(2529)
அழைக்கும் கருங்கடல் வெண்திரைக் கைகொண்டு போய்,அலர்வாய்
மழைக்கண் மடந்தை அரவணை யேற,மண் மாதர்விண்வாய்
அழைத்துப் புலம்பி முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய்
மழைக்கண்ண நீர்திரு மால்கொடி யானென்று வார்கின்றதே.
பதவுரை
| அழைக்கும் |
– |
(அன்போடு) அழைக்கிற |
| கருகடல் |
– |
(தன்னிடத்திற் பள்ளிகொண்டிருக்கிற எம்பெருமானது திருமேனியின் நிழலீட்டாலே) கறுத்துள்ள திருப்பாற்கடலானது. |
| வௌ திரை கை |
– |
(தன்னுடைய) வெளுத்த அலைகளாகிய கைகளாலே |
| கொண்டு போய் |
– |
எடுத்துக்கொண்டுபோக, |
| விண்வாய் |
– |
ஆகாயத்திலே |
| புலம்பி அழைத்து |
– |
(மேக கர்ஜனை முகமாக அழுது கூப்பிட்டு |
| முலை மலை மேல் நின்றும் |
– |
(தனது) ஸ்தனங்களாகிய மலைகளின்மேல் நின்றும். |
| அலர் வாய் மழை கண் மடந்தை |
– |
தாமரமைலரில் வாழ்பவளும் மழைபோலக் குளிர்ந்த கண்களையுடையவளுமான திருமகள் |
| அரவு அணை ஏற |
– |
(அப்பாற் கடலினிடையிற் பள்ளிகொண்டுள்ள எம் பெருமானது) ஆதிசேஷனாகிய சயனத்தின் மீது ஏற, (அது கண்டு) |
| மண் நாதர் |
– |
பூமிப்பிராட்டி |
| ஆறுகள் ஆய் |
– |
ஆறுகளாக பெருக விட்ட |
| மழை கண்ண நீர் |
– |
மழையாகிய கண்ணீரான்றி |
| திருமால் கொடையான் என்று |
– |
திருமால் கொடியவனென்று வெளியிட்டு |
| வார்கின்றது |
– |
பெருகுகிறது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாட்டுக்குத் துறை கால மயக்கு. கீழே “ஞாலம் பனிப்ப” என்ற ஏழாம்பாட்டுக்கும் “கடல் கொண்டெழுந்தது வானம்” என்ற பதினெட்டாம் பாட்டுக்கும் போலே, மேல் “மலர்ந்தே யொழிந்தில” என்ற அறுபத்தெட்டாம் பாட்டுக்கும் துறை இதுவே. இப்பிரபந்தத்தில் காலமயக்கு அடுத்தடுத்து வருவதற்குக் காரணம்- நாயகி பின்வரஹகாலம் நீட்டித்தலென்றும், “இந்நின்ற நீர்மையினிமாமுறாமை” என்று தம் வேண்டுகோளை விண்ணப்பஞ்செய்த பொழுதே எம்பெருமானைச் சேரவேண்டியிருக்க அப்பேறு கிடையாமையாலுண்டாய ஆழ்வாரது ஆற்றாமையின் மிகுதியென்றுங் கூறுவர். கார்காலத்திலே மீண்டு வருகிறேனென்று சொல்லிப்போன நாயகன் வாராமல் விளம்பிக்க; அக்காலம் வந்தவாறே நாயகி கலக்கமடைய ‘இது அவன் சொன்ன காலமன்று’ என்று தோழி காலத்தை மயக்கியுரைத்து அவளது கலக்கத்தைத் தீர்க்கிறாள். “காரெனக் கலஞ்கு மேரெழிற்கண்ணிக்கு, இன்துணைத்தோழி அன்றென்று மறுத்தது” என்று திருக்கோவையாருரையுங் காண்க. இது ‘பருவமன்றென்று கூறல்’ என்றும் வழங்கும்.
