(3088)
அணைவதரவணைமேல் பூம்பாவையாகம்
புணர்வது, இருவரவர்முதலும் தானே,
இணைவனாமெப்பொருட்கும் வீடுமுதலாம்,
புணைவன் பிறவிக்கடல்நீந்துவார்க்கே.
பதவுரை
|
அரவு அணை மேல் |
– |
ஆதிசேஷ சயனத்தின் மீது |
|
அணைவது |
– |
சேர்வது |
|
பூ பாவை ஆகம் புணர்வது |
– |
பெரிய பிராட்டியின் திருமேனியைக் கூடுவது; (ஆகிய இவை நித்ய விபூதியில் எம்பெருமானுடைய காரியங்கள்) |
|
அவர் இருவர் |
– |
ப்ரஸித்தர்களான பிரமன் ருத்ரன் என்கிற இருவர்க்கும் |
|
முதலும் தானே |
– |
முதல்வனும் அப்பெருமான் தானேயாயிருப்பன்; (அவதார முகத்தாலே) |
|
எப்பொருட்கும் |
– |
எல்லாப் பொருளுக்கும் |
|
இணைவன் ஆம் |
– |
ஸஜாதீயனாயிருப்பன்; |
|
வீடு முதல் ஆம் |
– |
மோக்ஷத்தை யளிப்பவனுமவனே; |
|
பிறவி கடல் |
– |
ஸம்ஸார ஸமுத்ரத்தை |
|
நீந்துவார்க்கு |
– |
நீந்திக் கரையேற விரும்புமவர்கட்கு |
|
புணைவன் |
– |
தெப்பமாயிருப்பவனுமவனே. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பதிகத்தில் கூறப்படும் பொருள். இப்பாசுரத்தில் சுருங்கவருளிச் செய்யப்படுகிறது. முதலடி நித்ய விபூத்யைச்வர்யத்தைக் காட்டுகின்றது. சேஷசயனத்தின்மீது பள்ளி கொள்ளுதலும், பெரியபிராட்டியின் திருமார்போடே அணையப்பெறுதலும், அவ்விபூதியிலைச்வர்யத்திற்கு எல்லையென்க. மற்றமூன்றடிகளால் இவ்வுலகத்தார்க்கு அவன் செய்யும் செயல் திறம் சொல்லுகிறது. லீலாவிபூதியை நிர்வஹிக்கும் விஷயத்தில், காரணேச்வரராக பரஸித்தர்களான பிரமன் சிவன் என்பவர்களின் உற்பத்தி ஸ்திதி முதலியவற்றுக்கும் தானே முதல்வனாய், ரக்ஷயமான ஜகத்திலுள்ள ஸமஸ்த பதார்த்தங்களுக்கும் அவதாரமுகத்தாலே ஸஜாதீயனாயிருப்பவனாய், ரக்ஷணத்திற்கு மேலெல்லையான மோக்ஷ ப்ரதானத்திற்கும் கடவனாய், ஸர்வமுக்திப்ரஸங்கம் வாராமைக்காக ஸம்ஸாரக்கடலை நீந்திக் கரையேற வேண்டுவார்க்குத் தெப்பமாயிருப்பவன் எம்பெருமான், என்றதாயிற்று.
இங்கு ஈட்டு ஸ்ரீஸூக்திகள் காண்மின்;- “அவ்விபூதியைச் சொல்லுகிறவிடத்திலே அணைவது புணர்வது என்கையாலே. அது போகபூமியாய் நித்யமாயிருக்குமென்னுமிடமும், இங்கு முதல் என் கையாலே இவ்விபூதியில் கார்ய காரண பாவத்தால் வந்த ஸம்பந்தமும், இதுதான் ஆனது அழிவதாமென்னுமிடமும் சொல்லுகிறது. இத்தால் ப்ரஹ்மருத்ரர்கள் ஸம்ஸார பத்தர்களென்னுமிடமும், ஈச்வரனே மோக்ஷப்ரதனாகவல்லா னென்னுமிடமும் சொல்லுகிறார்.”
எப்பொருட்கும் இணைவனும்- தேவமநுஷ்யாதி ஸகல யோநிகளிலும் ஸஜா தீயனாய் வந்து அவதாரிப்பவனென்றபடி. “ப்ரஹ்மேசமத்யகணநா கணநார்பக்கங்க்தௌ இந்த்ராநுஜத்வமதிதேஸ்தநயத்வயோகாத், இக்ஷவாகுவம்சய துவம்சஜநிச்ச ஹந்தச்லர்க்யாந்யமூந்யநுபமஸ்ய பரஸ்ய தாம்ந:.” என்று ஆழ்வான் அதிமாநுஷஸ்தவத்தில் அருளிச்செய்தபடியே ப்ரஹ்மருத்ரர்கள் நடுவே வந்தவதாரிப்பது, உபேந்திரனாவது, தசரத வஸூதேவர்களுக்குப் புத்திரனாவது, மத்ஸ்ய கூர்மவராஹாதி யோநிகளிலே பிறப்பது, ஆக இவற்றாலே இதர ஸஜாதீயனாம்படியைச் சொன்னவாறு.
இங்ஙனே தாழவிட்டுப் பிறக்கிறது எதற்காகவென்னில், வீடுமுதலாம்-மோக்ஷமளிப்பதற்காகவென்றபடி. அவதரித்த விடங்களிலே பக்ஷிக்கும் பிசாசுக்கும் மோக்ஷம் கொடுப்பதாகக் காணாநின்றோமன்றோ. அவன் வந்து அவதாரிப்பது மோக்ஷமளிப்பதற்காகவாகில், பின்னை யெல்லாரும் முக்தராக வேண்டாவோ வென்ன பிறவிக்கடல் நீந்துவார்க்குப் புணைவன் என்கிறார்.
‘ஸம்ஸாரமென்பது ஒரு பெருங்கடல், அஃது எங்களால் கடக்கப்போகாது; வல்லவனான நீயே கடத்தித் தரவேணும்’ என்று வேண்டுவார்க்குக் காரியம் செய்பவனென்கை.
புணைவன்-ப்ரதிபூ (ஜாமீன் தாரன்) என்றும் பொருள் கூறுவர்; “போயினால் பின்னை யித்திசைக்கென்றும் புணைக்கொடுக்கிலும் போகவொட்டாவே” என்ற பெரியாழ்வார் பிரயோகமுங் காண்க.
English Translation
My Lord prevading all things, reclines on a serpent couch, with the perfectly matching lotus-dame. The Lord who made Brahma. Siva and all else is the life-buoy for the drowning.
