காரார் குழற்கொண்டை கட்டுவிச்சி கட்டெரி
சீரார் சுளகில் சிலனெல் பிடிதெரியா
வேரா விதிர்விதிரா மெய்சிலிர்க்கைமோவ
பேராயிரமு டயான் நென்றாள்—பேர்த்தெயும் (2682)
காரார் திருமெனி காடினாள் — கைய்யதுவும்
சீரார் வலம்புரியெ யென்றள் – திருதுழாய்த் (2683)
தாரார்னருமாலை கட்டுரைதாள் கட்டுரையா
நீரெதுமண்சேன்மின் நும்மகளை நோய்செய்தான்
ஆரானுமல்லன் அரிந்தெனவனை நான்
கூரார்வெல்கண்ணீர் உமக்கரியக் கூருகெனொ— (2684)
பதவுரை
|
அதுகேட்டு |
– |
அவர்கள் சொல்லிக்கொண்டிருந்த அந்த வார்த்தையையேகேட்டு |
|
கார் ஆர் குழல் கொண்டை |
– |
கறுத்த மயிர் முடியை யுடையளான |
|
கட்டுவிச்சி |
– |
குறிசொல்லுங் குறத்தியானவள் (ஒருவரும் அழையாதிருக்கத் தானாகவே வந்து) |
|
கட்டேறி |
– |
தெய்வ ஆவேசங்கொண்டு |
|
சீர் ஆர் சுளகில் சில நெல் பிடித்து எறியா |
– |
அழகியதொரு சிறுமுறத்தில் நின்றும் சில நெற்களைப் பிடித்தெடுத்து முன்னே வீசியெறிந்து (குறிபார்த்து) |
|
வேரா |
– |
வேர்வைவிட்டு |
|
விதிர்விதிரா |
– |
சுழன்று |
|
மெயசிலிரா |
– |
மயிர்க்கூச்செறிந்து |
|
கை மோவா |
– |
கையை மோந்துபார்த்து |
|
பேர் ஆயிரம் உடையான் என்றாள் |
– |
ஆயிரந் திருநாமங்களையுடையனான எம்பெருமானே இந்நோய் செய்தவன்) என்று எண்ணனாள். |
|
பேர்த்தேயும் |
– |
அதற்குமேல் |
|
கார் ஆர் |
– |
(அவனது) காளமேகம் போன்ற திருமேனியைப் படியெடுத்துக்கொட்டினாள், |
|
கையதுவும் |
– |
(அவனது) திருக்கையிலே யுள்ளதும் |
|
சீர் ஆர் வலம்புரியே என்றாள் |
– |
அழகிய வலம்புரிச் சங்கமேயென்று அபிநயித்துக்காட்டினாள் |
|
திரு துழாய் தார் ஆர் நறுமாலை கட்டுரைத்தான் |
– |
திருத்துழாய்மலர்கள் நிறைந்த மணம் மிக்க மாலையையும் அபிநயித்துக் காட்டினாள். |
|
கட்டுரையா |
– |
ஆக இவ்வளவும் அங்க சேஷ்டைகளாலே காட்டின் பின்பு (வாய்விட்டுச் சொன்னதாவது) |
|
நீர் ஏதும் அஞ்சேல்மின் |
– |
“நீங்கள் சிறிதும் பயப்பட வேண்டா |
|
நும்மகளை நோய் செய்தான் |
– |
உங்கள் பெண்ணை (இப்படி) நோவு படுத்தினவன் |
|
ஆரானும் அல்லன் |
– |
யாரோ ஒரு ஸுத்தர புருஷனல்லன் (தேவதாந்தரங்களினால் வந்த நோய் அல்ல இது) |
|
அவனை நான் அறிந்தேன் |
– |
நோவுபடுத்தின புருஷனை (இன்னானென்று) நான் தெரிந்துகொண்டேன், |
|
கூர் ஆர் வேல் கண்ணீர் |
– |
கூரிய வேல் போன்ற கண்களையுடைய நங்கைமீர்களே! |
|
உமக்கு அறிய கூறுகேனோ |
– |
உங்களுக்கு (அவனைத் தெரியச்சொல்லட்டுமா? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழே சில கிழவிமார்கள் “குறி கேட்டால் நோய்க்கு நிதாநம் தெரியும்“ என்றார்களே, அவ்வளவில், குறி சொல்லுங்குறத்தி யொருத்தி தன்னை யழையாதிருக்கச் செய்தே,
““கொங்குங் குடந்தையுங் கோட்டி யூறும் பேரும்
எங்குந்திரிந்து இன்றே மீன்வேனை யாரிங் கழைத்ததூஉ!!!
கண்டிபூ ரரங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திரிவேனே யாரிங் கழைத்துதூஉ!!!
விண்ணகரம் வெஃகா விதிரிரை நீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமாட வேக்கை தென்குடந்தை
எங்குத் திரிந்து இன்றே மீள்வேளே யாரிங்கழைத்ததூஉ!!!
நரகத் தணைக்குடத்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாரகத் தணையரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்த திரிந்து இன்றே மீள்வேனே யாரிங்கழைத்ததூஉ!!!
வேங்கடமும் விண்ணகரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள் கோவல் பொன்னவரும் பூதூரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!””
