(2701)-(2703)

…………………  மற்றெனக் கிங்கு               (2701)

ஆராய்வாரில்லை அழல்வாய் மெழுகு போல்

நீராய் உருகும் என்னாவி நெடுங்கண்கள்                   (2702)

ஊரார் உறங்கிலும் தானுறங்க உத்தமந்தன்

பேராயினவே பிதற்றுவன் பின்னையும்                     (2703)

காரார் கடல் பொலும் காமத்தராயினார்

ஆரே பொல்லாமை அறிவார்…….. ……..

பதவுரை

எனக்கு இங்கு ஆராய்வார் மற்று இல்லை

என்னைப் பற்றிக் கவலைகொண்டு விசாரிப்பவர்கள் இங்கு யாருமில்லை.
என் ஆவி

எனது ஆத்மவஸ்து
அழல் வாய் மெழுகு போல் நீர் ஆய் உருகும்

நெருப்பினருகே வைத்த அரக்குப்போல் நீர்பண்டமாக உருகா நின்றது.
நெடுகண்கள் தாம்

நீண்ட கண்களும்
ஊரார் உறங்கிலும் உறங்கா

எல்லாரும் உறங்கும் போதிலும் உறங்கமாட்டா,
உத்தமன்தன்

அப்புருஷோத்தமனுடைய
பேர் ஆயினவே

திருநாமங்களா யுள்ளவற்றையே
பின்னையும்

மேன்மேலும்
பிதற்றுவன்

வாய்வந்தபடி சொல்லிக் கொண்டிரா நின்றேன்
கார் ஆர் கடல் போலும் காமத்தர்ஆயினார்

அகாதமான கடல் போல அளவு கடந்த காமத்தை யுடையவர்கள்
ஆரே

ஆர்தான்
போல்லாமை அறிவார்

ஸ்வரூப விரோத மறிவர்கள்?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆற்றாமை கரைபுரண்டால் சிலபேரோடே ஸல்லாபங்கள் செய்து ஒருவாறு தரித்திருக்க வேண்டாவோ? இப்படிப்பதறலாமோ? என்று சிலர் சொல்ல, அவர்கட்கு மறுமொழி கூறுகின்றாள் பரகாலநாயகி. என் வார்த்தைகள் யாருக்கும் பிடிக்க மாட்டாவாகையால் என்னோடு உசாவ ஆரும் வரமாட்டார்கள், என் பேரைச் சொன்னாலும் காதை மூடிக் கொள்வார்கள்.  உண்டியே உடையே உகந்தோடு மிம்மண்டலத்துக்கு  உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாங் கண்ணனென்றிருக்கு மெனக்கும் என்ன சேர்ந்தியுண்டு? என்னெஞ்சம் எனக்கு உதவாதிருக்க வேறு உதாத்துணையாவாருண்டோ? நெருப்பினருகே வைத்தமெழுகுபோலே சிதிலமாகநின்றது ஆத்மவஸ்து, உலகத்தாரைப்போலே உறங்கியாகிலும் ஆற்றலாமென்று பார்த்தால் எல்லாரு முறங்கினாலும் என் கண்கள் உறங்குகின்றில இவ்வளவு ஆபத்காலத்திலே வந்து முகங்காட்டி உதவாதவனை மறந்திருக்க வேணுமே, அதுவும் மாட்டாதபடி அவனது திருநாமங்களையே வாய்வெருவா நின்றேன்.

இப்பரகாலநாயகி இப்படி சொல்லச் செய்தேயும் சிலர் ஸ்வரூபசிக்ஷை பண்ணத் தொடங்கினர், அவர்களை நோக்கிச் சொல்லுகின்றாள் – “ஸ்ரீஜநகராஜன் திருமகள் பத்து மாஸம் ஆறியிருந்தாப்போலே நீயும ஆறியிருக்கவேண்டாவா? அப்படியிராமல் பதறினால் ஸ்வரூபஹாநியன்றோ“ என்றுதானே நீங்கள் சொல்லுவது, ஸ்வரூபஹாநியை நினைத்து ஆறியிருப்பவர்கள் மட்டமான காம்முடையவர்களென்று கொள்ளுங்கள், காரார்ந்த திருமேனியைக் காணவேணு மென்னுமாசை கரைபுரண்டிருப்பார்க்கு ஸ்வரூப ஜ்ஞாநத்தாலே ஆறியிருக்கப் போமோ? அப்படி ஆறாயிருந்தவர்களுண்டாகில் அவர்களுடைய காதல் அல்பம் என்றன்றோ கொள்ளவேண்டும் –என்கிறாள்.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top