(2941)

(2941)

உடலாடிப் பிறப்புவீ டுயிர்முதலா முற்றுமாய்,

கடலாழி நீர்தோற்றி யதனுள்ளே கண்வளரும்

அடலாழி யம்மானைக் கண்டக்கா லிதுசொல்லி

விடலாழி மடநெஞ்சே. வினையோமொன் றாமளவே.

 

பதவுரை

ஆழி மட நெஞ்சே

ஆழ்ந்த மடநெஞ்சே!

உடல்

சரீரஸம்பந்தம்பெற்று

ஆழி

சக்ராகாரமாக

பிறப்பு

மாறி மாறிப்பிறக்கிற ஸம்ஸாரிநிலமும்

வீடு

மோக்ஷமும்

உயிர்

(இவற்றை அடைவதற்கு உரிய) ஆத்மாவும்

முதல் ஆம் முற்றும் ஆய்

ஆகிய இவை முதலான ஸகல பதார்த்தங்களும் தானிட்ட வழக்காம்படி ஸர்வநிர்வாஹகனாய் ஆழ்ந்த நீரையுடைய ஸமுத்திரத்திலே

தோற்றி

ஆவிர்ப்பவித்து

அதன் உள்ளே

அக்கடலினுள்ளே

கண் வளரும்

சயனித்தருள்கின்ற

அடல் வழி அம்மானை

தீக்ஷ்ணமான சக்கரப் படையையுடைய பெருமானை

கண்டக்கால்

கண்டால்

இது

இந்த நிலைமையை

சொல்லி

அவனுக்குச் சொல்லி

வினையோம்

பாபிகளாக நாம்

ஒன்று ஆம் அளவு

அவனோடு ஒன்றுபடும் வரையில்

விடல்

விடாதே.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “நாரணன்றன் வாடாத மலரடிக்கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கைங்கரிய ப்ரஸ்தாவம் வந்ததனால், தாய் முலையை நினைத்த கன்றுபோலே திருவுள்ளமானது பதறி உடலைவிட்டுப் புறப்படத் தொடங்கிற்று; அதனை நோக்கி  நெஞ்சே! நம் காரியம் ஒருவிதமாக நிர்ஷர்ஷமாகுமளவும் நீ என்னை விடாதே யிருக்கவேணு’ மென்று கேட்டுக் கொள்ளுகிறாள். அன்றியே, தூதுவிடுகிற பிரகரணமாதலால் நெஞ்சைத் தூதுவிடுகிறாள் என்பாரு முளர். அப்போது, விடல் என்றது- அவனை விடவேண்டா என்றபடி.

முதலடிக்குப் பலகவையாகக் கருத்துக் கூறுவர்; “உயிர் உடலாழிப் பிறப்பு வீடு முதலா முற்றுமாய்” என்று அந்வயித்து, உயிரினுடைய உடலாழிப்பிறப்பு வீடு முதலான முற்றும் ஆவதற்காக என்று கொள்க. உடலாழிப் பிறப்பாவது. உடலிலே வட்டவடிவமான பிறப்பு: பிறப்பு வட்ட வடிவமாயிருப்பதாவதென்? எனில்; வட்டவடிவமாக ஒன்று கீறினால் அதில் முதலும் முடிவும் கண்டுபிடிக்கவொண்ணாதேயிருக்குமன்றோ; அதுபோலே பிறவிக்கு முதலும் முடிவுமில்லாமைறினவாறு. அப்படிப்பட்ட பிறவிக்கு வீடு உண்டாவதற்காக- ஸம்ஸாரம் தொலைவதற்காக என்றபடி. வீடு முதலா முற்றுமாய்- மோக்ஷம் முதலான எல்லாப் புருஷார்த்தங்களையும் பெறுதற்காக என்க. ஸ்வருஷ்டிக்கு முக்கியமான ப்ரயோஜனம் மோக்ஷமாதலால் அதனைச் சுட்டினபடி. ஆழிப்பிறப்பு என்றவிடத்தில் ஆழியென்று கடலைச் சொல்லிற்றாய் கடல்போலே எல்லைõகாண முடியாத பிறப்பு என்னவுமாம்.

உயிர் என்பதை உள்ளவிடத்திலேயே வைத்து அந்வயித்தலுமுண்டு;- உடலாழிப்பிறப்பு- ஜன்மங்கள் தோறுமுண்டான வீடு- சரீரத்தினுள்ளே சேருகிற உயிர்முதலா- ஆத்மா முதலாக, முற்றும் ஆய்- எல்லாக் காரியங்களையு முண்டாக்குகைக்ககாக என்று கொள்க. ஆய்- எச்சத் திரிபு. பிறவினைப் பொருள்கொண்டது. பஹுஸ்யாம் ப்ரஜா யேயேதி” என்ற உபநிஷத்தின் சாயையாலே என்பர்.

கடலாழி நீர்தோற்றி அதனுள்ளே கண்வளரும் = ஆழ்ந்த நீரையுடைய கடலை முந்துற முன்னம் உய்டாக்கி மேல் ஸ்ருஷ்டி முதலானவற்றுக்காக அங்கே கண்வரள்ந்தருளாநின்ற. அடல் ஆழியம்மானை = (1.) “நம்மேல் வினைகடிவான். எப்போதுங்கை கழலாநேமியான்” என்கிறபடியே ஆச்ரித விரோதிகளைத் தொலைப்பதற்காகத் திருவாழியுங் கையுமாகவே கண்வளர்ந்தருளுகிறான் போலும். கண்டக்கால் = அப்படிப்பட்ட எம்பெருமானைக் காண்பது அரிது; பாக்யவசத்தாலே காணப்பெற்றால் இது சொல்லி = நாடாத மலர்நாட நாடோறும் நாரணன்றன். வாடாத மலரடிக் கீழ் வைக்கவே வகுக்கின்று” என்று கீழ்ப்பாட்டிற் சொன்ன விஷயத்தைச் சொல்லி என்றபடி. அன்றியே, இப்பாட்டின் முதலடியிற் சொன்ன விஷயத்தை என்னவுமாம். “இவ்வாத்மா ஸம்ஸாரத்தில் நின்றும் விட்டு நீங்கி வீடுபெறுவதற்கன்றோ தேவரீருடையக்ருஷி” என்பதாகச் சொல்லி.

ஆழிமடநெஞ்சே! வினையோம் ஒன்றாமளவும் விடல் = சுழன்று வருகிற பேதை நெஞ்சே! நாம் பிறந்ததற்குப் பயன் அவரைக்கிட்டி அடிமை செய்கையாயிருக்க. அது செய்யாதே இங்ஙனம் பிரிந்து பரிதபிக்கும்படியான பாபத்தைப் பண்ணிக்கிடக்கிற நாம் அவரோடே சேருகிறவரையில் அவரை நீ விடவேண்டா – அவரை விடாதே அநுவர்த்தித்து என்னைச் சேர்க்கப்பாராய் என்றபடி. விடல்- எதிர்மறை வினைமுற்று. என்னை விடாதே என்றும் பொருள் கொள்ளலாம்; ஆகையாலே உயிர்தரித்திருக்கப் பார்க்கிறபடி.

 

English Translation

The Lord who is the cause of cyclic birth, and souls and all else, lies reclining in the peaceful ocean with a radiant discus in hand, Hapless we, shall tell him this when we see him, then merge into his.  Till then, O Dark desolate heart, do stay on with me.

 

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top