(2404)
வித்து மிடல்வேண்டுங் கொல்லோ, விடையடர்த்த
பத்தி யுழவன் பழம்புனத்து, – மொய்த்தெழுந்த
கார்மேக மன்ன கருமால் திருமேனி,
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
பதவுரை
|
விடை அடர்த்த |
– |
(நப்பின்னைப் பிராட்டிக்கா) ரிஷபங்களை வலியடக்கினவனும் |
|
பத்தி உழவன் |
– |
(தன் விஷயத்தில் சேதநர்கட்கு) பக்தியுண்டாவதற்குத் தானே முயற்சி செய்பவனுமான எம்பெருமானுடைய |
|
பழம் புனத்து |
– |
(ஸம்ஸாரமென்கிற) அநாதியான கேஷத்ரத்திலே |
|
வித்தும் இட வேண்டும் கொலோ |
– |
(ஸ்வப்ரயத்நமாகிற) விதையை நாம் விதைக்க வேண்டுமோ? (வேண்டா) |
|
(நம் முயற்சியின்றியே தானே பகவத் விஷயத்தில் ருசி விளைந்தால் திருநாட்டுக்குச் செல்லுமாளவும் நாம் எப்படி தரித்திருப்ப தென்றால்) |
||
|
மொய்த்து எழுந்த |
– |
திரண்டு கிளர்ந்த |
|
கார் மேகம் அன்ன |
– |
காளமேகம் போன்ற |
|
கரு மால் |
– |
கரிய திருமாலினது |
|
திரு மேனி |
– |
திருமேனியை |
|
நீர் வானம் |
– |
நீர்கொண்டெழுந்த மேகமானது |
|
நிகழ்ந்து |
– |
எதிரேநின்று |
|
காட்டும் |
– |
காண்பிக்கும் |
|
(போலிகண்டு நாம் தரித்திருக்கலாமென்றபடி.) |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- நாம் அறிந்த நிலைமையிலும் அறியாத நிலைமையிலும் எம்பெருமான் தானே நம்முடைய உஜ்ஜீவநத்திற்கு க்ருஷிபண்ணு மவனாயிருக்க, நாமும் ஸாதநாநுஷ்டாநம் பண்ணவேணுமா, வேண்டா என்கிறார்.
ஸ்ரீவைகுண்டத்திலே எம்பெருமான் நித்யர்களோடும் முக்தர்களோடுங் கூடிப் பரிபூர்ணாநுபவம் பெறாநிற்கச் செய்தேயும் அதனால் அப்பெருமான் சிறிதும் மகிழாது, பல பிள்ளைகளைப் பெற்ற ஒரு தகப்பானார், தனது ஒருமகன் மாத்திரம் தேசாந்தரத்திலிருக்க மற்ற எல்லாப் புத்திரர்களோடுங் கூடி வாழா நின்றாலும் அதனால் மகிழ்ச்சியடையாமல் தேசந்தரத்திலுள்ள புத்திரனது பிரிவையே நினைத்துப் பரிதபிக்குமாபோலே எம்பெருமானும் ஸம்ஸாரிகளான அஸ்மதாதிகளின் பிரிவையே நினைத்துப் பரிதாபமுற்று நம்மோடே கலந்து பரிமாறுவதறகாகக் கரணகளே பரங்களை நமக்குத் தந்தருளி அவற்றைக்கொண்டு நாம் காரியஞ் செய்யும்படியான சக்தி விசேஷங்களையும் நமக்குக் கொடுத்து, மிகவும் அஹங்காரிகளான நம்மெதிரில் தான் ப்ரத்யக்ஷமாகவந்து நின்றால் நாம் பொறாமைகொண்டு ஆணையிட்டாகிலும் தன்னைத் துரத்திவிடுவோமென்றெண்ணி ஒருவர் கண்ணுக்குந் தோற்றாதபடி, உறங்குகிற