(2699)-(2700)

வாராய் மடனெஞ்சே வந்து, மணிவண்ணன்           (2699)

 

சீரார் திடுத்துழாய் மாலை நமக்கருளி

தாராந்தருமென்று இரண்டத்திலொன்றதனை

ஆரானுமொன்னதார் கேளாமே சொன்னக்கால்

ஆராயுமேலும் மணிகேட்டதன்றெனிலும்

போராதொழியாதெ போந்திடுனீயென்றேற்கு

காரார் கடல் வண்ணன் பின்பொல நெஞ்சமும்

வாராதே யென்னை மரந்ததுதான், வல்வினையேன்         (2700)

 

ஊரார் உகப்பதே ஆயினேன் —

 

பதவுரை

மட நெஞ்சே

-“அறிவு கெட்டுக் கிடக்கிற மனமே“!

வாராய்

(தூது போக) எழுந்திரு

வந்து

அவ்வெம்பெருமான் பக்கலிலே சென்று

மணிவண்ணன்

நீலமணிபோன்ற வடிவையுடையனான அவ்வெம்பெருமான்

நமக்கு அருளி

நம்மேல் க்ருபைபண்ணி

சீர் ஆர் திரு துழாய் மாலை

சிறந்த திருத்துழாய் மாலையை

தரும் தாரான் என்ற இரண்டத்தில் ஒன்றதனை

தருவன் தரமாட்டான் என்ற இரண்டு வார்த்தைகளில் ஏதாவதொரு வார்த்தையை (அவன் சொல்லும்படி நான் சொல்லும்படி நான் சொல்லி யனுப்புகிற சொல்லை)

ஒன்னாதார் ஆரானும் கேளாமே சொன்னக்கால்

அவனை யுகவாதவர்கள் அவரும் கேளாதபடி நீ சொன்னாயாகில்,

பணி கேட்டு

அவ்வார்த்தையைக் கேட்டு

ஆராயும் எலும்

(அன்புடன்) விசாரித்தானாகிலும் சரி.

அது அன்று எனிலும்

அந்த ஸங்கதியே நமக்குத் தெரியாதென்று திரஸ்கரித்தாலும் சரி,

நீ போராது ஒழியாதே போந்திடு

நீ இங்கேவாராது அங்கேயே தங்கிவிடாமல உடனே வந்து சேர்ந்துவிடு“

என்றேற்கு

என்று சொன்ன வண்ணன் பக்கலிலே சென்ற

நெஞ்சமும்

எனது மனந்தானும்

வாராதே

திரும்பி வருதலின்றியே

என்னை மறந்ததுதான்

என்னை மறந்து அங்கேயே தங்கிவிட்டது ஐயோ!

ஊரார் உகப்பதே ஆயினேன்

ஊரார் ஸந்தோஷிக்கும்படி யாகவே நிலை குலைந்தேன்,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பரகாலநாயகி தனது நெஞ்சைத் தூதுவிட்டுப் பட்ட பரிபவத்தைப் பேசுகின்றாள். – “அறிவு மாண்டுகிடக்கிற நெஞ்சே! எழுந்திரு, தன்னைப் பிரிந்தார் மடலெடுக்க வேண்டும்படியான வடிவு படைத்த அவன் பக்கல் சென்று “திருத்துழாய் ப்ரஸாதம் நமக்குக் கொடுக்க முடியுமா? முடியாதா? இரண்டத்தொன்று சொல்லிவிடு“ என்று ஏகாந்தமாகக்கேள், அதற்கு அப்பெருமான் ஆதரவு தோற்ற விசாரித்து நல்ல மறுமாற்றம் சொன்னாலும் சரி, ‘அவளாரோ எனக்குத் தெரியாது“ என்று அநாதரமாகச் சொல்லிவிட்டாலும் சரி, ஏதோவொரு கருத்தைத் தெரிந்துகொண்டு அங்கு விளம்பித்து நிற்காதே கடுக என்பால் மீண்டுவர“ என்று சொல்லி எனது நெஞ்சை அவனிடத்துப் போகவிட்டேன், சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்த்தென்று மகிழ்ந்து அந்தப் படுபாவி நெஞ்சு சடக்கெனப் புறப்பட்டுப் போயிற்று. அதுதான் கடல்வண்ணன் பின்னே போயிற்றாகையாலே ‘கடல் புக்கது திரும்பாது‘ என்றபடி என்னை மறந்து அங்கேதானே படுகாடு கிடகின்றது! என வருந்துகின்றாள் என் நெஞ்சமே எனக்குத் துணையாகப் பெறாத யான் வேறுயாரை வெறுப்பேனென்றதாம்.

