(3528)
பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?,
நன்னலப் புள்ளினங்காள். வினையாட்டியேன்நானிரந்தேன்,
முன்னுல கங்களெல்லாம் படைத்தமுகில்வண்ணன்கண்ணன்,
என்னலங் கொண்டபிரான் தனக்கென் நிலைமையுரைத்தே?
பதவுரை
| நல் நலன் புள் இனங்காள் |
– |
சிறந்த நற்குணமுடைய பறவைத்திரள்களே! |
| விளையாட்டியேன் நான் இரந்தேன் |
– |
பிரிவாற்றாமைக்குரிய பாபத்தைப்பண்ணினநான் உங்களை வேண்டிக்கொள்கிறேன் (எதற்காகவென்னில்) |
| முன் உலகங்கள் எல்லாம் படைத்த |
– |
முதலில் உலகங்களை யெல்லாம் உண்டாக்கின |
| முகில் வண்ணன் |
– |
காளமேக நிறத்தனாயும் |
| கண்ணன் |
– |
அடியார்க்கு எளியனாயும் |
| என் நலம் கொண்ட |
– |
எனது நன்மைகளை யெல்லாம் கவர்ந்து கொண்டவனாயுமிருக்கிற |
| பிரான் தனக்கு |
– |
எம்பெருமானுக்கு |
| என் நிலைமை உரைத்து |
– |
எனது அவஸ்தையைச் சொல்லி |
| பொன்உலகு ஆளீர்புவனி முழுது ஆளீர் |
– |
உபய விபூதியையும் ஆளுங்கோள். (இதுவே எனது வேண்டுகோள்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பொன்னுலகாளீரோ) எம்பெருமான் திறத்தில் புருஷகாரக்ருத்யம் பண்ணுமவர்களுக்கு உபயவிபூதியையும் பரிசளித்தாலும் போதாது என்கிற சாஸ்த்ரார்த்தம் இப்பாட்டில் வ்யக்தமாகிறது. ஸ்ரீவசநபூஷணத்தில் “ஆசார்யனுக்கு ஸத்ருசப்ரத்புபகாரம் பண்ணலாவது விபூதிசதுஷ்டயமும் உண்டாகில்“ * என்றருளிச்செய்த ஸ்ரீஸூக்தி – “உபய விபூதியையும் விபூதிமானான ஈச்வரனையும் தானிட்ட வழக்காம்படி பண்ணிக்கொடுத்த ஆசார்யன் பண்ணின உபகாரத்துக்கு ஸத்ருசமான ப்ரத்யுபகாரம் பண்ணலாவது இப்படியே இரண்டு விபூதியும் விபுதிமானுயிருப்பான் ஈச்வரனும் வேறே யுண்டாகிலென்கை“ என்பதாம்.
* பொன்னுலகாளீரோ புவனி முழுதாளீரோ * என்று சொல்லுகிற ஆழ்வாருடைய உக்தி ஸாம்ராஜ்யத்தை நோக்குங்கால் உபய விபூதியும் ஆழ்வார் கையிலே ஸ்வாதீநமாகவுள்ள தென்னுமிடம் நன்கு தெரிகின்றதன்றோ. எம்பெருமான் தன்னுடையதான சரக்கையும் தன்னடியார்க்கு இஷ்டவிநியோக யோக்யமாகவன்றோ ஆக்க வைத்திருக்கிறான். * ****
பரமபதமதாண்டாநி ஆத்மதேஹஸ் த்தாத்மா வரத! கைலமேதத் ஸம்ச்ரிதார்த்தம் சகர்த்த * என்று கூரத்தாழ்வானு மருளிச்செய்தார். வேதாந்ததேசிகனும் *** தத்தே ரங்கீ நிஜமபி பதம் தேசிகாதேச காங்க்ஷீ * என்கிறார். எம்பெருமான் அடியார்களுக்குத் தன் விபூதியைக்கொடுக்க நினைத்தால் ஆசாரியர்களின் ஆஜ்ஞையை எதிர்பார்த்தே கொடுக்கிறானென்று இந்த ச்லோகத்தின் தாற்பரியம். ஸர்வேச்வரன் ஆசார்யர்களின் ஆணையை எதற்காக எதிர்பார்க்கவேணும்? இது அதிசயொக்தியன்றோ என்று நினைக்கவேண்டா, உண்மையில் * ஜ்ஞாநீது ஆத்மைவ மே மதம் * என்றிருக்கிற எம்பெருமான் தனது விபூதிகளையெல்லாம் ஞானிகளுடையதாக இலச்சினைபடுத்தி வைத்திருக்கையாலே அந்த ஞானிகளின் ஆணையின்றி ஒருவர்க்கும் ஒன்றுங் கொடுக்கில்லான். இவ்வர்த்தங்களையெல்லாம் ஆழ்வார் இங்குமெய்ப்பிக்கிறார் “பொன்னுலகாளீரோ புவனிமுழுதாளீரோ“ என்ற கம்பீரமான பாசுரத்தினால்.
