(3495)
துவளில் மாமணி மாட மோங்கு தொலைவில் லிமங்க லம்தொழும்
இவளை, நீரினி யன்னை மீர்! உமக் காசை யில்லை விடுமினோ,
தவள வொண்சங்கு சக்க ரமென்றும் தாம ரைத்தடங் கணென்றும்,
குவளை யொண்மலர்க் கண்கள் நீர்மல்க நின்று நின்று குமுறுமே.
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| துவள் இல் மா மணி மாடம் ஓங்கு |
– |
குற்றமற்றச் சிறந்த ரத்நங்களையுடைய மாடங்கள் விளங்கப்பெற்ற |
| தொலைவில்லி மங்கலம் |
– |
துலைவில்லிமங்கல மென்கிற இரட்டைத்திரப்பதியை |
| தொழும் இவளை |
– |
தொழாநின்ற இப்பராங்குசநாயகியை |
| நீர் இனி விடுமின் |
– |
நீங்கள் இனி உபேக்ஷித்துவிடுங்கள், |
| உமக்கு ஆசையில்லை |
– |
(இவள் திறந்து) நீங்கள் ஆசைவைக்க இடமில்லை, (இவனுடைய நிலைமையைச்சொல்லுகிறேன் கேளுங்கள்) |
| தவளம் ஒண் சங்கு சக்கரம் என்றும் |
– |
வெண்ணிறமாய் அழகியதான சங்கையும் சக்கரத்தையும் சொல்லுகின்றவளாயும் |
| தாமரை தடம் கண் என்றும் |
– |
தாமரைபோன்று விசாலமான திருக்கண்களைச் சொல்லுகின்றவளாயும் இருந்துகொண்டு |
| ஓண் குவளை மலர் கண்கள் நீர் மல்க |
– |
அழகிய குவளப் பூப்போன்ற கண்கள் நீர் பெருக |
| நின்று நின்று குமிறும் |
– |
ஒன்றும் வாய்விட்டுச் சொல்லமாட்டாமல்லன்று நின்று குமிறுகின்றாளிவன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (துவளில் மாமணிமாடம்) ஸ்ரீ ஜநகராஜன் திருமகள் பிறந்தபோது சோதிடர்களை வரவழைத்து ‘இவளுடைய அத்ருஷ்ட பாகங்கள் எப்படியிருக்கிறது சொல்லுங்கோள்‘ என்று கேட்கையில், சோதிடர்கள் பார்த்து “இவளுடைய பாக்கியம் மிக நன்றாகயிருக்கிறது. ஒரு குறையுமில்லை. ஸார்வபௌமனாயிருப்பா னொருவனைக் கைப்பிடிப்பாள், ஆனால் வநவாஸம் அநுபவிக்கநேரும்“ என்றார்களாம். அப்படியே இப்பராங்குசநாயகி பிறந்தபோதும் இவளது திருத்தாயார் முதலானார் சோதிடர்களை அழைத்து பாக்ய விசேஷங்கள் விசாரிக்கையில் “எல்லாம் நன்றாகவே யிருக்கிறது. இவள் உயர்வறவுயர் நலமுடையனான அயர்வறும்மார்களதிபதியால் மயர்வறமதிநலமருளப்பெறுவள், உலகம் நிறைந்த புகழ்பெறுவள், தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல்மாலைகள் சொல்லுவள்“ என்று பலவும் சொல்லிவிட்டு, ‘ஆனால் இவளுக்கு ஓர்அபம்ருத்யுவுண்டு, அது என்னென்னில், இவளைத் தூலைவில்லிமங்கலத்திலே நீங்கள் கொண்டு சென்றீர்களாகில் இவளை இழக்க நேரும், ஆகவே அங்குக்கொண்டு போகாமலிருந்தீர்களாகில் இவளோடே கூடி நிங்கள் நெடுங்காலம் வாழலாம், இந்த வொரு கண்டத்துக்கு தப்பிப்பழைப்பது கஷ்டமே, என்று சோதிடர்கள் சொல்லியிருந்தார்களாம். ஆகிலும் இவளைத் துலைவில்லிமங்கலத்தில் கொண்டுபோகாதிருக்கும்படியான குடியன்றே. இவளைப்பெறுவோமானாலும் சரி, இழப்போமானாலும் சரி, அங்கு அழைத்துக்கொண்டுபோய் ஸேவை பண்ணிவைத்தே தீருவது என்றிருக்கும் குடியாகையாலே அப்படியேசெய்து போரநேர்ந்தது. அதனால் விளைந்த அநர்தத்தைத் தோழி எடுத்துரைக்கிறேன்.