நெஞ்சை லௌகிக பதார்த்தங்களிற் செலுத்தி ஒருவாறு போதுபோக்க வொண்ணாதபடி அவ்வெம்பெருமான்றனே இடைவிடாது சிந்தாவிஷய மாகிறனென்று இதனாற் குறிப்பிட்டபடி ஒரு கவியின் சமத்காரத்தை இங்கே நினைக்க.

பிள்ளைப்பெருமாளையங்கார் திருவரங்கக் கலம்பகத்தில் “நீரிருக்க மடமங்கைமீர்! கிளிகள் தாமிருக்க மதுகரமெலாம் நிறைந்திருக்க மடவன்ன முன்ன நிரையாயிருக்க வுரையாமல்யான், ஆரிருக்கிலு மென்னெஞ்ச மல்லதொரு வஞ்சமற்ற துணையில்லையென் றாதரத்தினோடுதூதுவிட்ட பிழையாரிடத்துரைசெய்தாதுவேன். சீரிருக்குமறைமுடிவுதேடரிய திருவரங்கரை வணங்கியே திருத்துழாய்தரில் விரும்பிய கொடுதிரும்பியே வருதலின்றியே, வாரிருக்கு முலைமலர் மடைந்தையுறை மார்பிலே பெரிய தோளிலே மயங்கி யின்புறமுயங்கி யென்னையுமறந்து தன்னையுமறந்த்தே“ என்ற பாசுரமும் இங்கே அநுஸந்திக்கத்தகும்.

ஆரானு மொன்னாதார் கேளாமே சொன்னக்கால் – சத்துருக்களுடைய சாதிலே விழாதபடி ரஹஸ்யமாகச் சொல்லவேணுமென்று நெஞ்சோடே சொல்லியனுப்பினளாம். எம்பெருமானுடைய குணபூர்த்தியைப் பொறுக்ககில்லாத சிலர், நம்முடைய காரியத்தை ஆகவொட்டமல் கொடுக்கிற முகத்தாலே எம்பெருமானுடைய தயாவாத்ஸ்ல்யாதி குணங்களை அழித்துவிடக் கூடுமென்று அஞ்சுகின்றாள் போலும். ஒன்னாதார் – ஒன்றாதார், (தம்மோடுமனம்) பொருந்தாதவர், எனவே பகைவராவர்.

பணிக்கேட்டு ஆராயுமேலும் அதன்றெனிலும் – இவ்விடத்திலே பெரியவாச்சான்பிள்ளை ஸ்ரீஸூக்தி – “உன்னைக் கண்டபோதே ‘அவள் என்பட்டாள்? அவள் உள்ளோ? அவ்வாச்ரயம் இன்னும் நமக்குக் கிடைக்குமோ? என்று திருவுள்ளமானானேயாகிலும், அங்ஙன்ன்றியே துஷ்யந்தனைப்போலே ‘அங்ஙனைக் கொப்பாளொருத்தியை அறியோம்‘ என்றானாகிலும்“ என்று.

வல்வினையேன் – என் நெஞ்சும் எனக்கு உதவாதபடியான மஹா பாபத்தைப் பண்ணி னேனென்கைக் ஊராருகப்பதேயாயினேன் – ‘ஒரு ஸாதநத்தை அநுஷ்டித்தாலன்றிப் பலன் ஸித்திக்கமாட்டாது‘ என்று ஊரன் சொல்லிக் கொண்டிருந்ததை மறுத்துக் கொண்டிருந்த நானே ‘மடலூரக்கடலே‘ னென்று இன்று சொல்ல நேர்ந்தபடியால் என்னுடைய அத்யவஸாயம் பழுதாகி ஊராருடைய கொள்கையே பலித்ததாயிற்று என்பது கருத்து. மடலூர் வேனென்றபோதே ஸித்தோபாய நிஷ்டை குலைநத்தாமிறே.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top