(3148)

(3148)

வேங்க டங்கள்மெய்ம் மேல்வினை முற்றவும்,

தாங்கள் தங்கட்கு நல்லன வேசெய்வார்,

வேங்க டத்துறை வார்க்கு நமவென்ன

லாங்க டமை,அதுசுமந் தார்க்கட்கே.

 

பதவுரை

வேங்கடத்து

திருமலையிலே

உறைவார்க்கு

நித்யவாஸஞ்செய்தருளுகிற பெருமானுக்கு

நம எனல் ஆம் கடமை அது

நமர் என்று சொல்லுவதாகிற அந்தக் கடமையை

சுமந்தார்கட்கு

வஹிக்கின்றவர்களுக்கு

கடங்கள்

அனுபவித்தே தீர்க்கவேண்டிய (பூர்க்ருத) பாபங்களும்

மேல்வினை

(ப்ரக்ருதிவாஸநையாலே) இனி விளையக்கூடிய பாவங்களம் (ஆகிய)

முற்றவும்

ஸகலபாபங்களும்

வேம்

வெந்துபோயினவென்னும் அழிந்து விடும்: (இப்படி பாவங்கள் தொலையலே)

தாங்கள் அடியவர்களான தாங்கள்

தங்கட்கு நல்லனாவே

தங்கள் ஸ்வரூபத்திற்குத் தகுதியானவற்றையே (ஸகங்கரியங்களையே)

செய்வார்

செய்யப் பெறுவர்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  இப்பதிகத்தில் முதற்பாட்டில் முதற்பாட்டில் கைங்கர்யம் ப்ரஸ்தாவிக்கப்பட்டது; (அதன்மேல் நான்கு பாசுரங்கள் ப்ராஸங்கிகங்கள்.) முதற்பாட்டோடு இப்பாட்டிற்கு ஸங்கரி கொள்ளலாம். பிரதிபந்தகங்களான கருமங்கள் பலகிடக்க அடிமை செய்வது எங்ஙனே ஸாத்யம்? என்று சங்கைபிறக்க, அடிமை செய்வோமென்று இசையவே அவைதானே தொலையுமென்கிறாரிப்பாட்டில்.

கடம்- கடன்: மகரனகரப்பொலி, கடன்கள் வேம் = பிராமணன் பிறக்கும்போதே மூன்றுவகையான கடன்களோடு பிறக்கிறானென்று வேதம் ஓதுகின்றது. யஜுர்வேதத்தில் ஆறாவது காண்டத்தில் மூன்றாவது ப்ரச்கத்தில்- *ஜாயமாதோஹவை* என்று தொடங்கி, அந்தணன் பிறக்கும்போதே மூன்று கடன்களோடு பிறப்பதாக ஓதியுள்ளது. ரிஷிகளுக்கும் தேவர்களுக்கும் பித்ருக்களுக்கும் ரஷிகளின் கடனையும் யஜ்ஞங்களால் தேவர்களின் கடனையும், ஸந்தான ஸமுத்பாதநத்தினால் பித்ருக்களின் கடனையும் தீர்ப்பதென்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இம்மூவகைக் கடன்களையும் தீர்க்காமல் மோக்ஷத்தின் ருசிவைத்தால் அது கிடைக்காதென்றும் நரகமே பலிக்குமென்றும் மநு ஸ்மிருதியில் சொல்லப்பட்டுள்ளது; *ருணாநி த்ரீண்யபாக்குரத்ய மதோ மோக்ஷேநிவேசயேத், அநபாக்ருத்ய, மோக்ஷம் துஸேவமாதோ வ்ரஜத்யதா* என்பது மநு மஹிர்ஷியின் வசனம், இதன் பொருள்:- மூன்று கடன்களையும் தீர்த்துவிட்டு, பிறகு மனத்தை மோக்ஷத்தில் ஊன்றவைக்க வேணும், கடன்களைத் தீர்க்காமல், மோக்ஷத்தை விரும்பினாலோ அதோகதியையே அடைந்திடுவான்- என்பதாம். வேங்கடத்துறைவாற்கு நம என்று சொல்லிவிட்டால் அம்மூன்று கடன்களும் தீர்க்கப்பட்டனவாகவே ஆய்விடும் என்கிறார்.

