(3194)
நம்பனை ஞாலம் படைத்தவ னைதிரு மார்பனை,
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வரி யான்தன்னைக்,
கும்பிநரகர்கள் ஏத்துவ ரேலும் அவர்கண்டீர்,
எம்பல் பிறப்பிடை தோறெம் தொழுகுலம் தாங்களே.
பதவுரை
|
நம்பனை |
– |
நம்பப்படுமவனும் |
|
ஞானம் படைத்தவனை |
– |
(தன்னை ஆச்ரயித்து அநுபவிக்கைக்குறுப்பாக) ஜகத்ஸ்ருஷ்டியைப் பண்ணுமவனும் |
|
திருமார்பனை |
– |
பிராட்டியைத் திருமார்பிலே உடையவனும் |
|
உம்பர் உலகினில் |
– |
மேலுலகங்களில் |
|
யார்க்கும் |
– |
எப்படிப்பட்டவர்களுக்கும் |
|
உணர்வு அரியான் தன்னை |
– |
அறியமுடியாத பெருமையையுடையவனுமான எம்பெருமானை |
|
ஏத்துவர் கும்பிநரகர்கள் ஏலும் |
– |
துதிப்பவர்கள் கும்பியாக நரகவாஸத்திற்குரிய பாபிகளேயானாலும் |
|
அவர் தாங்கள் |
– |
அவர்கள் |
|
எம் |
– |
எமது |
|
பல் |
– |
பலவகைப்பட்ட |
|
பிறப்பு இடைதோறு |
– |
ஜன்மாவகாசந் தோறும் |
|
எம் தொழுகுலம் கண்ணீர் |
– |
யாம் தொழும்படியான குலீகராவர். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அவனுடைய ஸகலஸம்பத்துக்கும் நிதானமான ச்ரியபதித்வத்தை அநுஸந்தித்து அதிலே யீடுபட்டிருக்குமவர்கள் குலம் குலமாக எனக்கு நாதர் என்கிறார். எப்படிப்பட்ட நிலைமையிலும் சேதநர்க்குத் தஞ்சமாக நம்பப்படுமவனாய், ஜகத்தையெல்லா முண்டாக்குவதுஞ் செய்து இந்நீர்மைக்கு அடியான ச்ரிய: பதித்வத்தை யுடையவனாய், மேலானவுலகங்களில் எத்தனையேனும் மேம்பாடுடைய பிரமன் முதலியோர்க்கும் உணரமுடியாதிருப்பவனுமான எம்பெருமானை ஏத்துமவர்கள் கும்பீபாக நரகத்திற்குச் செல்லுதற்குரிய பாவங்களைச் செய்தவர்களாயிருந்தாலும் அவர்கள் எமது தொழுகைக்கு உரிய சிறந்த குலத்திற் பிறந்தவர்களாகக் கொள்ளப்படுபவர்கள் என்றதாயிற்று.
கும்பிநரகர்கள் என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள் கூறுவதுண்டு; ஆறாயிரப்படியில் “கும்பீநரகயாதநாநுபவாநுகுண பாபங்களைப் பண்ணினாரேயாகிலும்” என்றருளிச் செய்திருக்கிறபடியே, கும்பீபாக நரகத்தில் துன்பங்களை யநுபவிததற்கீடான பாவங்களைச் செய்தவர் என்பது ஒரு பொருள்; இப்பொருளில், அவர்கள் இவ்வுலகத்திலேயே யுள்ளவர்கள் என்பது பெறப்படும். ‘கும்பீபாக நரகத்திலே கிடப்பவர்கள்’ என்பது மற்றொரு பொருள். “கும்பீபாகத்திலே து:க்காநுபவம் பண்ணா நிற்க. திருநாமத்தைச்சொல்லக் கூடுமாவென்னில்; க்லேசாதிசயத்தாலே அம்மே! அப்பா! என்னக்கூடாதோ வென்று காணும் இவர்க்கு நினைவு.” என்ற ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்க. “மஹாபாபபலமான கும்பீபாக நரகத்திலே கிடந்தும் அங்கே திருநாமத்தைச் சொல்லுவர்களாகில்” என்பது இரு பத்துநாலாயிரப்படி யருளிச்செயல். கும்பீபாக நரகத்திலுள்ளவர்களை ஆழ்வார் எங்ஙனே தொழக்கூடும்? என்று கேள்வி பிறக்கும்; அவர்கள் திருமார்பனை ஏத்தினார்களா இல்லையா என்பதை ஆழ்வார் எங்ஙனே தெரிந்துகொள்வது? என்றும் கேள்வி பிறக்கும்; பாகவதர் திறத்தில் ஆழ்வார்க்குள்ள ப்ரதிபத்தி விசேஷத்தைத் தெரிவிப்பது மாத்திரத்தில் விச்ராந்தமான இந்த வசநவ்யக்திகளில் கேள்வி கேட்கலாகாதென்பர் பெரியோர்.
English Translation
The trusted Lord who bears Lakshmi and the maker-of-the-worlds Brahma on his person is incomprehensible even to the great celestials. Whoever praises him, even from the lowest kumbi hell, is my master through every life, just see!