குழந்தையைத் தாயானவள் முதுகிலே அணைத்துக்கொண்டு கிடக்குமாபோலே எம்பெருமான்றானும் தானறிந்த ஸம்பந்தமே காரணமாக நம்மை விடமாட்டாமல் அந்தர்யாமியாயிருந்து தொடர்ந்துகொண்டு நம்பை பொருகாலும் கைவிடாமல் ஸத்தையை நோக்கிக் கொண்டு நமக்குத் துணையாய்ப் போருமளவில், நாம் கெட்ட காரியங்களிலே கை வைத்தோமாகில் நம்மைத்திருப்ப மாட்டாமல் அநுமதிபண்ணி உதாஸீநரைப்போலேயிருந்து திருப்புகைக்கு இடம் பார்த்துக்கொண்டேயிருந்து, நாம் செய்கிற தீமைகளில் ஏதேனுமொரு தீமையாவது – விஷயப்ரணனாய் வேசிகளைப் பின்தொடர்ந்து அடிக்கடி கோவில்களிலே நுழைந்து புறப்படுகை, வயலில் பட்டிமேய்ந்த பசுவை அடிப்பதாகத் துரத்திக்கொண்டு போம்போது அது ஒரு கோவிலைப்ரதக்ஷிணம் பண்ணிக்கொண்டு ஓடுகிறவளவிலே அதைவிடமாட்டாத ஆக்ரஹத்தாலே தானும் அக்கோவிலை வலஞ்செய்க; (சிசுபாலாதிகளைப்போலே) நிந்தை செய்வதற்காகத் திருநாமங்களைச் சொல்லுகை முதலியன. – நன்மையென்று பேரிடக்கூடியதா யிருக்குமோவென்று பார்த்துவந்து அப்படிப்பட்ட தீமைகளைக் கண்டுபிடித்து “என் ஊரைச் சொன்னாய், என்பேரைச் சொன்னாய், என்னடியாரை ரக்ஷித்தாய், அவர்கள் விடையைத் தீர்த்தாய், அவர்களுக்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தாய்“ என்றப்படி சில ஸுக்ருதங்களை ஏறிட்டு மடிமாங்காயிட்டு யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்கிற ஸுக்ருத விசேஷங்களைத் தானே கல்வித்தும் அப்படி கல்வித்தவற்றை ஒன்றை அனேகமாக்கியும் நடத்திக்கொண்டு பொருவன் – என்பது சாஸ்த்ரமுகத்தால் நாம் கண்டறிந்த விஷயம்.
யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் என்னப்படுகிற ஸுக்ருதங்கள் எவையென்னில், அவ்வூர் இவ்வூர் என்று நாம் பல ஊர்களையும் வம்புக்காகச் சொல்லுமாளவிலே “குருவிமலே, பரங்கிமலை, திருவேங்கடமலை“ என்று வாயில் வந்துவிட்டால் இவ்வளவே பற்றாசாக “என் ஊரைச் சொன்னான்“ என்று எம்பெருமான் எழுதிக்கொள்வன், அவன் இவன் என்று பல பேர்களையும் சொல்லிக்கொண்டு வருமடைவிலே சில பகவந் நாமங்களும் கலந்து வந்துவிட்டால் “என் பேரைச் சொன்னான்“ என்று கணக்கிடுவன், சில பாகவதர்கள் காட்டிலே வழிபோகா நிற்கையில் அவர்களை ஹிம்ஸித்துக் கொள்ளையடிக்க வேணுமென்று சில கள்ளர் முயன்றிருக்குமளவிலே, ஏதோ தன் காரியமாக வழிபோகிற ஒரு சேவகன் அவர்கள் பின்னே தென்பட, அவனை அந்த பாகவதர்களின் ரக்ஷணத்திற்காக வந்தவனாக நினைத்து