(2430)

(2430)

மலையாமை மேல்வைத்து வாசுகியைச் சுற்றி,

தலையாமை தானொருகை பற்றி, – அலையாமல்

பீறக் கடைந்த பெருமான் திருநாமம்,

கூறுவதே யாவர்க்கும் கூற்று.

 

பதவுரை

மலை

மந்தரபர்வதத்தை

ஆமை மேல் வைத்து

கூர்மரூபியான தன் மேல்வைத்து

வாசுகியை

வாஸுகிநாகத்தை

சுற்றி

(கடை கயிறாகச்) சுற்றி

அலையாமல்

நீர் வெளியில் புரளாமல்

பீற

(அமுதம்) புறப்படும்படியாக

கடைந்த

(கடலைக்) கடைந்தருளின

பெருமான்

எம்பெருமானுடைய

ஆமை

கூர்மரூபியாகத் திருவ்வதரித்த தானே

ஒரு கை பற்றி

(மலையினுச்சியை) ஒருகையாலே பிடித்தமுக்கி

திருநாமம்

திருநாமங்களை

கூறுவதே

வாய்விட்டுச் சொல்லுவதே

யாவர்க்கும்

அனைவர்க்கும்

கூற்று

வாய்ப்பேச்சாகக் கடவது

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “வானவரைக் காப்பான்மலை“ என்றார், அப்படி வானவரைக் காத்தருள்வதற்காகச் செய்தருளின செயல்களில் ஒன்றை அருளிச்செய்கிறாரிதில்.

துர்வாஸ மாமுனிவர் தேவேந்திரனுக்கு அன்புடன் அளித்திட்ட பூமாலையை அவன் அலக்ஷியஞ் செய்ததுகண்டு ‘இப்படி செல்வச்செருக்குற்ற உன்னுடைய செல்வமெல்லாம் கடலில் ஒளிந்து போகக்கடவன‘ என்று சபிக்கவே, அப்படியே போய்விட, அசுரர் வந்து பொருது அமரை வென்றுவிட்டனர். பிறகு தேவர்களெல்லாரும் திரண்டுவந்து எம்பெருமானைச் சரணமடைய, திருமால் திருவருள்கூர்ந்து கடல்கடைந்து அமுதமளித்து வாழ்வித்தனன் என்பது பிரஸித்தம். அப்போது மந்தரமலையை பூட்டிக் கடைந்தனன். மந்தாகிய மந்தரமலை கடவிலுள்ளே அழுந்தி விட, தேவர்கள் வேண்டுகோளினால் திருமால் பெரியதோர் ஆமை வடிவமெடுத்து அம்மலையின்கீழே சென்று அதனைத் தனது முதுகின்மீது கொண்டு தாங்கி அம்மலை கடலில் அழுந்திவிடாமற் கடைதற்கு உபயோகமாம்படி அதற்கு ஆதாரமாக எழுந்தருளியிருந்தனன் என்பத்தும் அறியத்தக்கது.

“தலையாமை தானொருகைபற்றி“ என்ற இரண்டாமடியை ‘ஆமை (யான) தான் ஒருகை தலைபற்றி‘ என்று அந்வயித்து உரைப்ப. முதலில் கடல் கடையும்போது வாஸுகியின் வாலைப்பிடித்துக்கொண்ட தேவர்களும் தலையைப் பிடித்துக்கொண்ட அசுரர்களும் ஆகிய இருதிறத்தாரும் அதனை வலியப் பிடித்திழுத்துக்கடைய வல்லமையில்லாதவராய்நிற்க, அது நோக்கி அத்திருமால் தான் ஒரு திருமேனியைத்தரித்துத் தேவர்கள் பக்கத்திலும் வேறொரு திருமேனியைத் தரித்து அசுரர் பக்கத்திலும் நின்று கடைந்தருளினமை கூறப்படுகின்றதென்க. மேலே கொந்தளியாதபடி மலையினுச்சியை ஒரு கையா லமுக்கினபடியைக் கூறுகின்ற தென்றலுமாம்.

ஆகவிப்படி பரோபகாரமே போதுபோக்கான பெருமானுடைய திருநாமங்களை வாயாரக் கூறுவதே வாய்படைத்த பலனாகுமென்றாராயிற்று.

 

English Translation

The Lord came as a tortoise and placed a mountain on his back, rolled a serpent over it and held it without falling, then churned the ocean for ambrosia. Speaking his names alone is worthwhile speech.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top