(2482)
பனிப்பியல் வாக வுடையதண் வாடை,இக் காலமிவ்வூர்
பனிப்பியல் வெல்லாம் தவிர்ந்தெரி வீசும், அந்தண்ணந்துழாய்
பனிப்புயல் சோரும் தடங்கண்ணி மாமைத்தி றத்துக்கொலாம்
பனிப்புயல் வண்ணண்,செங் கோலொரு நான்று தடாவியதே?
பதவுரை
| பனிப்பு இயல்பு ஆக உடைய |
– |
குளிரச் செய்வதையே இயற்கை தொழிலாகவுடைய |
| தன் வாடை |
– |
குளிர்ந்த காற்றானது |
| இ காலம் |
– |
இப்போது மாத்திரம் |
| இ ஊர் |
– |
இவ்விடத்தில் மாத்திரம் |
| பனிப்பு இயல்பு எல்லாம் தவிர்த்து |
– |
குளிரச்செய்வதாகிய (தன்னுடைய) இயற்கையை முழுதும் விட்டு |
| அம் தண்ணம் நுழாய் |
– |
அழகிய குளிர்ந்த (அவனது, திருத்துழாயின் விஷயமாக (ஆசைப்பட்டு) |
| பனிபுயல் சோரும் |
– |
மழை துளித்தலை யுடைய மேகம்போல நீர் சொரிகிற |
| எரி வீசும் |
– |
வெப்பத்தை வீசுகின்றது; (இவ்விதமாக) |
| பனி புயல் வண்ணன் |
– |
குளிர்ந்த காளமேகம் போன்ற தன்மையையுடைய எம்பெருமானது |
| செங்கோல் |
– |
(என்றும் மாறாத) கட்டளை |
| ஒரு நான்று தடாவியது |
– |
இவ்வொரு காலத்தில் கோணலாய்ப் போனது, |
| தட கண்ணி |
– |
பெரிய கண்களையுடைய |
|
இவளது |
||
| மாமை திறத்து கொல்லும் |
– |
மேனி நிறத்தை யழிப்பதற்கோ போலும் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – வாடைக்கு வருந்தி மாமையிழந்த நாயகியின் நிலைமையைக் கண்டு தோழி இரங்கிக் கூறும் பாசுரம் இது. எல்லாருடையவும் எவ்வகையான தாபங்களையும் தணிப்பதையே இயற்கையாகவுடைய மந்தமாருதாமனது இப்பொழுது இவ்வூரில் இவளை எரிக்கின்றது; எரிப்பது நெருப்பின் தன்மையேயன்றிக் காற்றின் தன்மையானது; குளிரப் பண்ணுவதையே இயற்கையாகவுடைய காற்றுக்கு இப்படி நிலைமை மாறுபட்டதற்கு என்ன காரணமிருக்கும்!” இவளது நிறத்தை அழிக்கவேணுமென்று கருதிய எம்பெருமான் தனது செங்கோள்மையை மாறுபடுத்தி வாடையை வேறுபடுத்தி அனுப்பியிருக்கிறான் தேபாலும்!; இன்ன இன்ன வஸ்துக்கள் இன்ன இன்ன தன்மையை யுடையனவா யிருக்க வேண்டும் என்று ஆதியிலே எம் பெருமான் ஒரு வரம்பு கட்டி வைத்திருக்கிறான்; அதன்படியே குளிர்ச்சியைத் தன்மையாவுடைத்தா யிருக்கக் கடவுதான காற்று இப்போது எரிச்சலைத் தன்மையாகக்கொண்ட தென்னில், எம்பெருமான் தான் செய்திருந்த வ்யவஸ்தையைத் தானே மாறுபடுத்தியிருக்க வேண்டும்; ‘மாந்தரும் பராங்குச நாயகிக்குத் தாபத்தை உண்டாக்கக்கடவது’ என்று ஸங்கல்பித்தனன் போலும்! என்று தோழி இரங்குகின்றாள்.
எம்பெருமானைச் சேர்வதற்கும் காலவிளம்பரம் பொறாமல் விரைகின்ற ஆழ்வார் தமக்கு இவ்வுலகப் பொருள் யாவும் வெறுப்பு விளைக்கின்றன என்று ஸ்ரீமதுரகவி போல்வார் சொல்லும் பாவனையாக ஆழ்வார் தமது நிலைமையை வெளியிட்டுக் கொள்கிறரென்பது இதற்கு உள்ளுறை பொருளாக உணரத்தக்கது. இவ்வுலகத்தவரான பிராகிருதர்கட்கு இன்பந்தரும் பொருள்கள் ஆழ்வார்க்குத் துன்பந் தருவனவாகத் தோற்றுதல் முன்னிரண்டிகளிற் குறிப்பிடப்பட்டது. இங்குள்ள எல்லாரையும் ஸுகப்படுத்துகின்ற சப்தாதி விஷயங்கள் திருக்குருகூரில் இவ்வாழ்வார்க்கு மாத்திரம் வெறுப்புக்கு இலக்காயிருக்கின்றன என்றவாறு.