அக்கள்ளர் அஞ்சி அப்பால் போய்விட அதுவே பற்றாசாக அந்த சேவனை “என்னடி யாரை நோக்கினவன் இவன்“ என்று எழுதிக்கொள்வன், ஒருவன் வேனிற் காலத்திலே தன் வயல் தீய்ந்து போகாநிற்கையில் நீருள்ள விடத்தில் நின்றும் வயலிலே பாய நெடுந்தூரத்திலே ஏற்றமிட்டு இறையாநிற்க, பாலை நிலத்தில் நடந்து விடாய்த்து இளைத்துவருகிற சில பாகவதர்கள் அவனறியாமல் அந்த நீரிலே இளைப்பாறிப் போனால் அது காரணமாக “என்னடியாருடைய விடாயைத் தீர்த்தானிவன்“ என்று கணக்கிடுவன். ஒருவன் தனக்குச் சூது சதுரங்கமாடுவதற்கும் காறு வேண்டினபோது வந்து உலாவுகைக்கும் புறந்திண்ணை கட்டிவைக்க, மழையிலோ வெய்யிலிலோ வருந்தின சில பாகவதர்கள் அத்திண்ணையிலே வந்து ஒதுங்கியிருந்து போக, அதுகொண்டு “என்னடியார்க்கு ஒதுங்க நிழலைக் கொடுத்தான்“ என்று கணக்கிடுவன், இப்படியாக நாமறியாமல் எம்பெருமானே ஏறிடும் ஸுக்ருதங்களே யாத்ருச்சிகம், ப்ராஸங்கிகம், ஆநுஷங்கிகம் எனப்படும்.
இப்படி அஜ்ஞாத ஸுக்ருதங்களையாகிலும் ஹேதுவாகக் கொண்டு எம்பெருமான் கடாக்ஷிப்பனாகில் அந்த கடாக்ஷம் ஸஹேதுகமாகாதோவென்னில், ஆகாது, இந்த யாத்ருச்சிகம் முதலிய ஸுக்ருதங்களுமுட்பட நமக்குண்டாம்படி ஆதியிலே கரணகளே பாங்களைக் கொடுத்து ஸ்ருஷ்டித்தவன் எம்பெருமானாகையாலே, கடாக்ஷஹேதுவாகச் சொன்ன அஜ்ஞா தஸுக்ருதங்களும் அவனுடைய க்ருஷிபலமேயாம்.
(ஸ்ருஷ்டிப்பது சேதநருடைய கருமங்களுக்குத் தகுதியாகவன்றோவென்னில், ஸ்ருஷ்டிப்பது கருமத்தைக் கடாக்ஷதித்தேயாகிலும் அவரவர்களுடைய கருமபரிபாகத்துக்குத் தகுந்தபடி வெவ்வேறு காலங்களிலே ஸ்ருஷ்டிக்கவேண்டியிருக்க, ஏக்காலத்திலே ஸ்ருஷ்டித்தது அநுக்ரஹ காரியமென்பர்.)
அசித்தோடு வாசியற்றுக் கிடக்கிற நிலைமையிலே உஜ்ஜீவநத் துக்கு கருவியான கரணகளேபரங்களைப் பேரருளாலே அவன் தந்தபடியே அநுஸந்தித்தால், நம் உஜ்ஜீவனத்தில் அவன் செய்தபடி பார்த்துக்கொண்டிருப்பது தவிர நாம் ஒரு முயற்சியும் பண்ணவேண்டாதபடியா யிருக்கும். புதிசாகத் தரிசு திருத்தின தல்லாமல் பழையதாக உழுவது நடுவது விளைவதாய்க்கொண்டு போருகிற ஒரு கேஷத்ரத்திலே உழவனானவன் அதுக்கென்று ஒரு க்ருஷியும் பண்ணாதிருந்தாலும் உதிர்ந்த்தானியமே முளைத்து விளைந்து தலைக்கட்டுமா போலே, அஜ்ஞாத ஸுக்ருதங்கள் நம்மிடத்திலே தன்னடையே விளையும்படியாகவன்றோ பத்தியுழவனென்று சொல்லப்படுகிற ஈச்வரன் அநாதிஸம்ஸாரத்தை ஸ்ருஷ்டித்துத் திருத்தி நட்த்திப் போருவது.
