(2514)
கொடுங்கால் சிலையர் நிரைகோ ளுழவர் கொலையில்வெய்ய
கடுங்கால் இளைஞர் துடிபடும் கவ்வைத்து அருவினையேன்
நெடுங்கால மும்கண்ணன் நீண்மலர்ப் பாதம் பரவிப் பெற்ற
தொடுங்கா லொசியு மிடைஇள மாஞ்சென்ற சூழ்கடமே.
பதவுரை
| அரு வினையேன் |
– |
அநுபவிக்க முடியாத தீவினைப் பயனையுடைய யான் |
| நெடு காலமும் |
– |
வெகு காலம் |
| கண்ணன் |
– |
கண்ணபிரானுடைய |
| நீள் மலர் பாதம் |
– |
நீண்ட தாமரை மலற்போன்ற திருவடிகளை |
| பரவி |
– |
வழிபட்டு |
| பெற்ற |
– |
அந்த ஆராதனையின் பயனாக ஈன்ற |
| தொடுங்கால் ஒசியும் இடை இனமான் |
– |
தொட்டால் ஒடியும்படியான (மிக மெல்லிய) இடையையுடையவளும் இளமைதங்கிய மான்போன்ற பார்வையுள்ளவளுமான மகள் |
| சென்ற |
– |
நடந்துபோன |
| சூழ்கடம் |
– |
பரந்த பாலைநிலம். (எப்படிப்பட்டதென்னில்) |
| கொடு கால் சிலையர் |
– |
ளைந்தவிற்கழுந்தையுடையவர்களும் |
| நிரை கோள் உழவர் |
– |
பசுக்கூட்டங்களைக் கவர்ந்து கொள்வதையே தொழிலாகவுடையவர்களும் |
| கொலையில் வெய்ய |
– |
கொலைத் தொழிலில் கொடியவர்களும் |
| சுடு கால் |
– |
நடைவிரைந்த கால்களையுடையவர்களுமாகிய |
| இளைஞர் |
– |
இளைவீரர்களது |
| துடி |
– |
பறைகள் |
| படும் |
– |
ஒலித்தலாகிற |
| கவ்வைத்து |
– |
ஆரவாரமுடையது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தன் மகள் சென்ற சுரத்தருமையை நற்றாய் கூறியிரங்கல் இது. களவு நெறியில் நாயகியைப் புணர்ந்த நாயகன் பழி பரவுதல் கண்ட தோழியினால் விலக்கப்பட்டு அதன் பின் உடனே அவளை வெளிப்படையாக மணஞ்செய்து கொள்ளுதல் உண்டு; அங்ஙனஞ்செய்யானாயின் அப்பழி அடங்குமாறு சில நாள் நாயகியை ஒருவாறு பிரிந்திருப்பதோ, நாயகியை உடன் கொண்டு தன்னூர்க்குச் செல்லுதலோ ஏதேனுமொன்று முறைமையாய் நிகழும். அவற்றுள், நாயகன் நாயகியை அரிய பெரிய காட்டுவழியாக உடன்கொண்டு போனமையைத் தோழியாலறிந்த செவிலித் தாய் அதனை நற்றாய்க்குத் தெரிவிக்க, அவள் மகள்சென்ற அப்பாலை நிலத்தின் பலவகைக் கொடுமைகளையும் மகளது மிக்க ஸௌகுமார்யத்தையும் கருதிக் கவலைப்பட்டு இது கூறுகிறாளென்க.
புணர்ந்து பிரிந்த நாயகியானவள் நாயகன் மீண்டும் வருமளவும் பொறுத்திருக்க மாட்டாமல் ஆற்றாமை மிகுகையாலே பெற்றதாய்க்குந் தெரியாதபடி இரவில் தனிவழியே புறப்பட்டு நாயகனிருப்பிடத்தை நோக்கிச் செல்ல, அவளைப் படுக்கையிற் காணாத தாயார் வழியில் நேரக்கூடிய அபாயங்களை நினைத்துச் சோகிக்கிறாள் என்பதுமுண்டு.
‘அருவினையேன் நெடுங்காலமும் கண்ணன் நீண்மலர்ப்பாதம் பாவிப்பெற்ற தொடுங்காலொசியுமிடையிளமான் சென் றசூழ்கடம்- கொடுங்காற் சிலையர் நிரைகோளுழவர் கொலையில் வெய்ய கடுங்காவிளைஞர் துடியடுங் கவ்வைத்து’ என்று அந்நயிப்பது.