‘தண்வாடை’ என்றாவது, ‘பனிப்பியல்பாக வுடையவாடை’ என்றாவது சொன்னால் போதுமே, இரண்டு விஷேணங்களு மிட்டது ஏன்? எனில்; தொழிற்பண்பையும் குணப்பண்மையும் கருதியென்க. பஞ்சபூதங்களுள் ஒன்றாகிய காற்று மற்றொன்றாகிய அக்நியின் தன்மையை அடைந்த இந்த அநீதி மற்றெப்போதுமில்லை, மற்றெவ்விடத்துமில்லை; அவனைப் பிரிந்திருக்கிற இக்காலத்திலே, பிரிந்து தனியிருக்கிற இவ்வூரிலே- என்பது தோன்ற ‘இக்காலமிவ்வூர்’ என்றது. அவ்வாடை முன்பு இவளுக்கே இனியதாயிருந்ததென்பது பெரிய ‘இக்காலம்’ எனப்பட்டது. இப்பராங்குச நாயகியின் ஆற்றாமையைக் கண்ட ஊராரயும் வாடை பித்தலால் ‘இவ்வூர், எனப்பட்டது. கருடாழ்வானைக் கொண்டு நெஞ்சைக் கவர்ந்து போனான் ‘வாடையையனுப்பி மேனி நிறத்தைக் கவர்ந்து போகக் கருதி வாடையைக் கொடியதாகுமாறு சங்கற்பித்து ஏவியிருக்கக்கூடும் என்பது தோன்ற ‘மாமைத்திறத்துக்கொலாம் என்றது.
புயல்வண்ணன் = மேகம்போற் கரியவடிவத்தையும், அதுபோலத் தபாந்தீர்த்து ப்ரத்யபகார மெதிர்பாராமல் உதவுகிறதண்மைக் குணத்தையும் உடையவரென்று பேர் பெற்றிருக்கும் பெருமான் இப்பொழுது விருத்த ஸங்கல்பஞ் செய்துகொண்டு வருத்தத் தொடங்கினானே! என்று குறித்தான். புயல்வண்ணனா யிருந்துவைத்து இப்படி இவன் வருத்துகின்றானே!” காற்றின் ஸ்வபாவத்தை மாத்திரம் மாற்றினா னல்லன; தன் ஸ்வபாவத்தையும் மாற்றிக் கொண்டானே! என்கை.
“நெடுங்கடன் நிற்பதும் ஞாயிறு காய்வதும் நிற்றலும் கால், ஒடுங்கி நடப்பதும் தண்கார் பொழிவதும் ஊழிதனில், கடுங்கனல்பற்றிச் சுடாதே யிருப்பதும் தும்பைபுனைந்து, அடுங்கனலாழி, அரங்கேசர் தந்திருவாணையினே” (திருவரங்கத்துமாலை – 15.) என்றபடி உலகத்தில் ஸ்ருஷ்டிப் பொருள்கள் யாவும் புடை பெயர்தல் எம்பெருமானது கட்டளைப்படியேயாதலால், இங்கு வாடையில் குணம் மாறினதை எம்பெருமானது ஆஜ்ஞை கோணுதவினாலாகியதெனக் குறித்தாள். ‘ஒரு நான்று தடாவியரே’ = எம்பெருமானுடைய செங்கோள்மை ஒருநாளும் நிலைகுலைவதன்று; அப்படிப்பட்டது இவள் நிறத்தையழிப்பதற்காக இவ்வொரு பொழுது நிலைகுலைந்தது!. கன்று; அப்பபடிப்பட்டது இவள் நிறத்தையழிப்பதற்காக இவ்வொருபொழுது நிலைகுலைந்தது!.
இதனைத் தோழி பாசுரமாகக் கொள்வதன்றியே தாய் பாசுரமாகக் கொள்வதுமண்டு.
‘தண்ணம்’ என்பதில் அம்- பண்புப்பெயர் விகுதியுமாம், சாரியையுமாம். தடாவியது- கோணிற்று; தொல்காப்பியம் சொல்லதிகாரம் உரியியலில் (23)
“தடவென்கிளவி. *கோட்டமுஞ்செய்யும்” என்றதனால் ‘தட’ என்னும் உரிச்சொல் வளைவையும் உணர்த்துவதாதலால் அதனடியாகவே ‘தடாவியது’ என்ற சொல் பிறந்த தென்னலாம்.
*கோட்டழம் செய்யும்- கோணல் என்னும் பொருளையும் உணர்த்தும் என்றபடி.
English Translation
This cool-fragrant-Tulasi-desiring girl’s large eyes rain fears. The cool breeze with its chilling nature, breaking all bounds of time, place and quality, blows hot everywhere. Has the sceptre of the cloud-hued lord changed how?