ஸ்ரீதேவி பூதேவி என்னும் தேவிமாரிருவருள் ஸ்ரீதேவியின் ஜன்மபூமியான திருப்பாற்கடலினிடையில் திருமால்பள்ளிகொண்டருளுதலால் அக்கடல் தன் மகளான ஸ்ரீதேவியைத் தன் ஓசையாகிய இனிய குரலால் அன்போடு அழைத்து அலைகளாகிய கைகளை முன் நீட்டி அவற்றால் அவளையெடுத்துக் கொண்டுபோய் எம்பெருமானிடம் சேர்க்க, அத்திருமகள் அந்த அலைகளாகிய படிகளின் மூலமாக எம்பெருமானது உயர்ந்த திருவனந்தாழ்வானாகிய படுக்கையின் மீது ஏறி அப்பெருமானோடு கூடிக் குலாவி ஆநந்தப்பட்டுக் கொண்டிருக்க, இப்படிப்பட்ட பாக்கியம் பெறாத பூதேவியானவள் வானமாகிய பரந்த தனியிடத்திலே மேக கர்ஜனை யென்னும் வியாஜத்தால் வாய்விட்டுக் கூவியழுது மிக்க கண்ணீரை இடைவிடாது பெருக்க, அந்நீர் அவளது கொங்கைகளாகிய மலைகளின் மேல் ஆற்று வெள்ளமாகப் பெருகுகின்றமை பாராய என்று வருணித்து, “தோழி! இது நீ நினைக்கிற கார்காலமன்று’ என்று தலைவியைத் தேற்றினான். முறைப்படி (பக்ஷபாதமின்ற) ஒரு மைமாகக் கொண்டாடத்தக்க பத்னிகள் இருவருள் ஒருத்தியைப் பெருமான் காதலித்துக் கைக்கொண்டு மற்றொருத்தியை உபேக்ஷித்த கொடுந்தன்மை அவளது இக்கண்ணீரால் உலகில் வெளியாகுமென்பது தோன்ற ‘திருமால் கொடியானென்று வளர்கின்றது’ எனப்பட்டது. மால்- என்ற சொல் வேட்கைமயக்கமென்று பொருள்படுதலால் இங்கே ‘திருமால்’ என்றது -திருமகளிடங் காதற்பித்துக் கொண்டவனென்றவாறு; ( திருநெடுந்தாண்டகம் 18)
“பித்தர் பனிமலர்மேற் பாவைக்கு” என்றதுங் காண்க. நாயகன் தன்னை உபேக்ஷித்தர்னென்று வருந்துகிற நாயகிக்குத் தோழி இது கூறியதனால் ‘பல பெண்டுகளுக்குக் காண வாய்ப்பிருப்பார்க்கு இது இயல்புகாண்; ஸ்ரீதேவியைப் பாராட்டிய நிலையில் பூதேவி படும்பாட்டைப் பாராய்’ என்று ஓரியற்கையைத் தெரிவித்து ஆற்றுவித்தவாறுமாம். இங்ஙனம் ஒன்று உலகத்திலுண்டோ?’ என்று ஆராய்ச்சி பிறந்து அதிற்கருத்தைச் செலுத்தி ஆலோசித்து முடிவு செய்யுமளவில் நாயகன் வந்திடுவானென்று கருதித் தோழி இது கூறினாள் போலும்.
திருப்பாற்கடலைக் கருங்கடல் என்றது என்னோ! எனின்; உயர்ந்தசாதி நீல ரத்னத்தைப் பாலினுள்ளே யிட்டால் அதனொளியால் அப்பால் முழுவதும் தன் இயற்கையான வெண்ணிறம் மாறி அம் மணியின் நிறமாகத் தோன்றுதல் போக, இயற்கையின் வெளுத்த நிறத்தை தான திருப்பாற்கடல் தன்னிடையிற் சயனித்துள்ள திருமாலின் திருமேனியொளியாற் கரியதாதல் பற்றிக் கருங்கடலெனப்பட்டது. இனி, கருங்கடலென்பதற்கு- பெரிய கடல் என்றும் பொருள் கொள்ளலாம்; கருமை – பெருமை.
முதலடியினிறுதியில், போய்- போக என்றபடி: எச்சத்திரிபு. ‘கடலின் அலைகளாகிய கைகளைப் பற்றிக்கொண்டு சென்று’ என்று பொருள் கூறும் பக்ஷத்தின் எச்சத்திரிபு அன்று. மழைக் கண் மடந்தை = தன் கண்ணழகாலே திருமக்களானவள் திருமாலையீடு படுத்தனமை தோன்றும். ‘விண்வாய்’ என்ற விடத்து, வாய் எழலுனுருபி. அன்றியே, அலாவாய் என்பதற்கு – (செவ்வாம்பல் மலர்போன்ற வாயையுடைய (ஸ்ரீமஹாலக்ஷ்மி) என்றும் ‘விணவாய்’ என்பதற்கு- வானமாகிய வாயினால் என்றும் உரைக்கலாம்.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது- ஜீவகோடிகளில் ஸ்ரீதேவி பூதேவி தொடக்கமான அருகிலுள்ளார் எம்பெருமானை நித்யாநுபவம் பண்ணப்பெற்று வாழ, யான் இங்ஙனம் அவனைச் சேராது வருந்துவதே! என்று ஆற்றாமை விஞ்சிய ஆழ்வார்க்கு அன்பர் ஒரு த்ருஷ்டாந்த மூலமாக எம்பெருமானுடைய ஸ்வாதந்திரியத்தைத் தெரிவித்து ஆற்றுதலாம். எம்பெருமானை ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாத தேவிமாரென்று மையமாகக் கொல்லப்படுகிற ஸ்ரீதேவி பூதேவிகளுள் ஒருத்தியைப் பிரித்து ஒருத்தியைத் தழுவும்படியுமுள்ளது ஒரு காலத்தி லெம்பெருமானுடைய ஸ்வாதந்திரியம்; இப்படியிருக்க, நீர் அவனது கால விளம்பரத்துக்கு ஆறியிருந்தலே தகுதியென்று தேற்றினரென்க. இப்பாட்டின் பூமிப்பிராட்டி விஷயமாகக் குறித்த வர்ணனை- எம்பெருமானது ஸ்வாதந்திரியத்தை எடுத்துக் காட்டுதற்காயது.
English Translation
The lotus-dame Lakshmi responding to the lord’s call in the ocean, holds his white wave-hands, and joins him on his serpent couch, Seeing this, Earth Dame with her sky mouth cries, “Tirumal is wicked” and rains tears that flow down her mountain-breasts as rivers.
