(3149)

(3149)

சுமந்து மாமலர் நீர்சுடர் தீபம்கொண்டு,

அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்,

நமன்றெ ழும்திரு வேங்கடம் நங்கட்கு,

சமன்கொள் வீடு தரும்தடங் குன்றமே.

 

பதவுரை

மா

சிறந்த

மலர்

புஷ்பங்களையும்

நீர்

தீர்த்தத்தையும்

சுடர்

தீபத்தையும்

தூபம்

தூபத்தையும்

சுமந்துகொண்டு

ஏந்திக்கொண்டு

வானவர்

தேவர்கள்

வானவர் கோ னொடும்

தங்கள் தலைவனோடுகூட

அமர்ந்து நமன்று

அநந்யப்ரயோஜநராய் வணங்கி

எழும்

உஜ்ஜீவிக்குமிடமான

திருவேங்கடம்

திருவேங்கடமென்கிற தடம் குன்றமே பெரிய திருமலையே

நங்கட்கு

நமக்கு

சமன் கொள் வீடு

பரமஸாம்யாபத்தி ரூபமான மோஷத்தை

தரும்

அளிக்கும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  – நமக்கு அபேக்ஷிதமான அடிமைகளெல்லாம் பெறுவதற்குத் திருவேங்கடமுடையானை ஆச்ரயிக்கவேண்டுவதில்லை, திருமலையின் ஆச்ரயணமே போதுமென்கிறார். வானவர் வானவர்கோனொடும் மாமலர் நீர் சுடர் தூபம் சுமந்துகொண்டு அமர்ந்து நமன்று எழும் திருவேங்கடம் தடம் குன்றம் நங்கட்குச் சமன்கொள்வீடு தரும் – என்று அந்வயக்ரமம். மா என்பது மலர்க்குமாத்திரம் விசேஷணமன்று, நீர் சுடர் தூபங்கட்கும் விசேஷணம். புஷ்பம் தீர்த்தம் தீபம் தூபம் ஆகிய இவை மிகச் சிறந்த வஸ்துக்களாகத்தேடி ஸம்பாதிக்கப்படவேண்டு மென்கிறதன்று; பக்தியின் கனத்தாலேயாகஞ் சிறப்பு விவக்ஷிதம். சுமந்து என்றதும் அதுபற்றியே யென்க. இவ்விடத்தில் ஒரு இதிஹாஸம் அருளிச்செய்கிறார். அதாவது – ஸ்ரீ ஜகந்நாதததில் எம்பெருமான் செண்பகப்பூவை உகந்து சாத்திக் கொள்வது வழக்கமாயிருந்ததனால் சில ராஜகுமாரர்கள் எம்பெருமானுக்குச் செண்பகப்பூ ஸம்பாதித்து ஸமர்ப்பிக்க ஒரே ஒரு பூ மாத்திரம் மிகுந்திரருந்தது. விலை கொடுத்து வாங்கவந்த ராஜகுமாரர்கள் செல்வச்செருக்குடையவர்களாதலால் ஒவ்வொருவரும் இப்பூவை நாமே பெற்றுப் போய் ஸமர்பிக்க வேணுமென்ற ஆவர்கொண்டவராகி மேன்மேலும் விலையை ஏற்றிக்கொண்டவந்தார்கள்; கடைசியாக அளவற்ற விலைகொடுத்து ஒரு ராஜபுத்திரன் அதைவாங்கிப் பெருமாளுக்குச் சாத்த அன்றிரா  அவனுடைய கனவிலே எம்பெருமான் காட்சி தந்து ‘ சீ இட்டபூ எனக்குக் கனத்துச் சுமக்க வொண்ணாததாயிருக்கிறது’ என்றருளிச் செய்தான் என்பதாம். இதனால், எம்பெருமானுக்கு அன்புடன் எதையிட்டாலும் அது அவனுக்கு அலப்யலாப மாயிருக்குமென்பது போதரும்.

வானவர் வானவர்கோனொடும் = நித்யஸூரிகளையும், ஸ்ரீஸேநாபதியாழ்வானையும் சொல்லிற்றாகவுமாம். தேவர்களையும் நான்முகனையும் சொல்லிற்றாகவுமாம். அமர்ந்து என்றது அநந்யப்ரயோஜநத்வத்தின் அமைதியைச் சொன்னபடி. தேவதைகளுக்கு ப்ரயோஜநாந்தரபரத்வம் ப்ரஸித்தமாயிற்றே; அவர்களுக்கு அநந்யப்ரயோஜநத்வம் பொருந்துமோ என்கிற சங்கையை  நம்பிள்ளை தாமே பரிஹரிக்கிறார்- “ப்ரஹ்மாதிகளைச் சொல்லிற்றானபோது, அவர்கள் ப்ரயோஜநாந்தரபரரே யாகிலும் அவர்களையும் அநந்யப்ரயோஜநராக்கமாயிற்று இது தன்னின் ஸ்வபாவம்” என்று. நமன்று – நம: என்று சொல்லி என்றபடி. “*துயரறுசுடரடி தொழுதொழு* என்கிற தம்வாஸநை அவர்களுக்கு முண்டென்றிருக்கிறார்” என்பது ஈடு.

சமன்கொள்வீடு என்பதற்கு இரண்டுவகையாக நிர்வாஹமுண்டு. உபநிஷத்திற் சொல்லுகிறபடியே எம்பெருமானோடு ஸாம்யாபத்திரூபமான மோக்ஷமென்பது ஒரு நிர்வாஹம். ஸ்வஸ்வரூபத்திற்கு ஸமமாக (அநுரூபமாக) இரப்பதைக் கொண்டிருக்கிற மோக்ஷம். கைங்கரிய ரூபமானமோக்ஷம் – என்பது மற்றொரு நிர்வாஹம். சமன்- சமம்; மகரனசரப்போலி. சம்மென்றது ஸமமென்றபடியாய் ஸாம்ய மென்றதாகும். திருமலை எம்பெருமானுக்கு எப்படி சேஷப்பட்டிருக்கிறதோ அப்படியே நாமும் சேஷப்பட்டிருக்கும்படியாகச் செய்து கொடுக்குமென்பதும் ஒரு நிர்வாஹம். ஸ்வசேஷத்வஸமாந சேஷத்வத்தைத்தருமென்றதாயிற்று.

 

English Translation

The dark Venkatam Lord worshipped by Indra and all the celestials with flowers, incense, lamp and water, gives up tranquil liberation.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top