்ஷேபித்ததாகக் கொண்டு அவ்வாக்ஷேபத்தை அநுவதித்து அதற்கு ஸமாதாநமும் அருளிச்செய்கிறார்.

மடலூர்வதென்பது நாணத்தை அறவே யொழித்துக் காதலை வெளிப்படையாக்கித் தெருவேற்ப்புறப்பட்டுச் செய்யுங்

காரியமாதலால், நாணத்தையே ஸர்வஸ்வமாகக் கொண்ட மாதர்கட்கு இக்காரியம் கூடவே கூடாதென்று தமிழர் மறுத்தனர். அந்த ஸித்தாந்தத்தையே “கடலன்ன காமத்தராயினும் மாதர், மடலூரார் மற்றையார்மேல்“ இத்யாதிகளால் பின்புள்ளார் வெளியிட்டனர்.

காதல் கடல்போல் வளர்ந்து கிடந்தாலும் அபவாதத்துக் ஆஸ்பதமான மடலூர்தல் பெண்டுகளுக்கு கூடாதென்பது தமிழர்களின் கொள்கையாயிருந்தாலும் அதனை நான் உசிதமாகக் கொள்ளேனென்கிறார் ஆழ்வார். மடலூர்வதற்குக் காமத்தின் மிகையே அதிகாரமாதலால் அப்படிப்பட்ட காம்முள்ளவர்கள் ஆணாயிருந்தாலென்? பெண்ணாயிருந்தாலென்? யாரேனும் மடலூரலாம், ஆசையை வரம்பிட்டுக்காக்க ஆராலும் முடியாது, அரசராணைக்குக் கட்டுப்படுமோ ஆசை, வேலியடைத்தால் நிற்குமோ வேட்கை, அளவு கடந்த வேட்கையின் காரியமாக விளையக்கடவதான் மடலூருகையை ஆண்கள் தாம் செய்யலாம், பெண்கள் செய்யலாகாதென ஒரு வரம்பு கட்டுவதானது ப்ரேமத்தின் போக்கை அறியாதவர்களுடைய செயலாமத்தனை யென்பது ஆழ்வாருடைய திருவுள்ளம்.

மன்னும் வடெநெறியே வேண்டினோம் –ஸ்ரீ ராமாயணம் ஸ்ரீ மஹாபாரதம் முதலிய வடநூல்களில் –ஸீதை, உஷை முதலிய பெண்ணரசிகள் நாணந்தவிர்ந்து தத்தம் காமத்தை நன்கு வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறப்பட்டிருத்தலால் என்னுடைய ஸித்தாந்தம் வடமொழி நூல் நெறிக்கு ஒக்குமென்றாராயிற்று. கம்பராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய தமிழ் நூல்களில் இவ்வர்த்தம் இருந்தாலும் அவை வழிநூலேயன்றி முதனூல்லலாமை அறிக.

ஆழ்வார் புருஷர்தானே, ஸ்த்ரீ அல்லரே, இவர் மடலூர்வது தென்னுரைக்கு இணங்கியதேயன்றி விருத்தமன்றே என்று சிலர் நினைக்கக்கூடும். இவர் பிற்பகல் புருஷரேயாயினும் புருஷோத்தமனை அநுபவிக்குந் திறந்தில் ஸ்த்ரீபாவத்தை யடைந்தனராதலாலும், மேலே “என்னுடைய பெண்மையும் என்னலனும் என்முலையும்“ என்று அந்த ஸ்த்ரீபாவத்தையே விளங்கக் காட்டுகின்றனராதலாலும் இப்போது இவர்க்கு ஸ்த்ரீத்வமே உள்ளதென்க.

அப்படியே யிருந்தாலும், மடலூர்தல் ஆடவர்க்கே உரியதென்றும் மடலூர்வேனென்று சொல்லுதல் இருபாலர்க்கும் உரியதென்றும் தமிழர் கூறுகினறாராதலின் இப்போது ஆழ்வார் மடலூர்வேனென்று சொல்வது மாத்திரமேயன்றி மடலூர்தலைச்செய்து முடித்தல் இல்லாமையாலே தென்னுரையோடு விரோதம் ஒன்றுமில்லையே யென்னில், இஃது உண்மையாயினும், மடலூர்வேனென்று சொல்லுகிற வார்த்தைதானே ஆழ்வார் திருவுள்ளத்தால் மடலூர்வதாதலாலும், மடலூர்ந்தே தீர்வே னென்று இவர் சொல்வதைக்கேட்டு “மாதராகிய நீர் எப்படி மடலூரலாம்?” என்று கேட்பார்க்கு ஸமாதாநம் சொல்வேண்டியிருப்பதாலும் “தென்னுரையில் கேட்டறிவதுண்டு, அதனை யாந்தெளியோம்“ என்று இங்கு அருளிச்செய்யவேண்டியது அவசியமாயிற்றென்க.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top