பக்ஷிகளே! நீங்கள் எம்பெருமான் பக்கலிற்சென்று எனது நிலைமையை உரைத்து வந்தால் அதற்குக் கைம்மாறாக நான் உங்களுக்கு உபய விபூதிகளையும் பரிசளிப்பேன் என்பது முதலடியின் கருத்து. இங்கே சிலர் சங்கிக்கக் கூடியதுண்டு, ஆழ்வார் பரமபதம் பெறுகைக்குத் தைரியமாகச் சொல்லும் படியாய்ப் பரமபதம் இவர் கைப்பட்டதாயிருக்குமாகில் இந்த சிரமம் வேண்டாவன்றோ – என்பதாக. இது அரஸிக சங்கையேயாகும். * தொண்டர்க்கமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுகைக்காகவன்றோ எம்பெருமான் ஆழ்வாரை இங்கு வைத்துத் துவளப்பண்ணுவது. இவ்வளவால், உபய விபூதியையும் தாமிட்ட வழக்காம்படி பெற்றிருக்கிற ஆழ்வாருடைய ப்ரபாவத்திற்கு ஒரு குறையுண்டோ? ஸ்ரீவசநபூஷணத்தில் “சிறையிருந்தவளேற்றஞ் சொல்லுகிறது“ என்றவிடத்து வியாக்கியானத்தில் மணவாளமாமுனிகள் “பிராட்டியென்னாதே சிறையிருந்தவளென்றருளிச் செய்தது அவளுடைய தயாதிசயத்தை ப்ரகாசிப்பிக்கைக்காக“ என்று தொடங்கி விரிவாக அருளிச்செய்துள்ளவை இங்கே அநுஸந்தேயம்.
நன்னலப் புள்ளிங்காள்! – நன்னலமென்பதனாலே தேஹகுணங்களும் ஆத்மகுணங்களும் விவக்ஷிதங்கள். ஆசார்யனிடத்தில் இரண்டும் உத்தேச்யமாகும். சமதமாதி குண ஸம்பத்திகள் போலவே திருமேனி நலமும் உபஜீவ்யமாகையாலே இவற்றால் நிறைந்த ஆசாரியர்களை ஸ்வாபதேசத்தில் விவக்ஷிக்கிறது. வினையாட்டியேன் நானிரந்தேன் – தூது செல்லவேணுமென்று இரக்கிறாளல்லள் உபய விபூதியையும் உங்களுக்கு நான் கொடுக்க நீங்கள் அவற்றை ஆளவேணும் என்றிரக்கிறாள். எம்பெருமானார் கோஷ்டியிலே சிஷ்யர்கள் ஒரு சர்ச்சை பண்ணினார்களாய், இவள் உபய விபூதியையுங்கொடுத்து விட்டாளாகில் அவன் வந்தால் தானுமவனும் எங்கேயிருப்பது? என்று. அப்போது அனந்தாழ்வான் பணித்தாராம் இக்குருவி காட்டினவிடத்தே என்று. ரஸிக ஸார்வ பௌமர்களின் சங்கையும் ஸமாதானமும் பரமபோக்யமாயிருக்கும். இங்கே மற்றொரு சங்கையு முண்டு, “பொன்னுலகாளீரோ“ என்று சொன்னது பொருந்தும், அது சொன்னவாயாலே “புவனிமுழுதாளீரோ“ என்னவும் தகுமோ? உத்தேச்யமான நித்யவிபூதியைக் கொடுத்தவள் த்யாஜ்யமான லீலாவிபூதியையும் கொடுக்கத் தேடவேணுமா? என்று. இவை பண்ணுகிற உபகாரத்தை நினைத்து இன்னது கொடுப்போமென்றறியாமல் கலங்கி சொன்னபடி.