மெய்ம்மேல் வினைமுற்றவும் என்றவிடத்திலும் வேம் என்கிற வினைமுற்று அந்வயிக்கும். சரீரஸம்பந்தமடியாக நேருகின்ற பாவங்களத்தனையும் தொலைந்து போம் என்றபடி. மெய்- சரீரம். இனி, மெய் என்பதைத் தனியே பிரித்து, மேல்வினை முற்றவும் மேம், (இது) மெய் – ஸத்யம் என்றுரைத்தலுமாம். கடங்கள் என்பதனால் வேதத்திற் கூறப்பட்ட மூவகைக் கடன்களைக் கொள்ளாமல், பாவங்கள் என்றே பொருள்கொள்ளுதலும் நன்று. பாவங்களானவை பூர்வாகங்களென்றும் உத்தராகங்களென்னும் இருவகைப்படும். எம்பெருமானைப் பற்றுதற்கு முன்பு புத்திபூர்வமாகப் பண்ணும் பாவங்கள் பூர்வாங்களாம். பிறகு ப்ரகிருதி பாரவச்யத்தாலே ப்ராமாதிகமாக நேரும் பாவங்கள் உத்தராகங்களாம். இங்கு கடங்கள் என்றது பூர்வாகங்களைச் சொல்லும்; மேல்வினை என்று உத்தராகங்களை ஸ்பஷ்டமாகவே சொல்லும். இவை யிரண்டும் வேம் என்கிறவிதனால் சாரீரக மீமாம்ஸையில் நான்காமத்தியாயத்தில் முதல் பாதத்தில் *தத்திகம உத்தரபூர்வாகயோ ரச்லேஷ விநாயசென தத்வவ்யப தேசாத் * என்கிற ஸூத்ரத்தின் பொருள் பேசப்பட்டதாகும்.

மெய் = “வேதநூல் ஓதுகின்ற துண்மையல்லதில்லை மற்றுரைக்கிலே” என்றார் திருமழிசைப்பிரான். வேதம் சொல்லுவதடங்கலும் ஸத்யாமயிருக்குமத்தனையல்லது அல்பமும் பொய் கலசாது. சாந்தோக்ய உபநிஷத்தில் வைச்வாநர விக்யையில் “தத் யதா இஷ்கதூலம்… ஸர்வே பாப்மாந: ப்ரதூயந்தே*” என்று சொல்லியிருப்பது பழுதுபடாதென்றவாறு.

எத்தனையோ ஜன்மங்களில் ஸஞ்சிதங்களாய் மலைமலையாகக் குவிந்து கிடக்கும் பாவங்கள் நம்முடைய ஸ்வல்ப ஆநுகூல்யத்தில் தொலைந்திடுமோ என்று சிலர் சங்கித்தார்களாம்; அவர்களுக்கு, பட்டர் ரஸோக்திகளுடன் ஒரு இதிஹாஸ மெடுத்துரைத்தாராம்; அவர்களுக்கு, பட்டம் ரஸோகதிகளுடன் ஒரு இதிஹாஸ மெடுத்துரைத்தாராம்; இராமபிரான் கடலரசனை நோக்கி மூன்று நாள் தரைக்கிடை கிடந்து தைந்யம் காட்டிநின்றார்; அவ்வளவில் கடலரசன் முகங்காட்டாதொழியவே சீறிச் சிவந்து அக்கடல்மீது அம்பு தொடுத்துநின்றார். அது கண்டு கடலரசன் அஞ்சி நடுங்கி ஓடீவந்து விநயம்தோற்ற நின்றவாறே ‘உனக்காக அம்பு தொடுத்தேன்’ என்றுரைக்க வெட்கப்பட்டு, ‘உன் விரோதிகளைச் சொல்லு, அவர்கள் மீது இவ்வம்பைச் செலுத்துகிறேன்’ என்று சொல்லி, அப்படியே அவன் தனது விரோதிகளிருக்குமிடம் குறிப்பிட அங்கே அவ்வம்பைச் செலுத்தி உபகாரஞ் செய்தாரென்று  ஸ்ரீராமாயணத்திற் காண்கிறோம். எம்பெருமானுக்கு ஸ்தவ்யன் என்றும், ஸ்தவப்ரியன் என்றும் (ஸஹஸ்ரநாமத்தில்) இரண்டு திருநாமங்களுள், ஸ்தவய்:- ஸ்தோத்திரஞ் செய்ய உரியவர்; எந்தக் குணங்களையிட்டு எப்படிப் புகழ்ந்தாலும் அவனை பொய்யாகாமல் பொருத்தமாகவே யிருக்கப்பெற்றவர் என்றபடி. ஸ்தவப்ரியா:- யாராலும் எந்தப் பாஷையாலும் எவ்வகையாலும் செய்யப்படும் ஸ்தோத் ஸ்தோத்ரங்களைச் சொற்பிழை பொருட்பிழை யிருந்தாலும் குணங்களைச் சொல்வதாக எண்ணி அன்புடன் அங்கீகரிப்பவர் என்றபடி. (இது பட்டர்பாஷ்யத்திலுள்ள அர்த்த விவரணம்.) ஆகவே, அற்ப மனிதர்களிடத்திற்போல எம்பெருமானிடத்தில் நாம் ஏலாதவற்றை யிட்டுப் புகழவேண்டுவதில்லை: நம்முடைய வாக்கில் ஸ்வல்பம் புகழுரை வந்த மாத்திரத்திலே எம்பெருமான் பரமத்ருப்தியடைந்து நம் அபராதங்களையெல்லாம் பொறுத்தருளிப் பல நன்மைகளைச் செய்தருளக் கூடுமென்பதில் ஸந்தேஹில்லை. ஆனதால், “வேம் கடங்கள், மேல் வினைமுற்றவும் வேம் (இ)மெய்” என்றருளியத மிகப் பொருந்து மென்க.

