(2403)

(2403)

அழகியான் தானே அரியுருவன் தானே

பழகியான் தாளே பணிமின் – குழவியாய்த்

தானே ழுலகுக்கும் தன்கைக்கும் தன்மையனே

மீனா யுயிரளிக்கும் வித்து.

 

பதவுரை

தான் ஏழ் உலகுக்கும் வித்து

தானே ஏழுலகங்களுக்கும் உபாதாந காரணமாய்

தன்மையவன்

ஆச்ரயபூதனாய்

குழவி ஆய்

(பிரளய காலத்தில்) சிறுகுழந்தையாய்க் கொண்டும்

மீன் ஆய்

(பின்பொருகால்) மத்ஸ்யரூபியாய்க் கொண்டும்

உயிர் அளிக்கும்

ஆத்மாக்களை ரக்ஷிக்கின்றவனான

தானே

எம்பெருமான் தானே

தன்மைக்கும்

(ரூபம் ரஸம் கந்தம் முதலிய) குணங்களுக்கும்

அரி உருவன்

நரசிங்கவுருக் கொண்டவன்

தானே அழகியான்

அழகுக்கு எல்லை நிலமாயிருப்பவனும் அவன்றானே

பழகியான்

புராயபுருஷனாகிய அப்பெருமானுடைய

தாளே

திருவடிகளையே

பணிமின்

ஆச்ரயியுங்கோள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தானே காரணமாய்க்கொண்டு அடியிலே உலகங்களைப் படைத்து, படைக்கப்பட்ட உலகங்களைப் பாதுகாக்க அவாந்தரப்ரளயத்தில்ஆலிலைத்துயின்ற அருங்குழந்தையாயும் மந்வந்தர ப்ரளயத்தில் மத்ஸ்யரூபியாயும் தோன்றி ரக்ஷித்து, ப்ரஹ்லாதனை ரக்ஷிக்கைக்காகத் தூணிலே நரஸிம்ஹமாய்த் தோன்றி இரணியனைக் கிழித்துக்போட்டு, இப்படி எல்லா அவஸ்தைகளிலும் ஸர்வேச்வரனுடைய திருவடிகளை நீங்கள் ஆச்ரயியுங்கள் என்று பரோபதேசம் பண்ணுகிறார்.

கீழ்ப்பாட்டில் நரஸிம்ஹாவதாரத்தை அநுபவித்தாராதலால் அத்திருக்கோலத்தின் அழகையே மீண்டும் வாய்வெருவுகின்றார் “அழகியான் தானே அரியுருவன் தானே“ என்று.

நம்முடைய புத்திக்கு எட்டாத அநாதிகாலந் தொடங்கிப் பலவகைகளால் ரக்ஷணம் செய்துகொண்டு வருதல் பற்றி எம் பெருமானுக்குப் “பழகியான்“ என்று திருநாமமிட்டனர்.

தன்மைக்கும் தன்மையன் – ஒரு த்ரவ்யத்தைப் பற்றியிருக்கும் குணத்திற்குத் “தன்மை“ என்று பெயர், அக்குணத்திற்கு ஆச்ரயமான குணிக்குத் தன்மையன் என்று பெயர். புஷ்பம் என்கிற த்ரவ்யத்திற்கு மணம் குணமாயிருக்கின்றது. அந்த மணத்திற்குப் புஷ்பம் ஆச்ரயமாகையாலே புஷ்பம் குணியெனப்படும். இப்படியே எங்குங் கண்டுகொள்க. இங்கு “தன்மைக்கு தன்மையன்“ என்றது – நிலம் நீர் தீ கால் முதலிய பூதங்களின் குணங்களாகீய மணம் சுவை முதலியவற்றுக்கெல்லாம் தானே ஆச்ரயமாயிருப்பவனென்கை. 1. “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய்“ என்கிறபடியே பஞ்சபூதாதிகளும் தானேயாயிருப்பவன் என்றவாறு. இவ்விடத்துப் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் “தன் பக்கலிலே வைக்கும்“ என்று ஒரு வாக்கியம் காண்கிறது. அதனால் “தன் வைக்குந்தன்மையனே“ என்றும் பாடமிருந்ததாகத் தெரிகின்றது. ஏழுலகுக்கும் தான் வித்தாய், (அவ்வுலகங்களை) தன் – தன்னுள்ளே, வைக்குந்தன்மையனாய் – (பிரளயத்திலழியாதபடி) அழக்கிவைக்கும் குணமுடையவனாய் என்றபடி.

 

English Translation

He is the beautiful one, he is the lion-form, he is the child-form.  He is the essence and the substance of the seven worlds.  He came as a fish and protected all souls. Worship his feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top