(3143)

(3143)

ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி ,

வழுவிலா அடிமை செய்ய வேண்டும்நாம்,

தெழிகு ரல்அரு வித்திரு வேங்கடத்து,

எழில்கொள் சோதி எந்தைதந்தை தந்தைக்கே.

 

பதவுரை

தொழி குரல் அருவி

கம்பீரமான ஓசையையுடைய அருவிகள் பொருந்தின

திருவேங்கடத்து

திருவேங்கடமலையில்

எழில் கொள்

நிறம்பெற்ற

எந்தை தந்தை தந்தைக்கு

எமது குலரநாதனான பெருமானுக்கு,

நாம்

அடியோம்

ஒழிவு இல்

ஓய்வில்லாத

காலம் எல்லாம்

காலம் முழுவதும்

உடன் ஆய்

கூடவே யிருந்து

மன்னி

ஸகல அவஸ்தைகளிலும் பிரியாது நின்று

வழு இலா

குற்றமற்ற

அடிமை

கைங்கரியங்களை

செய்ய வேண்டும்

பண்ணக்கடவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவேங்கடமுடையானுக்கு எல்லாவடிமைகளும் செய்யப் பெறவேணுமென்று மநோரதிக்கிறார். பின்னடிகளை முன்னே அந்வயித்துக்கொண்டு பிறக முன்னடிகளை அந்வயித்துக்கொள்வது.

“காலமெல்லாம் அடிமை செய்யவேண்டும்” என்றாலே போதுமாயிருக்க ஒழிவில் காலமெல்லாம் என்று விசேஷித்துக் கூறினதற்குத் சில ஆசாரியர்கள் ஒரு விசேஷார்த்தம் கூறுவர்களாம்; அதாவது – இனிமேல்வரும் காலங்களில் மாத்திரம் கைங்கரியம் செய்ய விரும்புகிறாரல்லர்; கீழ்க்கழிந்த காலங்களிலும் கைங்கரியம் செய்யவிரும்புகிறீர் என்று. கழிந்துபோனகாலத்தை மீட்கமுடியாதாதலால் இந்த அர்த்தம் எங்ஙனே பொருந்துமெனில்;  கீழ்க்கழிந்த காலத்திலும் கைங்கரியம் செய்ய வேணுமென்று பாரிக்கிறாராகச் சொல்லுகிறவிதற்குக் கருத்து யாதெனில்; ‘அந்தோ! கீழே வெகுகாலம் வீணாகப் கழிந்துவிட்டதே! என்கிற இழவு நெஞ்சிற்படாதபடி அதனைமறந்து ஆனந்தமயமாகக் கைங்கரியம் பண்ணப் பாரிக்கிறாரென்பதுவேயாம். இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி காண்மின்:- “ஒழிவில் காலமெல்லாமென்று ப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு; அதாகிறது, கீழ்க்கழிந்த காலத்தை மீட்கையென்று ஒரு பொருளில்லையிறே…… கீழ்க்கழிந்த காலத்திலிழவு நெஞ்சிற்படாதபடி மறப்பிக்கையேயிறேயுள்ளது” என்று.

உடனாய் என்பது ஸகல தேசங்களிலும் விடாதே தொடர்ந்து அடிமை செய்யவேணுமென்கிற பாரிப்பைக்காட்டுகிறது. இங்குச் சிலர் சங்கிப்பதாவது – திருவேங்கடமுடையானுக்குன்றோ இங்கு அடிமை செய்யப்பாரிப்பது; அப்பெருமான் நியதமாக ஒரு தேசவிஷேத்திலேயே எழுந்தரளியிருப்பதனால் ‘ஸகல தேசங்களிலும் விடாதே’ என்று இங்குச் சொல்வதற்கு ப்ரஸக்தியில்லையே என்று. இதற்கு ஸமாதானமாவது – புறப்பாடு கண்டருளிப் பலவிடங்களுக்கும் எழுந்தருள்வதுண்டாகையாலே அவ்விடமொன்றும் தப்பாமே எங்கும் அடிமை செய்யப் பாரித்தலில் குறையில்லையென்க. (ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில்) “ஸ்ரீரங்கராஜகரநம்ரிதசாகிகாப்ய: லக்ஷ்ம்யா ஸ்வஹஸ்தகலிதச்ரவணாவதம்ஸம்” என்கிற ச்லோசத்திற்படியே பரோக்ஷமான புறப்பாடுகளுமுண்டே அர்ச்சாவதாரப் பெருமானுக்கு; அப்போதும் விடாதே தொடர்ந்து அடிமைசெய்ய விரும்புவதம் இங்கு  விவக்ஷிதம். மன்னி என்பதனால் பெருமாளும் பிராட்டியுமாயத் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும் அப்போதும் படிக்கம் குத்து விளக்கு முதலியனபோலே நின்ற அந்தரங்கமான அடிமைகளைச் செய்யவேணுமென்ற விருப்பம் விளங்கும்.

முதலடிக்கு ஒரு ஐதிஹ்யமருளிச்செய்கிறார்; “ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத்திருவாய்மொழிபாடப்புக்கால் ‘ஒழிவில் காலமெல்லாம், காலமெல்லாம், காலமெல்லாம்’ என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல் போமாட்டாதே அவ்வளவிலே தலைக்கட்டிப் போவராம்” என்று. இதனால், அரையர் ஆழ்வாருடைய நிலைமையை அப்படியே யடைந்து கைங்கரியத்தில் தமக்குள்ள ஈடுபாட்டைக் காட்டினரென்பது பெறப்படும்.

