(2463)
கலந்தானென் னுள்ளத்துக் காமவேள் தாதை
நலந்தானு மீதொப்ப துண்டே – அலர்ந்தலர்கள்
இட்டேத்து மீசனும் நான்முகனும், என்றிவர்கள்
விட்டேத்த மாட்டாத வேந்து.
பதவுரை
| காம வேள் தாதை |
– |
மன்மதனுக்குத் தந்தையானவனும் |
| அலர்ந்த அலர்கள் இட்டு ஏத்தும் ஈசனும் |
– |
மலர்ந்த பூக்களை ஸமர்ப்பித்துத் துதி செய்கின்ற சிவபிரானென்ன |
| வேந்து |
– |
தேவாதிதேவன் |
| என் உள்ளத்து |
– |
எனது நெஞ்சிலே |
| கலந்தான் |
– |
சேர்ந்து கொண்டான் |
| நான்முகனும் |
– |
பிரமனென்ன |
| என்ற இவர்கள் |
– |
என்கிற (சிறந்த) தேவர்களும் |
| விட்டு ஏத்தமாட்டாத |
– |
நன்றாய்த் துதித்து முடிக்க முடியாதவனுமான |
| ஈது ஒப்பது நலம் தானும் உண்டேர் |
– |
இந்த நன்மையோ டொத்த நன்மை வேறுண்டோ? (இல்லை) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நான் பெற்ற நன்மை வேறு யாரும் பெறமுடியாது, இதுவரையில் நான் பெற்ற நன்மைகளுள் இப்போது பெற்ற நன்மைக்கு ஈடானதும் வேறொன்றில்லை, அரன் அயன் என்னும் படியான மேம்பட்ட தெய்வங்களாலும் துதித்துத் தலைக்கட்டப் போகாத பெரும்புகழ் படைத்த பெருமான் என் உள்ளத்தோடு ஒரு நீராகக் கலந்து கொண்டானே! இஃது என்ன நன்மை! என வியக்கிறார்.
காமவேள் தாதை – மன்மதனுடைய அம்ஸமாகிய பிரத்யும்நனுக்கு கண்ணபிரான் தந்தையாதல் அறிக. ‘காமன்‘ என்பது வடசொல் ‘வேள்‘ என்பது தமிழ்ச் சொல், இரண்டையும் சேரப் பிரயோகித்த விடத்து ஒரு சொல்லை விசேஷணமாகவும் மற்றொன்றை விசேஷ்யமாகவுங் கொள்ளலாம், ஆசையை விளைக்குமவனான மன்மதன் என்க தாதை –தாத அலர்ந்த + அலர்கள், அலந்தலர்கள், தொகுத்தல், ‘என்றிவர்கள்‘ என்றிவிடத்து மிதுவே.
English Translation
Even Siva and Brahma offer flowers and worship, but can never praise the lord’s glories fully, He is Madana’s father. He is my heart, can there be a better fortune than this?
