(3350)
ஆனான் ஆளுடையா னென்றஃதேகொண் டுகந்துவந்து,
தானே யின்னருள்செய் தென்னைமுற்றவும் தானானான்,
மீனா யாமையுமாய் நரசிங்கமு மாய்க்குறளாய்,
கானா ரெனாமுமாய்க் கற்கியாமின்னம் கார்வண்ணனே.
பதவுரை
|
மீன் ஆய் ஆமையம் ஆய்நர சிங்கமும் ஆய் குறள் ஆய் |
– |
மீனாகவும் ஆமையாகவும் நரசிங்கமாகவும் வானமூர்த்தியாகவும் அவதரித்தும் |
|
கான் ஆர் எனமும் ஆய் இன்னம் |
– |
வனவராஹமாய் அவதரித்தும் இவ்வளவுமன்றி |
|
கற்கி ஆம் |
– |
கல்கியாக அவதரிக்கப்போகிறவனாயும் |
|
கார்வண்ணன் |
– |
காளமேகவண்ணனாயுமிருக்கிற எம்பெருமான் |
|
ஆள் உடையான் ஆனான் என்ற அஃதே கொண்டு |
– |
என்னை யடிமைகொண்டவனானான் என்று நான் சொன்ன நன்றி மொழியை பற்றிக்கொண்டு |
|
உகந்து வந்து |
– |
உகப்போடோளந்து |
|
தானே இன் அருள் செய்து |
– |
தானாகவே இனிய கிருபையைப் பண்ணி |
|
என்னை முற்றவும் தான் ஆனான் |
– |
எனக்கு ஸகல போக்யவஸ்துக்களும் தானேயானான். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆனானாளுடையான்.) இப்படி நான் எம்பெருமான் திறத்திலே சிறிது க்ருதஜ்ஞாநுஸந்தானம் பண்ண, இதற்காகவும் அவன் போரத் திருவுள்ளமுவந்து முன்னிம் அதிகமான ஸம்ச்லேஷத்தை என்னளவிலே பண்ணினானென்கிறார்.
‘என்றஃதே’ என்றவிடத்து, ‘என்ற அஃதே’ என்று பிரிக்க வேணும்; தொகுத்தல் விகாரம்; ‘என்றவஃதே’ என்றாக வேண்டுமிடத்துத் தொக்கது. ‘எம்பெருமான் என்னை ஆட்கொண்டான்’ என்று நான் நன்றி பாராட்டிச் சொன்னதுண்டு; அவன்தானே நெடுநாள் பண்ணின க்ருஷிபலித்து என்னை அடிமைகொண்ட சிந்தனையொழிய நான் ஒரு க்ருக்ஷி பண்ணிற்றிலேன்; உபகார ஸ்மிருதியாக நான் ‘ஆளுடையனானான்’ என்று ஒரு வார்த்தை சொன்னேனே. இவ்வளவையே எம்பெருமான் பற்றிக்கொண்டு, நான் அபேக்ஷியாதிருக்கத் தானே தன் பேறாக க்ருபையைப் பண்ணிவந்து கலந்தான்.
என்னை முற்றவும் தானானான்’ என்பதற்கு இரண்டு வகையாகப் பொருள் பணிப்பர்; (1) உள்ளோடு புறம்போடு வாசி பறக்கலந்தான். (2) எனக்கு ஸக்லவித போக்யமுமானான்.
இக்குணம் அவனிடத்து ஆச்சரியமன்று என்பதைப் பின்னடிகளாலே நிரூபிக்கிறார்போலும். மத்ஸ்ய கூர்ம வராஹாவாதிகளான அவதாரங்களைச் செய்து ஆட்படுத்திக்கொள்ள வழி தேடுவதையே இயல்வாக வுடைடியவனன்றோ என்கை.
இன்னங்கார்வண்ணனே- நீர் கொண்டெழுந்த காளமேகமானது மேன்மேலும் வர்ஷிக்க எழுச்சி கொண்டிருக்குமாபோலே எம்பெருமானும் பண்ணின அவதாரங்களில் த்ருப்திபெறாதே இன்னமும் அவதரிக்கவே திருவுள்ளம் பற்றியிருக்கிறபடியைச் சொன்னபடி.
English Translation
Seeing that he had a faithful servant in me, he came elated. By his own sweet grace, he became one with me. The dark Lord who come as the fish, the furtle, the man-lion, the manikin and the wild boar, shall come again as Kalki too, just see!
