(3091)
புலனைந்துமேயும் பொறியைந்துநீக்கி,
நலமந்தமில்லதோர் நாடுபுகுவீர்,
அலமந்துவீய வசுரரைச்செற்றான்,
பலமுந்துசீரில் படிமினோவாதே.
பதவுரை
|
புலன் ஐந்து |
– |
சப்தாதி விஷயங்கள் ஐந்திலும் |
|
மேயும் |
– |
மேய்கின்ற |
|
பொறி ஐந்தும் |
– |
பஞ்சேந்திரியங்களின்வசத்தில் நின்றும் |
|
நீங்கி |
– |
விலகி |
|
நலம் அந்தம் இல்லர் ஓர்நாடு புகுவீர் |
– |
ஆனந்தம் அளவிறந்திருப்பதான திருநாட்டிலே போய்ப்புக வேண்டியிருப்பவர்களே! |
|
அசுரரை |
– |
அசுரர்களை |
|
அலமந்து வீய செற்றான் |
– |
குடல் குழம்பிச் சாகும்படி கொன்ற பெருமானுடைய |
|
பலம் முந்து சீரில் |
– |
பலனே முந்தியிருக்கின்ற திருக்குணங்களில் |
|
ஓவாதே |
– |
அநவரதம் |
|
படிமின் |
– |
அவகாஹியுங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அற்பமான விஷய ஸூகங்களைவிட்டு, அற்புத இன்பமயமான மோக்ஷ புருஷார்த்தத்தைப் பெற்றுக் களிப்புறபேண்டி யிருப்பீர்! எம்பெருமானுடைய திருக்குணங்களிலே இடைவிடாது அவகாஹித்துப் போருங்கோள், என்கிறார். ஐந்து இந்திரியங்களும் ஐந்து விஷயாந்தரங்களிற் பட்டிமேய்வது இயல்பு. கண்ரூபங்களைக் காண்பதும், காது ஒலிகளைக் கேட்பதும், நாக்கு உணவுகளைச் சுவைப்பதும், மூக்கு மணங்களை மோந்து பார்த்தலும், உடல் உடல்களைத் தீண்டுதலும், ஆக இப்படிப்பட்ட காரியங்கள் இந்திரியங்களுக்கு ஏற்பட்டவை. இவை “ஜிஹ்வே! கீர்த்தய கேசவம் முராரிபும்” என்ற முகுந்தமர்லை ச்லோகத்திற் சொல்லியபடியே நிகழுமாயின் குறையொன்றுமில்லை; விபாரிதமாக நிகழ்வதே உலகவியற்கையாதலின், அந்த நிகழ்ச்சியை மறுக்கக் கூறுகின்றார் முதலடியில்.
நலமந்த மில்லதோர் நாடு புகுவீர்!- இவ்வுலகம் துன்பங்களுக்கு அந்தமில்லாமலிருக்கப் பெற்றிருப்பதுபோலே, அவ்வுலகம் இன்பங்களுக்கு அந்தமில்லாதிருக்கப் பெற்றது. துக்கங்கள் தொலைந்தொழிவதே மோக்ஷமென்று கூறுகின்ற பரம வைதிகர்களில் ஆழ்வார்தலைவராதலால் ‘நலமந்த மில்லதோர்நாடு’ என்கிறார். அதனைப் புக விரும்பியிருப்பவர்களே!- என்று விளித்து அவர்கட்குக்காரியம் விதிக்கிறார் பின்னடிகளில்.
‘உங்களுடைய விரோதிகளை அவன் நிச்சேஷமாகப் போக்கவல்லவன்’ என்பது சுட்டி ‘அலமந்து வீயவசுரரைச் செற்றான்’ என்கிறார். ‘அஸூர வர்க்கங்கள் தடுமாறி முடியும்படி அவற்றைத் தொலைத்தாப்போலே, உங்கள் விரோதிவர்க்கங்களை முடிப்பவனான அப்பெருமானுடைய திருக்கல்யாண குணங்களிலே ஈடுபடுங்கோள்’ என்ற படி. (பலம் முந்து சீர்) சில காரியங்கள் முதலிலே மிக வருத்தமர்ய் முடிவிலே இன்பமாயிருக்கும் பகவத் குணநபவம் அப்படிப்பட்டதன்று, ஸாரஸ்யத்தாலே ஆரம்பதசையே பிடித்து பலனாகவேயிருக்குமென்பத கருத்து.
English Translation
If you wish to go beyond the five sense and enter the world of endless good, learn to sing the glories of the Lord who destroys the Asuras by the score.
