(3526)

(3526)

நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண் இளமான் இனிப்போய்,

அனைத்து லகுமு டைய அரவிந்த லோசனனை,

தினைத்தனை யும்விடா ளவன்சேர் திருக்கோ ளூர்க்கே,

மனைக்கு வான்பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.

பதவுரை

தெய்வங்கள்

தெய்வங்களே!
நினைக்கிலேன்

எனக்கு ஒன்றும் தோன்றவில்லை,
நெடு கண் இளமான்

பெருத்த கண்களையுடைய இளமான் போன்ற என் மகள்
இனி போய்

இப்போது சென்று
அனைத்து உலகும் உடைய

ஸர்வலோக ஸ்வாமியான
அரவிந்த லோசனனை

செந்தாமரைக் கண்ணனை
தினை தனையும் விடாள்

சிறிது போதும் விடாதவளாய்க் கொண்டு
அவன் சேர் திருக்கோளூர்க்கே

அவன் வர்த்திக்கும் திருக்கோளூரை நோக்கியே
செல்ல வைத்தனள்

சடக்கெனச் சென்றாள்,
மனைக்கு வான் பழியும் நினையான்

தன் குடிக்கு இது பெரிய பழிப்பாகுமென் பதையும் நினைத்திலள்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நினைக்கிலேன்) அன்பர்களின் பிரிவுகாலம் * த்ருடி யுகாயதே * ஒரு பகலாயிரமூழியாலோ * பலபல வூழிகளாயிடும் * என்கிறயபடியே ஒரு கணப்பொழுதும் ஒருகல்பமாகத்தோன்றுமாதலால், தன் மகள் தன்னைப் பிரிந்துபோய்ப் பலகாலம் ஆய்விட்டதாக நினைத்து, அந்தோ! திருக்கோளூர்க்குப் போனவள் போய் ஸேவித்துவிட்டு மீண்டு வரலாகாதோ? அவ்விடத்திலேயே மண்டி விட்டாளே! அங்குறையும் அரவிந்தலோசன்னை ஒருக்ஷணகாலமும் விட்டுப் பிரியாதே அவ்விடத்து அநுபவமே யாத்திரியாக ஆய்விட்டாளே! இக்குடிக்கு வரும் பெரும்பழியை நினையாதே கிடக்கிறாளே! என்று அலமருகின்றாள் தாய்.

தெய்வங்காள் நினைக்கிலேன் – தன்னருகிலுள்ளாரைப் பார்த்துச் சொல்லுகையன்றிக்கே ஆகாசத்தை நோக்கித் தெய்வங்களைப் பார்த்துச் சொல்லுகிறாள். இவ்வுலகிலுள்ளாரைப் போலே தேவதைகள் பழி சொல்லமாட்டாதவர்களாதலால் அவர்களோடே உறவு கொண்டாடுகிறாள். நினைக்கிலேன் என்றால் எதை நினைக்கிலேனென்கிறாளென்று கேள்விவரும். என்னெஞ்சில் எதுவுமே தோன்றவில்லை, ஹ்ருதயம் சூந்யமாய் விட்டது என்றவாறு. என்மகளின்படி என்னால் சிந்திக்கப்போகிறதில்லை யென்கிறாளென்னவுமாம்.

நெடுங்கணிளமான் – அரவிந்த லோசனனையும் ஒரு மூலையில் அடக்கலாம்படி பரப்புடைத்தான கண்ணையுடையவளன்றோ இவள். இவளிருக்குமிடத்தைத் தேடி அவன் ஓடிவரவேண்டியிருக்க அவனைத்தேடி இவள் செல்வது என்னே! என்பது உட்கருத்து “அனைதுலகுமுடைய அரவிந்தலோசனனை“ என்றவிடத்து ஈட்டு ஸ்ரீஸூக்தி “இவ்வளவே கிடீர் அவன் கண்ணுக்குத் தோற்றிருப்பது, ஓர் உபய விபூதிமாத்ரங் கிடீர் அவன் கண்ணுக்கு ஈடுபட்டிருப்பது. அவன் தன்னையும் தோற்பிக்குங் கண்ணிறே இவளது – அவன் தானும் தன் விபூதியுமிவள்கண்ணிலே ஒரு மூலையிலே யடங்கும்படியாயிருக்கை.“

தினைத்தனையும் – க்ஷணகாலமும் என்றபடி. தினை என்கிற தானியம் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் என்றவாறு.

English Translation

O Gods! I cannot understand how my tender fawn could leave and go on her own, all the way to Tirukkolur, She would never for a moment leave her Aravindalochana.  Alas, she never thought of the slander she has brought on the household!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top