நாமெல்லாரும் கோவில்களுக்குச் சென்றால் ஏதோ விநோதம் பார்க்கிறாப்போலே பெருமாளைப் பார்த்துவிட்டுக் குறியழியாமே திரும்பி வீடுவந்து சேருகிறோம், இப்பராங்குநாயகியும் இங்ஙனமேயாகக்கூடுமென்று நினைத்திருக்க தாய்மார்கள் தாங்கள் துலைவில்லிமங்கலம் செல்லும்போது இவளையும் இடுப்பிலெடுத்துக்கொண்டு சென்றார்கள் போலும், இவள் அங்குப் புக்கவாறே கோலமேனியையும் திவ்யபூஷணங்களையும் திவ்யாயுதங்களையும் நீர்வள நிலவளங்களையுங் கண்டு மெய்மறந்து அவற்றையே வாய்வெருவத் தொடங்கினாள், மீண்டும் தாய்மாரோடே உறவுசெய்துகொள்ளும்படியான நிலைமையும் இல்லையாயிற்று. அவஸாதம் அதிகரித்திட்டது. அந்நிலைமைகண்ட தாய்மார்கள் மிக வருந்தித் தோழிபக்கலிலே வந்து ‘ஐயோ! இச்சிறுமியின் நிலைமை இப்படியாய்விட்டதே! இவளை மீட்கலாம் உபாயம் ஏதேனும் பார்த்துச் சொல்லலாகாதோ?‘ என்ன, அதற்குத் தோழியானவள் ‘அந்தோ! தண்ணீர் வழிந்தோடிச் சென்றபின்பும் அணைகட்டக் கோலுவருண்டோ? ஏற்கனவே இவளைத் துலைவில்லிமங்கலம் கொண்டுபோகாமே யிருந்திருக்கவேணும். இவள் ப்ரக்ருதியை நீங்களறிந்து வைத்தும் நீங்களே படிகடந்து சென்று இவளுக்கு ப்ராவண்யாதிசயத்தை விளைத்திட்டு இப்போதாக மீட்க வழிதேடுகிறவிதனால் பயனுண்டோ? இனி இவள் பக்கல் நசையறுங்கொள்! (இவளை நீஷேதிக்கப்பாராதே நீங்களும் இவள்வழியே வர்த்திக்கப் பாருங்கோள்) என்று சொல்லுவதாயிருக்கின்றது.
எம்பெருமானிடத்தில் ஈடுபடுவதிற்காட்டிலும் அவனுகந்து வர்த்திக்கும் ஸந்நிதியிலும் அவ்விடத்து விமாந கோபுர ப்ராகார மண்டபாதிகளிலும் ஈடுபடுவதே பக்தர்களுக்கு உற்றதாதலால் ஆழ்வார் அங்ஙனே யீடுபட்டமையை முதலடி தெரிவிக்கின்றது. இந்தத் திருப்பதி என்னே! இதில் மாடங்கள் ஓங்கியிருக்குமழகு என்னே! மணிகள் பதித்திருக்குமழகு என்னே! அம்மணிகள் துவளற்றுப் பரிசுத்தமாயிருக்கிற அழகு என்னே! என்று இப்படியெல்லாம் வாய்வெருவில் கொண்டிருக்கின்றமை காட்டப்பட்டது.
இவளைநீர் இனி அன்னைமீர் உமக்கு ஆசையில்லை விடுமினோ – இவளுக்குண்டான இந்த ப்ராவண்யத்தைப் பரிஹரிக்கவேண்டில் முன்னமே பரிஹரிதத்திருக்கவேணும், இவள் துலைவில்லிமங்கலத்தைக் கனவிலும் காணாதபடி முன்பே செய்திருக்கவேண்டும், அது செய்யாத்து மன்றிக்கே நீங்களெ இவளைக் கொண்டுபோய் அகப்படுத்திவிட்டு இப்போது மீட்க வழிதேடினால் இது முடியுமதொன்றோ? இவளோடு நமக்கினி உறவில்லை‘ என்று விட்டு நசையற்று நிற்கவேணுமத்தனை யல்லது வேறுண்டோ?
பெற்ற தாய்மாரகளைநோக்கி ‘விடுமின்‘ என்றால் அவர்கள் விடுவர்களோ? பின்னையும் நிர்ப்பந்திக்கப் புகுந்தார்கள். அப்போது தோழி தலைமகளின் நிலைமையை எடுத்துரைத்து இங்ஙனே யிவளிக்குமிருப்பை நீங்கள் கண்படைத்த ப்ரயோஜனம் பெறுமாறு பார்த்துக்கொண்டிருக்கவன்றோ தகுவது என்று சொல்லிக்காட்டுகின்றாள் போலும் பின்னடிகளால்.