பலநாள் தேவதாநமஸ்காரமும் தேவாலய ப்ரதக்ஷிணமுமாகிற தெய்வ வழிபாடுகளைச் செய்து அருமையாகப் பெறற்ற மகள் சொல்லாமல் பிரிந்து கொடிய பாலைவழியில் நடந்து சென்று நீங்குதற்கு ஏற்ற பாபத்தையுடையேன் நான் என்பாள் ‘அருவினையேன்’ என்றாள். பரவியான நான் பல பலவாண்டுகள் எம்பெருமானை ஆராதித்து அதன் பயனாகப் பெற்ற மகளின் ஸௌகுமார்யம் எப்படிப்பட்டது தெரியுமோ? (தொடுங்கால் ஓசியுமிடை) மருங்கணைகிற நாயகன் தான் தொடுமளவிலும் முறிந்துபோம் என்னும்படி நுட்பமாகவுள்ள இடையையுடையவள்; உல்லாஸமாகத் தானே தன் இடையிலே கையை வைத்தாலும் மலையை வைத்தாற்போலப் பொறாத இடையையுடையவன்; ‘இடை உண்டோ இல்லையோ’ என்கிற ஸந்தேஹந்தீரக் கையால் தொட்டுப் பார்க்கவும் பற்றாத இடையையுடையவள்; இனமான போன்றவள்; இப்படிப்பட்ட கட்டழகி இப்போது நடந்துபோன பாலை நிலத்தின் கொடுமை எப்படிப்பட்டது தெரியுமோ? (கொடுங்காற் சிலையர் நிரைகோளுழவர் கொலையில் வெய்ய கடுங்காலிளைஞர் துடிபடுங் கவ்வைத்து.) ஹிம்ஸையே தொழிலாகத் திரியும் புரபிகளின் பறைகள் கோஷித்தலாலாகிற ஆரவாரமுடையது. அப்படி ஸுகுமாரமானவன் இப்படி கொடிதான வழியிலே நடந்து சென்றானே! என்று வயிற்றெரிந்து சொல்லுகிறபடி.
மகள் சென்ற பாலைநில வழியிலுள்ளாருடைய கொடுமையை நான்கு விசேஷணங் களாற் கூறுகின்றாள்; (கொடுங்காற்சிலையர்) வளைந்த விற்கழுந்தையுடையவர் என்றதனால்) ஒரு வஸ்துவைக் கண்டபின் அதனை எய்தற்காக வில்வளைத்து நாணேற்றி அம்பு தொடுத்துக் கையில் ஸித்தமாக வைத்துக்கொண்டு எய்ய இலக்குத் தேடிக்கொண்டிருப்பவர் ‘கொடுமரம்’ என்னும் வில்லின் பெயரிலுங்காண்க. கொடுமை- பயங்கரத்தன்மையுமாம். காற்சிலை- சிலைக்கால்; தநுர்த்தண்டம்.
(நிரைகோளுழவர்) பசுங்கொல்லைக்குப் பின்வாங்காதவர் என்றபடி. நிரை- பசுக்களை. கோள்- ஹிம்ஸிப்பதையே, உழவர்- தொழிலாகவுடையவர். உழுது பயிர் செய்தல் போலப் பசுஹிம்ஸையையே இடைவிடாது வருந்தி முயன்று ஊக்கத்தோடு செய்யும் ஜீவநோபாய விருத்தியாகவுடையவ ரென்கை.
(கொலையில் வெய்ய) கொலைத் தொழிலிற்கொடியவர்கள். பொருளுக்காகவும் பகைமைக்காகவும் வேறெரு பயனுக்காகவுமேயல்லாமல் துடிப்புக் காணும் பொருட்டாகவுங் கொல்லுதல் இவர்க்குக் கொலையில் வெம்மையாம். அன்றி, சாவக்கொள்லாதே குற்றுயிர் குறையுயிராகக் கிடந்து நெடுநாள் துடிக்கும்படி சொல்லுகையுமாம்.
