(3556)

(3556)

அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே. இமையோர் அதிபதியே,

கொடியா அடுபுள் ளுடையானே. கோலக் கனிவாய்ப் பெருமானே,

செடியார் வினைகள் தீர்மருந்தே. திருவேங் கடத்தெம் பெருமானே,

நொடியார் பொழுதும் உன்பாதம் காண நோலா தாற்றேனே.

 

பதவுரை

அடியேன் மேவி அமர்கின்ற அமுதே

அடியேன் கிட்டி யநுபவிக்கும்படியான அமிருதமே!

இமையோர் அதிபதியே

தேவாதி தேவனே!

அடு புள் கொடி ஆ உடையானே

(பகைவரைப்) பொசுக்கவல்ல கருடனைக் கொடியாகவுடையவனே!

கோலம் கனிவாய் பெருமானே

அழகிய கனிபோன்ற அதரத்தையுடைய பெருமானே!

செடி ஆர் வினைகள் தீர் மருந்தே

செடிபோலே செழித்த பாபங்களைத் தீர்க்கும் மருந்தானவனே!

உன பாதம் காண

உனது திருவடிகளைக் காண்கைக்கு

நோலாது

நான் ஒரு நோன்பும் அனுஷ்டியாமலிந்தும் (நோற்றவர்கள் பலன் தாழ்த்தால்படுமாபோலே)

நொடி ஆர் பொழுதும்

ஒரு க்ஷண மாத்திரமும்

ஆற்றேன்

தரித்திருக்கமாட்டாமல் துடிக்கின்றேன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (அடியேன் மேவி) பெறுதப்பாதென்று துணிந்திருத்தல் ஜ்வரூபமாயினும் அத்தலையில் போக்யதை நெஞ்சுக்கு விஷயமாக ஆக, தரித்திருக்க முடியாதபடி பதறவேண்டியிருக்குமே, அந்தப் பதற்றத்தை யருளிச்செய்கிறாரிப்பாட்டில். அடியேன், மெவியமர்கின்ற அமுதே! எம்பெருமானுக்கு இவர் சாத்தும் ஒரு திருநாமம்போலே யிராநின்றது இது. தேவஜாதிகள் உப்புச்சாற்றைப் பருகிக் களிப்பர்கள், அதுவோ இது? இங்குள்ள மற்றையோகள் அநுபவிக்கும் போலேயா நான் அநுபவிப்பது? அடியேனுடைய அநுபவம் அஸாதாரணமன்றோ வென்கிறார். உடனே இமையோரதிபதியே! என்றது – அங்குத் திருநாட்டிலே நித்ய ஸூரிகள் உன்னை எப்படி யநுபவிக்கிறார்களோ அப்படி இங்கு அடியேன் அநுபவிப்பவனல்லேனோ? என்று காட்டினபடி.

ஆழ்வீர்! திருமலைக்கு வந்து நீர் ஸேவித்துப் போகலாகாதோ? இங்ஙனே கிடந்து துடிப்பானேன்? என்று எம்பெருமான் திருவுள்ளமாக, கொடியாவடு புள்ளுடையானே! என்கிறார். * ஆகர்ஷந் த்விஜராஜமப்யதிஜவாத் * என்று பெரிய திருவடியையும் க்க்ஷத்திலே யிடுக்கிக் கொண்டு விரைந்தோடிவந்து அருள் செய்வதென்பது சிலர்க்கேயோ? அவ்வருளுக்கு அடியேன் தகுந்தவனல்லேனோ? அந்தப் புள்ளரையனை என்னளவிலே சிறிது செலுத்தினாலாகாதோ? என்கிறார் போலும்.

கோலக்கனிவாய்ப் பெருமானே! – அழகியதாய்க் கனிந்திருந்துள்ள திருவதரத்தின் பழுப்பைக்காட்டி என்னையடிமை கொண்டவுனக்கு மீண்டும் அத்திருவதரத்தைக் காட்டுதல் அரிதாயிற்றே! என்று திருவுள்ளம் நொந்து சொல்லுகிறபடி “கோலக்கனியாவ்ப் பெருமானே கொடியாவடு புள்ளுடையானே“ என்று சேர்ந்து அந்வயித்து “ஆச்ரிதரை இவ்வழகை அநுபவிப்பிக்கைக்கு கொடிகட்டிக் கொண்டிருக்கிறவனே! என்றருளிச் செய்வர் நம்பிள்ளை.

செடியார்வினைகள் தீர்மருந்தே! நிலத்தில் விளையும் மருந்தைக் காட்டிலும் மலையில் விளையும் மருந்த மிகச் சிறக்குமே, திருமலைமருந்து காணும், * ஆர்மருந்தினியாகுவார் * என்கிற இவ்வாழ்வார்க்கு அசேதநமான மருந்து பிடிக்காதே. எது மருந்து? என்னாதே “ஆர்மருந்து“ என்பவராகையாலே இவருடைய மருந்து சேதமாகவே யிருக்கவேணுமே. நோய்களைத் தீர்க்கும் மருந்து உலகில் இருந்தாலும் நோய்கட்கு மூலகாரணமான வினைகளைத் தீர்க்கும் மருந்து இல்லையே, மருத்துவனாயும் மருந்தாயுமுள்ளவன் மலையப்பனே காணும். “அடியேன் மேவியமர்கின்றவமுதே மருந்தே திருவேங்கடத்தெம்பெருமானே“ என்று சேர்த்து அந்வயித்து “அவ்வம்ருதம் புஜிப்பார்க்கு மலைமேல் மருந்திறே, அவ்வம்ருதம், புஸிப்பார்க்குச் சாய்கரகம் போலே உயரத்திலே அணித்தாக நிற்கிறபடி“ என்றருளிச் செய்வர் நம்பிள்ளை.

(நொடியார் பொழுதுமித்யாதி) உனபாதம் காண நொடியார் பொழுதும் நோலாது ஆற்றேனே, என்றாவது, உனபாதம் காணநோலாது நொடியார்பொழுதும் ஆற்றேனே என்றாவது அந்திலேன் அப்படியிருந்தும், விசேஷமாக ஸாதநாநுஷ்டநம் பண்ணினவர்கள் பலன் தாமதித்தால் துடிக்குமாபோலே நான் துடிக்கின்றேனே யென்கிறார். இங்கே நம்பிள்ளையீடு “ஸாததனியே ஒரு ஸாதனமநுஷ்டிக்குமவனுக்கு  அது தலைக்கட்டினவாறே பெறுகிறோ மென்றாதல், அவனே சில வைகல்யம் பிறக்கப்பட்டிறே பலன் தாழ்த்தது என்றாதல் ஆறியிருக்கலாம், அவனே ஸாதனமானவிவர்க்கு விளம்பித்தால் அவன் க்ருபையும் ஏறிப்பாயாதபடியானேனோ! என்னும் பயமிறே அநுவர்த்திப்பது“.

திருவாராதனத்தில் பெருமாளுக்கு அமுது செய்தருளப் பண்ணும்போது * அடியேன் மேவியமர்கின்றவமுதே யென்கிற விப்பாசுரத்தை யநுஸந்திப்பதென்று பட்டர் நியமனம்.

 

English Translation

O Lord of celestials, my ambrosia, staying for the love of me!  O Lord of Garuda-banner, Lord with beautiful berry lips!  O Lord of Venkatam, cure for the weeds of Karma!  No more can I rest without seeing your lotus feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top