(2407)

(2407)

மற்றுத் தொழுவா ரொருவ ரையும் யானின்மை,

கற்றைச் சடையான் கரிகண்டாய், எற்றைக்கும்

கண்டுகொள் கண்டாய் கடல்வண்ணா, யானுன்னைக்

கண்டுகொள் கிற்கு மாறு.

பதவுரை

கடன் வண்ணா

கடல்போன்ற திருநிறமுடைய பெருமானை!
யானை தொழுவார் மற்று ஒருவரையும் இன்மை

அடியேனால் ஆச்ரயிக்கப்படும் தெய்வம் (நீதவிர) வேறு எதுவுமில்லையென்னும் விஷயத்தில்
கற்றை சடையான்

சேர்த்துக்கட்டின ஜடையையுடையனான ருத்ரன்
கரி கண்டாய்

ஸாக்ஷிகாண்
யான்

இப்படி அநந்ய பக்தனை அடியேன்
உன்னை

உன்னை
எற்றைக்கும்

எந்நாளும்
கண்டு கொள்கிற்கும் ஆறு

ஸேவித்துக் கொண்டேயிருக்க வல்லேனாம்படி
கண்டுகொள்

கடாக்ஷித்தருள வேணும்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஆழ்வார், தம்முடைய அநந்யபக்தத்வமாகிற நிஷ்டையை விண்ணப்பஞ்செய்து “அடியேனுக்கு இந்த நிலைமை நீடித்திருக்கும்படி கிருபை செய்தருளவேணும்“ என்கிறார். உலகில் மனிசரெல்லாரும் பெரும்பாலும் தேவதாந்தரங்களையே தொழுது அழிந்துபோகின்றனர், அப்படி அடியேன் தேவதாந்தரபஜனம் பண்ணுமவனல்லேன், எம்பெருமானே! உன்னைத்தவிர்த்து வேறு எந்த தெய்வத்தையும் நான் ஆச்ரயணீய தேவதையாகக் கொள்வதில்லை, இவ்விஷயத்திற்கு யார் ஸாக்ஷியாவன், இதன் கருத்து யாதெனில், 1. “பெண்ணுலாஞ் சடையினானும் பிரமனு முன்னைக்காண்பான், எண்ணிலா வூழியூழி தவஞ்செய்தார்“ என்கிறபடியே – ஈச்வரத்வப்ரமத்திற்கு விஷயபூதனான சிவபிரான் தானும் ஸாதநாநுஷ்டாந நிஷ்டனாயிருக்கும்படிக்கு அறிகுறியாகச் சடைபுடைந்துகொண்டு உன்னை உபாஸியாநிற்க, நான் உன்னையொழிய வேறொரு க்ஷுத்ரதேவதையைப் பணிவேனா வென்கை.

