(2481)

(2481)

தனிநெஞ்சம் முன்னவர் புள்ளே கவர்ந்தது, தண்ணந்துழாய்க்

கினிநெஞ்ச மிங்குக் கவர்வது யாமிலம், நீநடுவே

முனிவஞ்சப் பேய்ச்சி முலைசுவைத் தான்முடி சூடுதுழாய்ப்

பனிநஞ்ச மாருத மே,எம்ம தாவி பனிப்பியல்வே?

பதவுரை

தனி நெஞ்சம்

(என்னோடு) உறவற்று நீங்கிய (என்) மனம் முழுவதையும்
முன்

முன்னமே
அவர் புள்ளே

அப்பெருமானுடைய கருடப் பறவையே
கவர்ந்தது

(பிறர்க்கு மிச்சமில்லாதபடி) கவர்ந்துகொண்டு போயிற்று. (ஆதலால்,)
தண் அம்  துழாய்க்கு

(அப்பெருமானுடைய) குளிர்ந்த அழகிய திருக்குழாய்க்கு
கவர்வது

கவர்ந்து கொண்டு போவதற்கு உரியதான
நெஞ்சம்

வேறொரு நெஞ்சை
இனி இங்கு யாம் இலம்

இனி இவ்விடத்தில் யாம் உடையோ மல்லோர், (அப்படியிருக்க.)
முனி

கோவிக்குத் தன்மையுள்ள
வஞ்சம் பேய்ச்சி

வஞ்சனையையுடைய பேர்மகளான பூதனையினுடைய
முலை

(விஷந்தடவின) முலையை
சுவைத்தான்

(பசையற) உருசி பார்த்து உண்ட கண்ணபிரானுடைய
முடிசூடும் துழாய்

திருமுடியில் சூடப்பட்ட திருத்துழாயினது
பனி நஞ்சம் மருதமே

குளிச்சியை யுடைய விஷம் போன்ற காற்றே!
நீ நடுவே

நீ இடையிலே (புகுந்து)
எம்மது ஆவி பனிப்பு

(ஏற்கனவே நோவு பட்டிருக்கிற) எம்முடைய உயிரை மேலும் நடுங்கச் செய்வது
இயல்பே.

(உனக்குத்தக்க) இயற்கையோ? (தகாது.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனைப்பிரிந்து ஆற்றாத நாயகி வாடைக்கு வருந்திக்கூறும் பாசுரமிது பிரிந்துபோன நாயகன்பின்னே தன் மனம் போய்விட அதனையிழந்த நாயகி, அந்த நாயகனுடைய திருத்துழாய் மாலையில் தனக்கு உண்டான ஈடுபாட்டால் தளர்ந்து நிற்கும் பொழுது அத்திருத்துழாயின் ஸம்பந்தத்தையுடைய காற்று வந்து வீசி வருத்தப்படுத்த; அதனை ஸஹித்திருக்கமாட்டாமல் ‘நெஞ்சை யிழந்து வருந்துகிற எம்மை நீயும் வந்து பகைவர்போல வகுத்துதல் தகாது’ என்று அக்காற்றைக் குறித்துக் கூறுகின்றான்.

கீழ்ப்பாட்டில் “அப்புள்ளின் பின்போன தனி நெஞ்சமே” என்று பிரமாணபூர்வமாக எம்பெருமான் பக்கலிலே தம் மனம் சென்றமையை அருளிச் செய்தார். அப்படி அப்பெருமான் பின்னே சென்ற தமது மனத்திற்கு இவ்வுலகத்திலுள்ள போக்ய யதார்த்தங்களொன்றும் ப்ரியமாகவல்லாமல் ஹிம்சையாகவேயிருக்கும் படியை இதனால் தெரிவிக்கிறரென்றுணர்க.

தனிநெஞ்சம் முன்னவர்புள்ளே கவர்ந்தது = “அப்புள்ளின் பின்போன தனிª நஞ்சமே” என்று கீழ்ப்பாட்டில் சொன்ன விஷயம் திடம் என்பது தோன்ற அவ்விஷயமே மீண்டும் அநுவதிக்கப்படுகின்றது. எம்பெருமானை யறிவதற்குச் சிறந்த பிராமணமாகிய வேதத்தின் வழியிலேயே என்மனம் ஊன்றி நின்றுவிட்டது என்கை. தண்ணந்துழாய்க்கு இனி நெஞ்சமிங்கு கவர்வது யாமிலம் = திருத்துழாய் எப்படி பசுகுபசுகென்று மனத்தைக் கவர்வதாயிருக்கின்றதோ அப்படி மனத்தைக் கவரவல்ல மாயையென்றும் பிரகிருதியை இங்கு ‘தண்ணந்துழாய்’ என்ற சொல்லால் குறிக்கப்பட்டதாகும். வேதப்ரமாண மூலமாக எம் பெருமானிடத்துச்சென்ற என் மனத்தை இனிப் பிரகிருதி ஆக்கிரமித்துக்கொள்ள இயலாது என்றபடி.