வழுவிலாவடிமை = வழுவாவது வித்தேசம்: ஒரு கைங்கரியத்திலும் விச்சேதம் கூடாது’ என்றபடி.எம்பெருமான் திறத்தில் ஈடுபட்டவர்கள் எத்தனைபேருண்டோ, அத்தனைபேரும் தனித்தனியே செய்கிற கைங்கரியத்திலருளிச்செய்யப்பட்ட இளையபெருமாளது கைங்கரிய ஸாம்ராஜ்யம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. “வழுவிலாவடிமை” யென்றதற்கு மற்றொரு வகையாகவும் பொருள் கூறலாம்; ஸ்வபோக்யதாபுத்தி கலசியிருக்கைய கைங்கரியத்திற்கு வழு; அஃதில்லாமை சொன்னபடி. “கைங்கரியத்தில்களையறுக்கிறது” இத்யாதி முழுக்ஷுப்படி ஸ்ரீஸூக்தியும் அவ்விடத்து மணவாளமாமுனிகள் வியாக்கியானமும் காணத்தக்கன. “மற்றைநங்காமங்கள் மாற்று” என்றதும் காண்க.

செய்யவேண்டும்நாம் = கைங்கரியம் செய்வதிற்காட்டிலும், செய்யவேணுமென்கிற பாரிப்பு நிலைநின்றிருந்தாலும் போதும் என்கிற சாஸ்திரார்த்தம் தெரிவிக்கப்படுகிறது. எம்பெருமானார்  ஸ்ரீவைகுண்டகத்யத்தில் “கைங்கரியத்தில் ஆசையை வளர்த்திக்கொண்டு போரவேணும்” என்ற கருத்துப்பட அருளிச்செய்திருப்பதுங்காண்க.

தெழிருரலருவி = “கைங்கரியருசியுடையீர்! அடிமை செய்ய வாருங்கோள்” என்று அழைக்கின்றதுபோலும் திருமலையருவி. திருமலையில்  ஸம்பந்தமுள்ளதெல்லாம் ஆழ்வார்க்குப் பரமோத்தேச்யமாகையாலே அருவியையும் வருணிக்கிறார். திருமங்கையாழ்வார் அஹோபில க்ஷேத்திரத்தை அனுபவிக்கும்போது “சிலைக்கைலேடர் தெழிப்பு அறாதசிங்கவேன்குன்றமே” என்கிறார்; க்ஷேத்திரயாத்திரை போகிறவர்களை வழிபறிக்கிற வேடருடைய ஆரவாரமும் உத்தேச்யமாகாநின்றதென்றால் இந்தத் திருஅருவியின் ஓசை உத்தேசமாகச் சொல்ல வேணுமோ?

பரமபதம் திருப்பாற்கடல் முதலான விடங்களிலே எம்பெருமான் எழுந்தருளியிருப்பது மீனுக்குத் தண்ணீர் வார்த்தாப்போலேயிருக்கையாலே எம்பெருமானுடைய சோதி அவ்விடங்களில் குன்றியேகிடக்கும்; திருமலை அங்னன்றியே இடக்கை வலக்கையறியாதார்க்கும் எளிதாக முகங்காட்டுமிடமாகையாலே “திருவேங்கடத்தெழில் கொள்சோதி” என்கிறார். இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்தி பரமபோக்கியம்; அதாவது-

“வேங்கடத்தெழில்கொள்சோதி) *வானார் சோதியையும்* நீலாழிச்சோதியையும் வ்யாவர்த்திக்கிறது; வானார்சோதி பகல்விளக்குப்பட்டிருக்கும். நீலாழிச்சோதி கடல் கொண்டு கிடக்கும். வேங்கடத் தொழில்கொள்சோதி குன்றத்திட்ட விளக்காயிருக்கும். *திருவேங்கடம் மேய விளக்கிறே.”

எம்பெருமானார்  இத்திருவாய்மொழி அருளிச்செய்யும்போது அந்தக்கால க்ஷேபகோஷ்டியில் நூற்றுக்கணக்காக எழுந்தருளியிருந்த சிஷ்யர்களை நோக்கி, “ஆழ்வார் பாரித்த குறைதீரத் திருவேங்கடமுடையான் பரிஸரத்திலேயிருந்து நித்தியகைங்கரியம் பண்ண விருப்பமுடையார் ஆரேனுமுண்டோ?” என்று வினவியருள, குளிரருவி வேங்கடமாகையாலே எல்லாரும் குளிர்க்கு அஞ்சி விடைகூறாதிருக்க, அனந்தாழ்வான் எழுந்து ‘அடியேனுக்கு நியமித்தருளவேணும்’ என்றார்; அது கேட்டு உகந்த எம்பெருமானார் ‘நீரோருவரே ஆண்பிள்ளை’ என்று போரப்பொலியக் கொண்டாடித் தழுவியருளி விடைகொடுத்தருளினர்; அது முதலாக அனந்தாண்பிள்ளை என்று அவர்க்கு ப்ரஸித்தியாயிற்று என்று இதிஹாஸம் இங்கு அறியத்தக்கது.

 

English Translation

At all times and forever by his side, we must perform stainless service, to the radiant Lord of Venkatam, the hill with streams.  He is my father’s father.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top