(2652)
கல்லும் கனைகடலும் வைகுந்த வானாடும்,
புல்லென் றழிந் தனகொல் ஏபாவம்,-வெல்ல
நெடியான் நிறங்கரியான் உள்புகுந்து நீங்கான்,
அடியேன துள்ளத் தகம்.
பதவுரை
|
வெல்ல நெடியான் |
– |
மிகவுயர்ந்தவனும் |
|
நிறம் கரியான் |
– |
நிறத்தால் கரியவனுமான கண்ணபிரான் |
|
உன் புகுந்து |
– |
உள்ளே பிரவேசித்து |
|
அடியேனது உள்ளத் தகம் நீங்கான் |
– |
அடியேனது உள்ளத்தைவிட்டு நீங்குகின்றனில்லை; (ஆகையாலே) |
|
கல்லும் |
– |
திருவேங்கடமலையும் |
|
கனை கடலும் |
– |
கோஷிக்கின்ற திருப்பாற்கடலும் |
|
வைகுந்தம் |
– |
வைகுண்டமென்கிற |
|
வான் நாடும் |
– |
வானுலகமும் |
|
புல்லென்று ஒழிந்தன கொல் |
– |
அல்பமாய் விட்டன போலும்; |
|
எபாவம் |
– |
ஐயோ பாவம்! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கல்லுங்கனைகடலும்.) கீழ் மூன்று பாசுரங்களிலும் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு ஹிதம் உபதேசித்தார். அந்த உபதேசத்திற்கு நெஞ்சு உடன்பட்டிருந்த தன் பலன் உடனே கைபுகுந்தபடியை இது முதல் மூன்று பாசுரங்களாலே பேசுகிறார். எம்பெருமான் திவ்யமங்களவிக்ரஹத்தோடே தமது நெஞ்சிலே புகுந்து ஸ்திரப்திஷ்டையாக இருக்கும்படியைப் பேசுகிறாரிதில். வெல்ல நெடியான் = ‘வெல்ல’ என்றது (மிகவும்) என்றபடி. நாமாக எவ்வளவு முயற்சி செய்தாலும் நமக்கு எட்டாதிருப்பவன் என்கை. அவன் தானே தன்னருளாலே எளியனாகில் தடை செய்வாரில்லாமையாலே நிர்ஹேதுக க்ருபையாலே வந்து புகுந்தானென்கிறது. (வெல்ல- வெல்வதற்கு, நெடியான்- முடியாதவன்; ஒருவராலும் ஜயிக்க முடியாதவன் என்று பொருள்கூறுதல் சிறவாது.) வந்து புகுந்ததாகத் தோன்றிவிடுதல் மாத்திரமல்ல; மெய்யே வந்து புகுந்தானென்கைக்காக நிறங்கரியான் என்று திருமேனியையுங்கண்டறிந்து பேசுகிறார் போலும். பிராட்டியானவள் எம்பெருமானுடைய திருமார்பிலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “அகலகில்லேனிறையும், அகலகில்லேனிறையும்” என்று தானே எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பது போலே, எம்பெருமானும் ஆழ்வாருடைய திருவுள்ளத்திலே வந்து சேர்ந்து “நான் இதனைவிட்டு நீங்கேன், நான் இதனைவிட்டு நீங்கேன்” என்று உருகிச்சொல்லிக்கொண்டு கிடக்கிறானென்பது தோன்ற, “உள்புகுந்து நீங்கான்” என்று அருளிச்செய்யுமழகு காண்மின்.