உபய விபூதியையும் ஆளுங்கோள் என்றவாறே, “ஆளத் தடையுண்டோ? கொடுத்தால் ஆளுகிறோம்“ என்று புள்ளினங்கள் நெருங்கிவா, என்காரியத்தை நான் செய்யும்போது உங்கள் காரியத்தை நீங்கள் செய்யவேண்டாவோ? அது செய்து வந்து உபயவிபூதியையும் ஆளுங்கோளென்கிறாள் பின்னடிகளால். எம்பிரான் திறத்து என்நிலையை யுரைக்கவேணும். எம்பெருமானுக்கு நான்கு விசேஷணமிடுகிறாளிங்கு. 1.பிரானே! நீ உலகங்களெல்லாம் படைத்தவனன்றோ? “செடிவைத்தவன் தண்ணீர் வார்ப்பது“ என்ற கணக்கிலே படைத்த நீ அளிக்கவும் வேண்டாவோ என்று சொல்லுங்கோள். 2. பிரானே! நீ முகில்வண்ணனல்லையோ? உன்வடிவழகைக்காட்டி யீடுபடுத்திக்கொண்டாயானபின்பு மேன்மேலும் அவ்வடிவழகை உபகரிக்க வேண்டாவோ? என்று சொல்லுங்கோள். 3. பிரானே! நீ கண்ணனாக அவதரித்த காலத்து ஒவ்வொருவர்க்கும் கையாளாயிருந்து வைத்து இப்போது ஒருத்திக்கு அருமைப்படுவது தகுதியோ? என்று சொல்லுங்கோள். 4. ஒருத்தியை இங்ஙனே ஸர்வஸ்வாபஹாரம் பண்ணிப்படுகொலையடிப்பது பாங்கோ? என்று சொல்லுங்கோள் என்றவாறு.
“என்னிலைமையுரைத்தே“ என்றவிடத்து என்னிலைமை என்பதற்கு நம்பிள்ளை யருளிச்செய்யும் பொருள் மிக அற்புதம். “ஜகத் காரணத்வம் அவதாரம் தன் பக்கல் பண்ணின விசேஷ கடாக்ஷம் இவையெல்லாம் கண்ணழிவறச் சொன்னாள், அவன் குணங்களிலே அவகாஹித்த தன்படி தன்னுலும் பேசப்போகிறதில்லை“ என்று. எம்பெருமான் படிகளை விரிவாப்பாசுரமிட்டுப் பேசுமிவர் தம் நிலைமையைப் பற்றிச் சிறிது பேசலாகாதா? என்று சங்கை. பேச்சுக்கு நிலமில்லாத்தை எங்ஙனே பேசுவது என்று ஸமாதானம். தன் வடிவைக்காட்டி “என்னைக்கண்ட நீங்களே பாசுரமிட்டுச் சொல்லுங்கோள்“ என்றாளென்க.
English Translation
O Good birds flocking together! May you rule the golden heaven and the Earth, This hapless lover beseeches you, my Krishna made the worlds and stole my well being. Pray go and tell him of my plight.
