(3453)
திறங்க ளாகியெங் கும்செய்களூடுழல் புள்ளினங்காள்,
சிறந்த செல்வம் மல்கு திருவண்வண் டூருறையும்,
கறங்கு சக்கரக் கைக்கனி வாய்ப்பெரு மானைக்கண்டு,
இறங்கி நீர்தொழுது பணியீரடியே னிடரே.
பதவுரை
| திறங்கள் ஆகி |
– |
திரள்திரளாக |
| எங்கும் |
– |
பார்த்தவிடமெல்லாம் |
| செய்களூடு |
– |
விளைநிலங்களிலே |
| உழல் |
– |
உலாவுகின்ற |
| புள் இனங்காள் |
– |
பறவைக் கூட்டங்களே! |
| சிறந்த செல்வம் மல்கு |
– |
உயர்ந்த ஐச்வரியம் விஞ்சியிருக்கிற |
| திருவண்வணடூர் |
– |
திருவண்வண்டூரிலே |
| உறையும் |
– |
நித்யவாஸம் பண்ணுமவனும் |
| கறங்கு சக்கரம் கை |
– |
சுழன்று வருகிற திருவாழியைக் கையிலேயுடையவனும் |
| கனி வாய் |
– |
கனிபோன்ற அதரத்தையுடையவனுமான |
| பெருமானை கண்டு |
– |
எம்பெருமானை ஸேவித்து |
| நீர் |
– |
நீங்கள் |
| இறங்கி தொழுது |
– |
தாழ்ந்து தொழுது |
| அடியேன் இடர் |
– |
அடியேன் படுகிற கஷ்டத்தை |
| பணியீர் |
– |
சொல்லுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (திறங்களாகி) பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள்.
“அவன் உன்னைமறந்து அங்கே உறைவதற்கு யாதுகாரணம்? என்று பறவைகட்கு நினைவாக, சிறந்த செல்வம்மல்கு திருவண்வண்டூர்“ என்கிறார். அத்தலத்துள்ள செல்வச்சிறப்பானது அவனை அங்கே கால்தாழப்பண்ணிற்று என்றவாறு.
(கறங்கு சக்கரமித்யாதி.) விரோதிகளை நிரஸிக்கவேண்டின விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலே உடையவனாய், புன்முறுவல்தோன்ற நின்ற அதாத்தையுடையவனான எம்பெருமானைக்கண்டு தாழவிழிந்து வணங்கி என்னுடைய விரஹ வேதனையைத் தெரிவியுங்கள்.
English Translation
O Flocking feathered friends, picking in the fields! The berry-lipped lord with a spinning discus lives in Tiruvan-Vandur with enormous Wealth. Go worship him with reverence, and tell him of my woes.