இவ்வாழ்வார் திருமழிசையில் யோகநிலையில் நின்று திருமகள் கொழுநனை த்யானித்துக் கொண்டிருக்கையில், ஒருநாள் ஆகாச மார்க்கத்தில் எருதின்மீது ஏறிக்கொண்டு பார்வதீ பரமேச்வரர் செல்லுகையில், பார்வதியானவள் இவரது தவவொழுக்கத்தைக் கண்டு கொண்டாடித் தன் கணவனை நோக்கி “இவன் ஆரோ?“ என வினவ, “இம்மஹாநுபாவன் நம்மைவிட்டு நாராயணனுக்கு அடிமைப்பட்டவன்“ என்று ருத்ரன் சொன்னவளவிலே அம்பிகை, “இப்பெரியவனுக்கு நாமும் தரிசனம் தந்து ஏதேனும் வரமளித்துப்போவோம்“ என்றுகூற, அவளது விருப்பத்தின்படிசெய்ய ஸம்மதித்துச் சிவபிரான் இவரெதிரேவந்து தோன்றினன், இவர் அச்சிவனைப் பார்த்தும் பாராதவர்போல உபேக்ஷித்து ஒரு கந்தைத் துணியைத் தைத்துக்கொண்டு கார்யாந்தர பர்ராய் விமுகராயிருக்க, அதுகண்ட சங்கரன் “உனக்கு அருள்செய்ய வந்த நம்மை நீ அநாதரஞ்செய்தல் தகுதியா?“ என்ன, ஆழ்வார் “உன்னால்  ஆக வேண்டிய எனக்கு ஒன்றுமில்லை, ஆதலின் நான் உதாஸீநனாயிருந்தேன்“ உனக்கு அபீஷ்டமான வரம்வேண்டிப் பெற்றுப்போவாய்“ என்று நிர்ப்பந்திக்க, அநந்தரம் ஆழ்வார் “பரமபதம் அருளவல்லீராயின் அருள்வீர்“ என வேண்டினார். அதற்கு அக்கடவுள் “அது நம்மால் தரத்தக்கதன்று, அது தருதற்கு உரியதேவன் ஸ்ரீமந்நாராயணனே, ஆதலின் வேறுவரம் வேண்டுதி“ என்ன ஆழ்வார் புன்முறுவல் செய்து “அம்முக்தியைப் பெறும் பொருட்டுப் பலகாலம் இவ்வுலகில் உயிர்த்திருந்து பெருந்தவம் புரிதற்கு உபயோகமாக நீண்ட ஆயுளையேனும் அடியேற்கு அளித்தருள்“ என்று பிரார்த்தித்தார். அதுகேட்டுக் கைலாஸபதி “அது கருமா நுஸாரமாக நடப்பதேயன்றி வளர்த்தத்தக்கதன்று, வேறு வேண்டுவதை விளம்புவாய்“ எனன்லும், திருமழிசைப்பிரான் குறுமறுவலோடு இகழ்ச்சியாய் “இவ்வூசியின் பின்னே நூல் வரும்படி வரம் தந்தருளீர்“ என்று விநோதமாகச் சொல்ல, அப்பரிஹாஸ வார்த்தை செவிப்பட்டவுடனே கடுஞ்சினங்கொண்ட நெற்றிக்கண்ணன் “இச்செருக்குடையானை இப்பொழுதே அநங்களைப் போலாக்கிடுவிடுகிறேன்“ என்று தனது நெற்றியிலுள்ள நெருப்புக் கண்ணைத்திறந்து விட்டார், அதில் நின்றும் புகையும் பொறியுமாகக் கிளர்ந்தெழுந்த காலக்நியைக்கண்டு திருமழிசைப் பிரான் சிறிதும் கலங்காமல் “இந்திரன்போல உடம்பு முழுதும் கண்காட்டினாலும் அஞ்சுவேனல்லேன்“ என்று சொல்லித் தம்மு வலத்திருவடியின் பெருவிரலிலுள்ளதொரு கண்ணைத்திறந்துவிட, அதில் நின்றும் ஒரு பெருந்தீ எழுந்து ஊழித்தீயினும் பன்மடங்கு மேலிட்டு அவ்வனலை அடக்கத்தொடங்கிற்று. அவ்வளவில் அரன் அக்கடுநெருப்பை அவிக்கும்படி தனது சடையிலுள்ள பல மேகங்களை ஏவிவிட, அவையும் அங்ஙனமே கல்பரந்த காலத்திற்போலச் சோனைமழை பொழிந்து பெருவெள்ளங்கோக்கவும் ஆழ்வார் சிறிதும் சலியாமல் பகவத் பத்தியிலே ஊன்றியிருந்தார், அதுகண்டு முக்கணமூர்த்தி மிக வியந்து இவர்க்கு “பக்திஸாரர்“ என்று திருநாமஞ்சாத்தி இவரது வைபவத்தைக் கொண்டாடித் தன்னிடத்திற்குத் திரும்பிப்போயினன் என்ற வரலாறு இவ்விடத்தில் ஸ்மரிக்கத்தக்கது இவ்வளவையும் திருவுள்ளம் பற்றியே ஆழ்வார் இங்கு “கற்றைச்சடையான் கரிக்கண்டாய்“ என்கிறார் என்று கொள்ளலாம். கரி – ஸாக்ஷி, நேரில் கண்ணால் பார்த்தவன் என்கை.

இவ்வாழ்வார் “சாக்கியங்கற்றோம் சங்கரனாராக்கிய ஆகமநூ லாராய்ந்தோம்“ என்றபடியே பல மதங்களினுள்ளும் புகுந்து அந்தந்த மதஸ்தராகவே இருந்தவராதலால், இப்படி பல மதங்களிலும் புகுந்து அவையெல்லாம் அஸாரமென்று விட்டொழிந்து ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயத்திற்கு வந்து சேர்ந்ததுபோல், இந்த ஸத்ஸம்ப்ரதாயத்தையும் விட்டு வேறொரு தீயமதத்தில் போய்ச் சேரும்படியான தௌர்ப்பாக்கியம் இவ்விருள் தருமாஞாலத்தின் காரியமாக நமக்கு நேர்ந்துவிடுமோ என்னவோ! அஞ்சி, இந்த நிஷ்டையே நிலைத்திருக்குமாறு கடாக்ஷித்தருள வேணுமென்று பின்னடிகளால் எம்பெருமான் தன்னையே பிரார்த்தித்தாராயிற்று.

English Translation

O Ocean-hued Lord! That I worship none else will be borne out by the mat-haired Siva. Grant that I may remain devoted to you foreover.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top