எம்பெருமானுக்கு, பரமபதத்திலும் திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை பெருமான்கோயில் முதலான உகந்தருளினவிடங்களிலும் இருப்பதிற்காட்டிலும் மெய்யடியாருடைய ஹ்ருதயகமலத்திலே வாழ்வதே பரமோத்தேச்யமென்றும், ஸமயம்பார்த்து அன்பருடைய நெஞ்சிலே வந்து சேர்வதற்காகவே மற்றவிடங்களில் எம்பெருமான் தங்குகின்றானெற்றும், ஆகவே பரமபதம் முதலியவற்றில் வாஸம் உபாயமாய் பக்தருடைய ஹ்ருதயத்தில் வாஸமே புருஷார்த்தமாயிருக்குமென்றும், இது ஸித்தித்துவிட்டால் பரமபதம் முதலியவற்றில் வாஸம் செய்வதில் ஆதரம் மட்டமாய் விடுமென்றும் ஸ்ரீவசநபூஷத்தில் பிள்ளையுலகாசிரியர் பரமரஸமாக அருளிச்செய்ததெல்லாம் இப்பாசுரத்தின் முன்னடிகளை மூலமாகக் கொண்டேயென்றுணர்க. “கல்லும் கனைகடலும் வைகுந்தவனாடும் புல்லென்றொழிந்தனகொல் ஏபாவம்!” என்ற இப்பாசுரத்தின் உருக்கத்தை என்சொல்வோம்? இப்படிப்பட்ட ஈரச்சொற்கள் பாவியோமான நம்முடைய வாயிலும் நுழைந்து புறப்படப் பெறுவதே! ஆழ்வாருடைய அநுபவம் எங்கே? நாம் எங்கே? அவ்களுடைய அருளிச் செயலுக்கும் நமது நாவுக்கும் எவ்வளவோ தூரமுண்டு. ஆயினும், ஏதோ பாக்யவிசேஷத்தாலே நமது வாயிலும் இத்தகைய பாசரங்கள் பொருள் தெரிந்தோ தெரியாமலோ சற்றுப்போது நுழைந்து புறப்படும்படியாக வாய்ப்பது இவ்விருள் தருமாஞாலத்திடைய பெற்றதொரு கனத்தபேறாம். ஒவ்வொரு ஸ்ரீவைஷ்ணவரும் இரவில் பள்ளிக்கொள்ளும்போது இப்பாசுரத்தைப் பலகால் அநுஸந்திக்க வேணுமென்பது பெரியோர்களின் உபதேசம்.
கல்லும் = கல் என்று ஸாமாந்யமாக மலையைச் சொல்லிற்றாய், அது இங்கே சிறப்பாய்த் திருவேங்கடமலையைச் சொல்லிற்றாகிறது. கனைகடல் = எம்பெருமான் எப்போதும் தன்னிடத்து உறைகின்றானென்ற மகிழ்ச்சியினால் ஆரவாரம் செய்கின்ற கடல் என்கை. “புல்லென்றொழிந்தனகொல் = புல்லென்று – அற்பத்தனமடைந்து. எனது நெஞ்சின் முன்னே அவையெல்லாம் அற்பமாய்விட்டனபோலும் என்றவாறு. அவ்விடங்களில் போக்குவரத்து அடியோடு அற்றுப்போனபடியாலே அவை புல்மூடிப்போயினவோ என்கிறார்- என்றரைப்பார் சிலர். ஏபாவம்! = சிறந்த ஸ்தலங்களென்று கொண்டாடப்படுகிற அவ்விடங்களுக்கு இப்படிப்பட்ட அவஸ்தையா வந்துவிட்டது! ஐயோ பாவம்!! என்று இரங்கந் தோற்றப் பேசுகிறபடி.
பெரியாழ்வார் திருமொழியின் முடிவிலுள்ள “பனிக்கடலில் பள்ளிகோளைப் பழகவிட்டு” “தடவரைவாய் மிளிர்ந்து மின்னும்” என்ற இரண்டு பாசுரங்களும் இப்பாசுரத்தின் இரண்டாமடிக்கு எதிர்நில்லா என்று அழகிய மணவாளச்சீய ரருளிச் செய்யும்படி.
English Translation
The supreme Lord of dark hue has entered my lowly heart, never to leave. Wonder if his mountain abode, ocean abode, sky abode, and Vaikunta abode have become desolate wastelands! What a pity!