ஆழ்வார் எம்பெருமானைப்பிரிந்து வருந்தியிருக்கும் பொழுது எம்பெருமானுடைய ஸம்பந்தமுள்ள வஸ்துக்களெல்லாம் உத்தீபகமாயிருக்குமாதலால் ‘அந்தோ! ஏற்கெனவே புண்பட்டிருக்கிற என்னைத் திருத்துழாயும் புண்படுத்தவேணுமோ? திருத்துழாய்க் காற்று இப்போது எதுக்கு வீசுகின்றது!; அவனும் நானும் கூடியிருக்கும்போதன்றோ இதுபோக்யமாவது; இப்போது வருத்தத்திற்கே ஹேதுவாகின்றதே!’ என்று திருத்துழாயைக் குறித்தே சொல்லுகிறாராகவுமாம். ஸம்ச்க்ஷே காலத்தில் இன்பந்தரும் பொருள்யாவும் விச்வேஷகாலத்தில் துன்பந்தருதலால் திருத்துழாய்க்கும் அதனோடு ஸம்பந்தப்பட்ட காற்றுக்கும் அஞ்சுவது பொருந்தும்.

கவர்வது + யாம், கவர்தியாம்; “யுவ்வரினிய்யாம்” என்பது நன்னூல்.

பேய்ச்சி முலை சுவைத்த வரலாறு- ஸ்ரீ கிருஷ்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து  வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும் பொருட்டுப் பல அசுர்களை யேவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி  நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ணசிசுவை யெடுத்துத் தனது நஞ்சுதீற்றிய முலையைக்கொடுத்துக்கொல்ல முயல பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்து பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி, அவள் பேரிரைச்சலிட்டு கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

இவ்வரலாற்றை இவ்விடத்தில் அநுசந்தித்து அப்படிப்பட்டவன் முடிசூடு துழாய்ப்பனி  கஞ்ச மாருதமே! என்று விளிப்பதன் கருத்து யாதெனில்; வஞ்சகம் செய்ய வந்தவர்களின் உயிரை மாய்ப்பதே திருத்துழாய் மார்பனுடைய காரியம்; நீ அப்படியல்லாமல் அன்பு பூண்டவர்களின் உயிரையும் மாய்க்கின்றாயே! இது தகுமோ? என்றவாறு.

எம்மதாவி பன்னிப்பியல்வே!= நெஞ்சே எம்மைவிட்டு அவர் பக்களிலே போனாப்போலே உயிரும் போய்விடலாம்; அவ்வளவுக்குத் துணிவில்லாத இந்தப் பாழும் உயிர்- என்பது தோன்ற ‘எம்மது ஆவி’ என்கிறார் போலும். பனிப்பு இயல்பே = எல்லாருடைய தாபத்தையும் தணிப்பதற்கு உரிய நீயோ நெஞ்சிழந்தாரை இப்படுகொலை செய்வதற்கு ஏற்பட்டாய்? இது உனக்குத் தகாது என்றவாறு. பனிப்பு =பு விகுதிபெற்ற தொழிற்பெயர் சற்று ஏகாரம் எதிர்மறை. இயல்பு அன்று என்றவாறு.

இப்பாட்டில், எம்பெருமானை யுத்தேசித்து முதலடியில் ‘அவர்’ என்று பன்மையாகக் கூறி மூன்றாமடியில் ‘முலை சுவைத்தான்’ என்று ஒருமையாகக் கூறினது வழுவாகாதோ? எனின்; ஆகாது. வழுவமைதியாம்: ஒருமைப் பன்மை மயக்கம். எம்பெருமான் பிரிந்துபோனபடியைக் கருதிக் கோபம் தோற்றுமாறு முதலில் ‘அவர்’ என்று உயர்த்திக் கூறினார்; அப்பெருமான் முன்பு செய்த (பூதநா நிரஸநமாகிற) உபகாரத்தைக் கருதிக் கோபம் தணிந்து மூன்றாமடியில் ‘சுவைத்தான்’ என இயல்பாக ஒருமையாற் கூறினான் என்க.

English Translation

O Cool Breeze wafting the sweet-poison-fragrance of the Tulasi wreath from the Lord who sucked the angry deceitful ogress beast! The Lord’s Garuda bird already stole my lonely heart. Now I have none that the cool Tulasi can steal, Is it proper for you to enter and chill my soul?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top