பாவங்கள் தொலைவதற்காகச் செய்யவேண்டிய காரியம் கனத்திருக்குமோவென்ன, அப்படியொன்றுமில்லை யென்கிறார் தங்கட்கு என்று தொடங்கி. தாங்கள் தங்களுக்கு நன்றாக கைங்கரியத்தைப்பண்ண வமையும்; விரோதி தன்னடையே விலகும் என்பது கருத்து. அவரவர்கள் தத்தம் மனத்திற்குத் தோன்றியபடியே செய்ய வமையும் என்ற இவ்விதமாக இரண்டாமடிக்குக்குப் பொருள் கொள்ளலாகாது; ‘வழுவிலாவடிமை செய்யவேண்டு நாம்’ என்கிற அதிகாரியைக் குறித்துச் சொல்லுகையாலே. தாங்கள் -விஷயாந்தரங்களில் விரக்தராய்க் கைங்கரிய ருசியுடையராயிருக்குமவர்கள். தங்கட்கு -இப்படிப்பட்ட ருசியுடையராயிருக்கிற தங்களுக்கு நல்லனவே செய்வார்-  தங்கள் ஸ்வரூபத்தோடு சேர்ந்த கைங்கரியத்தையே பண்ணுவார். செய்வார் என்கிறவிதனை வினைமுற்றாகக் கொள்ளாமல் வினையாலணையும் துறைவாறற்கு நம் வென்னலாங் கடமையது சுமந்தவர்களாயு மிருக்கின்ற ஸத்துக்களுக்கு கடன்களும் மேல்வினை முற்றவும் வேம்’ என்றம் அந்வயிக்கலாம். செய்வார் என்பதை வினைமுற்றாகவே கொண்டால், இப்பாசுரத்தை இரண்டு வாக்கியார்த்தமாகக் கொள்ளவேணும். வேங்கடத்துறைவாற்கு என்று தொடங்கி பின்னடிகளையும் முதலடிகளையும் அந்வயித்து ஒரு வாக்யார்த்தமாக முடித்திட்டு, ‘தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்’ என்பதை இரண்டாவது வாக்யார்த்தமாக அந்வயிப்பது.

என்னலாய் கடமையது – என்கிற ஸுலபமான உபாயத்தை என்றபடி. சுமந்தார்கட்கு என்றது எம்பெருமானுடைய அபிப்பிராயத்தாலாம். பக்தர்களின் வாக்கில் நம, என்கிற ஒரு சிறிய சொல்வந்தாலும் இதை மலையாக நினைப்பனாம் எம்பெருமான்.

 

English Translation

Those who serve him even by lip alone are rid of past Karmas and relieved of future ones.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top