(2442)

(2442)

மனக்கேதம் சாரா மதுசூதன் றன்னை,

தனக்கேதான் தஞ்சமாக் கொள்ளில்,- எனக்கேதான்

இன்றொன்றி நின்றுலகை யேழாணை யோட்டினான்,

சென்றொன்றி நின்ற திரு.

 

பதவுரை

மதுசூதன் தன்னை

மதுவென்னும் அசுரனைக் கொன்றொழித்த பெருமானை

மனம் கேதம்

மனவருத்தங்கள்

சாரா

வந்துசேராவாம்

ஒன்றி நின்று

பொருந்தி நின்று

ஏழ் உலகை

ஸப்தலோகங்களிலும்

ஆணை ஒட்டினான்

(தன்னுடைய) செங்கோலைச் செலுத்துமவனான) எம்பெருமான்

இன்று

இப்போது

தனக்கே தஞ்சம் ஆ தான் கொள்ளில்

தனக்கே ரக்ஷகனென்று ஒருவன் கொண்டால்

சென்று

(நிர்ஹேதுகமாக என்னிடம்) வந்து

ஒன்றி நின்ற திரு

(என்னிடத்தில்) பொருந்தி நிற்பதாகிய செல்வமானது

எனக்கே தான்

என்னொருவனுக்கொழிய வேறொருவற்குமில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் நிர்ஹேதுகமாக வந்து விஷயீகரிக்கப் பெறும்படியான பாக்கியம் தமக்கேயுள்ளதென்கிறார். ‘மது‘ என்னுமசுரனைக் கொன்றொழித்த பெருமானே தஞ்சம் என்றிருந்தால் மனத்தில் எவ்விதமான துன்பமும் வந்து சேரமாட்டாது என்றார். முன்னடிகளில். ‘அப்படி நீர் மதுசூதனையே தஞ்சமாகக் கொண்டிருக்கிறீரோ? என்று சிலர் கேட்க, அப்பெருமானை நான் தஞ்சமாகக் கொள்ளவேண்டும்படி அவன் எனக்கு ஒரு காரியம் வைக்கவில்லை அவன்றானே என்னெஞ்சில் வந்து குடிகொண்டான், இப்படிப்பட்ட பாக்கியம் எனக்கே அஸாதாரணமாக அமைந்தது என்றார் பின்னடிகளில்.

மனக்கெதம் – ‘***‘ என்ற வடசொல் தொடரின் விகாரமாகக் கொண்டால் ‘மனம் கேதம்‘ என்று பிரியும். மனவருத்தம் என்றபடி, அன்றியே, ‘மனக்கு ஏதம்‘ என்றும் பிரிக்கலாம். ‘மனக்கு‘ என்றதில் அத்துச்சாரியை வரவில்லையென்க. “மனக்கின்பம்படமேவும்“ என்று திருவாய்மொழியிலும் பிரயோகிக்கப்பட்டது. 1. “மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்“ என்றனர் பிறகும். ஏதம் – குற்றம்.

மூன்றாமடியின் முதற்பதம் ‘நின்று‘ என்பதாகவே பலரும் ஓதுவர்கள், பல அச்சுப்பிரதிகளிற் பாடமுமிதுவே. இஃது இடையில் மாறுபட்ட பாடமாகும். “இன்றொன்றி நின்றுலகை“ என்றே பூர்வவ்யாக்யான பாடம் “ஸமஸ்த லோகத்தையும் விடாதே நின்று தன் ஆஜ்ஞை செல்லும்படி கடத்தினவன் தானேவந்து அபிநிவிஷ்டனான ஸம்பத்து எனக்கேயுள்ளது, அது தானும் இன்று“ என்ற பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தி காண்மின். மோனையின்பமும் பொருட்பொருத்தமும் இப்பாடத்திற்கே இணங்கும். பாசுரத்தை யெழுதும்போது அடிகளில் நிறுத்தாமல் மேலடியோடு ஸந்திசெய்தே யெழுதுகிற வழக்கப்படி பழைய எட்டுப் பிரதிகளில் “எனக்கேதானின்றொன்றிநின்றுலகை“ என்றெழுதி யிருந்த்தன்பயனாக “நின்றொன்றி நின்றுலகை“ என்றபாடம் நிகழ்ந்தது போலும்.

“ஏழுலகை ஒன்றிநின்று ஆணையோட்டினான் சென்று ஒன்றி நின்ற திரு இன்று எனக்கேதான்“ என்று அந்வயிப்பது. எவ்வுலகத்தும் தன்னுடைய செங்கோலே செல்லும்படியாகத் தனியாக புரிகின்ற திருமால் தானே யெழுந்தருளிப்பொருந்தி நெஞ்சிலே வாழும்படியான செல்வம் இன்று எனக்கே வாய்த்தது என்றவாறு.

 

English Translation

Take refuge in Madhusudana for his own sake, no grief will approach.  He stands and commands the seven worlds.  His abiding glory is with me today.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top