(3106)
எக்காலத்தெந்தையா யென்னுள்மன்னில், மற்
றெக்காலத்திலும் யாதொன்றும்வேண்டேன்,
மிக்கார்வேத விமலர்விழுங்கும், என்
அக்காரக்கனியே, உன்னையானே.
பதவுரை
|
நிக்கார் |
– |
சிறந்தவர்களான |
|
வேதம் விமலர் |
– |
வேதம் வல்ல பரமைகாந்திகள் |
|
வழுங்கும் |
– |
(அன்பு மிகுதியினால்) விழுங்குப்படியாகவுள்ள |
|
என் அக்காரக் கனியே |
– |
அக்காரக் கனிபோன்ற எம்பெருமானே! |
|
எக்காலத்து |
– |
எப்போதும் |
|
எந்தை ஆய் |
– |
எனக்கு ஸ்வாமியாகி |
|
என் உள் |
– |
எனது நெஞ்சிலே |
|
மண்ணில் |
– |
பொருந்தி யெழுந்தருளியிருக்கப் பெறில் |
|
மற்று யாது ஒன்றும் |
– |
வேறொரு பிரயோஜனத்தையும் |
|
உன்னை |
– |
உன்னிடத்தில் |
|
எக்காலத்திலும் |
– |
ஒருநாளும் |
|
யான் வேண்டேன் |
– |
நான் விரும்பவே மாட்டேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானோடு ஒரு க்ஷணகாலமாவது இப்போது சேரப் பெறுவானாயின் அது போதும் மறுபடியும் சேரவேணுமென்கிற விருப்பங்கூட எனக்கு உண்டாகாது என்கிறார்; இதனால் தம்முடைய அபிநிவேசத்தின் மிகுதி காட்டியவாறு. இப்பாட்டுக்கு இவ்வகையாகக் கருத்துக்கொள்ளுதல் ஆளவந்தாருடைய நிர்வாஹம். “மற்றெக்காலத்திலும் யாதொன்றும் வேண்டேன்” என்று மூலமுள்ளது. யாதொன்றும் என்பதில் இந்த ஸம்ச்லேஷத்தையும் சேர்த்து, இதையும் மறுபடி யொருகாலும் வேண்டேனென்பதாக ஆளவந்தார் நிர்வஹித்தாராம். இதை எம்பெருமானார் கேட்டருளி, பொருள் கூறுதல் பாங்காதலால் வேறுவனை கூறலாம் பெறிலும் பெறாதொழியிலும் சிறுகக் கோலமாட்டார் இவர்; ஆகலே ‘எக்காலத்திலும் மற்று யாதொன்றும் வேண்டேன்’- இந்த ஸம்ச்லேசஷம் தவிர வேறொன்றையும் நான் வேண்டமாட்டேன்’ என்று பொருள் கொள்ளுதல் பாங்கு என்றருளிச் செய்தாராம்.
ஸந்நிபாதஜ்வரத்திலே யிருந்தவர்கள் ‘ஒருகால் நாக்கு நனைக்கத் துளி தண்ணீர் கிடைத்தால்போதும்’ என்பர்கள்; அதுபோல ஆழ்வார்சொல்லுகிறாராக ஆளவந்தாருடைய நிர்வாஹத்தின் போக்கு.
அக்காரக் கனி-அக்காரமாவது வெல்லக்கட்டி; அதற்கு ஒரு கனியுண்டோ வென்னில் வெல்லக்கட்டியையே உபாதாநமாகக் கொண்டு ஒரு வ்ருஷம் முளைத்து அதில் படிமம் பழுத்தால் அது எவ்வளவு இனிப்பாயிருக்குமோ அவ்வளவு போக்யதைமிக்கவன் என்றவாறு. அக்காரம் போலவும் கனிபோலவும் போக்யபூதனே! என்று உம்மைத் தொகையாக வைத்தும் பொருள் கூறுவர்.
English Translation
O Sweet fruit enjoyed by Vedic seers; If you would only be my master and blend with me at all times, I shall seek nothing else from you.
