(3288)

(3288)

இதுகாண்மின் அன்னைமீர். இக்கட்டு விச்சிசொற் கொண்டு,நீர்

எதுவானும் செய்தங்கோர் கள்ளும் இறைச்சியும் தூவேல்மின்,

மதுவார் துழாய்முடி மாயப் பிரான்கழல் வாழ்த்தினால்,

அதுவே யிவளுற்ற நோய்க்கும் அருமருந்தாகுமே

 

பதவுரை

அன்னை மீர்

தாய்மார்களே!

இதுகாண்மின்

நான் சொல்லுகிற இக்காரியத்தைச் செய்துபாருங்கள்;

நீர்

நீங்கள்

இ கட்டுவிச்சி சொல்கொண்டு

இந்தக் குறத்தியின் பேச்சைக் கேட்டு

எதுவானாலும் செய்து

ஸ்வரூப விருத்தமானதைச் செய்து

அங்கு

அவ்விடத்திலே

ஓர் கள்ளும் இறைச்சியும்

ஹேயமான மதுவையும் மாம்சஸத்தையும்

துர்வேல்மின்

ஆராதனையாக வைக்கவேண்டர்

மது ஆர்

தேன் பொருந்தின

துழாய்

திருத்துழாய் மாலையை

முடி

திருமுடியிலணிந்துள்ள

மாயம் பிரான்

ஆச்சர்ய சக்தியுக்தனான ப்ரபுவினுடைய

கழல்

திருவடிகளை நோக்கி

வாழ்த்தினால்

மங்களாசாஸனம் பண்ணினால்

அதுவே

அதுதானே

இவள் உற்ற நோய்க்கும்

இப்பெண்பிள்ளையடைந் திருக்கிற நோய்க்கும்

அரு மருந்து ஆகும்

அருமையான மருந்தாகும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தவறுதலான செயல்களைச் செய்யாமல் எம்பெருமான் திருவடிகளை வாழ்த்துவதாகிற பரிஹாரமுறைமையை யனுட்டித்தால் இவளுடைய நோய் தீருமென்கிறாள். நான் சொல்லுகிறவார்த்தை விரைவில் பயன்தருகின்றதா இல்லையா என்பதை நீங்கள் கைமேலே காணுங்கோளென்பாள் இது காண்மினன்னைமீர் என்கிறாள்.  காண்மின் என்றது ‘கேண்மின’ என்ற பொருளில் வந்ததாகவும் கொள்ள இடமுண்டு. அன்னைமீர்! என்கையாலே நீங்கள் மிகவும் மூத்தவர்களேயானாலும், சொல்லுகிற நான் சிறுமியேயானாலும் சொல்லும்பேச்சு நல்லதாயிருக்குமாகில் ஆதரிக்கவேண்டாவோ? என்கிற கருத்துத்தொனிக்கும்.  “வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே” என்கிறபடியே என்போல்வாருடைய பேச்சுக்கு உபசார விசேஷங்கள் செய்யவேண்டியிருக்க, அவை செய்யாவிடினும் காது கொடுத்துக் கேட்கத்தானாகாதோ என்கிற கருத்தும் தொனிக்கும்.

கட்டுவிச்சி-குறி சொல்லுகிறவள்.  இகரச்சுட்டு-அவளுடைய இழிவைப் புலப்படுத்தும்.  “காணிலு முருப்பொலார் செவிக்கினாத கீர்த்தியார்இ பேணிலும் வரந்தர மடுக்கில்லாத தேவர்” என்கிறபடியே மிகவும் நீசமான தெய்வத்தை வழிபடுகின்ற இவளை எங்கே தேடிப்பிடித்தீர்கள்! என்று க்ஷேபிக்கிறபடி.  கண்கொண்டு காணவொண்ணாத விவளை அழைத்து எதிரேயிருத்தினதுமல்லாமல் இவளுடைய கடியகொடிய பேச்சுகளுக்குக் காது கொடுப்பதுஞ் செய்தீர்களே! என்று இடித்துக்கூறுகிறபடி.  இகரச்சுட்டு சொல்லில் அந்வயிக்கவுமாம்; கட்டுவிச்சயின் இச்சொல் என்க.

நீர்-உங்களுடைய வைலக்ஷ்ண்யத்தை நீங்கள் அறியீர்களோ? *மறந்தும் புறந்தொழாத குடியிலே பிறந்துவைத்து நீங்கள் இங்ஙனே செய்யத்தகுமோ? என்பது கருத்து.  இவர்கள் செய்கிற காரியம் தனக்கு அஸஹ்யமாயிருக்கிறபடியை எதுவானுஞ்செய்து என்பதனால் காட்டுகின்றாள்.  வாயால் அதனை அநுவதிக்கவுங் கூசுகிறபடி.  ஹேயமான மதுவையும் மாம்ஸத்தையும்; துர்வி ஸ்ரீ வைஷ்ணவக்ருஹத்தைக் கொடுக்கவேண்டாவென்கிறாள்.  தேவதாந்தரக்கட்டுவிச்சியின் பேச்சைக்கேட்டு தேவதாந்தர ஸமாராதனம் பண்ணுகிறார்களாகையாலே “கள்ளுமிறைச்சியும் துர்வேல்மின்” என்கிறாள்.  தாமஸ தெய்வங்களுக்குத் தாமஸ பதார்த்தங்களே உகந்த உணவாதலால் “கொல்வன முதலா அல்லனமுயலுமினையசெய்கை” (திருவாசிரியம்) என்கிறபடியே ஆடுபலி கொடுத்தல் கோழிபலி கொடுத்தல் முதலிய தீச்செயல்களைச் செய்கிறார்களாகக் கொண்டு நிவர்த்திப்பிக்கிறபடி.

ஆழ்வாருடைய பரிஸரத்திலே கள்ளும் இறைச்சியும் துர்வ ப்ரஸக்திலேசமுமில்லையே;  இங்ஙனமே அப்ரஸக்த ப்ரதிஷேதம் பண்ணலாமோவென்னில்; கேண்மின்; திருவாய்மொழி பக்திசாஸ்த்ரமாயிருப்பதுபோலவே தர்மசாஸ்த்ரமுமாயிருக்கும்.  ஸ்ரீவைஷ்ணவ தர்மங்களைத் தெரிவக்கின்றவத்தனையிலேநோக்கு ஆஹாரநியமப்ரகரணத்திலே இவை பரிஹரணீயங்கள் என்னுமிடத்தை வற்புறுத்துகிறபா.

இனி, ஸ்வரூபாநுரூபமான பரிஹாரக்ரமத்தைச் சொல்லுகின்றன பின்னடிகள். *தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாயுடையம்மானது திருவடிகளை ஸ்மரித்து “உன்சேவடி செவ்வி திருக்காப்பு” என்று பல்லாண்டு பாடுமளவேபோதும் என்கிறாள்.

 

English Translation

Look here, Ladies! Do not go and do wild things throwing flesh and toddy.  pay no heed to this wierd gypsy’s worlds of advice.  praise the Lord who wears the Tulasi crown.  That alone will cure this girl’s malaise

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top