(3660)

(3660)

இன்பம் பயக்க எழில்மலர் மாதரும் தானுமிவ் வேழுலகை,

இன்பம் பயக்க இனிதுடன் வீற்றிருந் தாள்கின்ற எங்கள்பிரான்,

அன்புற் றமர்ந்துறை கின்றா ணிபொழில் சூழ்திரு வாறன்விளை,

அன்புற் றமர்ந்து வலம்செய்து கைதொழும் நாள்களும் ஆகுங்கொலோ.

 

பதவுரை

எழில் மலர் மாதரும் தானும்

அழகிய தாமரைமலரிற் பிறந்த பெரிய பிராட்டியாரும் தானும்

இன்பம் பயக்க

பரஸ்பரம் ஆனந்தம் மேலிடும் படியாக

இனிது உடன் வீற்றிருந்து

இனிமையோடு கூட வெழுந்தருளியிருந்து

இ ஏழ் உலகை

இவ்வுலகங்களையெல்லாம்

இன்பம் பயக்க ஆள்கின்ற

இனிமையுற அடிமை கொண்டருளா நிற்கிற

எங்கள் பிரான்

எம்பெருமான்

அன்புற்று அமர்ந்து உறைகின்ற

மிகவும் திருவுள்ள முகந்து வர்த்திக்கிற

அணி பொழில் சூழ்திருவாறன் விளை

அழகிய சோலைகள் சூழ்ந்த திருவாறன் விளைத் திருப்பதியை

அன்புற்று அமர்ந்து

அன்போடு பொருந்தி

வலஞ் செய்து

ப்ரதக்ஷிணம் பண்ணி

கை தொழும் நாள்களும் ஆகும் கொல்

கை தொழும்படியான நாட்களும் ஸமீபிக்கு மோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் பிராட்டியோடு கூடு ஆனந்தமயனாக எழுந்தருளியிருக்குமிடமான திருவாறன்விளையிலே அநுபவித்து அடிமை செய்யுங்காலமும் ஆகுமோ வெம்கிறார். ஸம்ஸாரி செதநர்கள் எம்பெருமானோடு சேர்ந்து ஆனந்தமநுபவிப்பது போல, அவ்வெம்பெருமான் தானும் பிராட்டியோடு சேர்ந்தே ஆனந்தமநுவிபவிக்கப் பெறுகின்றானென்பது முதலடியிற்போதரும்.

“இவ்வேழுலகை இன்பம் பயக்க” என்றவிடத்தில் ஈடு-; மாதாபிதாக்களிரு வரும் சேரவிருந்து பரியப்புக்கால் ப்ரஜைகளுக்கு ஒரு குறைவுகளும் பிறவாதிறே. ஆக இருவருமான சேர்த்தியாலே தங்களுக்கு ஆனந்தமுண்டாக, அச்சேர்த்தியைக் காண்கையாலே லோகத்துக்கு ஆனந்தமுண்டாக, அதுதன்னைக் கண்டு ப்ரஜை பால்குடிக்கக் கண்டுகக்கும் தாயைப்போலே இவர்களுக்குண்டான ப்ரீதியைக்கண்டு அத்தாலே தாங்கள் இன்யராயிருப்பர்களாயிற்று.”

திருவாய்மொழி கேட்கைக்குப் பாங்காயிருப்பதொரு தேசம் பெற்றோமென்று பறாப்பேறு பெற்றாப்போலே விரும்பி யெழுந்தருளியிருக்கிற தேசமென்பது தோன்ற “இனிதுடன் வீற்றிருந்தாள்கின்ற” என்கிறார். இப்படிப்பட்ட பெருமான் அவ்விடத்திலிருப்பை ஸ்வயம் ப்ரயோஜநமாகக் கருதி, அவதாரங்கள் போலே தீர்த்தம் ப்ரஸாதியாதே நித்யவாஸம் பண்ணுமிடமாய், அவன் தன் விபூதியோடேயிருந்து திருவாய்மொழி திருச்செவி சாத்துகைக்கீடான பரப்பையுடைய பூம்பொழிலாலே சூழப்பட்டதான திருவாறன் விளையை ப்ரதக்ஷிணம் பண்ணி நமஸ்கரிக்கும் படியான காலம் என்றோ வென்றாராயிற்று.

 

English Translation

When will the day be when I ambulate with folded hands, the Lord who dearly resides in Tiruvaranvilai amid groves with lotus-dame Lakshmi on his chest? He is our Lord who rules us sweetly, spreading  happiness over the seven worlds

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top