(கடுங்காலிளைஞர்) ‘பதின்காதம் இருபதின் காதத்துக்கு அப்பால் ஹிம்ஸைக்கு ஒரு இலக்கு ண்டு’ என்று யாரேனுஞ் சொன்னால் அதில் கட்டுப்பாராதே அவ்வளவும் விரைந்து போய் மீளும்படியான காற்கடுமையை யுடையராயிருப்பர்களாம். ஆக இப்படிப்பட்ட கொலைத் தொழில்வல்ல இளவீரர்களின் பறைகள் ஓயாது ஒலிக்குமிடம் இளமான் சென்ற சூழ்கடம் என்றதாயிற்று. சூழ்கடம் என்பதற்கு- சூழ்ச்சியையுடைய வழியென்றும், சூழ்ச்சியாவது- வெம்மையால் துயரை விளைத்தல் என்றும் உரைப்பர் அழகிய மணவாளசீயர்.
துடிபடுங்கவ்வைத்து = துடியாவது – பாலைநிலப்பறை. இங்கு ஊரவர் வாய்ப்பறையாகவும் நாக்கடிப்பாகவும் முழங்கி அவர் தூற்றும் ஆரவாரத்திற் காட்டிலும் அங்கு எயினர் பறையொலியைத் தலைமகள் போக்யமாகக் கொண்டபடி என்னே! என்கிறாள் போலும்.
‘நெடுங்காலமும்’ என்ற முற்றும்மை- மிகுதி விளக்குவது. ‘கண்ணன் நீண் மலர்ப்பாதம்’ என்றது த்ரிவிக்ரமாவதார காலத்தில் நீண்டமைபற்றி யென்னலாம். அன்றி, திரு வடிகட்கு நீட்சியாவது- அன்பர் மனத்தில் உடனே சென்று சேர்தலுமாம்: மான் = உவமையாகு பெயர்; மடநோக்கிற்கு உவமை. அவள் தன்னையும் தோழியரயும் விட்டுப்பிரிந்த தனிமையால் மருண்ட மான்போலே எப்புறத்தும் விழித்துப் பார்ப்பளென்பது கருதி ‘இளமான்’ என்றாள்.
இப்பாட்டுக்கு ஸ்லாபதேசப்பொருள்- செல்லுதற்கரிய ஸம்ஸார மார்க்கத்தில் ஆழ்வார் அளவு கடந்த பக்தியோடு நடத்தலை யறிந்த ஞானிகள் அரிதென்று பாராட்டிக் கூறும் வார்ததையாம். ‘இளமான்’ என்று பருவத்தையும் பெண்மையையுங் குறித்தலால் புதுமையான அடிமையைப் பூண்ட விசேஷபக்தியோடு கூடிய அறிவையுடைய ஆழ்வார் என்றபடி. ‘தொடுங்காலொசியுமிடை’ என்றது பக்திகார்யமான வைராக்யத்தின் முதிர்ச்சியைத் தோற்றுவிக்கிறது. “,இடையழ கென்பது ஒன்றும் பொறாத வைராக்யத்தை” என்பர். அழகிய மணவாளசீயர். “அருவினையேன் நெடுங்காலமும் கண்ணன் நிண்மலர்ப்பாதம் பரவிப்பெற்ற’ என்றதனால், பல பிறப்புகளிற் செய்த தவம் ஞானம் யோகம் என்பவற்றில் தீவினை யொழிந்தாலன்றி இவர் பக்கம் நம்முடையவரென்று அபிமானந்தோன்றாதென்று, தமக்கு அது ஸித்தித்த அருமைகாட்டப்பட்டதாகும். சென்ற சூழ்கடம்- இவர் இப்படி பக்தியோடு கூடி யொழுகுகிற ஸம்ஸாரமாகிய பெருங்காடானது. (தொடுங்காற் சிலையா இத்யாதி.) வலிய பஞ்சேந்திரியங்கள் பறைபறைந்தாற்போல ப்ரஸிக்திபெற்ற ஆடம்பரமுடையது என்றவாறு மிகக் கொடியவை யென்று ப்ரஸித்திபெற்ற பஞ்சேந்திரியங்கள் ஸ்வரூபஹாநியை விளைக்குமிடமான இவ்விருள் தருமாஞாலத்திலே கிடந்து துடிக்கிறேனே! என்று ஆழ்வார் தம் துயர¬ அந்யாபதேசத்தாலே அருளிச் செய்தாராயிற்று..
English Translation
Oh, the sinner that I am My fragile fawn-like daughter who has for long been worshipping Krishna’s feet has gone. The desert that surrounds us is filled with terrible bow-wielding hunters. Cattle stealers, murderers and youthful swift runners whose drums bear all night.