தவள வொண்சங்கு சக்கரமென்றும் – இவள் சங்கு சக்கரங்களின் அழகைப்பற்றிப் பேசுகிறபடியைப் பாருங்கோள். (தவளச்சங்கு) சாமமான திருமேனிக்குப் பரபரகமாக வெளிய சங்கொன்று விளங்குகிற அழகு என்னே! என்கிறாள். தவளம் – விகாரம். வெண்ணிறமுடைய தென்க. இது சங்கின் இயற்கை நிறத்தைச் சொன்னதாகக் கொள்ளாமல் வேறு வகையாகவுங் கொள்ளலாம். அதாவது – * உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம் கண்படைகொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே * என்கிறபடியே சங்கே! நீ இடைவீடின்றி பகவதநுபவம் செய்யாநிற்கச் செய்தேயும் அநுபவலேசமுமில்லாதான் போலே உடம்பு வெளுக்கப்பெற்றாயே!, உன்படியே இதுவானால் உன்றனை யநுபவத்தில் ஏகதேசமுமில்லாத என்படி எதுவாகவேணும்! என்கிறாளாகவுமாம்.
தாமரைத் தடங்கணென்றும் – * பெருங்கேழலார் தம் பெருங்கண்மலர் புண்டரீகம் நம்மேல் ஒருங்கே பிறழவைத்தார் * (திருவிருத்தம்) என்று தாமே கூறினபடியே என்னை இவ்வளவிலே கொண்டு நிறுத்தியது இத்திருக்கண்களல்லவோ? என்று கண்ணைப்பற்றிப் பேசாகின்றாள். குவளையொண்மலர்க்கண்கள் நீர்மல்க – * கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி நீண்டவப்பெரியவாயகண்கள் என்னைப் போதைமை செய்தனவே * என்னும்படியான அத்திருக்கண்களின் நீர்மையை நினைத்தவாறே இவளுடைய கண்கள் நீர்மல்க நிற்குமதுக்கு மேற்படவுண்டோ? ப்ராக்குருதர்கள் லௌகிக பதார்த்தங்களின் லாபாலாபங்களிலே கண்ணீர் பெருகவிட்டுக் கிடவாநிற்க, இவள் பகவத்விஷயத்திலே கைவைத்து “உள்ளஞ்சோவுகந்தெதிர்விம்மி உரோமகூபங்களாய்க் கண்ணநீர்ள் துள்ளஞ்சோரத் துயிலணைகொள்ளேன்“ என்னும்படியான நிலைமைபெற்றிருக்க, *•• என்கிறபடியே இவ்வழகிய நிலைமையைக் கண்ணாரக்கண்டு கொண்டு நின்று களிக்கவேண்டாவோ வென்பது உள்ளுறையும் கருத்து.
நின்று நின்று குமிறும் – நெஞ்சில் நினைவை வாய்விட்டுச் சொல்லமாட்டாத இன்னாப்பாலே உள்ளே குமிறாநின்றான். குமிறும் என்று பதம்பிரிக்கையன்றிக்கே, (நின்று நின்று உகும் இறும்) என்று பிரத்து உகும் – நீர்ப்பண்டமாகா நின்றாள், இறும் – தளர்ந்து விழுகின்றாள், என்று சிலர் பொரள்கூறினார்களாம், அது சுவையற்றதென்று மறுக்கப்பட்டது.
இங்கே ஈடு, – “ராஜகோஷ்டியிலே ‘உரும் இறும்‘ என்று சிலர் பொருள்சொல்ல, விக்ரமசிங்கனென்பானொருவன் “அங்ஙனல்ல, கன்றைக் கடக்கக் கட்டிவைத்தால் முலைக்கண் கடுத்து பசு அமைத்துப்படுமாபோலே உள்ளோடுகிற க்லேசம் வாய்விடமாட்டாதே நோவுபடுகிறவிவளுக்கு இது வார்த்தையோ? என்றான். பெருவெள்ளத்தில் சுழிக்குமாபோலே அகவாயிலுள்ளது வெளியிடமாட்டாதே உள்ளே நின்று சுழிக்கிறபடி.“
English Translation
O Ladies, pry leave the girl alone, you have no love anymore. Her dark lotus eyes brim with tears, haltingly she murmurs. “Beautiful conch and discus”. Large lotus eyes” and “spotless jewel mansions rise in Tulavili-Mangalani”.
