(3196)

(3196)

அடியார்ந்த வையமுண் டாலிலை யன்ன சஞ்செய்யும்,

படியாது மில்குழ விப்படி யெந்தைபி ரான்றனக்கு,

அடியார் அடியார் தமடி யார்அ டி யார்தமக்

கடியார் அடியார் தம்,அடியாரடி யோங்களே.

 

பதவுரை

அடி ஆர்ந்த  வையம்

(த்ரிவிக்ரமாவதார காலத்தில்) தன் திருவடியோடு ஸம்பந்தம் பெற்றதான வுலகை

உண்டு

(பிரளயகாலத்தில்) திருவயிற்றிலே வைத்து

ஆல் இலை

ஆலந்தளிரில்

அன்னவசம் செய்யும்

திருக்கண் வளர்ந்தருள்கின்ற

படி ஆதும்இல்

சிறிதும் உபமானமில்லாத

குழவிப் படி

சிறு குழந்தைப் பருவமுடைய

எந்தை பிரான் தனக்கு

எம்பெருமானுக்கு

அடியார் அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள்

ஏழு தலைமுறையளவான அடிமையின் எல்லையிலே நிற்வர்களுக்கு நாங்கள் அடிமைப்பட்டவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இவ்வுலகத்தை ஒருகால் அளந்தருளி ஒருகால் உண்டருளி ஆலிலையில் கண்வளர்ந்தருளின பெருமானுடைய திருக்குணங்களுக்குத்தோற்று அடிமையாயிருப்பாருடைய தாஸாநுதாஸ சரமாவதிதாஸன் அடியேன் என்கிறார். – அடியார்ந்தவையமுண்டு=எம்பெருமான் அமுது செய்த வுலகம் அவன்றனது திருவடியளவேயானது. என்று ரஸோக்தியாகச் சொல்வதற்குப் பாங்காக மூலம் அமைந்திருக்கிறபடி. “தன்படிக்குக் காற்கூறும் போராதத்தையிறே அமுது செய்தது” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்க. பிரளயங்கொள்ளாதபடி உலகங்களைத் திருவயிற்றிலே வைத்துநோக்கி ஓர் ஆலந்தளிரிலே கண்வளர்ந்தருள்வதாக நூற்கொள்கையாதலால் ஆலிலையன்னவசஞ் செய்யும் என்றார். வயிறார உண்டதனால் வரும் உறக்கம் அன்னவசம் எனப்படும்.

படி ஆதுமில்குழவிப்படி = ஆலமாமரத்தினிலைமேல் துயின்ற பாலகனுக்கு எசோதை யிளஞ்சிங்கமும் ஒப்பன்று என்பர். அகடித கடநாஸாமர்த்தியத்தில் ஒப்பில்லாமை கூறியவாறு.

எந்தையிரான்தனக்கு= இந்த அகடிதகடநாஸாமர்த்தியத்தைக் காட்டி என்னையீடுபடுத்திக்கொண்ட எம்பெருமானுக்கு என்றபடி. (அடியார் இத்யாதி) எம்பெருமான் சேஷித்வத்தின் எல்லையிலே நிற்பதுபோல, தாம் சேஷத்வத்தின் எல்லையிலே நிற்க விரும்புகிறார். *த்வத்ப்ருத்ய ப்ருத்யபரிசாரகப்பருத்யப்பருத்யப்பருத்யஸ்ய ப்ருத்ய இதி மாம் ஸ்மர லோகநாத* என்ற முகுந்தமாலையும் காண்க.

இப்பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி வேதாந்தவாசிரியர் பாதுகாஸஹஸ்ரத்தில் *யஸ் ஸப்தபர்வவ்யவு தாநதுங்காம் சேஷத்வகாஷ்டாமபஜந்முராரே:* என்ற ச்லோகமருளிச் செய்தாரென்றுணர்க.

இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி:- “இப்போதும் தம்முடைய ருசிக்கு அவதியுண்டாய் இவ்வளவிலே நின்றாரல்லர்: சந்தஸ்ஸில் இதுக்கு அவ்வருகுபோக வொண்ணாமே நின்றதித்தனையிறே”- செய்யுளின் நிர்ப்பந்தத்தை நோக்கி இவ்வளவிலே தலைக்கட்டினாரத்தனை யல்லது ‘இவ்வளவு சேஷத்வம் நமக்குப் போதும்’ என்றெண்ணி முடித்தாரல்லர் என்றவாறு.

“இப்படி வைஷ்ணவர்களை விரும்பினால் இது லௌகிகரோடு சேராதிருந்ததாகில் ஆழ்வார் விரும்பினத்தை விச்வஸித்தோமாகிறோம் என்று ஜீயரருளிச் செய்யும்படி” என்பது ஈடு முப்பத்தாறாயிரம்! இதன் கருத்து யாதெனில்; இந்தப் பதிகத்தில் ஆழ்வார் அருளிச் செய்தபடியே நாம் அநுஷ்டிப்பதாகக் கொண்டால் லோகவிருத்தமாகுமே; “எத்தனை நலந்தானிலாத சண்டாள சணடாளர்களாகிலும்” இத்யாதிகளால் அருளிச் செய்யப்படுகின்ற அர்த்தம் லோகா நுஷ்டானத்திற்கு அமையாதே என்கிற சங்கையின்மீது அருளிச் செய்கிறபடி. நாம் அநுஷ்டிக்கும்படியான பாக்கியம் பெறாதொழியினும் ‘இங்ஙனே ஆழ்வார் பாரித்திருந்தார்’ என்று விச்வாஸத்தோடே அநுஸந்தித்தாலும் போதும் என்றபடி.

 

English Translation

My Lord swallowed the Earth and slept as a child floating on a fig leaf in the deluge waters.  The servant of his servant is my Master.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top