இப்படிப்பட பத்தியுழவன் பழம்புனத்தில் நாமும் வித்து இடவேண்டுமோ? நாமும் உபாயாநுஷ்டாநம் பண்ணவேணுமோ? எம்பெருமானுடைய ப்ரவ்ருத்திக்கு விரோதியான நம்முடைய ப்ரவ்ருத்தியை நாம் நிறுத்திக் கொள்வதன்றோ நமக்கு நன்மை என்றவாறு.
விடையடர்த்த வரலாறு – கும்பனென்னும் இடையர் தலைவனது மகளும், நீளாதேவியின் அம்சமாகப் பிறந்த்தனால் நீளா என்ற பெயரால் வழங்கப்பட்டு வருபவளுமான நப்பின்னைப் பிராட்டியை மணஞ்செய்து கொள்ளுதற்காக அவள் தந்தை கந்யாசுல்கமாகக் குறித்தபடி யார்க்கும் அடங்காத அஸுராவேசம் பெற்ற ஏழு எருதுகளையும் கண்ணபிரான் ஏழு திருவுருக்கொண்டு சென்று வலியடக்கி அப்பிராட்டியை மணஞ்செய்து கொண்டான்.
ஆழ்வார் எம்பெருமானுக்குப் பத்தியுழவன் என்று திருநாமமிட்ட அழகை என்சொல்வோம்!. தன் விஷயத்தில் நமக்கு பக்தி யுண்டாவதற்குத் தானே க்ருஷி பண்ணுகிறானாம் எம்பெருமான். அந்த க்ருஷியாவது ஸ்ருஷ்டியவதாராதிகள் என்க.
இனி முன்னடிகட்கும் பின்னடிகட்கும் ஸங்கதி (சேர்த்தி) யாதென்னில், – பத்தியுழவன் பழம்புனத்தில் நாம் வித்து இட வேண்டாவாகில் அப்படியே ஆகுக, எம்பெருமானே க்ருஷி பண்ணட்டும், அந்த க்ருஷி பலித்து நாம் பரமபதஞ்சென்று நித்யாநு பவம் பண்ணுவதென்பது விரைவில் நடைபெறக் கூடியதன்றே, சிறிது காலவிளம்பமாகுமே, அதுவரையில் நமக்குப் போது போக்கு யாதென்ன, 1. பூவையும் காயாவும் நீலமும் பூக்கின்ற, காவி மலரென்றுங் காண்டோறும் – பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும், அவ்வவையெல்லாம் பிரானுருவேயென்று“ என்றும் 2. “மேகங்களோ வுரையீர், திருமால் திருமேனியொக்கும் யோகங்கள் உங்களுக்கெவ்வாறு பெற்றீர்?“ என்றும், 3. “ஒக்கு மம்மானுருவமென்று உள்ளங்குழைந்து நாணாளும், தொக்க மேகப் பல்குழாங்கள் காணுந்தோறும்“ என்றும் சொல்லுகிறபடியே போலிகண்டு போதுபோக்க ஸாமக்ரி உண்டு என்கிறார்.
“ருசி பிறந்தபின்பு ப்ராப்தியளவும் நாம் தரிக்கைக்கு அவன் திருமேனிக்குப் போலியுண்டென்கை“ என்ற வியாக்கியான ஸ்ரீ ஸூக்தியும் நோக்கத்தக்கது.
இப்பாட்டின் முதலடியின் மூன்று சீர்களாகிய “வித்துமிட வேண்டுங்கொல்லோ“ என்றவளவு திருக்குறளில் எடுத்தாளப்பட்டுள்ளது, விருந்தோம்பல் என்னும் அதிகாரத்தில் “வித்துமிட வேண்டுங்கொல்லோ விருந்தோம்பி, மிச்சின் மிசையான் புனம்“ என்ற குறள் காண்க.
English Translation
The Lord who killed seven bulls is a Bhakti-cultivator; need he sow seeds afresh in a repeatedly cultivated soil? The crop grows fall, seeking the rain-cloud whose hue resembles the lord himself.