என்று தெருவேறக் கூறிக்கொண்டு தானாகவே வந்து சேர்ந்து செய்தகாரியங்களையும் சொன்ன வார்த்தைகளையும் சொல்லுகிறது மேல். கட்டுவீச்சி வந்தவுடனே தைவாவேசங்கொண்டு ஒரு முறத்தில் நின்றும் சில நெல்லுகளை ஒரு முஷ்டியெடுத்து எறிந்தாள். எதுக்காக வென்னில், குறிபார்க்கும் வகையில் இஃது ஒன்று. கண்களை மூடிக்கொண்டு ஒரு பிடி நெல் எடுத்து அவற்றை எண்ணிப்பார்த்து, ஒற்றைப்பட்ட எண் வருகிறதா, இரட்டைப்பட்ட எண் வருகிறதா என்று பரீக்ஷித்துப் பார்த்து அதனால் தேவதாந்தர ஸம்பந்தமான நோயோ அல்லது பகவத் விஷயமான் நோயோ இரண்டத்தொன்றை நிச்சயிப்பது – என்ற ஒரு ஸங்கேதமுள்ளதாகக் கொள்க.
உலகத்தில் முறமானது மயியையும் பதரையும பிரித்துப் பதரை நீக்கி மணியைத் தாங்கிக்கொள்ளுங் கருவி யாயிருப்பதுபோல் இங்கும் பதராகிய தேவதாந்தரங்களை நீக்கி “மணியே மணிமாணிக்கமே மதுசூதா“ என்னப்பட்ட நன்மணியாகிய எம்பெருமானை ப்ரகாசிப்பித்த சுளகு ஆகையாலே “சீரார் சுளகு“ என்று சிறப்பித்துக் கூறப்பட்டது.
நெல்லுகளை எண்ணிப் பார்த்து இவளுக்கு பகவத் விஷயமான நோய்தானென்று குறத்திதானறிந்தவாறே “கடல் வண்ணரிது செய்தார்“ என்று சொல்ல நினைத்தாள், எம்பெருமானை வாய்விட்டுச் சொல்லுவதென்றால் எளிதான காரியமோ? “மொய்த்துக் கண்பனி சோர மெய்கள் சிலிர்ப்ப ஏங்கி இளைத்து நின்று“ என்றபடி சில விகாரங்கள் விளையுமே, அவை விளைந்தன. (அதாவது) வேர்வையடைந்தாள், உடல் நடுங்கினாள், மயிர்க் கூச்செறிந்தாள்,
இப்படி வாய்விட்டுச் சொல்லமுடியாமல் நிலைதடுமாறி எம்பெருமானுடைய அநுஸந்தானம் முற்றவே தந்மயமாயிருகுந் தன்மையை அடைந்தாள், “விரை குழுவு நறுத்துளவம் மெய்ந்நின்று கமழுமே“ என்றாற்போலத் திருத்துழாய் மணம் மணக்கத் தொடங்கிற்று, கையை மோந்து பார்த்தாள், திருத்துழாய்ப் பரிமளம் நன்றாகத் தோன்றிற்று, ஸஹஸ்ர நாமங்களை யுடையனான எம்பெருமானை (இவளது நோய்க்கு நிதாநம்) என்று நிச்சயித்தாள். எந்தத் திருமேனியைக்கண்டு நான் இந்நோய் பெற்றேனோ அந்தத் திருமேனியை அபிநயித்துக் காட்டினாள். வலங்கையாழி இடங்கைச் சங்கமுடைய பெருமானென்று அபிநயித்தாள், (“கையதுவும் சீரார் வலம்புரி“) என்று சங்கை மாத்திரம் சொல்லியிருந்தாலும் இது சக்கரத்துக்கும் உபலக்ஷணமாமென்க) “தோளிணை மேலும் நன் மார்பின்மேலும் சுடர் முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந் துழாயுடையம்மான்“ என்பதாக அபிநயித்தாள். அதற்குமேல், வாய்விட்டு சிலவார்த்தைகள் சொல்லத்தொடங்கி “அம்மனைமீர்! நீங்கள் இந்நோய்க்குச் சிறிதும் அஞ்சவேண்டா, நும்மகளன்றோ இவள், உங்கள் வயிற்றிற் பிறந்த விவளை க்ஷுத்ரதேவதைகள் தீண்டுமோ? எந்த நாயும் தீண்டிற்றில்லை, தீண்டின மஹாபுருஷனை நானறிந்தேன், இப்போது நான் அபிநயித்துக்காட்டின வகைகளாலே நீங்கள் தெரிந்துகொண்டிருக்கக் கூடுமாயினும் ஸுஸ்பஷ்டமாக நீங்கள் தெரிந்துகொள்ளுமாறு அன்னவனை குணசேஷ்டிதாதிகளுடன் விளங்கச் சொல்லுகிறேன் கேளுங்கள் – என்று நோய் செய்த எம்பெருமானைப் பற்றி விரிவாக எடுத்துரைக்கத் தொடங்கினாள்.
எறியா, வேரா, விதிர்விதிரா, சிலிரா, மோவா என்பன – செய்யாவென்னும் வாய் பாட்டிறந்தகால வினையெச்சங்கள், எறிந்து, வேர்த்து, விதிர்விதிர்த்து, சிலிர்த்து, மோந்து என்றபடி.
“என்றாள்“ என்றும் “கட்டுரைத்தாள்“ என்றும் உள்ளவை – கட்டுவிச்சி தன் நெஞ்சினுள்ளயே சொல்லிக்கொண்டதைச் சொல்வன. “கீழ் சொன்னதடைய ஸ்வகதமாகச்சொன்னாள்“ என்றார்பெரியவாச்சான் பிள்ளையும். கட்டுரையா –இதுவும் இறந்தகால வினையெச்சம் உரைத்து என்றபடி.
