(3645)
என்னச்சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளும்கண்ணா,
இன்னதோர் தன்மையை என்றுன்னையாவர்க்கும் தேற்றரியை,
முன்னிய மூவுல குமவை யாயவற் றைப்படைத்து,
பின்னுமுள் ளாய்! புறத் தாய்!இவை யென்ன இயற்கைகளே.
பதவுரை
|
என்னை ஆளும் கண்ணா |
– |
என்னை அடிமை கொள்ளுகிற கண்ணனே! |
|
என்ன சுண்டாயங்களால் |
– |
என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய்! |
|
நின்றிட்டாய் இன்னது ஓர் தன்மையை என்று |
– |
இன்னபடிப்ப்ட்டஸ்வ பாவத்தையுடையையாயிரா நின்றாயென்றுஸ |
|
உன்னை யாவர்க்கும் தேற்ற அரியை |
– |
ஓருவர்க்கும் நிர்ணயித்துக்காட்ட முடியாதவனாயிரா நின்றாய்; |
|
முன்னைய மூவுலகும் அவை ஆய் |
– |
நித்தியமான மூவுலகங்களுக்கும் நிர்வாஹகனாய் |
|
அவற்றை படைத்து |
– |
அவற்றை ஸ்ருஷ்டித்து |
|
பின்னும் |
– |
அதுக்குமேலே |
|
உள் ஆய் புறத்தாய் |
– |
உளளிலும் வெளியிலும் வியாபித்திருக்கிறவனே! |
|
இவை என்ன இயற்கைகள் |
– |
இவை என்ன ஸ்பாவங்களாயிருக்கின்றன!, |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டின் முதலடியில் பாடபேதம் காண்கிறது; “என்ன சுண்டாயங்களால் எங்ஙனே நின்றிட்டாயென்கண்ணு” என்பது சில ஆசாரிகளின் பாடம்; “என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாயென்னையாளுங் கண்ணு” என்பது சில ஆசாரியர்களின் பாடம். அடுத்த பாசுரத்தின் முதலடியிலும் இது மாறிவரும்.
என்னையாளுங்கண்ணா! என்ன சுண்டாயங்களால் நின்றிட்டாய்-என்னையடிமை கொள்ளுகிற கண்ணபிரானே! என்ன லீலைகளையுடையையாய் நிற்கிறாய் என்று வியக்கிறார். இன்னதோர் தன்மையை யென்றுன்னை யாவர்க்குந் தேற்றரியை—உன்னுடைய ஸ்வபாவமின்னதென்று எப்படிப்பட்ட ஞானிகளாலும் அறுதியிட முடியாதபடியிருக்கின்றதே!! கர்த்தும் யத்தத்த்வபோதோ ந நிசிதமதிபிர் நாரதாத்யை ச்ச சக்ய: என்ற ஸுதர்சநசதக ஸ்ரீஸீக்தி இகங்கே அநுஸந்தேயம்.
உள்ளாய் புறத்தாய்- அந்தாப்ஹிச்ச தத்ஸர்வம் வ்யாப்ய நாராயண: ஸ்த்தித: என்கிறபடியே உள்ளும் புறமுமொக்க எங்கும் வியாபித்திரா நின்றாய்; அப்படி வியாபிக்குமிடத்தில் அணுபதார்த்தங்களிலும் உள்ளே வியாபித்திருக்கிறாயென்றும் ஒவ்வொரு பொருளிலும் பரிஸமாப்ய வர்த்திக்கிறாயென்றும் வேதாந்தங்கள் கூறுகின்றன; பிரானே! அணுவான பதார்த்தங்களிலே உள்ளீடாக வ்யாப்தி உனக்கு எப்படி ஸம்பவிக்கிறதென்று ஆலோசித்தால் புத்திக்கு ஒன்றுமே யெட்டவில்லை. அன்றியும் உன்னுடைய ஸ்வரூபம் ஓரிடத்தில் பரிஸமாப்ய வர்த்திக்குமானால் அது மற்றொரிடத்தில் இருக்க ப்ரஸக்தியில்லையே; ஒவ்வொரு வஸ்துவிலும் உன் ஸ்வரூபம் பரிஸமாப்ய வர்த்திப்பதாக சாஸ்த்ரம் ஓதுகின்றதே, இது எப்படி ஸம்பாவிதமென்று ஆலோசித்தால் இதுவும் புத்திக்கு எட்டுகிறதில்லை பிரானே!, ஆனால் எதையும் நீ அவலீலையாகச் செய்து போருகிறாய்; இவை எங்களுக்கு ஆச்சரியமாயிரா நின்றன என்றாராயிற்று.
English Translation
O My Krishna ruling me! What mischief you have filled with! You make it hard for anyone to see you and speak of you as this or that, Then you made the three worlds, and became them. You are within me, and without. What ways are these?
