(3678)
மணந்தபே ராயா! மாயத்தால் முழுதும் வல்வி னை யேனையீர் கின்ற,
குணங்களை யுடையாய். அசுரர்வன் கையர் கூற்றமே. கொடியபுள் ளுயர்த்தாய்,
பணங்களா யிரமும் உடையபைந் நாகப் பள்ளியாய்! பாற்கடல் சேர்ப்பா,
வணங்குமா றாறியேன். மனமும்வா சகமும் செய்கையும் யானும்நீ தானே.
பதவுரை
| மாயத்தால் மணந்த பேர் ஆயா |
– |
மிகுந்த ஆசையினால் நப்பின்னையே மணந்து கொண்ட பெருமை தங்கிய கோபாலனே! |
| முழுதும் |
– |
உன்னுடைய ஒரு குணமும் தப்பாதபடி |
| வல்வினையேனை ஈர்கின்ற குணங்களை உடையாய் |
– |
பாவியேனை இருபிளவாக்குகின்ற திருக்குணங்களை யுடையவனே! |
| வன்கையர் அசுரர் கூற்றமே |
– |
வன்மையை யுடையவர்களான அசுரர்களுக்கு யமன் போன்றவனே! |
| கொடிய புள் உயர்த்தாய் |
– |
அவ்வசுரர்களுக்குக் கொடுமைபுரியுமியல்லின்னான் பெரிய திருவடியை த்வஜமாகக் கொண்டவனே! |
| ஆயிரம் பணங்களும் உடைய பை நாகம் பள்ளியாய் |
– |
ஆயிரம் படங்களையுடைய பரந்த ஆதிசேஷனைப் படுக்கையாகக்கொண்டு |
| பால் கடல் சேர்ப்பா |
– |
திருப்பாற்படலில் கண் வளர்ந்தருளுகிறவனே! |
| மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீ தானே |
– |
மநோவாக் காயங்களாகிற கரணங்களும் அவற்றை யுடைய நானும் நீயிட்ட வழக்காயிருக்க |
| வணங்கும் ஆறு அறியேன் |
– |
சுதந்திரமாக வணங்கும் வழயறிகின்றிலேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆழ்வீர்! உம்முடைய அபேக்ஷிதம் நாம் செய்ய வேணுமாகில் அதற்கு உறுப்பாக ஓர் அஞ்ஜலியாவது பண்ணமாட்டீரோவென்ன, பிரானே! நானாகச் செய்வதென்று ஒரு செயலுண்டோ? மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீயிட்டவழக்கான பின்பு என்னாலொரு செயலுண்டோ? நீ தானே என்னை வணங்குவித்துக்கொள்ளவேணுமே யல்லது நான் வணங்குவதாக ஒன்று அறியேன் என்றார்.
மாயத்தால் மணந்த பேராயா! என்று அந்வயிப்பது. மாயத்தால் – அபிநிவேசத்தினால் என்றபடி. நப்பின்னைப் பிராட்டியை மணந்ததுதானே அநுபாஷிக்கப்படுகிறது. வல்வினை யேனைமுபுதும் ஈர்கின்ற குணங்களையுடையாய் – என்னையுங்கூட ஈடுபடுத்துகின்ற ஸௌசீல்யம் ஸௌலப்யம் முதலான திருக்குணங்களையுடையவனே! என்றபடி. ஒவ்வொரு திருக்குணத்தையும் நினைத்து உருகிநைந்து குழைந்து கரைந்தொழிகின்றேனென்றவாறு. “மாயத்தால் முழுதும் மணந்த பேராயா!“ என்று அந்வயித்து “ஆச்சர்ய சேஷ்டிதங்களாலே அகில பதார்த்தங்களையும் உகப்பிக்கும் பெருமையையுடைய க்ருஷ்ணனே!“ என்றுரைப்பர் பன்னீராயிரவுரைகாரர்.
ஈர்கின்ற குணங்களையுடையாய்! என்கிற விளி இன்சுவைமிக்கது. ஆண்டாள் “குளிரருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம்பாடி –ஆவி காத்திருப்பேன்“ என்றாள். இவர் “ஈர்கின்ற குணங்களை யுடையாய்“ என்கிறார். குணாநுஸந்தானம் சிலர் தரிக்கைக்கு ஹேதுவும் சிலர் தளருகைக்கு ஹேதுவுமாமென்றபடி. இங்கு நம்பிள்ளையீடு காண்மின் – “சிலர் குணஜ்ஞானத்தாலே ஜீவித்திருக்க, அது பாதகமாம்படி பாபத்தைப்பண்ணினேன், அம்புபட்ட புண் மருந்திட்டு ஆற்றலாம். குணத்தால்வந்த நோய்க்குப் பரிஹாரமில்லையே.“
அசுரர்வன்கையர் கூற்றமே! கண்பாராதே நலிகின்ற அஸுரர்களுக்கு யமனானவனே! இது இங்கு எதற்காகச் சொல்லுகிறதென்னில் பிரதிகூலர்களான அசுரர்களை அழிக்கிறாப்போலவே அநுகூலர்களான எங்கயுமழிக்கிறாய். அவர்களை ஆயுதத்தாலே யழிக்கிறாய். எங்களைக் குணத்தாலே யழிக்கிறாய் என்கைக்குச் சொல்லுகிறது. கொடிய புள்ளுயர்த்தாய்! பண்கொண்ட புள்ளின் சிறகொலி பாவித்துத் திண்கொள்ளவோர்க்குங்கிடந்தென்செவிகளே என்றிருக்குமெம்போலியரைச் சிலபோது வாழ்விப்பதுஞ் செய்பவனே! என்றபடி.
பணங்களாயிரமுமுடைய பைந்நாகப்பள்ளியாய்! தன்னுடைய சேர்த்தியாலே விகஸிதமான பணங்களையுடையனாய், தன்னை யநுபவிப்பதனாலுண்டான மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகப் பல தலைகளையுமுடையனாய், தனக்கும் பிராட்டிமார்க்கும் நினைத்தபடி பரிமாறுகைக்கீடான பரப்பையுடையனாயிருக்கிற திருவனந்தாழ்வான் மேலே திருக்கண்வளர்ந்தருளுமவனே! பாற்படல் சேர்ப்பா! பரமபதத்தைவிட்டுத் திருப்பாற்கடலிலே வந்து சாய்ந்து என்னுடைய ரக்ஷணத்திற்கு முற்கோலியிருக்குமவனே! வணங்குமாறு அறியேன்! நானாக வணங்குவமோ? உமக்கு மனமொழி மெய்களுண்டு, அவற்றுக்கு ஆச்ரயமான நீருண்டு, வணங்குகைக்குத்தட்டு என்? என்று எம்பெருமான் கேட்பதாகக் கொண்டு மனமும் வாசகமும் செய்கையும் யானும் நீதானே என்கிறார். எனக்காயிருப்பதொரு நெஞ்சும் வாக்கும் செய்கையும், எனக்காயிருப்பதொரு நானுமிருந்தாலன்றோ நான் வணங்கினேனாவது, இவையெல்லாம் நீயிட்ட வழக்காயன்றோ விருக்கிறது. வணங்கவேணுமென்னும் நினைவுண்டு, வணங்கும் விதமறிகின்றிலேனென்றாராயிற்று.
English Translation
O My wedding-prince with glories that break my sinful heart! O Lord who rides in fierce Garuda, smiting death to the wicked Asuras! O Lord reclining in the deep ocean on a thousand-hooded serpent! My words and deeds and I are you, I know not how to worship you
